ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010
முதுகுளத்தூர் கலவரம்',
கலவரங்களையும் கலகங்களையும் விதைத்த தென் தமிழகம், இரண்டு குறியீடுகளைப் போராட்டக் களத்தில் எதிர்நோக்கி இருக்கிறது. கலவரங்கள் மீது தார்மீகப் பற்று கொண்டவர்கள் - உ. முத்துராமலிங்கத்தின் (தேவர்) நூறாவது குரு பூசை விழாவையும்; விடுதலைக்கான கலகங்கள் மீது நம்பிக்கை கொண்ட தலித்துகள் - மாவீரன் இமானுவேல் சேகரனின் அய்ம்பதாவது ஆண்டு வீரவணக்க நாளையும் தங்களின் குறியீட்டு அடையாளமாகக் கொண்டாடுவதற்கான களம் தயாராகி வருகிறது. ஒருவர் பிறந்து விட்டாரே என்பதற்கான கலவரமும், இன்னொருவர் வீரமரணத்தை எதிர்கொண்டார் என்பதற்கான கலகமும் - நடப்பு ஆண்டு கொண்டாட்டத்தில் எத்தகைய கருத்தியல் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் நமக்குத் தேடல் எதுவும் இல்லை. எனினும், குருதி தோய்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட விரும்புகிற புதிய தலைமுறை வட்டாரத்தில், கலகம் கொண்ட தேடல் அரும்பி நிற்கிறது.
அப்படியொரு தேடுதலில் தோண்டி எடுக்கப்பட்ட அதிர்ச்சிக்குரிய, மறுவாசிப்புக்குரிய ஓர் ஆவணம் தான் *‘முதுகுளத்தூர் கலவரம்'.*
1958 சனவரியில் வெளியான இச்சிறு நூலை, அய்ம்பதாண்டுகளுக்குப் பிறகு ஓர் உண்மை கண்டறியும் அறிக்கையாக ‘யாழ்மை' வெளிக்கொணர்ந்திருக்கிறது. ‘குற்றப்பரம்பரை' என சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்ட மறவர், கள்ளர் சாதியினர் வரலாற்றில், தான் செய்த குற்றத்துக்காக வருந்தியே தீர வேண்டும் என்பதை நூலின் ஆசிரியர் தினகரன், அச்சமூகத்தின் தனியொருவராக நின்று வாக்குமூலம் அளிக்கிறார். ஆதிக்க சமூகங்கள் எவ்வாறு தங்கள் ஆதிக்கங்களை ஒடுக்கப்பட்ட மக்கள் மீது கட்டவிழ்த்து வருகின்றன என்பதை அச்சமூகத்தைச் சார்ந்தவரே வாக்குமூலம் அளித்திருப்பது, சாதி ஒழிப்புப் போராட்டத்தில் ஒரு புதிய முயற்சி.
தினகரன், கமுதியை அடுத்த முஷ்டக் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர். பர்மாவில் மூவேந்தர் இதழ் நடத்தி, அன்னியத் துணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு அய்ந்து ஆண்டுகள் சிறை தண்டனை அடைந்தவர். தன் பெயரிலேயே ‘தினகரன்' என்கிற நாளேட்டைத் தொடங்கி, அதில் அன்றைய சமூக - அரசியலை கேலியும், நறுக்குமாக விமர்சித்தவர். பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். அவர் தொடங்கிய ‘தினகரன்'தான் இன்று தி.மு.க.வின் ஒலிபெருக்கியாக 450 கோடியை எட்டி நிற்கின்றது. இது, தினகரனின் எழுத்துக்கு நேர்ந்த துயரமாகப் படினும், அன்றைய கலவரத்தையொட்டி அந்த நாளேட்டில் தான் எழுதிய கட்டுரைகளை - ‘முகுகுளத்தூர் கலவரம்' என நய்யாண்டித்தனமான கேலிச் சித்திரத்துடன் நூலாக வெளியிட்டார். அதனாலேயே தன் சாதி சகாக்களால் படுகொலையும் செய்யப்பட்டார்.
‘முதுகுளத்தூர் கலவரம்', ‘சரித்திரம் பேசுகிறது', ‘ஏழரை நாட்டு சனி', ‘வோட்டு அல்லது வேட்டு', ‘சமாதானமோ? சர்வ நாசமோ?', ‘இடமில்லை ரைட்' ஆகிய கட்டுரைகளில் சுயசாதி விசுவாசம் இல்லாமல் - மறவர்களையும், கள்ளர்களையும் மனிதர்களாக்க முயன்றுள்ளார். இச்சமூகம் ஒருபோதும் பகுத்தறிவு பெற்றுவிடக் கூடாது; தீக்குச்சி, அரிவாள், வேல் கம்பியிலேயே தங்கள் விடுதலையைத் தேட வற்புறுத்திய உ. முத்துராமலிங்கத்தின் சாதிய சேட்டைகளை அவிழ்த்துப் போட்டு, அதிலிருந்து தன் மக்களை விடுபடத் தூண்டுகிறார். இதுவரை கொல்லப்பட்டு வந்த முதுகுளத்தூர் கலவரத்தைப் பற்றிய வரலாறும், நிகழ்வுகளும், கதைப்பாடலும் வெவ்வேறு அலைவரிசையில் மக்களிடம் பதிவாகி இருப்பதை இந்நூல் நேர் செய்கிறது.
1957 செப்டம்பர் 11 இரவு ஒன்பதரை மணிக்கு பரமக்குடி பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் மாவீரன் இமானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்ட பிறகு முதுகுளத்தூரில் கலவரம் தொடங்குகிறது. இப்படியொரு கலவரத்தை சுற்றும் சூழ நடத்த வேண்டும் என உ. முத்துராமலிங்கம் முன்கூட்டியே தீர்மானித்துவிட்டார் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. இந்நூலில் இணைக்கப்பட்டுள்ள சட்டசபை ஆணை 18 இல் - 1957, சூலை 10 அன்று திருப்புவனம் புதூரில் பேசும்போது, ‘காங்கிரசாரின் அராஜகம் எல்லை மீறிவிட்டது; காஷ்மீருக்குப் பதிலாக முதுகுளத்தூரில் இருந்துதான் மூன்றாம் உலகப் போரைத் தொடங்க வேண்டும்’ என்று உ. முத்துராமலிங்கம் பேசிய பேச்சை எம். பக்தவச்சலம் குறிப்பிடுகிறார். இப்படியான விதண்டாவாதப் பேச்சைப் பார்க்கும்போது, இதில் அரசியல் மட்டுமே இருப்பதாகத் தெரியும். ஆனால், இப்பேச்சுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே உ. முத்துராமலிங்கம் செய்த பிரதானமான குற்றங்களை ஆசிரியர் தினகரன் வரிசைப்படுத்துகிறார் :
தன் சொந்தக்காரியான மேலராமநதி கருப்பாயி அம்மாளை ஏமாற்றி சொத்தை அபகரித்தார்.
கந்து வட்டி கட்டைப் பஞ்சாயத்தில் தன்கு பங்கு கிடைக்காததால் செங்குளம் அய்யரப்ப (நாயக்க)ரிடம் மோதினார்; அவரைத் தண்டிக்கவும் செய்தார்.
1928 இல் இருந்து அரசுக்கு வரி செலுத்தாததால், தான் அபகரித்த நிலத்தை ஏலம் விட்டதற்காக கமுதி உதவி தாசில்தார் சிதம்பர (முதலியார்) காலை வெட்டினார்.
இஸ்லாத்துக்கு மதம் மாறிய தேவர்களைப் பயன்படுத்தி, அபிராமம் இஸ்லாமியர்களிடத்தில் பிரிவினையை ஏற்படுத்தி, கண்மாயை வெட்டி, தண்ணீரை வெளியேற்றி, பயிர்களை நாசமாக்கினார்.
1937 இல் நடந்த தேர்தலில் ராமநாதபுரம் ராஜாவுக்கு தேர்தல் வேலை செய்ததற்காக கமுதி உதவி தாசில்தார் நாகராஜய்யரை தாக்கினார்.
முஸ்லிம் வீடுகளை தேவர்கள் தாக்கிய வழக்கில் தீர்ப்பு நகல் தனக்கு தரப்படாததால், முதுகுளத்தூர் சப் மாஜிஸ்திரேட் பிரம்மநாயகம் (பிள்ளை)யை படுகொலை செய்தார்.
இதுபோக, தன் சொந்த மக்களை உள்ளடக்கிய 32 1/2 கிராமத்தைச் சேர்ந்த முதலாளிகளின் பணத்தையும், விளைச்சலையும் ஏய்த்து அவர்களின் ரத்தத்தை உறிஞ்சினார்.
உ. முத்துராமலிங்கத்தால் 1925 இல் தொடங்கி முப்பது ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்ட இதுபோன்ற படுகொலைகள் குறித்தோ, வன்கொடுமைகள் குறித்தோ பாதிக்கப்பட்ட முதலியார், பிள்ளைமார், நாயக்கர், நாடார் ஏன் முஸ்லிம்கள் உட்பட அவரை எதிர்த்து ஒருவரும் கேள்வி கேட்டதில்லை. இறுதியாக, 1955 இல் தான் எதிர்கொண்ட மாவீரன் இமானுவேல் சேகரன்தான், உ. முத்துராமலிங்கத்துக்கு சிம்ம சொப்பனமாகிறார். மறவர் - கள்ளர்களின் சண்டியர்த்தனத்தை எதிர்த்து இமானுவேல் சேகரனின் தலைமையில் தலித்துகள் அணிதிரண்ட பிறகுகூட, பிற்படுத்தப்பட்ட மக்கள் தலித்துகளின் எழுச்சிக்கு துணை நிற்கவில்லை. இருப்பினும் இமானுவேல் சேகரனுடன் மோதுவது என்பது, தென்னக ராணுவத்துடன் மோதுவதாகவே சாதி இந்துக்களுக்குப்பட்டது.
கடந்த நூறாண்டு கால வரலாற்றில் தென் தமிழகத்தில் தீண்டப்படாத ஓர் இனம் தன்னுடைய விடுதலைக்காகத் தொடங்கிய கலகப் போரின் விளைவு தான் இந்த முதுகுளத்தூர் கலவரம். ‘பத்ரகாளிக்கு பலி கொடுப்பதற்காக காடமங்குளத்தில் ஒன்பது அரிஜனங்களை தேவர்கள் தூக்கிப் போனார்கள்’ என்கிற நிகழ்வும், அதன் மீதான வழக்கு விசாரணையும் அப்போதைய சட்டமன்றத்தில் முக்கியப் பிரச்சனையாக சலசலப்பை உருவாக்கியது. இந்தப் பிரச்சனையை இமானுவேல் சேகரன் ராமநாதபுரம் ஆட்சித் தலைவர் வரைக்கும் கொண்டு சென்றார். பிறகு பண்ணந்தலையில் தேவேந்திரர்கள் போட்ட கூட்டத்தின் விளைவால் உ. முத்துராமலிங்கத்தை பஞ்சாயத்து வரை இழுத்து வந்து, பொது மக்கள் முன்னிலையில் மாபெரும் குற்றவாளியாக நிற்க வைத்து கையெழுத்திட வைத்த நிகழ்வுதான் - இமானுவேல் சேகரனின் படுகொலைக்கு காரணமாக அமைந்தது. திட்டமிட்டபடி மறுநாள் அவர் கொலை செய்யப்படுகிறார்.
காங்கிரஸ், பார்வார்டு பிளாக், கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் தேர்தல் மோதல்தான் அவர் படுகொலைக்கு காரணம் என இதுவரையிலும் சொல்லப்பட்டு வந்தது. ஏனெனில், இமானுவேல் சேகரன் படுகொலைக்குப் பிறகு முத்துராமலிங்கத்தை எந்த அரசியல் கட்சியும் துணிச்சலாக எதிர்க்கவில்லை. ஆனால், தலித்துகள் பக்கம் காங்கிரஸ் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. பெரியார் தலித்துகள் சார்பில் நின்றார். இந்நூலாசிரியர் தினகரனும் ‘பெரியார் ஒருவரை மட்டுமே ஆதரவு சக்தி'யாகக் குறிப்பிடுகிறார்.
யாழ்மை பதிப்பகத்தின் சார்பில் இளம்பரிதி, ஜெகநாதன் இருவரும் இந்நூலுக்கு ஆழமான, தனித்துவமான முன்னுரை எழுதியுள்ளனர். முதுகுளத்தூர் கலவரத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் “ராமநாதபுரம் துப்பாக்கிச் சூட்டில் மட்டும் செத்தவர்கள் 40 பேர் என்றும், அதில் 14 பேர்களில் 13 பேர் மறவர்கள் என்றும் ஒருவர் தாழ்த்தப்பட்டவர் என்றும் கலகங்களில் இருந்த 26 பேர்களில் 8 பேர் மறவர்கள் என்றும் 18 பேர் தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை. சுமார் 100 பேர் காயமடைந்திருப்பர். இக்கலகத்தில் கொளுத்தப்பட்ட வீடுகள் மொத்தம் 2,879 என்றும் இதில் 2,731 வீடுகள் தாழ்த்தப்பட்டவர்களது என்றும் 106 தேவர்களுடையது என்றும் 41 மற்ற வகுப்பினருக்கு சொந்தமானவை என்றும் கூறப்படுகிறது. இதுவரை மொத்தம் 475 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என ‘விடுதலை' நாளேடு 8.10.1957 அன்று ராமநாதபுரம் கலவரம் இழப்புகளின் விவரம் என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தியை’ பதிப்பாளர் இளம்பரிதி சுட்டிக்காட்டியுள்ளார். சாதி ஒழிப்புக்காகத் தொடங்கப்பட்ட இப்போர், நீருபூத்த நெருப்பின் கீழ் கங்கு தணியாமல், அவ்வப்போது முத்துராமலிங்கத்தின் குருபூசை நாளன்று தலித்துகளை இன்றளவும் சுட்டுப் பார்க்கிறது
“கலகத்திற்கு வித்திட்ட வகுப்பிலும், நிலத்திலும் உதித்தவன் நான் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயந்தான்” எனக் குமுறும் தினகரன், அய்ம்பதாண்டுகளுக்கு முன் சமூக விடுதலைக்காகத் தன்னை இணைத்துக் கொண்டவர். சாதி ஒழிப்பு, இந்து மத எதிர்ப்பு, அறவழிப் போராட்டம் என்கிற சமத்துவ சிந்தனைகளை தன் சமூகத்து மக்களுக்கு உணர்த்தியவர். தலித் அல்லாதவர்கள் எவரேனும் தலித் விடுதலைக்கு தன்னை கையளித்து களப்பணியாற்ற வேண்டும் என முயன்றால், அவர்கள் சுயசாதிக்கு துளியும் ஆட்படாமல் தினகரனின் வழிமரபில் தங்களை இணைத்துக் கொள்வதே - தலித்துகளுடன் சொந்தம் கொண்டாடும் உரிமைப் போராக இருக்க முடியும் என்பதை ‘முதுகுளத்தூர் கலவரம்' இன்றும் உணர்த்துகிறது.
மகிழ்நன்
எழுதப்படாத சரித்திரம் 28
‘தை’ முதல் நாளை புத்தாண்டின் முதல் நாளாகக் கொண்டாடச் சொல்கிறது அரசு. நமக்கு அதில் மாறுபாடில்லை. தமிழர் வரலாற்றில் பொங்கல் நாள், உழவர் நாளாகவே இருந்து வந்திருக்கிறது. உழவர் நாள், ‘மள்ளர்’ நாள் என்றால் அது இன்னும் கூடுதல் பொருத்தமாகவே இருக்கும்.
மள்ளர்களைப் பள்ளர்கள் என்று பிற்கால, நாயக்கர் காலத்துச் சிற்றிலக்கியங்கள் சொல்கின்றன. சுமார் 400 பள்ளு இலக்கியங்கள், பள்ளர் குலம் பற்றி எழுதப்பட்டுள்ளன. சங்க காலத்தில் இன்று பள்ளர் என்று தவறாகக் கூறப்படும் மக்களுக்கு, ‘மள்ளர்’ என்ற பெயரே இருந்திருக்கிறது. அண்மைக்காலமாக இந்த மக்கள், தங்களை தேவேந்திர குல வெள்ளாளர் என்று அழைத்துக்கொள்கிறார்கள். அழைக்கப்படுகிறார்கள். அதன் வரலாற்றை ஆராய்வோம். தமிழர்கள், சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்கள். தங்கள் வாழ்நிலங்களை நான்கு வகையாகப் பிரித்தார்கள். மலை மற்றும் மலைசார்ந்த நிலப்பரப்பைக் குறிஞ்சி என்று அழைத்தார்கள். அந்த நிலத்தில் மலரும் பூக்களில் சிறப்பு பொருந்தியது குறிஞ்சிமலர். மலையைவிட்டு, வாழ்வாதாரம் தேடிக் கீழே வந்தவர்கள், காட்டுப்பகுதியைக் கண்டடைந்தார்கள். அந்நிலத்துச் சிறந்த பூவின் பெயரால் அது முல்லை என்றாயிற்று. கடற்கரை மக்கள், தங்கள் பகுதிக்கு அந்நிலத்து நெய்தலைக் கண்டு, அதற்கு நெய்தல் நிலம் என்று பெயர் கொண்டார்கள்.
காட்டை அடுத்துள்ள, சமதளமும், ஆற்றங்கரைக்கு அழகாகவும் உள்ள பூமியை அங்கே அடர்ந்து வளர்ந்துள்ள மருத நிலத்தின் பெயரால் வழங்கினார்கள். ஆற்றுப் பாசனத்தின் உதவியுடன், நெல் விவசாயத்தை மருத நிலத்துக்குக் குடி பெயர்ந்தவர்கள் கண்டுபிடித்தார்கள். மனித குல முன்னேற்றத்தைச் சாத்யமாக்கியது மூன்று கண்டுபிடிப்புகள். முதலில் நெருப்பு, இரண்டாவது சக்கரம், மூன்றாவது விவசாயம். நிலத்தை உழுது நெல் விதை தூவப்படுவதால், அதைச் செய்தவர்கள் உழவர்கள் எனப் பெயர் பெற்றார்கள். விவசாயத்துக்குச் செயற்கை மற்றும் ரசாயன உரங்களைக் கொடுத்து நிலங்களை அழிக்கும் அரசுகள் அந்தக்காலத்தில் இல்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஒரு மணி நெல், பத்து மணிகளைத் தந்தது. நெல்லை, நாணயமாகத் தந்து மீன் மற்றும் பலசரக்கு வாங்கிக் கொண்டார்கள். வயல் நண்டுகள், ஆமைகள், ஆடுகள், மான்கள் அவர்களின் உணவாயின.
நெல் விவசாயம், இன்றுபோல அறுபது, தொண்ணூறு நாள் அவசரப் பிண்டமாக இல்லை. ஏழு, எட்டு மாதப் பயிர்கள் அவை. சுமார் 35 அல்லது 40 வகை நெல் வகைகளை அவர்கள் அறிந்திருந்தார்கள். அந்த உழவர்கள், உலகுக்கு அச்சாணிபோல இருந்து உணவு வழங்கும் பெரும்பணியைச் செய்தார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் அல்லது கூட்டத்துக்கும் அவர்கள் உழைப்பினால், நிறைய நெல் மற்றும் மாடுகள் இருந்தன. மாடு என்றாலே, ‘செல்வம்’ என்று அர்த்தம், தமிழில். இந்தச் செல்வம் பகைக்குக் காரணமும் ஆயிற்று. விவசாயம் மற்றும் பால்வளம், மற்றும் இறைச்சி உணவுக்குக் காரணமாக மாடு பிடிக்கும் போர்முறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு கூட்டம், மாடு பிடிக்கும் சண்டையில் இறங்க, மறுகூட்டம் மாடு மீட்கும் போரில் இறங்க, சண்டையும், சச்சரவும், தினவாழ்க்கை ஆயிற்று. ஆகவே, உழவர்கள் தங்கள் உடமைகளைக் காத்துக்கொள்ள போர் வீரர்களாகவும் மாற வேண்டி இருந்தது. அந்த வகையில் உருவான உழவு வீரர்களே மள்ளர்கள் எனப்பட்டார்கள்.
‘மள்ளர்’ என்றால் திண்மை (பலம்) உடைய போர்வீரர்கள் என்று விளக்கம் சொல்கின்றன நிகண்டுகள் என்று சொல்லப்பட்ட பழைய அகராதிகள்.
‘அருந்திறன் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் மள்ளர்...’ என்று பெயர் என்கிறது திவாகர நிகண்டு. இதைவிடத் தெளிவாகப் பிங்கல நிகண்டு, ‘செருமலை வீரரும் திண்ணியோடும், மருத நில மக்களும் மள்ளர்’ என்கிறது.
இந்தப் போர் வீரர்களில், அதாவது மள்ளர்களில், எல்லோரையும் தன் வீரத்தால் வென்ற பெரிய போர்வீரன், ‘வேந்தன்’ எனப்பட்டான். அவன் மரியாதைக்குரிய மன்னன் ஆகிறான். ‘மள்ளன்’ என்பதே ‘மன்னன்’ ஆகி இருக்கவும் வாய்ப்பு உண்டு. அந்த ‘வேந்தன்’, பின்னால் வந்த மள்ளர்களால், உழவர்களால் வணங்கப்பட்டவனாகிறான். ‘வேந்தன்’, குல முதல்வனாகி, காக்கும் தெய்வமாகவும் ஆகிறான். இதையே தொல்காப்பியம், ‘வேந்தன் மேய தீம்புவை உலகம்’ என்று இலக்கணம் வகுக்கிறது. ‘மேய’ என்பதுக்குத் தகுதியான என்று பொருள். ஆக, மருத நிலத்துக்குத் (தீம்புவைஆற்றங்கரை நிலம்) தகுதியான ஆட்சியாளன் ‘வேந்தன்’ என்கிறது தமிழ் இலக்கணம். இந்த வேந்தர்களின் பரம்பரையே சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள். ‘வேந்தன்’ என்ற சொல்லை இந்த மூன்று பேர் மட்டுமே பெற்றவர்களாகத் தமிழ் இலக்கியத்தில் விளங்குகிறார்கள்-. மற்றவர்கள் ‘வேளிர்’, ‘மன்னன்’, ‘கோ’ என் பெயரிலும் ‘அரசன்’ என்ற பெயரால் மட்டுமே அறியப்பட்டிருக்கிறார்கள்.
‘வேந்தர்’ என்ற சொல், பழைய பெரு மன்னர்களாகிய சேர, சோழ, பாண்டியர்களையே குறிக்கும். இவர்கள் மள்ளர்களிடையேதான் உருவாகி வந்தவர்கள்.
நம் உழவர்ப் பெருங்குடியினராகிய மள்ளர்கள், தேவேந்திரர் எனவும் தேவேந்திர குல வேளாளர் எனவும் குறிப்பிடப்பட என்ன காரணம்?
யார் இந்த தேவேந்திரன்?
ஆரியர்களின் ஆதிக் கடவுள் இந்திரன். அவர்களின் முதல் வேதமாகிய ரிக் வேதத்தில் முப்பது சதவிகிதம் இந்திரன் பற்றிய பாடல்களே ஆகும். ‘எங்களுக்குச் சோறு கொடு, சுராபானம் (சாராயம்) கொடு, எங்கள் எதிரிகளை அழி என்று கேட்டுக்கொள்ளும் பாடல்கள் அவை. இந்திரன், புராணங்களின் படி தேவர்களின் கடவுள். காசிப முனிவரும், அதிதி தேவியும் அவன் பெற்றோர். அவன் மனைவி இந்திராணி. ஆயுதம் வச்சிரம். இந்திரன் பற்றிய வேறு நல்ல தகவல்கள் புராணங்களில் இல்லை. ஆனால், ஆரியர்களின் ஆதி இலக்கியங்களில் அவன் ஒப்பற்ற கடவுளாக இருக்கிறான். எல்லாவற்றுக்கும் மேலே, அவன் மழை, இடி, மின்னல் ஆகியவைகளின் கடவுளாக இருக்கிறான். ஆக, ஆரியர்களின் மழைக் கடவுள் இந்திரனே ஆவார்.
உழவுக்குக் கடவுள் மழையே. தமிழ் மரபில் மழைக் கடவுளாக வேந்தன் இருந்திருக்கிறான். விவசாயம் சார்ந்த சடங்குகளுக்குக் கடவுளும் வேந்தனாகவே இருந்திருக்கிறான். ஆரியக் கலப்பு, தமிழ் பூமியில் ஏற்பட்டு இந்து மதம் கட்டமைக்கப்பட்டபோது, தமிழ் வேந்தனும், ஆரிய தேவவேந்திரனும் ஒன்றிணைக்கப்படுகிறான். தமிழ் முருகனும், வட நாட்டு சுப்பிரமணியனும் ஒன்றிணைந்தபோது, இதுவும் நடந்தது. தமிழ்க் கொற்றவை, சிவனுக்குச் சக்தியாக மாற்றப்படும்போது இதுவும் நடந்திருக்கிறது. ஆக, மள்ளர்களான உழவர்களுக்கு ஆதிக் கடவுள் வேந்தன், பிறகு தேவேந்திரானாகி(தேவ+ இந்திரன்), அவன் வெள்ளாமைக்குக் கடவுளாகி, வெள்ளாமை செய்த உழவர்களான மள்ளர்கள், அவன் நினைவில் தேவேந்திர குல வெள்ளாளராகிறார்கள். பெயர்கள் எதுவானாலும், அவர்கள் பூர்வ, பழைய தமிழர்கள். உழவர்கள். வேளாண்மை செய்தவர்கள்.
வேந்தனாகிய இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கவே, அவன் மழை தந்தமைக்காகப் போகித் திருநாள் கொண்டாடுகிறோம். ‘போகி’ என்ற பெயர் இந்திரனுக்கு உண்டு. தேவலோகத்துப் போகங்களை (சிற்றின்பங்களை) அனுபவிக்கிறவன். அதனால் இந்திரனுக்குப் போகி என்று பெயர். அறுவடைக்கு முந்தைய நாள் இந்திரனுக்கு நன்றி கூறும் நாள். அதுவே போகி.
மறுநாள் பொங்கல் என்று இன்று நாம் சொல்லும் நாள், அறுவடை நாள் ஆகும். புதிய மகசூலைப் பொங்கலாக்கி, சூரியனுக்குப் படைக்கும் நாள், பொங்கல் நாள் ஆகும். ஒரு பக்கம் அறுவடை மறுபக்கம் புது உழவுக்குத் தொடக்க நாளும் ஆகும். வேந்தன் நெறிப்பட்ட தமிழர் மழை வணக்கமும், வேத நெறிப்பட்ட இந்திர வணக்கமும் ஒன்றையொன்று கலந்து, இந்திர விழாவில் முடிந்தன. சங்க காலத்தில் அறிமுகமான இந்திரன், மரியாதைக்குரிய மழைக் கடவுளாக மாறச் சுமார் முந்நூறு ஆண்டுகள் தேவைப்பட்டது. சிலப்பதிகாரம், மணிமேகலை காலமான 1800 ஆண்டுகளுக்குப் பிந்தைய (கி.பி.2ம் நூற்றாண்டு) கால அளவில் இந்திர வணக்கம் தமிழ்ச் சமுதாயத்தில் வேர் ஊன்றியது. இந்திரவிழா பற்றிச் சிலம்பிலும், மணிமேகலையிலும், சான்றுகள் இருக்கின்றன. மள்ளர் ஆட்சி சிறக்கவும், பசி, பிணி, பகை நீங்கவும் இந்திரனுக்குப் பலிகொடுத்துப் பூசிக்கும் வழக்கம் உருவாயிற்று. கோவலன் மாதவி பிரிவே, ஒரு இந்திர விழாவில்தான் நடந்திருக்கிறது.
சங்க காலத்துக்கும் முந்தைய தமிழ் உழவர்களாகிய மள்ளர்கள், பழந்தமிழ் வேந்தன் காலத்திய சடங்குகளை இன்னமும் விடாது செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அச் சடங்குகளில் ஒன்று நாற்று நடவுத் திருவிழா. இது மள்ளரிய நாகரிகத்தின் ஒரு முக்கியச் செயல்பாடு. இந்திர விழாச் சடங்குகளில் இதுவும் ஒன்றாகக் காணப்பட்டாலும், நாற்று நடவுத் திருவிழா சுத்தமான தமிழர் சடங்காகும். வேத நெறியில் விவசாயம் சிறப்பிடம் பெற்றதாக வரலாறு இல்லை.
‘மள்ளரியம்’ எனும் பண்பாட்டுச் சொல்லை உருவாக்கிய அறிஞர் முனைவர் தே.ஞானசேகரன், இதுபற்றிப் பல நூல்கள் எழுதி இருக்கிறார். அவைகளில் இருந்து சில குறிப்புகள் தருகிறேன்.
நாற்று நடவுத் திருவிழா மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று நாற்று விடும் விழா. இரண்டு பொன் ஏர் பூட்டும் விழா. மூன்று நாற்று நடவு விழா ஆகிய அந்தப் பிரிவுகள்.
நாற்று விடும் விழா என்கிற விதை இடும் விழா, ஆனி மாதம் 14ம் நாள் தொடங்கி, 23ம் நாள் வரை பத்து நாட்கள் நடைபெறுகிறது. முன்னரே பதப்படுத்தப்பட்ட கழனியில் நெல் விதைகளைப் பரவுதல் நாற்று உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. முதலில் நெல் விதையை ஊற வைத்து முளைக்க வைக்கும் சடங்கு நிகழ்த்தப்படுகிறது. விதை நெல்லை ஊற வைக்க ஆற்றிலிருந்து நீர் எடுக்கப்படுகிறது. இது அவர்கள் ஆற்றங்கரை மனிதர்கள் என்பதை நிரூபிக்கும் பழைய ஆதாரம். ஒரு சணல் சாக்கில் நெல் விதைகளைப் போட்டுக் கட்டி, அண்டாவில் போட்டு தண்ணீருக்குள் மூழ்க வைத்து, மறுநாள் முளைத்தவுடன் எடுத்து வைத்துவிடுவது விதை நெல் முளைக்க வைக்கும் சடங்காகும்.
பொன்னேர் பூட்டு விழாவும், நாற்று நடவுத் திருவிழாவும் ஆனி 14ம் நாள் தொடங்கி, 23ம் நாள் முடிகின்றன. கோயில் குருக்கள் பொன்னால் ஆன நாற்றை நட, மள்ளர் இன மக்கள், ஊர்த் தலைவர்கள் நாற்று நடவைத் தொடங்குகிறார்கள். இவைகள் எல்லாம் சுத்தமான தமிழ்ச் சடங்குகளாகும். மட்டுமல்ல சுமார் மூவாயிரம் ஆண்டுகாலத் தமிழர் விவசாயத் தொல் வழக்கத்தை இன்னும் மள்ளர்கள் கைக் கொண்டிருப்பதைக் காட்டும் சடங்கும்கூட. பழந்தமிழ் சமூக எச்சம் ஒன்று இன்றும் ஜீவித்திருக்கிறது என்பதை இந்த மள்ளர் பெருமக்களின் சடங்குகளில் இருந்தே காணமுடிகிறது.
சரி. மிகப் பெரும் வழக்கத்திலிருந்த இந்திர வணக்கம், தமிழர் வாழ்வில் ஏன் மறைந்து போனது? சைவ, வைணவம்போல் அது நீடிக்காமைக்கு என்ன காரணம்? மேலும், நெல் விவசாயத்திற்கும் மள்ளர் என்கிற தேவேந்திரர்களுக்கும் உள்ள உறவு எத்தகையது-?
சரித்திரம் தொடர்கிறது
சேர, சோழ, பாண்டியர்கள்
மருத நிலத்தில் தோன்றிய தமிழர் நாகரிகம் "நெல் நாகரிகம்" எனப்படும். இந்த நெல் நாகரிகத்தைத் தோற்றுவித்த தமிழர் மள்ளர் எனப்பட்டனர். இந்த நெல் நாகரிகம் தமிழகத்தில் தோன்றி தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பரவியது. (இந்தியாவின் மேற்குகுப்புறத்தில் முக்கிய சாதியினராக, மள்ளர் இருந்தனராம்)நிகண்டில் மள்ளர்...அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர் உழவர், வீரர், மன்னர் என்ற மூன்று சொற்களுக்கும் பொருள்படுவதாக மள்ளர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது எனத் திவாகர நிகண்டு சொல்கின்றது.பெரிய புராணத்தில் மள்ளர்...மள்ளர் - தேவேந்திர குல வேளாளர் வளமை - நெல் வேளாண்மைக்கு இன்றியமையாத நீரை இம்மக்கள் வேண்ட அவர்களின் இறைவனும் மாரிக் கடவுளுமான தேவேந்திரர் கோடை காலத்திலும் கொடுப்பார் என்கிறார் பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் பெருமான். பிள்ளை தைவரப் பெருகுபால் சொரி முலைத்தாய்போல் மள்ளர் வேனிலின் மணல் திடர் பிசைந்து கைவருட வெள்ள நீரிரு மருங்குகால் வர்p மிதந் தேறிப் பள்ள நீள் வயல் பருமடை உடைப்பது பாலி.கம்பராமாயணத்தில் மள்ளர்...கம்பர் தமது இராமாயணத்தில் இவர்கள் போர்க்களத்தில் பகைவர்களின் தலைகளை வெட்டி வீழ்த்தியதை உழவு, தொளி கலக்குதல், நாற்று முடிகளைப் பரவுதல் முதலிய நிகழ்வுகளோடு ஒப்பிட்டு கூறுவார். நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின் உதிர நீர் நிறைந்த காப்பின் கடும் பகடு படி கிடந்த கரும் பரப்பின் இன மள்ளர் பரந்த கையில் கடு ங்கமல மலர் நாறும் முடிபரந்த பெருங்கிடக்கைப் பரந்த பண்ணை தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே எனப் பொலியும் தகையும் காண்மின் காரை முகுந்தன் குறிப்பிடும் பாலாவோடையில் இருப்பவர்கள் தலித்துகளல்ல அவர்கள் மள்ளர் குலத்தவர்கள். மள்ளர் என்ற அவர்களது பூர்வீகப் பெயர் சேர, சோழ, மாமன்னர்களின் ஆட்சியதிகார வீழ்ச்சியின் பின் விஜயநகர வடுகர்களால் அவர்களின் கைக் கூலிகளால் பள்ளர்கள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அத்ற்குதவியாக பள்ளு இலக்கியங்கள் இயற்றப்பட்டது. தற்பொழுது நாற்பது பள்ளு இலக்கிய நூல்கள் தமிழகத்தில் இருக்கின்றன். அவ்ற்றில் இரண்டு, நூறு வருடங்களுக்கு யாழ்ப்பாணப் புலவர்களால் இயற்றப்பட்டது. இச்சமூக மக்களை இழிவபடுத்தவே பள்ளு இலக்கியம் இயற்றப்பட்டதாகக் கருதவேண்டியுள்ளது. மள்ளர் என்ற பெயர்தான் பள்ளர் என்று மாற்றப்பட்டதனை பள்ளு நூல்களிலேயே காணலாம். செங்கோட்டுப் பள்ளு மள்ளர் குலத்தவர்களின் கொடைப் பண்புகளையும் விழுமியங்களையும் எடுத்துக் கூறுகின்றது.
புதன், 4 ஆகஸ்ட், 2010
தேவர் ஜெயந்தி – வரலாற்றின் அவமானம்
மக்களின் இன உரிமைக்கான அடையாளங்களும் – போராட்டங்களும்
இந்தியாவை ஆட்டிப் படைக்கும் பார்ப்பன – பனியா சக்திகள்! »
தேவர் ஜெயந்தி – வரலாற்றின் அவமானம்தொகுப்புகள் ... எழுதியது
Rate This
‘பெரியார் பிறந்த பூமி’ என்று நாம் அவ்வப்போது பெருமையடித்துக் கொள்வதற்குச் சொல்லும் காரணங்களில் பிரதானமானது, ‘அண்டை மாநிலமான ஆந்திரா, கேரளா தொடங்கி வடமாநிலங்கள் வரை பலரும் தங்கள் பெயருக்குப் பின்னால் சாதிப்பெயரைப் போட்டுக் கொள்கிறார்கள். மய்யநீரோட்ட இடதுசாரி அமைப்புகள் தொடங்கி புரட்சிகர மார்க்சிய லெனினிய அமைப்பைச் சேர்ந்த முன்னணித் தலைவர்கள் கூட சாதி ஒற்றைப் போட்டுக் கொள்ளும் வழக்கத்தைக் கைவிடவில்லை. ஆனால் தமிழகத்தின் பொதுவெளியில் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரைப் போட்டுக்கொள்வது என்பது கூச்சகரமான செயலாக மாற்றப்பட்டிருக்கிறது’ என்பது. ஆனால் தமிழகத் தலைநகர் சென்னையின் மய்யப்பகுதியன்றில் ஒரு சிலை சாதிப்பெயரோடு நிற்கிறது. அந்த சிலை அமைந்த சாலையும் சாதி ஒற்றைத் தாங்கியிருக்கிறது.
அதிர்ஷ்டவசமாக தமிழகச் சாதிகளுள் ஒன்றில் பிறக்காத எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் தெருக்கள் மற்றும் பூங்காக்கள், நினைவிடங்களில் இருந்த சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டன. பிற்காலத்தில் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் காயிதேமில்லத் பெயரால் மாவட்டம் அமைக்கப்பட்டதையட்டி எழுந்த மதக்கலவரம், வீரன் சுந்தரலிங்கம் பெயர் அரசுப்போக்குவரத்துக் கழகமொன்றிற்கு வைக்கப்பட்டதன் விளைவாய் எழுந்த சாதிய வன்முறைகள் ஆகியவற்றின் காரணமாக ஒட்டுமொத்தமாக தலைவர்களின் பெயர்கள் மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்துக்கழகங்களிலிருந்து நீக்கப்பட்டன. இத்தனைக்கும் மாவட்டங்களுக்கு வைக்கப்பட்ட தலைவர்களின் பெயர்களின் ஒன்றில் கூட தலித் தலைவர்கள் இல்லை. ஆனால் இத்தனை மாற்றங்களுக்குப் பிறகும் அசையாமல் அப்படியேதான் நிற்கிறது பசும்பொன் முத்துராமலிங்கத் ‘தேவர்’ சிலையும் பசும்பொன் முத்துராமலிங்கத் ‘தேவர்’ சாலையும்.
முக்குலத்துச் சாதி அதிகாரத்தையும் அரசியலையும் கேள்விக்குட்படுத்தாமல் தமிழ்ச்சமூகத்தின் பல தீர்மானகரமான மய்யங்கள் ஏற்றுக்கொண்டது என்பதே இதன் அர்த்தம். இன்று வரை வெகுஜன ஆதரவு பெற்ற எந்த ஒரு சின்ன அசைவும் கூட இந்த முக்குலத்தோர் அதிகாரத்திற்கு எதிரானதாக இல்லை. மாறாக அதற்கேற்றவாறு சமூகம் ஒத்திசைந்து தன்னைத்தானே தகவமைத்துக் கொள்கிறது. அதன் உச்சம் ‘தேவர் ஜெயந்தி’ என்னும் கலாச்சார அநாகரீகம், ஜெயமோகனின் வார்த்தையில் சொல்வதானால் ‘ஜனநாயகரீதியிலான மக்கள் கூடுகை’. சாதி குறித்த பிரக்ஞையுடனும் பிரக்ஞையற்றும் எவ்வாறு தமிழ்ச்சமூகம் பெருவாரியாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை மூன்று விதமான தளங்களினின்றும் அணுகலாம்.
அரசியல்:
திமுகவும் கருணாநிதியும் ஒருகாலத்தில் முக்குலத்தோரால் விலக்கப்பட்ட சக்திகளாகவே இருந்தனர். காரணம், திமுகவின் தலைவராக இருந்த கருணாநிதி போன்ற ‘எளியசாதி’ மனிதர்களை அவர்களின் சாதிய உளவியல் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் தேவர் சாதிக் கருத்தியல் பிதாமகன் பசும்பொன் முத்துராமலிங்கம் திமுக முன்வைத்த தமிழின -பார்ப்பன எதிர்ப்பு & இந்துமத எதிர்ப்பு அரசியலுக்கு எதிராய் இயங்கி வந்தவர். ஆனால் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் முக்குலத்தோர் அதிமுகவிலும் அரசு அதிகாரங்களிலும் போதுமான செல்வாக்கைச் செலுத்தினர். காளிமுத்து, திருநாவுக்கரசர் போன்றவர்கள் கட்சியில் அதிகார மய்யங்கள் என்றால், பொன்.பரமகுரு போன்ற முக்குலத்துப் போலீஸ் அதிகாரிகள் அரசு எந்திரங்களின் தீர்மானகரமான சக்திகளாக இருந்தனர். முக்குலத்தோர் & அதிமுகவினர் உறவு என்பது ஜெயலலிதா தலைமைக்காலத்தில் உச்சத்தை எட்டியது என்பதும் அதற்குக் காரணம் சசிகலாவின் செல்வாக்கு என்பதும் சாதாரண தமிழ்ஜனங்களும் அறிந்ததுதான்.
ஆனால் இப்போது இழந்துபோன முக்குலத்தோர் ஆதரவைப் பெறுவதற்காக கருணாநிதியும் பல உத்திகளைக் கையாளத் தொடங்கியுள்ளார். தேவர் ஜெயந்தியை அரசு விழாவாக மாற்றுவது, மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத்தின் பெயர் சூட்டுவதான அறிவிப்பு என்பதாகத் தொடர்கிறது. மேலும் இப்போது தென்மாவட்ட திமுகவில் அதிகார மய்யங்களில் இருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் முக்குலத்தோர்தான். ஆனால், என்ன ஒரு மனத்தடையாலோ இதுவரை கருணாநிதி நேரடியாக முத்துராமலிங்கத்தின் சமாதிக்குச் சென்று மாலை அணிவித்தது இல்லை. இந்த ஆண்டு சென்னையில் முத்துராமலிங்கத்தின் சிலைக்கு மாலை அணிவித்தது மு.க.ஸ்டாலின், பரிதி இளம்வழுதி, ஆற்காடு வீராசாமி. இதில் ஒருவர் கூட முக்குலத்தோர் அல்ல. பசும்பொன்னில் மரியாதை செலுத்தியது அழகிரி. ஆனால் அவருடன் சென்றது ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு போன்ற முக்குலத்து அமைச்சர்கள். தன்னுடைய கருத்தியல் அடிப்படைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக நழுவ விடுகிற திமுக சாதி ஓட்டுக்காக எந்த சமரசத்தையும் செய்துகொள்ள தயாராகத்தானிருக்கும்.
ஜெயலலிதா பொதுவாக எந்த அரசியல் முன்னோடிகளையும் மதிக்கும் பழக்கம் கொண்டவர் அல்ல. அண்ணா, பெரியார், காமராசர், காயிதேமில்லத் போன்ற அரசியல் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க ஜெயலலிதா போவது அரிதினும் அரிது. ஜெயலலிதாவின் கைத்தடிகளை அந்த வேலையைச் செய்ய பணித்து விடுவார். அதுவும் இந்த ஆண்டு பெரியார் பிறந்தநாளுக்கு சிலைக்குக் கூட மாலை அணிவிக்கச் செல்லவில்லை. தான் இருந்த கொடநாடு எஸ்டேட்டிற்குப் பெரியாரின் புகைப்படத்தை வரவழைத்து ‘மரியாதை’ செய்தார். அண்ணாவுக்கும் அஃதே. கொடுமை என்னவென்றால் இத்தனைக்கும் இந்த ஆண்டு அண்ணா நூற்றாண்டு நிறைவுவிழாவும்கூட. ஆனால் முத்துராமலிங்கத்தின் பிறந்தநாளைக்கு நேரடியாகச் சென்று மாலை அணிவிக்க ஜெயலலிதா தவறியதேயில்லை. எம்.ஜி.ஆர் காலத்தில் நிலவிய கச்சாடாவான ஜனரஞ்சகக் கலாச்சாரத்தை அழித்து இந்துத்துவ பார்ப்பனியச் சார்பு நிலை எடுத்து வலதுசாரி அமைப்பாக மாறிப்போன ஜெ&அதிமுகவிற்கு மிகவும் இசைவானதுதான் இந்த முக்குலத்தோர் அதிகார அரசியல்.
திமுக, அதிமுக என்கிற திராவிடக் கட்சிகளைத் தாண்டிப்போனால் தென்படுபவர்கள் ‘இடதுசாரிகள்’. சென்ற ஆண்டு முத்துராமலிங்க ஜெயந்திக்கு மரியாதை செலுத்த அதே சாதியைச் சேர்ந்த நல்லகண்ணுவை அனுப்பி தன் ‘புரட்சிகரத் தன்மையை’ நிறுவிக்கொண்டது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி. மதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்கத்தின் பெயர் வைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் சி.பி.எம் கட்சியின் என்.வரதராஜன். ஆனால் இந்த ஆண்டு அறுவைச்சிகிச்சை முடிந்து கறுப்புக்கண்ணாடியோடு முத்துராமலிங்கத்தின் சிலைக்கு மாலை போட்டு அட்டகாசமாய்ச் சிரிக்கிறார் காம்ரேட் என்.வி.
இத்தகைய சீரழிவின் கடைசிக்கொழுந்து, புளுத்துப்போன சந்தர்ப்பவாத சவடால் அரசியலுக்குப் புதுவரவு பெரியாரின் பேரன், பிரபாகரனின் தம்பி, பகுத்தறிவு இயக்குனர், செந்தமிழ் நாட்டு சேகுவாரா சீமான். நல்லவேளையாக நாத்திகம் பேசுவதைத் தவிர பெரியாருக்கும் சீமானுக்கும் பெரிய தொடர்புகள் இல்லை. குஷ்பு விவகாரத்தில் ஆணாதிக்கவாதியாக அம்பலப்பட்டுப் போன சீமான், பெரியார் மற்றும் பிரபாகரனின் பெயரை உச்சரித்தே தனக்கான இளைஞர் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார். ‘தம்பி’ திரைப்படத்தில் முத்துராமலிங்கத்தின் புகைப்படத்தைக் காட்டி மாற்று அரசியலாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். பின் கீற்று இணையத்தள நேர்காணலில் ‘தான் செய்தது தவறு’ என்று ஒத்துக்கொண்டார். இருந்தபோதும் சீமானின் சாதிய உளவியல் ஒழிந்தபாடில்லை. ஈழ ஆதரவு என்ற பெயரில் காங்கிரசுக்கு எதிரான பிரச்சாரக் கூட்டங்களில் “ஈனசாதிப் பயலா இருந்தா காங்கிரசுக்கு ஓட்டுப்போடு” என்று விஷத்தைக் கக்கினார். இப்போது கொஞ்சமும் வெட்கமில்லாமல் முத்துராமலிஙக்த்தின் சிலைக்கு மாலை அணிவித்து வந்திருக்கிறார்.
“இம்மானுவேல் சேகரனுக்கும் மாலை போட்டோமே” என்பது சீமான் தரப்பு வாதம். சுயமரியாதைக்காகப் போராடிய போராளிக்கும் மாலை, ஒடுக்குமுறையை ஏவிய கொலைகாரனுக்கும் மரியாதை. இதுதான் சீமானின் ‘தமிழ்த்தேசிய தகிடுதத்தம்’. முத்துராமலிங்கம் மீது பேரன்பும் ராஜபக்ஷே மீது பெருங்கோபமும் கொண்ட பிஸ்கோத்து தமிழர்களை உருவாக்குவதுதான் சீமானின் ‘நாம் தமிழர்’ இயக்கம். இது சீமானோடு மட்டும் நிற்பதில்லை. தமிழ்த்தேசியம் என்ற பெயரில் இங்கு முன்வைக்கப்பட்டவை அனைத்தும் ஆதிக்க சக்தி நலன் பேணும் கருத்தியல்களே.
ஈழ ஆதரவுப் போராட்டங்களில் பெரியார் திராவிடர் கழகத்தோடு பல தமிழின அமைப்புகள் இணைந்து போராடின. ஆனால் தமிழகம் முழுவதும் இரட்டை டம்ளரை எதிர்த்து பெரியார் திக போராடியபோது தமிழின அமைப்புகள் கைகோர்க்கவில்லையே. தமிழினவாதம் என்பது ஆதிக்கசாதிகளின் அயோக்கியத்தனமே என்பதற்கு ஆதாரம் தேட எங்கும் போகத் தேவையில்லை. இதே கீற்று இதழில் வெளியான முனைவர் வே.பாண்டியனின் ‘மார்க்சிஸ்ட்களின் புதிய அக்கறை & ஆலய நுழைவுப் போராட்டம்’ என்னும் கட்டுரையே போதுமானது. மார்க்சிஸ்ட் கட்சியில் பார்ப்பனத் தலைமை, மலையாளிகள் தலைமை என்று காரணங்காட்டி சாதியாதிக்கத்தைக் காப்பாற்றுகிற அயோக்கியத்தனம்தான் பாண்டியனின் ‘தமிழின ஒற்றுமை’ கட்டுரை.
சினிமா:
அவ்வப்போது சீர்திருத்தப் பூச்சாண்டி காட்டும் விவேக், எவ்வளவு மோசமான தேவர் சாதி வெறியர் என்பதை விளக்குவதற்கு ஆதாரங்கள் தேவையில்லை. இப்போது அதன் புதிய வரவு கருணாஸ். ‘முக்குலத்து முகவரி’ என்னும் இசை ஆல்பத்தை வெளியிட்டிருக்கும் கருணாஸ் ‘இந்து, முஸ்லீம், கிறித்தவர்கள் என்பதுதான் முக்குலத்தோர்’ என்று ‘அறிவியல்’ விளக்கம் அளித்திருக்கிறார். இந்துமகாசபைத் தலைவனாக இருந்த முத்துராமலிங்கம் எப்படி முஸ்லீம்களுக்கும் கிறித்தவர்களுக்கும் முகவரியாக இருப்பார் என்று நமக்கு விளங்கவில்லை. கஞ்சா கருப்பு, ஆச்சி என்று அழைக்கப்படுகிற மனோரமா என சினிமாவில் பலரும் முக்குலத்தோரே. இயக்குனர்கள், நடிகர்கள் என பலமட்டங்களிலும் சினிமாவில் முக்குலத்தோர் ஆதிக்கம் உண்டு.
உதட்டுக்கு மேலே முளைக்கிற மயிரையும் முக்குலத்தோரையும் வீரத்தின் குறியீடாக மாற்றியதில் தமிழ்ச்சினிமாவிற்கு மிக முக்கியப் பங்குண்டு. இதை முக்குலத்தோர் மட்டும்தான் செய்தார்கள் என்றில்லை; கமல்ஹாசன் மாதிரியான பார்ப்பனர்கள் தொடங்கி பல முக்குலத்தோர் அல்லாதோரும்கூட இதைச் செய்திருக்கிறார்கள். தமிழ்ச் சினிமாக்களில் தேவராதிக்கம் கட்டமைக்கப்பட்டது குறித்து தனிக்கட்டுரையே எழுத வேண்டும். தேவர்சாதிப் பெண்ணைக் காதலித்ததால் சாதிய வன்முறை ஏவப்பட்டு மனநோயாளியாகும் தலித் இளைஞனைச் சித்தரிக்கும் ‘காதல்’, குறவர்சாதிப் பெண்ணைத் திருமணம் செய்ததால் அந்த குடும்பத்தையே விலக்கி வைக்கும் முக்குலத்துச் சாதிவெறியை அம்பலப்படுத்திய ‘பருத்திவீரன்’, தலித் & பள்ளர் முரண்பாட்டைச் சொன்ன ‘பாரதிகண்ணம்மா’ போன்ற சில படங்களைத் தவிர (இதனால் இந்த படங்கள் முற்றுமுழுதான & பிரச்சினைகள் எதுவுமற்ற அரசியல் சினிமாக்கள் என்று பொருளில்லை) பெரும்பாலும் தமிழ்ச்சினிமா என்பது முக்குலத்தோர் அதிகாரத்திற்கு ஒத்திசைந்தே உருவானது.
இலக்கியம்:
90களுக்குப் பிறகு உருவான கோட்பாட்டு வெளிச்சங்களில் சாதிய இழிவுகளுக்கு எதிராய்ப் பேசிய மனநிலை இன்றைய பெரும்பாலான இலக்கியவாதிகளிடம் இல்லை. தன்மய்யநோக்கு கொண்ட, அரசியல் நீக்கம் செய்யப்பட்ட பிரதிகளே பெரும்பாலும் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஈழத் தமிழர்களுக்காகப் போராடத் துணிகிற கோணங்கி மாதிரியான படைப்பாளிகள் எப்போதும் சுயசாதி ஆதிக்கத்தைக் கேள்விக்குட்படுத்தியதில்லை. தங்கள் படைப்புகளில் கூட பதிவு செய்ததில்லை.
சமீபத்தில் உயிரெழுத்து இதழில் இலக்கிய விமர்சகர் முருகேசபாண்டியனின் எதிர்வினை ஒன்றைப் படிக்க நேர்ந்தது. கவிஞர் கரிகாலன் காலச்சுவடு இதழ் குறித்து எழுதிய கட்டுரைக்கான எதிர்வினை. “சுந்தரராமசாமி பாவம், கண்ணன் பாவம், நோ நோ டாடி பாவம், மம்மி பாவம், ஆல் பேமிலி டேமேஜ்” என்று புலம்பும் முருகேசபாண்டியன் “பார்ப்பனர்களையே ஏன் திட்டுகிறீர்கள். இட ஒதுக்கீட்டினால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்” என்று அரற்றுகிறார். அரட்டை அரங்கத்தில் பேசிக் கைதட்டல் வாங்க வேண்டிய முருகேசபாண்டியன்தான் நம் காலத்து ‘இலக்கிய விமர்சகர்’.
இப்படியாகத்தான் சாதி குறித்த பிரக்ஞையுடனும் பிரக்ஞையற்றும் உருவாகியுள்ள மொன்னைத்தனம் நிரம்பிய இலக்கியவாதிகள் சாதி ஆதிக்கத்திற்கு எதிராகக் குரல் எழுப்புவார்களா என்ன? இதனால்தான் “தேவர் ஜெயந்தி என்பது ஜனநாயகத்திற்கான மக்கள் கூடுகை” என்று ஜெயமோகன் ‘கருத்துமுத்து’ உதிர்க்கிறார். (ஆனால் இதே ஜெமோதான் ‘புரட்சி என்பதே மாஸ் ஹிஸ்டீரியா’ என்று ஏழாம் உலகத்தில் அருள்வாக்கு சொன்னவர்.) “நீதிக்கட்சி முக்குலத்தோருக்கு எதிரான குற்றப்பரம்பரைச் சட்டத்தைப் பரப்பியது” என்று கூசாமல் பொய் சொல்கிறார். அதுசரி கமலாதாஸையே கறுப்பு என்றவருக்கு இது எம்மாத்திரம்?
ஜெயமோகனின் மொழி ஆளுமையில் பலர் சொக்கிப் போவது உண்டாம். ஆனால் ஒரு சட்டத்தை எப்படி ‘பரப்ப’ முடியும் என்று அந்த சொக்கநாதர்களிடம் தான் கேட்க வேண்டும். (ஜெயமோகனுக்கு வந்த வாசகர் கடிதமொன்றில் முதுகுளத்தூர் கலவரம் குறித்து வாசகரொருவர் சுட்டிக்காட்டுகிறார். “முதுகுளத்தூர் பிரச்சினை குறித்து தனியாக எழுத வேண்டும்” என்கிறார் ஜெமோ. “அய்யய்யோ, அது வேறயா?” என்று அலறத் தோன்றியது.) காலச்சுவடுக்கும் பார்ப்பனர்களுக்கும் ஆதரவாக எழுதுகிற முருகேசபாண்டியன்கள் ஜெயமோகனின் இந்த முக்குலத்துச்சார்பு கட்டுரை குறித்து எழுதுவார்களா என்ன?
இப்படியாக அரசியல், கலை, இலக்கியம் என எல்லாமும் சாதியக்கறை படிந்து இறுக்கம் சூழ்ந்துள்ள நிலையில் இந்த அழகிய கற்பனையை நீங்களும் கற்பனை செய்து பாருங்கள். சென்னை நந்தனத்தில் உள்ள ‘பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சாலை’யிலும் முத்துராமலிங்கத்தின் சிலையில் உள்ள பீடத்திலும் உள்ள ‘தேவர்’ சாதிப்பெயரைத் தார்பூசி அழிக்கும் போராட்டத்தை ஒரு இயக்கம் நடத்துகிறது என்று கற்பனை செய்யுங்கள். நிச்சயமாக அது இந்தியத் தேசியக்கொடியை எரிப்பதை விடவும் கடுமையான போராட்டமாகத் தானிருக்கும். அரசு ஒடுக்குமுறையையும் சாதிய வன்முறையையும் ஒருசேர சந்திக்கும் போராட்டமாகத் தானிருக்கும். ஆனால் சாதியெதிர்ப்புக் கருத்தியலின் சுயமரியாதையைக் காப்பாற்றும் போராட்டமாக நிச்சயம் அது இருக்கும். ஆனால் அதை யார் செய்வது? பெரியார் தி.க? ம.க.இ.க? ஆதித்தமிழர்பேரவை? காலம் நம் முன்வைக்கும் வரலாற்றுச் சவால் இது.
செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010
உமாசங்கர் ஐ.ஏ.எஸ்: கருணாநிதி குடும்ப ஆட்சிக்குப் பலிகடா!
உமாசங்கர் ஐ.ஏ.எஸ்: க
உமாசங்கர் எனும் தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரியை பலரும் அறிந்திருப்பார்கள். நேர்மையான அதிகாரி என்ற பெயரெடுத்த உமாசங்கர் இப்போதுதான் தனது நேர்மைக்குரிய சோதனையை தன்னந்தனியாக சந்தித்து வருகிறார்.
மாறன் சகோதரர்களுக்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் மதுரை தினகரன் ஊழியர் எரிப்பு பிரச்சினையை ஒட்டி விரிசல் ஏற்பட்ட போது உருவானது அரசு கேபிள் டி.வி. இதன் நிர்வாக இயக்குநராக உமா சங்கர் நியமிக்கப்பட்டார். கேபிள் வலைப் பின்னலில் மாறன்களது சுமங்கலி கேபிள் நிறுவனத்தின் ஏகபோகத்தை உடைப்பதுதான் இதன் நோக்கம். கலைஞர் டி.வியும் அப்படித்தான் அவதரித்தது.
இந்தப் பின்னணியில் உமாசங்கர் முழுவீச்சில் அரசு கேபிள் டி.வியை உருவாக்க முனைந்தார். பிறகு சுமங்கலி நிறுவனத்தை அரசுடமையாக்க வேண்டுமென்றும், இதற்கு எதிராக எல்லா முறைகேடுகளையும் வைத்து அரசு கேபிள் டி.வியை முடக்க நினைக்கும் மத்திய அமைச்சர் (அநேகமாக தயாநிதி மாறன்) ஒருவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் பரிந்துரைத்தார்.
சுமங்கலி கேபிள் நிறுவனத்தின் மீது கேபிள் ஆபரேட்டர்களுக்கும், மற்ற தமிழக சேனல்களுக்கும் மிகுந்த வெறுப்புணர்வு இருக்குமளவு அவர்களது ஏகபோகம் ஆதிக்கம் செலுத்தி வந்தது. அதனாலேயே கேபிள் டி.வி விநியோகஸ்தர்கள் அரசு நிறுவனத்தில் சேருவதற்கு ஆர்வம் காட்டினர். இதையே முன்னர் ஜெயலலிதா உருவாக்க முனைந்த போது கூட்டணி மத்திய அரசின் தயவில் கருணாநிதி குடும்பம் முறியடித்ததும் குறிப்பிடத்தக்கது.
பிறகு மாறன் சகோதரர்களும், கருணாநிதி குடும்பத்தாரும் சேர்ந்து விட்டனர். அரசு கேபிள் டி.வி அதோகதியாய் மரணிக்க விடப்பட்டது. மாறிய கேபிள் விநியோகஸ்தர்கள் நட்டாற்றில் விடப்பட்டனர். உமாசங்கரும் மாறன்களது கடும் கோபத்திற்கு ஆளானார். பிறகு என்ன?
உமாசங்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டார் என்று தமிழக அரசால் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்கு ஆளானார். அவர் மீது நடவடிக்கையும், விசாரணையும் ஏவிவிடப்பட்டது. தற்போது இதற்கு எதிராக உமாசங்கர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றிருக்கிறார். அதில்தான் அரசு கேபிள் டி.விக்காக தான் பரிந்துரைத்த விடயங்களுக்காக பழிவாங்கப்படுவதாக தெரிவித்திருக்கிறார்.
இதற்கு பதிலளித்திருக்கும் தமிழக அரசு அவர் மீதான அந்தக் குற்றச்சாட்டிற்கு முதல் நிலை ஆதாரங்கள் உள்ளதால் விசாரணையிலிருந்து அவருக்கு விலக்களிக்க முடியாது என்று கூறியிருக்கிறது. இதன் மீது நீதிமன்றம் என்ன முடிவெடுக்கும் என்று இப்போது தெரியவில்லை.
ஆனால் கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்காக உமாசங்கர் பலிகடாவாக்கப் பட்டிருக்கிறார் என்பதில் மட்டும் சந்தேகமில்லை. இப்போது தன் மீதான குற்றச்சாட்டை அவர் மட்டுமே எதிர்கொண்டுவருகிறார். சக அதிகாரி இப்படி பலிகடாவாக்கப்பட்டது குறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் வாயைத் திறக்கவில்லை. பத்திரிகைகளில் தங்கம், ஜென்டில்மென் என்று கவர் ஸ்டோரி வருவதற்கு ஆசைப்படும் அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் எவரும் இவை போன்ற உண்மையான அதிகார-அரசியல் ஆதிக்கம் மிரட்டல்களுக்கு எதிராக குரல் கொடுப்பதில்லை.
உமாசங்கருக்கு நடந்தது நாளை நமக்கும் நடக்கும் என்பதே அவர்களது நிலையாக இருக்கும். இது உண்மையென்றால் கருணாநிதியின் குடும்ப ஆட்சியையும், ஊழல் முறைகேடுகளையும் யாரும் கனவில் கூட எதிர்க்க முடியாது என்ற சூழல் வரும். ஊடகங்களும் கருணாநிதி ஜால்ராவாக மாறிவிட்ட நிலையில் இத்தகைய அதிகாரிகள் தமது அதிகாரி-வர்க்க மேட்டிமைத்தனத்தை உதறிவிட்டு மக்கள் அரங்கில் நின்று கொண்டு போராடவேண்டும். இன்னும் வெளிவராத உண்மைகளை அம்பலப்படுத்த வேண்டும். கருணாநிதியின் காட்டுதர்பாரை மக்கள் ஆதரவுடன் வீழ்த்துவதற்கு இத்தகைய முன்முயற்சிகள் வேண்டும்.
உமாசங்கர் முன்வருவாரா?ருணாநிதி குடும்ப ஆட்சிக்குப் பலிகடா!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

