ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

வேலுச்சாமி நாடாரைத் தெரியுமா?

PDF அச்சிடுக மின்-அஞ்சல்

velsamy_nadarமுத்துராமலிங்கத் தேவர், இமானுவேல் சேகரன் இவர்களைத் தெரிந்த அளவுக்கு உங்களுக்கு வேலுச்சாமி நாடாரைத் தெரியுமா?
இந்திய விடுதலைக்கு முன்பும் பின்பும் ராமநாதபுரம் மாவட்ட அரசியலிலும், தமிழ்நாடு அரசியலிலும் இந்த வேலுச்சாமி நாடார் என்ற கேரக்டர் ஏற்படுத்திய தாக்கம் முக்கியமானது.
ஆனால்... முத்துராமலிங்கத் தேவர், இமானுவேல் ஆகியோருக்கு கிடைக்கப்பெற்ற கவனம் வேலுச்சாமி நாடாருக்குக் கிடைக்கப் பெறவில்லையோ என்ற சந்தேகமும் ஊடகங்களைப் பார்த்தால் நமக்குக் கிடைக்கும்.
ஆகஸ்டு 14-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பேரையூரில் (இதுதான் வேலுச்சாமி நாடாரின் சொந்த ஊர்) அவருக்கு நினைவிடம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அவரது நினைவுநாள் ஆகஸ்டு 14.
வேலுச்சாமி நாடாருக்கு நினைவுமண்டபம் என்றவுடனே...  கடைசி நேரத்தில் அனுமதி கொடுக்க மறுத்தது போலீஸ்.  வேலுச்சாமி நாடாரின் மகன் போஸ் உடனடியாக எஸ்.ஐ. அணுக, அவர் உடனே ஏ.எஸ்.பி.யை அணுகச் சொல்லியிருக்கிறார்.
ஏ.எஸ்.பி., ‘யார் இந்த வேலுச்சாமி நாடார்?’ என்று கேள்வி கேட்க...
‘முதுகுளத்தூர் தாலுகா ஆபீஸில் 1957-ல் நடந்த அமைதி கமிட்டிக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்’ என்று பதில் சொல்லியிருக்கிறார்கள்.
இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்போடு நாடார் மகாஜன சங்கத் தலைவர் கரிக்கோல்ராஜ் இந்த வேலுச்சாமி நாடார் நினைவிடத்தைத் திறந்துவைத்தார்.
ராமநாதபுரம் ஏ.எஸ்.பி.யைப் போலவே பலரும் கேட்கும் கேள்வி,
யார் இந்த வேலுச்சாமி நாடார்?
1907-ம் ஆண்டு அப்போதைய ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே, பேரையூர் கிராமத்தில் பிறந்தவர் வ.மூ.சி.வேலுச்சாமி நாடார். இவர் பிறக்கும்போது அவர்களின் குடும்பத்துக்கு அவர் பாட்டி காலத்தில் கட்டிய மாடிவீடு இருந்தது என்றால் அவரது பொருளாதார நிலையை யோசித்துக் கொள்ளுங்கள்!
1936-ல் காங்கிரஸில் தீவிரமாக  இயங்கத் தொடங்குகிறார் வேலுச்சாமி. அந்த காலகட்டங்களில் முத்துராமலிங்கத்தேவரும் காங்கிரஸில் தீவிரமாக இருந்தார். தேவரையும், நாடாரையும் இணைத்தது காங்கிரஸ் கட்சி.
முத்துராமலிங்கத் தேவரோடு மிகவும் நெருக்கமானார் வேலுச்சாமி நாடார். அதற்கு அடையாளமாக 1936-ம் ஆண்டு பேரையூரில் முத்துராமலிங்கத் தேவர் தலைமையில் பிரமாண்டமாக பொதுக்கூட்டம் காங்கிரஸ் சார்பில் நடந்தது.
குற்ற பரம்பரை சட்டத்தை எதிர்த்துதான் இந்தக் கூட்டம். இக்கூட்டத்தில் பேசியதற்காக முத்துராமலிங்கத்  தேவர், வேலுச்சாமி நாடார் உள்ளிட்டோர்  மீது வாய்ப்பூட்டுச் சட்டம் போடப்பட்டது.
இந்நிலையில் 1936-ல் கமுதியிலிருந்து காங்கிரஸ் ஜில்லா போர்டு மெம்பர் ஆனார் வேலுச்சாமி நாடார்.  அதே ஆண்டில் காமராஜர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஆகிறார்.
இந்தத் தகவல் கேள்விப்பட்டதும், காமராஜரைப் பற்றி கிண்டலடித்துவிட்டார் முத்துராமலிங்கத் தேவர். இதை அருகிருந்து கேட்ட வேலுச்சாமி நாடார், அப்படிப் பேசவேண்டாமே என்று தேவரிடம் கூறியிருக்கிறார். தேவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இருவரையும் நெருங்க வைத்த காங்கிரஸே இருவருக்கும் இடையில் உரசலை உண்டுபண்ணியது.
devar-feb-16-20081939-ல் காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் பட்டாபி சீதாராமையாவா, நேதாஜியா என்ற போட்டியில் சீதாராமையாவை ஆதரித்தார் காந்தி.  நேதாஜிக்கும் காந்திக்கும் ஏற்பட்ட உரசல் இந்தியா முழுவதும் நேதாஜி ஆதரவாளர்களுக்கும் காந்தி ஆதரவாளர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தியது.
வேலுச்சாமி நாடார் காந்தி பக்கம். முத்துராமலிங்கத் தேவர் நேதாஜி பக்கம் என்று ஆனார்கள். இந்நிலையில் 1940-ம் ஆண்டு தனது பாதுகாப்புக்காக துப்பாக்கி லைசென்ஸ் வாங்குகிறார் வேலுச்சாமி நாடார். டபுள் பேரல்  ரைபிளும் வாங்குகிறார்.
காமராஜர் விவகாரத்தில், வேலுச்சாமி நாடார்- முத்துராமலிங்கத் தேவர் உறவில் உரசல் ஏற்பட்டிருந்த நிலையில்.... வேலுச்சாமி நாடார் வாங்கிய துப்பாக்கி முத்துராமலிங்கத் தேவருக்கு சந்தேகத்தை அதிகரித்தது. இருவருக்குமான இடைவெளி அதிகமானது.
19410-ம் ஆண்டில் பிரிட்டிஷார் இரண்டாம் உலகப்போரில் இந்தியாவை ஈடுபடுத்துவதைக் கண்டித்து காந்தி இந்தியா முழுதும் தனி நபர் சத்தியாக்கிரகத்துக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி பேரையூரில் சத்தியாக்கிரகம் நடத்த வேலுச்சாமி நாடாருக்கு காந்தியிடமிருந்து கடிதம் வந்தது மாவட்ட கமிட்டி மூலமாக. இதில் பங்கேற்று வேலுச்சாமி நாடார் அலிப்பூர் மூன்றரை மாதங்கள் சிறைவாசமும் அனுபவித்தார்.
சிறை சென்று வந்தபின் காங்கிரஸின் மாவட்ட துணைத்தலைவர் ஆகிறார் வேலுச்சாமி நாடார். காமராஜரோடு நெருங்க நெருங்க முத்துராமலிங்க தேவரிடமிருந்து விலகுகிறார்!
இந்த நிலையில்தான் தேவரின் வைத்தியரான பெருமாள் பீட்டர் மூலம் வேலுச்சாமி நாடாருக்கு அறிமுகமாகிறார் இமானுவேல் சேகரன். துடிப்பான இளைஞரான இமானுவேலை காங்கிரஸ் கட்சிக்காக பட்டை தீட்டுகிறார் வேலுச்சாமி நாடார். இந்நிலையில் முத்துராமலிங்கத் தேவருக்கு எதிரான அரசியல் சக்தியாக மாறுகின்றனர் வேலுச்சாமி நாடாரும், இமானுவேல் சேகரனும்!
வரலாறு திரும்புகிறது எதிர்த்திசையில்!
1936-ல் பேரையூரில் கூட்டம் போட்டு வேலுச்சாமி நாடாரைப் புகழ்ந்த முத்துராமலிங்கத் தேவர்...
1957-ம் ஆண்டு மீண்டும் அதே பேரையூரில் கூட்டம் போட்டார் வேலுச்சாமி நாடாருக்கு எதிராக. ஜூன் 28-ம் தேதி 8 ஆயிரம் பேர் கொண்ட கூட்டம்.
வேலுச்சாமி நாடாரின் சொந்த ஊரில் நடந்த கூட்டத்தில் அவரைப் பற்றிக் கடுமையாகப் பேசுகிறார் முத்துராமலிங்கத் தேவர்!
imanuel-sekaranமுதுகுளத்தூர் கலவரம் தொடர்பாக 1957 செப்டம்பர் 10&ம் தேதி முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பணிக்கர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடக்கிறது. அதில் முத்துராமலிங்கத் தேவர், இமானுவேல் ஆகியோரோடு கலந்துகொண்டவர்களில் முக்கியமானவர் வேலுச்சாமி நாடார். அந்த கூட்டத்தில் இமானுவேலுக்கும் முத்துராமலிங்கத் தேவருக்கும் தடித்த வாக்குவாதங்கள் நடைபெற்றபோது... இமானுவேலுக்கு ஆதரவாகப் பேசினார் வேலுச்சாமி நாடார்!
அந்தக் கூட்டத்தை தொடர்ந்து இமானுவேலுக்கும், வேலுச்சாமி நாடாருக்கும் கொலைமிரட்டல்கள் விடப்பட்டன.
இமானுவேலுவின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதை அறிந்த வேலுச்சாமி நாடார் அன்று இரவு இமானுவேலை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். தலைக்குக் குறிவைக்கப்பட்டிருந்த இருவரும் பேரையூரில் பாதுகாப்பாக இருந்தனர். அதற்கு முக்கியக் காரணம் வேலுச்சாமி நாடாரிடம் இருந்த துப்பாக்கி!
மறுநாள் செப்டம்பர் 11 காலை... பாரதி விழா ஒன்றில் பேசவேண்டியிருப்பதாகச் சொல்லிக் கிளம்பினார் இமானுவேல் சேகரன்.
இப்போது வேண்டாம். சூழல் சரியில்லை என்று வேலுச்சாமி நாடார் தடுத்தும் இமானுவேல் கேட்காமல் புறப்பட்டார். அன்று இரவுதான் இமானுவேல் கொடூரமாக கொல்லப்பட்டார்.
இமானுவேலைத் தொடர்ந்து வேலுச்சாமி நாடாருக்கு கொலைமிரட்டல்கள் தொடர்ந்தன. அப்போது வேலுச்சாமி நாடாருக்கு ஐம்பது வயது! ஐந்து ஆண்கள், இரண்டு பெண்கள் என ஏழு பிள்ளைகளின் தகப்பன். பிள்ளைகளுக்காக உயிர்வாழவேண்டுமே என்ற எண்ணத்தில் பேரையூரிலிருந்து மூன்று மாதங்களில் காலி செய்து, மதுரைக்குச் சென்றார். அங்கேயும் கொலை நிழல்கள் துரத்தவே மணப்பாறைக்கு வந்தார்.
தனது எழுபத்து நான்காம் வயதில் 1981-ம் ஆண்டு மறைந்தார்.
காங்கிரஸூக்கு மிகத் தீவிரமாகக் களப்பணியாற்றி, வகுப்பு நல்லிணத்துக்காக பாடுபட்ட வேலுச்சாமி நாடாரை... இமானுவேலை கைவிட்டது போலவே விட்டுவிட்டது காங்கிரஸ்! வேலுச்சாமி நாடார் பற்றி இது சுருக்கமான பதிவுதான்... விரிவாக பதிவு எழுத்தாளர் அன்வர் பாலசிங்கம் மூலமாக புத்தமாகத் தயாராகிறது!

வன்கொடுமைகளை விரைந்து விசாரிக்க தனி நீதிமன்றம் வேண்டும்

பரமக்குடி-பத்தானிதோலாவுக்கு நீதிகோரும் இயக்கம் [இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி] சார்பில் 18-08-2012 அன்று மதுரையில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். கருத்தரங்கிற்கு ஒடுக்கப்பட்ட விடுதலை முன்னணி மாநில அமைப்பாளர் அ.சிம்சன் தலைமை தாங்கினார். கருத்தரங்கில், தியாகி இமானுவேல் சேகரன் பேரவை பொதுச்செயலாளர் பூ.சந்திரபோஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மத்தியக்கமிட்டி உறுப்பினர் கவிதா கிருஷ்ணன், மாநிலச்செயலாளர் பாலசுந்தரம், எஅய்சிசிடியு மாநிலச்செயலாளர் (டாக்டர் அம்பேத்கர் மின்வாரிய பணியாளர் மற்றும் பொறியாளர் சங்கம்) பாலசுப்பிரமணியன், எழுத்தாளர் இளம்பரிதி பேசினர். இகக மாலெ மதுரை மாவட்டச் செயலாளர் மதிவாணன் வரவேற்புரை ஆற்றினர். வழக்கறிஞர் வேல்முருகன் நன்றி கூறினார்.
2011 செப்டம்பர் 11ல் தியாகி இமானுவேல் சேகரன் நினைவுநாளில் திரண்ட ஒடுக்கப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதி வெறிபிடித்த போலீஸ்காரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி ஆறு பேரை கொன்று ஓராண்டு ஆகப்போகிறது. இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. குற்றச்சாட்டு கூட பதிவு செய்யப்படவில்லை. மக்களால் புறக்கணிக்கப்பட்ட சம்பத் கமிஷன் விசாரணை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. தியாகி இமானுவேல் சேகரன் பேரவை, ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாலெ), இடதுசாரி அமைப்புகள், முற்போக்கு வழக்கறிஞர்கள், ஜனநாயகசக்திகள் பெருமுயற்சியால் மத்திய புலனாய்வு விசாரணைக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் விசாரணை துரிதமாக நடைபெறவில்லை. எனவே விசாரணையை துரிதப்படுத்தி, அன்றாட அடிப்படையில் கண்காணித்து, குற்றவாளிகளை தண்டிக்க உயர்நீதிமன்றம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கருத்தரங்கம் வலியுறுத்துகிறது. போராடும் ஒடுக்கப்பட்ட அமைப்புகள், இடதுசாரிகள், சாதி ஆதிக்கம் மற்றும் அநீதியை எதிர்க்கும் முற்போக்கு, ஜனநாயக சக்திகள், உழைக்கும் மக்கள் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தவேண்டுமென கருத்தரங்கம் அழைப்பு விடுக்கிறது.
பரமக்குடியில் திரண்ட ஒடுக்கப்பட்ட மக்களை ‘கலவரக்காரர்கள்’, ‘வன்முறையாளர்கள்’ என்று சித்தரித்து துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்தி பேசிய முதல்வரின் ஆபத்தான பேச்சை திரும்பப் பெற வேண்டும் என்று கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.
1. 06-08-2012 அன்று மதுரை, சின்ன உடைப்பு பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வு, கவுரவத்தை சிதைக்கும் நோக்கத்துடனும் தியாகி இமானுவேல் சேகரன் நினைவுநாளில் திரளும் பட்டியல் இன மக்களை தடுத்து அவர்களது கோரிக்கையை எழ விடாமல் செய்யும் திட்டத்துடனும் டாக்டர் அம்பேத்கர், இமானுவேல் சேகரன் சிலைகளை சிதைத்த சாதிவெறி விஷமிகளைக் கருத்தரங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாடு தழுவிய அளவில் எதிர்ப்புக்குரல் எழுப்பிய பிறகும் இதுவரைக் குற்றவாளிகளைக் கைது செய்யாத காவல்துறையையும் அதிமுக அரசையும் கருத்தரங்கம் வன்மையாக கண்டிப்பதுடன் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறது.
2. தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு நிகழ்வாக அறிவிக்க வேண்டும், மதுரை விமான நிலையத்துக்கு தியாகி இமானுவேல் சேகரன் பெயரை சூட்ட வேண்டுமென்ற ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டுமென்றும் கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.
3. 1996 ஜூலை 11ல் பீகார் பத்தானிதோலாவில் 23 பேர்களை படுகொலை செய்த ரன்வீர் சேனா குற்றவாளிகளை பீகார் உயர்நீதி மன்றம் விடுதலைசெய்ததை கருத்தரங்கம் நிராகரிக்கிறது. உச்சநீதிமன்றம் வழக்கை விரைந்து மறு விசாரணை செய்து குற்றவாளிகளை தண்டிப்பதோடு பீகார், தமிழ்நாட்டில் கொடியங்குளம், தாமிரபரணி உள்ளிட்டு நாடு முழுவதும் பட்டியலின, பழங்குடி மக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களை மறு விசாரணை செய்து குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டுமென்று கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.
4. காரைக்குடி பர.அழகனுக்கு மன்னர் சேதுபதி காலத்தில் வழங்கப்பட்ட நில உரிமையை உயர்நீதிமன்றமும் அரசாங்கமும் உறுதிசெய்தபிறகும் மேல்சாதி ஆதிக்க சக்திகள் ஆக்கிரமிப்பை அகற்ற மறுத்து வருகின்றனர். சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தை உரியவர்களுக்கு ஒப்படைக்கவேண்டுமென கருத்தரங்கம் வலியுறுத்துகிறது. ஆக்கிரமிப்பாளர்கள் மீது நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக் கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.
5. மதுரை கச்சைகட்டியில் நரபலி கொடுக்கப்பட்ட ராஜலட்சுமி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்த போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோரை கைது செய்து வழக்கை விரைவாக நேர்மையாக விசாரித்து தண்டிப்பதோடு அயூப்கான், கூட்டாளிகளுக்கு சொந்தமான கல்லூரி மற்றும் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டுமென கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.
6. தமிழ் நாட்டில் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகள் முறையாக பதிவு செய்யப்படுவதில்லை, விசாரிக்கப்படுவதில்லை, தண்டிக்கப்படுவதில்லை. அதிகாரிகள், அரசியல்வாதிகள் தலையீட்டில் வழக்குகள் கைவிடப்படுகின்றன. விரைவு தனி நீதிமன்றம் அமைத்து அனைத்து வழக்குகளையும் ஓராண்டுக்குள் விசாரித்து குற்றவாளிகளைத் தண்டிக்கவேண்டுமென கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.
7. தமிழ்நாடு முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்கள் தொட்டில் முதல் சுடுகாடுவரை பல்வேறுவிதமான பாரபட்சங்களுக்கும் அநீதிகளுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள். தீண்டாமைச்சுவர்கள், கோவில் நுழைய மறுப்பு, பொதுச்சொத்துகளிலிருந்து விரட்டப்படுவது, பஞ்சமர் நிலங்கள் அபகரிக்கப்படுவது, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பணிசெய்யப்படவிடாமல் அச்சுறுத்தப்படுவது, பெண்கள் பாலியல்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவது, கவுரவக்கொலைகள் செய்யப்படுவது போன்ற கடுங்குற்றங்களை தடுத்து, ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு, சமத்துவம், கவுரவம் காக்கப்பட உயரதிகாரம் கொண்ட சிறப்பு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.
8. ஆதிக்க சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான பஞ்சமர் நிலங்களை மீட்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிட பஞ்சமர் நில மீட்பு ஆணையம் ஏற்படுத்திட வேண்டும். கோவில், மடம்,அறக்கட்டளை நிலங்களை கையகப்படுத்தி நிலமற்றவர்களுக்கு வழங்கிட வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டுமென்றும் கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.
9. மேற்கண்ட கோரிக்கைகளுக்காக தொடர் இயக்கங்கள், போராட்டங்கள் நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்த இயக்கங்களுக்கு இடது, முற்போக்கு, ஜனநாயக அமைப்புகள், சக்திகள் ஆதரவு தரவேண்டுமென கருத்தரங்கம் அழைப்பு விடுக்கிறது.

(மதுரை, நெல்லை, திண்டுக்கல், தூத்துக்குடி-விருதுநகர், கரூர், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏறத்தாழ 250 பேர் கலந்து கொண்டனர்.)

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

நிலத்தடி நீர் உறிஞ்சுவதை உடனடியாக தடுக்காவிடில்போராட்டம்; எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி அறிவிப்பு

திருநெல்வேலி, நிலத்தடி நீர் உறிஞ்சுவதை உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தூத்துக்குடி மாவட்டத்தில் 12 ஒன்றியங்களிலும் நிலத்தடி நீர் அபாயகரமான கட்டத்தை தாண்டி கீழே சென்றுவிட்டது. மாவட்ட மக்கள் பெரும்பாலும் குடிநீர், வீட்டு உபயோகம், விவசாயம் மற்றும் கால்நடைகளுக்கு நிலத்தடி நீரை நம்பியே உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான லாரிகளில் ஆழ்துளை கிணறுகளில் நீரை உறிஞ்சி கடத்தி செல்வதால் தினமும் குடிநீர் மற்றும் விவசாய கிணறுகள் வற்றிவருகின்றன. தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்ட வேளையில் தாமிரபரணி ஆற்றில் நீர் வரத்தும் குறைந்துவிட்டது. இச்சூழலில் தூத்துக்குடி மாவட்டமே மிகப்பெரிய அளவில் குடிநீர் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளது. நிலத்தடி நீர் கடத்தி செல்லப்படுவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் பலமுறை மாவட்ட அதிகாரிகளுக்கு எடுத்துச் சொல்லியும் அதிகாரிகள் அதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடிநீர் எடுத்துச் சென்ற லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்துள்ளனர். தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு நிலத்தடி நீர் அபகரிப்பை தடுத்திட தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் இன்னும் ஒரு வார காலத்திற்குள் முற்றாக தடை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையேல் மக்களை திரட்டி எனது தலைமையில் மாபெரும் போராட்டம் நடைபெறும். போராட்டத்திற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.இவ்வாறு எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

சனி, 18 ஆகஸ்ட், 2012

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.க.கிருஷ்ணசாமி



ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி விவசாயிகளுக்கு புதுக்கோட்டையில் விவசாய வளர்ச்சி கருத்தரங்கு நடைபெறுகின்றது.
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.க.கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஓட்டப்பிடாரம் யூனியன் வேளாண் உதவி இயக்குனர் மோகன்ராஜ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் விஜயராஜன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கனகராஜ், கருங்குளம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அல்பிரட், விவசாய பொருட்கள் விற்பனை உதவி இயக்குனர் ராஜா, வேளாண்மை பொறியியல் துறை உதவிப் பொறியாளர் சங்கர்ராஜ், இளநிலை பொறியாளர் சிதம்பரம், ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் அலாய்சியஸ் மேரி, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் ராமனுஜம், கள மேலாளர் அமிர்தலிங்கம், , கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனரக வல்லுநர் டாக்டர்.அசோகன் உள்ளிட்ட விவசாயத் துறை அதிகாரிகளும், பிள்ளைமுத்து, அயிரவன்பட்டி முருகேசன், நிக்கோலஸ் உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவசாய மேம்பாடு குறித்து பேசினார்கள்.

கருத்தரங்கில் தலைமையேற்றுப் பேசிய டாக்டர்.கிருஷ்ணசாமி, விவசாயதஹி விட உலகில் உன்னதமான தொழில் ஒன்றும் கிடையாது. இன்று மெல்ல, மெல்ல நசிந்து போய்க் கொண்டு இருக்கின்றது விவசாயம். உழுபவருக்கு பின்தான் மற்றவர்கள் எல்லாம் செல்வார்கள் என இரண்டாயிரம் ஆண்டிற்கு முன்பே திருவள்ளுவர் கூறியுள்ளார். பல்வேறு காரணத்தினால் இன்று நிலைமை மாறிவிட்டது. ஆயிரம் முதல் ஐயாயிரம் ஏக்கர் வரை நில மோசடி நடந்துள்ளது. விவசாயம் சாராத, உபயோகமில்லாத தொழிற்சாலைகள்தான் இங்கு அமைந்துள்ளது. காற்றை மாசுபடுத்தி, நிலத்தடி நீரை மாசுபடுத்தி, மண்ணை மாசுபடுத்தி, மூச்சை முடமாக்கும், மனிதர்களே வாழ முடியாத அளவில்தான் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. காரணம் விவசாயத்திற்கு முன்னிரிமை கொடுக்காமல் முக்கியத்துவபடுத்தாமல் விட்டு விட்டதுதான். இல்லையென்றால் உயிரைவிட அதிகம் நேசித்த மண்ணை மக்கள் இழந்திருக்க மாட்டார்கள். 1996ல் நான் வெற்றி பெற்றபோது ஸ்டெர்லைட் தொழிற்சாலை வரக்கூடாது என மிகப் பெரிய போராட்டங்கள் நடத்தினோம். பின்னர் பத்தாண்டுகளில் நிறைய மாற்றங்கள் வந்து விட்டது. இப்போது மீண்டும் அரிய வாய்ப்பை எனக்கு அளித்துள்ளீர்கள். ஒரு மாத காலத்தில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்துள்ளேன். தூத்துக்குடி திருநெல்வேலி செல்லும் பேருந்துகள் அனைத்து கிராமத்திலும் நின்று செல்கின்றது. அறுபதுக்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தொழிற்சாலைகளுக்கும், பல கிலோ மீட்டர் தூரத்தில் சென்று நெடுஞ்சாலை பணிகளுக்கும் பயன்படுத்தினார்கள். இங்கே குடிநீர் ஆறு ரூபாய் விற்றது. இப்போது புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், புதுக்கோட்டை பகுதிகளில் விவசாய நிலத்தில் இருந்து தண்ணீர் வியாபாரம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. இன்னும் பத்து தினங்களுக்குள் முற்றிலும் அவை நிறுத்தப்பட்டு விவசாயிகளின் நலன் காக்கப்படும். நள்ளிரவில், அதிகாலையில் திருட்டுத் தனமாக எடுத்து செல்வது தடுக்கப்படும். இல்லையென்றால் கிணறுகள் முழுவதும் வற்றி விடும். விவசாயம் பாழ்பட்டு விடும். விவசாயம் வளர, நிலத்தடி நீர் காக்கப்பட விவசாயிகள் விழிப்புணர்வோடு கண்காணிக்க வேண்டும்.
ஒரு சொட்டு நீர் கூட குடிக்க இல்லாமல், விவசாயத்திற்கு இல்லாமல் தொழிற்சாலைகளுக்கு அனுமதிக்க கூடாது. அதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக என்னிடம் நேரில் உறுதியளித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது சில்லாநத்தம் கிராம மக்கள் மோசடியாக நிலம் பட்டா போடப்பட்டதாக புகார் தெரிவித்தனர். அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இனி ஒரு சென்ட் நிலம் கூட போலி பட்டா போட ஓட்டப்பிடாரம் தொகுதியில் அனுமதிக்க கூடாது. சட்டசபையில் பதினைந்து நிமிடம் ஒதுக்கினார்கள் அதில் கன்னடியன் கால்வாய் குறித்து பேசினேன். ஒரு பகுதி மக்களின் கண்ணீரை எடுத்து இன்னொரு பகுதி மக்களுக்கு பன்னீரை தெளிப்பதா என்று கூறினேன். கன்னடியன் கால்வாய் உயரத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதிகாரிகள் முழு மனதோடு, நல்லெண்ணத்தோடு உங்களுக்கு உதவ வந்துள்ளார்கள் எனவே விவசாயத்திற்கான உரம் சரியாக வந்து சேரும். உர மூட்டைகள் வேறு எங்கும் மொத்தமாக செல்லாது. கூட்டுறவு வங்கிகள் கடன் வழங்கிட உரிய நடவடிக்கை எடுப்பார்கள். இன்னும் ஒரு வருடத்திற்குள் பத்தாயிரம் ஏக்கர் அதிகமாக விவசாயம் செய்ய வேண்டும். ஓட்டப்பிடாரம் தொகுதியில் விவசாயம் இரு மடங்காக உயர வேண்டும். சொட்டு நீர் பாசனம் மானியம் பயன்படுத்த வேண்டும்.
குலையன்கரிசல், கூட்டாம்புளி, அத்திமரப்பட்டி பகுதியில் வாழை மட்டும் போடாமல் மஞ்சள், கரும்பு, நெல் என மாற்றுப் பயிர்கள் பயிரிட வேண்டும். ஒருங்கிணைந்த விவசாயம் செய்வதில் ஈடுபட வேண்டும். தண்ணீர் வறட்சியான பகுதியான கோவை, நாமக்கல், ராசிபுரம் பகுதகளில் விவசாயம் சார்ந்த தொழில்களிலும் ஈடுபடுகின்றனர். ஒரு வீட்டில் ஐம்பது நாட்டுக் கோழி வளர்த்தால் முட்டை ஆறு ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். பெண்கள் வீட்டில் இருந்து இதை செய்யலாம். ஐந்து ஏக்கரில் கோழி பண்ணை வைக்கலாம். ஓட்டப்பிடாரம் பூமி நல்ல வளமான பூமியாக மாற்ற என்றும் உறுதுணையாக இருப்பேன். வரும் புதன்கிழமைக்கு பிறகு மண் பரிசோதனை செய்கின்றார்கள். நாளை பொதுப்பணித்துறை, யூனியன் குளங்கள் சுற்றிப் பார்க்க உள்ளேன்" என்று பேசினார். தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் மழைப் பயிர்கள் துறை மத்திய அரசின் உதவியுடன் கூடிய நுண்ணிர்ப் பாசன திட்டத்தின் கீழ் அரசு மானியம் பெற இலவசமாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை வேளாண்மை விற்பனை மையத்தின் சார்பில் மானிய விலையில் உளுந்து விதைகள் வழங்கப்பட்டது.

Bala Mallar


வ.புதுபட்டியைத் தொடர்ந்து சின்ன உடைப்பிலும் சதிராட்டம்.


பதிவிட்டது:தேவேந்திரர் இளைஞர் நல அமைப்பு