புதன், 30 ஜூன், 2010

பழிவாங்கப்பட்ட ஒரே ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர்

தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. என்று இரு கட்சி ஆட்சிகளின்போதும் பழிவாங்கப்பட்ட ஒரே ஐ.ஏ.எஸ். அதிகாரியாக, உமாசங்கர் மட்டும்தான் இருப்பார் போலிருக்கிறது. “இதிலிருந்தே அவர் நேர்மையாவும் நடுநிலையாகவும் பணியாற்றுவது புரியும். இப்போது லேட்டஸ்டாக அவர் மீது சொத்துக் குவிப்பு வழக்குப்போட முனைப்பு காட்டி வருகிறது ஊழல் கண்காணிப்புத் துறை. அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தடை வாங்கியிருக்கிறார் உமாசங்கர். “முதல்வரின் குடும்ப அரசியலில் இந்த அதிகாரி குறிவைக்கப்பட்டுக் குதறப்படுகிறார்,” என்கிறார்கள் அவரது நண்பர்கள். விவகாரத்தின் உள்ளே சற்று எட்டிப்பார்த்தோம். மயிலாடுதுறையில் சப்- கலெக்டராகப் பணியில் நுழைந்தவர் உமாசங்கர் (1990-ல்). 47 வயதான இந்த அதிகாரி, இப்போது சிறுசேமிப்பு ஆணையராக இருக்கிறார். இந்த இருபது வருடங்களில் இவர் கண்ட சோதனைகளும், செய்து முடித்த சாதனைகளும் நிறைய. 1995-ல் மதுரை மாவட்டத்தில் கூடுதல் கலெக்டராக இருந்தபோது “சுடுகாட்டுக் கூரைகள் கட்டுவதில் ஊழல் நடந்திருக்கிறது; அதற்கு மாவட்டக் கலெக்டரும், அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சருமான செல்வகணபதியும்தான் காரணம்” என்று தைரியமாகவும் ஆதாரபூர்வமாகவும் எடுத்துச் சொன்னார். (இதே செல்வ கணபதி இப்போது தி.மு.க. பாசறையில்!) பின்னர் 1996-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது, இணை கண்காணிப்புக் கமிஷனராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சர்கள், அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் பல நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. கோப்புகளை ஆராய்ந்து தவறு செய்தவர்கள் மீது தக்க ஆதாரத்துடன் வழக்குகளைத் தயார் செய்தவர் உமா சங்கர்தான். இரண்டு வருட காலம் அந்தப் பொறுப்பில் இருந்த பின், முதல்வரின் சொந்த மாவட்டமான திருவாரூருக்கு கலெக்டராக நியமிக்கப்பட்டார். அந்த மாவட்ட நிர்வாகத்தை முற்றிலும் கணினி மயப்படுத்தி, மின்னணு நிர்வாகத்தைப் புகுத்தியவர் உமாசங்கர். இதற்காக இவருக்கு ஏராளமான பாராட்டுகள். 2001-ல் ஜெ.மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், ஒழுங்குமுறை ஆணையராக சேலத்துக்குத் தூக்கி அடிக்கப்பட்டார். திறமையான, நேர் மையான அதிகாரிக்குக் கொடுக்கப்பட்ட தண்டனைப் போஸ்டிங் இது. ஐந்து வருடம் சேலத்தில் பணி. 2006-ல் மீண்டும் தி.மு.க. ஆட்சி. எல்காட் (Elcot) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார். ‘இனி நிம்மதியாக நமது பணியைப் பார்த்துக் கொண்டிருக்கலாம்’ என்று நினைத்தார் உமா சங்கர். சோதனை வந்தது. எல்காட் நிறுவனமும், நியூ எரா டெக்னாலஜி என்ற தனியார் நிறு வனமும் இணைந்து எல்நெட் என்ற நிறுவனத்தைத் துவங்கின. இந்த எல்நெட் நிறுவனம் நூறு சதவிகிதம் நிதியுதவி வழங்க, இ.டி.எல். (E T L) கட்டுமான நிறுவனம் என்று ஒரு புதிய நிறுவனம் துவங்கப்பட்டது. இந்த இ.டி.எல். நிறுவனம் ராஜீவ் காந்தி சாலையில் 700 கோடி மதிப்புள்ள சிறப்புப் பொருளாதார மண்ட லத்தை துவங்கியது. புதிய தொழிலங்கள் துவங்க 18 லட்சம் சதுர அடி இடம் இ.டி.எல். வசம், தமிழக அரசால் ஒப்ப டைக்கப்பட்டது. ஆனால் திடீரென்று பார்த்தால், இந்த இ.டி.எல். நிறுவனம் முழுக்க, முழுக்கத் தனியார் நிறுவனம் போல உருமாறிவிட்டது. எல்காட் மற்றும் எல்நெட் நிறுவனங்களுக்கும் இடிஎல்லுக்கும் தொடர்பே இல்லா ததுபோல மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஹைஜாக் செய்து கொண்டு போய் விட் டார். எல்காட் நிர்வாக இயக்குனர் என்ற முறையில் கொதித்துப் போனார் உமாசங்கர். அலுவலகத்தில் இது தொடர்பான விவகாரங்களை அவர் ஆராய்ந்து கொண்டிருக்கும்போதே, ‘அரசு கேபிள் கார்ப்ப ரேஷனி’ன் நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டார். 700 கோடி சொ த்து தனியார் கைக்குப் போக மதுரைத் தளபதிதான் சிபாரிசு என்கிறார்கள். அரசு கேபிள் கார்ப்பரேஷனில், உமா சங்கரின் அடுத்த இன்னிங்ஸ் துவங்கியது. ‘தினகரனி’ல் மூன்று பேர் எரித்துக் கொலையானதைத் தொடர்ந்து மாறன் சகோதரர்களுக்கும் கலைஞர் குடும்பத்துக்கும் மோதல் துவங்கிட, அதைத் தொடர்ந்து சுமங்கலி கேபிள் விஷனை வீழ்த்த அரசு கேபிள் கார்ப்பரேஷன் முடுக்கிவிடப்பட்டது. கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கப்பட்டு நவீனக் கருவிகள், இயந்திரங்கள் வாங்கப்பட்டன. ஆனால், ரவுடித்தனத்தைப் பயன்படுத்தி அரசு கேபிள் கார்ப்பரேஷனின் கேபிள் களையும் கருவிகளையும் சேதப்படுத்தியது எஸ்சிவி. வெகுண்டெழுந்த உமாசங்கர், எஸ்சிவியை தடை செய்யவும், அதற்கு ஆதரவாக இருந்து, அரசு சொத்தைச் சேதப்படுத்திய செம்மொழி மாநாடு நடக்கும் மாவட்ட அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அரசுக்குக் கடிதம் அனுப்பினார். ஆனால், அவரது துரதிருஷ் டம் 2009 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் பிரிந்திருந்த முதல்வர் குடும்பம் மீண்டும் இணைந்தது. ‘எங்களுக்கா வேட்டு வைக்கப் பார்த்தாய்’ என்று வெகுண்டெழுந்தது குடும்பத்தின் ஒரு பிரிவு. கூடவே 1997-ல் உமாசங்கரால் “தவறு செய்தவர்கள்” என்ற அடையாளம் காணப்பட்ட அதிகாரிகளும் சேர்ந்து கொண்டார்கள். பழிவாங்கல் தொடர்கிறது. ‘இது கலைஞருக ்கு தெரியாமல்கூட இருக்குமா?’ என்று வியக்கிறார்கள் சிலர். சொத்துக் குவிப்பு வழக்குக்கு தடை வாங்கப் போடப்பட்ட மனுவில் மேற் சொன்ன தகவல்களைச் சொல்லியிருக்கிறார் உமாசங்கர். இது தொடர்பாக உமா சங்கரைத் தொடர்பு கொண்டபோது, “நான் சொல்ல வேண்டியதை நீதி மன்றத்தில் சொல்லவிட்டேன். முறைப் படி தொடரப்படும் எந்த விசாரணையையும் சந்திக்க நான் தயாராகவே இருக் கிறேன்” என்கிறார் அவர். இந்த நிலையில், மக்கள் சக்தி கட்சி என்ற அமைப்பு, நேர்மையான அதிகாரி பழிவாங்கப்படுவ தாக ஆர்ப்பாட்டம் செய்யத் தயாரானது. ஆனால், காவல்துறை அதிகாரிகள் “செம் மொழி மாநாடு நடைபெறும் இந்தச் சமயத்தில் வேண்டாம்” என்று சொன்னதால் ஆர்ப்பாட்டம் ரத்தாகிவிட்டதாம். “இதுபோன்ற நேர்மையான அதிகாரிகள் பழிவாங்கப்பட்டால், அது இளைஞர்களுக்குத் தவறான செய்தியைக் கொண்டு சேர்க்கும். கடந்த சில வருடங்களாக நிறைய இளைஞர்கள் தமிழ் நாட்டிலிருந்து ஐ.ஏ.எஸ்.பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்களில் பலர் உமா சங்கர் போன்றவர்களை லட்சிய அதிகாரியாக நினைக்கிறார்கள். அவரே பழிவாங்கப்பட்டால், இந்தப் பணியில் சேர இளைஞர்களுக்கு ஆர்வம் குறைந்து விடும். இதுதவிர, அரசு கேபிள் கார்ப்ப ரேஷனுக்கு இதுவரை 300 கோடி செலவாகியிருக்கிறது. ஆனால், அது முடங்கிய நிலையிலேயே இருக்கிறது. ஒரு குடும்ப அரசியலில் இத்தனை கோடி வீணாக்கப்பட்டதையும் எதிர்த்துதான் ஆர்ப் பாட்டம். அது விரைவில் நடக்கும்” என்கிறார் மக்கள் சக்தி கட்சியின் பொறுப்பாளர் செந்தில் ஆறுமுகம். உமாசங்கர் பழிவாங்கலில், இ.டி.எல் நிறுவனத்தை ஹைஜாக் செய்தவர்களின் பங்களிப்பும் இருப்பதாகச் சொல்கிறார்கள். - ப்ரியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக