திங்கள், 9 ஆகஸ்ட், 2010

கீழ் வெண்மணி காயம் ஆறுமா??

வரலாற்றின் நீண்ட நெடிய பக்கங்களில் 39 ஆண்டுகள் என்பது மிகக் குறுகிய காலம். நேற்று நடந்தது போல இருக்கிறது. தஞ்சாவூர் அருகே அன்று நடந்த கொடுமையை இன்று நினைத்தாலும் நெஞ்சில் குருதி வடிகிறது. இந்தியாவில் நடைபெற்ற உக்கிரமான கொடுமைகளை பட்டியலிட்டால் கீழ வெண்மணி கொடுமையும் ஒன்று. 1968 டிசம்பர் 25கிறிஸ்துமஸ் பண்டிகைஏசுநாதர் பிறந்த நாள் விழாஉலகெங்கும் கொண்டாப்படும் திருவிழா. மக்கள் அனைவரும் திருநாளை மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்க தஞ்சை மாவட்ட கீழ்வெண்மணியின் தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு மட்டும் கொடிய இரவாகவும், விடியாத இரவாகவும் அமைந்தது.ஆம் . அன்றிரவு தஞ்சை மாவட்டம், கீழ வெண்மணியில் தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 44 பேர் உயிரோடு தீ வைத்துக் கொளுத்தப்பட்டனர். கருகிச் சாம்பலாக்கப்பட்டனர். இவ்வாறு உயிரோடு தீக்கொழுத்தப்படும் அளவுக்கு அவர்கள் செய்த பாவம் வேறொன்றுமில்லை.தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் சங்கமாகத் திரண்டு தங்களுக்குக் கிடைக்கும் வழக்கமான கூலியில் அரை லிட்டர் நெல் உயர்த்தித் தர வேண்டுமென்று கேட்டது தான் அவர்கள் உயிரோடு கொளுத்தப்பட காரணம்.விவசாயத் தொழிலாளர்கள் சங்கமாகத் திரண்டு கூலி உயர்வு கேட்டனர். தங்களுக்குக் கிடைக்கும் கூலியில் அரை லிட்டர் நெல் உயர்த்தித் தர வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் தொடர் கோரிக்கையின் விளைவாக 1967 ஆம் ஆண்டில் நடைபெற்ற முத்தரப்பு மாநாட்டில் கூலி உயர்வு ஒத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் பல மிராசுதாரர்கள் ஒத்துக் கொண்ட கூலியைக் கொடுக்க மறுத்தனர். உள்ளுர் விவசாயத் தொழிலாளர்களைப் பணிய வைக்க வெளியூர் ஆட்களை அமர்த்தினர். இத்துடன் நில்லாமல் விவசாயத் தொழிலாளர் சங்கங்களையே முடக்கிவிட வேண்டுமென்று நாகை வட்டார நிலப் பிரபுக்கள் தலைமையில் நெல் உற்பத்தியாளர் சங்கத்தை ஏற்படுத்தினர். அந்த சங்கத்திலிருந்து திட்டமிட்டு விவசாயத் தொழிலாளர்களைத் தாக்குவது, முக்கிய ஊழியர்களைக் கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இச் சதிகள் சம்பந்தமாக அவ்வப்போது தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கங்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களும் அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந்த சூழ்நிலையில் தான் அந்த உச்சக் கட்டக் கொடுமை நடந்தது.25.12.68 மாலை 5 மணியளவில் வெண்மணிக் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி, கணபதி என்ற இரண்டு தாழ்த்தப்பட்ட விவசாயத்தொழிலாளர்களை மிராசுதாரர் சவரிராஜ் நாயுடு வீட்டில் கட்டி வைத்து அடித்து உதைத்திருக்கிறார்கள். சம்பவம் பற்றி கேள்விப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் திரண்டு வந்து கட்டை அவிழ்த்து விட்டு சென்றனர். அதன் பின்பு பெரு மிராசுதாரர் கோபால கிருஷ்ண நாயுடு போன்றோர் ஆள் திரட்டி வெண்மணி கிராமத்துக்கு அடியாட்களுடன் சென்றிருக்கிறார்கள்.அவ்வாறு தாக்குவதற்கு சென்ற போது நடந்த கைகலப்பில் பக்கிரிசாமி என்பவர் இறந்து விட்டார். ஆனாலும் மிராசுதாரர்கள் துப்பாக்கிகள் சகிதம் அடியாட்களுடன் திரண்டு வந்து தாக்கியிருக்கிறார்கள். இதன் விளைவாக தொழிலாளர்களுக்கு துப்பாக்கி காயம் ஏற்பட்டது. துப்பாக்கித் தாக்குதலுக்குத் தாக்கு பிடிக்க முடியாமல் தொழிலாளர்கள் ஓடி விட்டனர். தப்பித்து ஓட முடியாத தாழ்த்தப்பட்டவர்களின் தெருவில் தங்கியிருந்த பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் உயிர் பிழைக்க கயவர்களிடம் மன்றாடியிருக்கிறார்கள்.ஆனால் கொடுங்கோல் மிராசுதாரர்கள் மனம் இறங்கவில்லை. அனைவரையும் தெருக்கோடியிலுள்ள சிறு குடிசைக்குள் அடைத்திருக்கிறார்கள். தீ மூட்டி கதவை வெளியில் தாழ்பாளிட்ட அக்கிரமத்தைச் செய்தனர். தீயின் செந்நாக்குகள் அவர்களைப் பொசுக்க தொடங்கியது. அதன்பின்பும் அவர்கள் வெறி அடங்காமல் வெளியில் கதறிக் கொண்டிருந்த மூன்று சிறு குழந்தைகளையும் தூக்கி நெருப்பில் எறிந்த கொடுமையைச் செய்தனர். மேற்கண்ட கொடுமைகள் அனைத்தும் ஏக காலத்தில் நடந்துள்ளன.இரவு எட்டு மணிக்கு சம்பவம் தொடர்பாக கீவளுர் காவல் நிலையத்திற்கு தெரிந்தும் காவல் துறையினர் இரவு 12 மணிக்கு வந்தனர். இரவு இரண்டு மணிக்கு தீயணைப்புப் படை வந்தது. அதிகார வர்க்கத்தின் கண்களில் பாமர மக்களின் உயிர் துச்சமானதே இந்த தாமதமாகும். மறுநாள் காலை 10 மணிக்கு குடிசைக்குள் நுழைந்து கருகிய 44 சடலங்களை எடுத்துள்ளனர். மேற்கண்ட 44 பேரும் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டது அரை லிட்டர் நெல் கூலி உயர்வு கேட்ட காரணத்திற்காக மிராசுதாரர்கள் அளித்த பரிசாகும்.இத்தனை கொடுமையையும் செய்த அக்கிரமக்காரர்கள் அதன் பின் இதனை விவசாயத் தொழிலாளர்கள் மீதே பழி போட சூழ்ச்சி செய்தனர். இதற்கு உதவிகரமாக சில பத்திரிகைகள் இட்டுக் கட்டி செய்திகள் வெளியிட்டன. “விவசாயத் தொழிலாளர்களே தங்கள் பெண்டு பிள்ளைகளை இச் சிறு அறையில் தள்ளி வெளியில் தாழ்ப்பாளிட்டுக் கொன்றனர் என்று கற்பனைக்கும் எட்டாத பொய்யைக் கூறினர். நிலபிரபுக்கள் மீது ஆத்திரம் ஏற்படாமலிருக்க நுணுக்கமாகத் தயாரிக்கப்பட்ட பொய்யைச் செய்தி ஆக்கினர்.ஆனால் போலீஸ் ஐஜியோ கீவளுர் வட்டாரத்தில் வைசன்ஸ் பெற்ற துப்பாக்கிகள் 42 இருப்பதாகவும், 28 ஆம் தேதி முடிய 5 துப்பாக்கிகளே போலீசுக்கு வந்துள்ளன என்ற கூறினார். இறந்தவர்களில் 19 பேர் பெண்கள், அதில் 12 பேர் திருமணமானவர்கள். 7 பேர் மணமாகாத இளம் பெண்கள், ஆண்கள் மற்றும் பச்சிளங்குழந்தைகள். 22 வயது முதிர்ந்த ஆண்கள் 3. துப்பாக்கிச் சூட்டில் காயமுற்றோர் 11 பேர்.மிராசுதாரர்கள் வைத்த தீயில் மாதாம்பாள் என்ற பெண்மணி, தான் சாகும் பொழுதும் தான் வளர்த்த பிள்ளையை தீ தின்றுவிடக் கூடாது என்று அவ்வாறு அணைத்தபடியே தாயும் சேயும் இணைந்தே கரிக்கட்டியாய் கிடந்த நிகழ்ச்சி பார்த்த அனைவரையும் விவரிக்க முடியாத மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது.அதையொட்டி அப்பொழுது ‘உழவுச் செல்வம்’ பத்திரிகையில் வெளிவந்த கவிதையைத் தங்களுக்குத் தருகிறேன்.“பாவிகள் வைத்த நெருப்புஉடலைக் கருக்கிய போதும்பெற்றெடுத்த தங்கத்தைக் கைவிடவில்லை.பாசத்தால் பற்றிக் கொண்டாய்.வலது கை வெந்து விட்டது.பிள்ளையைத தாங்கியஇடது திருக்கரத்திலும்சதையெல்லாம் தீ தீய்த்துவிட்ட போதிலும் -எலும்புக் கரத்தால்பிள்ளையை ஏந்திக்கொண்டே பிணமாக கருகிவிட்டாயே.உன் பிறப்பு உறுப்பெல்லாம்நெருப்பு தின்று விட்டபோதும் தாயேபெற்றெடுத்த பிள்ளையைஅணைத்துக் கொண்டிருந்ததாய்ப் பாசத்தைதரணியெல்லாம் போற்றிப்புகழப் போகிறது.நீ உழைக்கும்பெண்ணினத்துக்கு பெருமைதேடித் தந்து விட்டாய்.தாய்மைக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறாய்.நமது வர்க்கத்தின் சிறப்புச்சின்னமாய் - அழியாதஓவியமாய் - உயர்ந்துவிட்டாய்.உனது தியாகம் கவிஞர்களின்கருப் பொருளாய் -ஓவியர்களின் திரு உருவாய்விளங்கட்டும்உனது ஆசை நிறைவேற,வர்க்கம் வாழஎன்றென்றும் உழைப்போம்என உறுதி கூறுகிறோம்.(உழவுச் செல்வம் சனவரி 15, 1969)வெண்மணியில் நடைபெற்ற கோரக் கொடுமையை எதிர்த்து தமிழகம் வெகுண்டெழவில்லை. பண்பாடு, நாகரீகம், மரபு பற்றியெல்லாம் விண்ணுக்கும் மண்ணுக்கும் எட்டுமளவு வாய் கிழியப் பேசப்படும் தமிழகத்தில், வெண்மணியில் வெந்து சாம்பலாக்கப்பட்ட நாற்பத்தி நான்கு தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் மீது இரக்கம் கூடக் காட்டவில்லையே ஏன்? என்பதைச் சிந்திக்க வேண்டியுள்ளது.அப்பொழுது கோவை நகரத் தொழிலாளி வர்க்கமும், வேலூர் பீடித் தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்தார்கள். கம்யூனிஸ்டு இயக்கத்தினர் கண்டனக் குரல் எழுப்பினார்கள் ஜனநாயக உணர்வு கொண்ட பாட்ரியாட், நியுஏஜ் போன்ற டெல்லிப் பத்திரிகைகள் நாட்டுக்கே அவமானம் என்று கவலையோடு கண்டித்து எழுதின.மக்களின் கொந்தளிப்பு வெளிப்படாத நிலையில் நீதி தேவனும் ஓரஞ் சாய்ந்து விட்டான். ஆம். வெண்மணிச் சம்பவத்திற்கு காரணம் என்று சொல்லப்பட்ட நிலப்பிரபு - கோபால கிருஷ்ண நாயுடு வகையறாக்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் விடுதலை செய்யப்பட்டனர். நீதிமன்றத் தீர்ப்பு“ Upon the consideration of the evidence on record the Judges felt constrained to hold that the prosecution had failed to bring home the guilt of any of them and consequently acquitted them. They said that the intrinsic infirmities in the prosecution evidence prevended them from convincting the persons who were probable innocene. -‘Hindu’“பதிவான சாட்சியங்களைப் பரிசீலித்ததில் குற்றவாளிகள் மீது குற்றத்தை நிரூபிக்க வாதிகள் தரப்பில் (பிராசிகேஷன் தரப்பில்) தவறி விட்டதாக நீதிபதிகள் முடிவுக்கு வரவேண்டி இருப்பதாக உணர்கிறார்கள். இதன் காரணமாகப் பிரதிவாதிகள் அனைவரையும் விடுதலை செய்கிறோம். பிராசிகேஷன் தரப்பு சாட்சிகளில் உள்ளடங்கிய குறைபாடுகள் இருப்பதால் நிரபராதிகளாக உள்ள நபர்கள் தண்டிக்கப்பட்டு விடாமல் தடுக்கப்பட்டிருக்கிறோம்.‘இந்து பத்திரிகை’44 ஏழை உயிர்களின் மீது இதர மக்களுக்கு இரக்க குணம் ஏற்படாத நிலையில்- நீதிமன்றங்களிலும் - ஏழை மக்களுக்கு - தாழ்த்தப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்காத போது - நிலப்பிரபுக்களும், பிற்போக்காளர்களும், சாதி வெறியர்களும் - சரடு போடப்படாத திமிர்க் காளைகளாக நாட்டில் இன்னமும் திரிந்து வருகிறார்கள்.விடுதலை விடுதலை விடுதலைபறையருக்கும் இங்கு தீயர்புலையருக்கும் விடுதலைபரவரோடு குறவருக்கும்மறவருக்கும் விடுதலை.என்ற பாரதி விடுதலைக் கனவு கண்டார். அக் கனவுகள் இன்னும் நனவாகவில்லை. பாரதியின் கனவை நனவாக்கக் கங்கணம் கட்டியாக வேண்டும்.தேவேந்திர விவசாயத் தொழிலாளர்கள் - இதரப் பகுதியினரை விட சாதி அமைப்பில் கொடிய ஓடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்ள். அவர்களின் உரிமையை நிலை நாட்டுவது ஜனநாயகத்தின் வலுவான அடித்தளமாகும்.வலியோர் தம் ஆதிக்கமும், வன்முறையும் எந்த வழியில் வந்தாலும் அதனை எதிர்த்து குரல் கொடுக்கவும், மக்களை திரட்டவும் வேண்டும். ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் முதுகுளத்தூர்,கொடியன்குலம்,மாஞ்சோலை,பாப்பாபட்டி, கீரிப்பட்டி,உத்தப்புர,தாமிரபரணிப் படுகொலை,இ.கோட்டைப்பட்டி,இருவப்பபுரம்,பந்தப்புளி,ஆறாம்பண்ணை, கொடுமையை எதிர்த்து என்றாலும் சரி. நாம் எதிர்க்க வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக