ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010
தம்பி” - யார் நீ
“தோழர், தம்பி திரைப்படத்தை உடனே பாருங்கள். மாவோ வரிகளில் தொடங்கி, சேகுவேரா வரிகளோடு திரைப்படம் முடிகிறது” என என் அரசியல் நடவடிக்கைகளில் எனக்கு நெருக்கமான ஒரு தோழன் தொலைபேசி செய்தான். திரைப்படத்தின் தாக்கத்தால் தார்மீகக் கோபம் கொப்பளித்துப் பெருகுவதாகக் கூறிய, சமூக அக்கறையில் ஆவேசங் கொண்ட அவனது வரிகளால் ஆர்வத்தால் உந்தப்பட்டேன். ‘ரௌத்ரம் பழகு’, ‘நையப்புடை’, ‘புரட்சி செய்’ என்ற வரிகளோடு திரைப்படத்தின் சுவரொட்டிகள் காணும் இடம் தோறும் என்னைக் கலவரப்படுத்திக் கொண்டேயிருந்தன. நேரமும் மனநிலையும் வாய்த்த ஓர் இரவுக் காட்சியில் என் சகோதரன் ஒருவனோடு அத்திரைப்படத்தை மிகச் சமீபத்தில் பார்த்தேன்.‘பாஞ்சாலங்குறிச்சி’ திரைப்படமும், அத்திரைப்படம் வெளிவந்த சில மாதங்களுக்குப் பிறகு, மானாமதுரையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நிகழ்த்திய ஓர் கலை இரவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இயக்குனர் சீமானின் அற்புதமான மேடைப் பேச்சும், மிகச் சமீப காலங்களில் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தில் பங்கு, ஈழ ஆதரவு நிலைப்பாடு, பெரியார் சிந்தனைகளை உரக்கப் பேசும் திண்மை ஆகிய சமூக அக்கறை பொதிந்த இயக்குனரின் நடவடிக்கைகளும் என்னை பாதித்து, கவனம் பெறச் செய்து அவரின் (சீமானின்) பால் ஒருவித ஈர்ப்பை எனக்குள் ஏற்படுத்தியிருந்ததன் விளைவாக, ‘தம்பி’ திரைப்படத்தின் மீதான ஆவல் என்னுள் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. ஐந்து கோவிலான் (இணை இயக்குனர்), கிட்டா (இணை இயக்குனர்), செழியன் (ஒளிப்பதிவு உதவி இயக்குனர்) என சில நண்பர்களும் இத்திரைப்படத்தில் பணி செய்திருப்பதால் திரைப்படத்தைக் காணுவதற்கான ஆவல் என்னுள் ததும்பி வழிந்தது.ஒரு திரைப்படம் என்ற வகையில் ‘தம்பி’யின் கதையும் காட்சி அமைப்புகளும் புதியன அல்ல. காட்சிக் கோணங்கள், பின்னணி இசை, ஒளிப்பதிவு, பெரும்பாலானவர்களின் நடிப்பாற்றல் எனப் பலவும் தமிழ் சினிமாவின் தொழில் நுட்ப வளர்ச்சியோடு ஒப்பிடும்போது சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. சீமானின் ‘பாஞ்சாலங்குறிச்சி’யில் வெளிப்பட்ட நேர்த்தியும் உயிரோட்டமும் இத்திரைப்படத்தில் தொலைந்து போயிருந்தன. இத்தகைய பலவீனங்களை ஒதுக்கி வைத்து, திரைப்படத்தின் அரசியல் அல்லது கருத்துருவாக்கம் குறித்து தான் நான் பேச விழைகிறேன்.ரௌடிகள் அல்லது ரௌடியிசம் தான் கதாநாயகன் ‘தம்பி’யின் எதிர்நிலைப் (Opposite Side) பாத்திரப் படைப்பு. போலீசின் துணையோடு ரௌடிகளை அல்லது ரௌடியிசத்தை ஒழிப்பதுதான் தம்பியின் முழுநேர வேலை. ஒழிப்பது என்பது கூட அழிப்பது அல்ல. தட்டிக் கேட்பது, தவறுகளைத் திருத்துவது, திருத்தி வாழ வைப்பது என்பவைதான் தம்பியின் நோக்கங்கள். அதுவும் கராத்தே பயிற்சியில் தேர்ந்த தம்பி, ஒவ்வொரு ரௌடிக்கும் தருவது ஒரே ஒரு அடியும், ஒரு சில வார்த்தை அறிவுரையும் தான். கழிசடை அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கத்தின் ஒடுக்குமுறை கருவியுமான போலீசும் திட்டமிட்டு உருவாக்குபவர்கள் தான் ரௌடிகள். புரட்சிகர அரசியலை அறிந்திருப்பதாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் சீமானுக்கு ரௌடியிசத்தின் இந்த மூலவேர் நன்கு தெரிந்திருக்கும். ஆனாலும் கழிசடை அரசியல்வாதிகளைத் திரைக்கதையில் தப்ப விட்டுவிட்டு, ரௌடிகளை ஒழிக்க அல்லது திருத்த போலீசையே துணைக்கு அனுப்புகிறார். ‘தம்பி’யோடு, தம்பியும் மகாத்மா காந்தி முதல் தென்னாட்டு காந்தி வரை தனது அறிவுரைகளை உரையாடல்களில் அள்ளித் தெளிக்கிறார். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் கூடாது என்கிறார். இரத்தத்தை இரத்தத்தால் கழுவ முடியாது என்கிறார். வன்முறைக்குப் பதிலீடாக அகிம்சையைப் போதிக்கிறார் - மிதமான வன்முறையோடு.நமக்குத் தேவை அமைதியும் சமாதான சகவாழ்வும்தான் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் நமக்கு அல்லது மக்களுக்கு எதிரிகள் யார்? அவர்கள் எந்த வழிகளில் இச்சமூகத்தில் வினையாற்றுகிறார்கள்? அவர்களின் பலம், சமூக- அரசியல் பின்னணி எத்தகையது? என்பவற்றைத் தீர்மானிப்பதில்தான் நமது எதிர்வினையும், செயற்படுகளமும், போராட்ட முறைகளும் உருக்கொள்ள முடியும். ‘தம்பி’ போன்ற தமிழ் சினிமாவின் கதாநாயகனுக்கு வேண்டுமானால் அசுரபலம் கொண்ட அவனது கைகள் மட்டுமே ஆயுதமாகப் போதுமானதாக இருக்கலாம். ஆனால் அரசியல் அறிவில் பலவீனமாக, நிராயுதபாணியான, சக மனிதனின் மீது அக்கறை இல்லாத பொதுப் புத்தியில் வாழும் நம் சமூக தனிமனிதனுக்கு நம்பிக்கை ஊட்ட தேவையான தத்துவம், உணர்வோட்டம், அரசியல் ஆயுதம் எவையும் தம்பியால் பரிந்துரைக்கப் படுவதில்லை. ‘நான் உயிரோடு இருக்கும் வரை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என முழு பாரத்தையும் தன் மீது சுமத்திக் கொள்கிறான். ரௌடிகள் திருந்தி வாழ, தான் வெட்டுப்பட்டு வீரத் தழும்புகளோடு பொதுப்புத்தி மாறாத மக்கள் நடுவில் உதாரண புருஷனாக உருவெடுக்கிறான். தம்பி உயிரோடிருக்கிறான் என்ற நம்பிக்கையில் நாமும் நமது அன்றாட வேலைகளில் மூழ்கிக் களிக்க திரையரங்கத்திலிருந்து வெளியேறுகிறோம்.இதெல்லாம் இருக்கட்டும். இத்திரைப்படத்தின் முக்கியமான இன்னொரு கோணத்தை அல்லது மையமான கருத்துருவாக்கத்தை அணுகிப் பார்க்க விழைவதே நமது தலையாய நோக்கம். கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக, குறிப்பாக ‘தேவர் மகன்’ திரைப்படம் வெளிவந்ததற்குப் பிறகு, தமிழ் சினிமாவின் பெரும்பாலான வன்முறைப் படங்கள தேவர் சமூகத்தின் பெருமையையும் தேவர் சாதியினரின் மூர்க்கத்தையும் தேவர் சமூகத்தின் மீதான பிற சமூகங்களின் அச்சத்தையும் திரைக்கதையின் மையமான அல்லது அச்சமான உணர்வோட்டமாகச் சித்தரிப்பதில்தான் திட்டமிட்டுச் செயலாற்றுகின்றன. சில திரைப்படங்கள் வெளிப்படையாகவும், சில திரைப்படங்கள் மறைமுகமாகவும் இத்தகைய அரசியலில் கவனம் செலுத்துகின்றன. வணிக நோக்கம் தவிர வேறில்லை எனவும் இதை அரசியல் கண்கொண்டு விமர்சிக்கக் கூடாது எனவும் கூற முனைபவர்களுக்கு என் எழுதுகோல் முனையே ஆயுதம்.தமிழ்நாட்டின் சாதி சமூகப் பின்புலத்தை அறிந்தவர்கள் இதனைப் புரிந்து கொள்ள முடியும். இராமநாதபுரம் மாவட்டம் ‘பரமக்குடி’ கதாநாயகன் ‘தம்பி’யின் சொந்த ஊர் என திரைப்படத்தின் உரையாடலில் ஓரிடத்தில் வருகிறது. ‘தம்பி வேலு தொண்டைமான்’என்ற பெயரும் கதாநாயகன் வீட்டுச் சுவரில் தொங்கவிடப்பட்டு, இரண்டு அருகாமை (close-up) காட்சிகளில் காட்டப்படும் பசும்பொன் முத்தராமலிங்கத் தேவரின் உருவ ஓவியமும் கதாநாயகனின் சாதியைச் சொல்லிவிடுகின்றன. ரௌடிகளாகப் பாத்திரப்படும் சண்முக-சரவண பாண்டியன் சகோதரர்களும், உணவில் மாமிச வில்பத்தை அல்ல வெறியை, அக்ரகாரத்து வக்கீலிடம் வெளிப்படுத்தும் ரௌடிக் கும்பலின் கையாள் பாத்திரமும், ரௌடிக் கும்பலின் தலைவன் அண்ணாச்சியின் கடுக்கண் அணிந்த விடைத்த காதும், முறுக்கிய மீசையும், மேற்சட்டையணியாத வெற்றுடம்பும் கொண்ட அப்பா பாத்திரமும் தேவர் சாதி கதாபாத்திரங்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். தாக்குதலுக்கு எதிர் தாக்குதலும், வன்முறைக்கு எதிர் வன்முறையும் ஒரு தேவரிடமிருந்து இன்னொரு தேவர்தான் எதிர் கொள்ள முடியும் என்பதை இக்கதாபாத்திரங்கள், நடுரோட்டில் கலவரம் நடந்தால் அலறி ஓடும் பொதுப் புத்திக்கு ஒவ்வொரு முறையும் நினைவூட்டுகின்றன. தேவர் மகனில் தொடங்கி விருமாண்டி, சண்டக்கோழி, தம்பி வரை இக்கூத்து தொடர்கிறது.இந்த ரௌடிக் கும்பலால் படுகொலை செய்யப்படும் நிராயுதபாணிகளின் வரிசையில் DYFI தோழர் ஒருவரின் குடும்பமும் காட்சிப்படுகிறது. அவர் வீட்டு சுவரில் புகைப்படங்களாகத் தொங்கும் அம்பேத்கரும், பகத்சிங்கும் அவரொரு தலித் தோழராக இருப்பதற்கான சாத்தியங்களைத் தருகின்றன. தலித் தோழரை படுகொலை செய்த சாதி இந்து ரவுடித்தன அறிவுரையால் திருந்துவதோடு தலித் தோழர் குடும்பத்திற்கு முழு உதவியையும் ‘தம்பி’செய்கிறார். எங்களால் (தேவரால்) மட்டுமே தலித்திற்கு உடல் வன்முறையில் இருந்தும் பொருளியல் வன்முறையில் இருந்தும் பாதுகாப்பு தரமுடியும் என இப்பாத்திரப் படைப்பு நமக்கு விட்டுச் செல்கிறது. ஊரையே இரத்தச் சகதியில் முழ்கடிக்கும் ரௌடிக் கும்பலைத் திருத்துவதோடு மட்டுமில்லாமல், தாதா ரௌடியின் குடும்பத்தையும் அவர்களே திட்டமிடும் கலவரத்திற்கு நடுவில் தம்பி வேலு தொண்டைமான் தன் உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றுகிறான். ரௌடிக் கும்பலின் தலைவன் மெய்சிலிர்த்து தம்பியை ‘தன் குலசாமி’யென ஆராதிக்கிறான். அவனுக்கு தம்பி ‘குலசாமி’ தான். ‘ஞானத் தந்தை’ பாரதிராஜாவால் உணர்வூட்டப்பட்ட சீமானுக்கு அவன் பேரன்பு கொண்ட ‘தம்பி’ தான்.முலை அறுக்கப்பட்ட மூளியாய், இராமநாதபுரம் பெரிய கண்மாயில் தேவர் சாதி வெறியர்களால் நிர்வாணமாக வீசப்பட்ட ஒரு பள்ளச் சகோதரியின், வன்னியர் சாதி வெறியர்களால் வீடு கொளுத்தப்பட்டு, விழுப்புரத்தில் சாம்பலாய்க் கரிந்து போன ஒரு பறத் தாயின், கவுண்டர் சாதி வெறியர்களால் பாலியல் வன்புணர்ச்சிக்கும், சுரண்டலுக்கும் நித்தமும் உள்ளாக்கப்படும் ஒரு அருந்ததியச் சகோதரியின், போலீசு மிருகங்களால் வாழ்வு சீரழிக்கப்பட்ட வச்சாத்தி பழங்குடியினப் பெண்களின் தலைமுறை வாரிசாய் சீமான் அறியாத ‘பெருங்கோபம்” கொண்ட தம்பிகளில் ஒருவன் நான்.சாதி வெறியர்களை, வன்கொடுமையாளர்களை, பெண் உடல்களின் மீது தங்கள் அதிகார-வக்கிர வெறியைப் பிரயோகிப்பவர்களை உபதேசம் செய்து திருத்தவும் அதற்கு ‘என்னை நானே எரித்துக் கொள்வேன்’என ‘தம்பி’யைப் போல தன்னைப் பணயம் வைக்கவும் அன்புக்குரிய அண்ணன் சீமானே, அடுத்த திரைப்பட ஆக்கங்களில் அறிவுறுத்த வேண்டாம். ஏனெனில் ‘நாங்கள் என்ன ஆயுதம் எடுக்க வேண்டுமென, எங்கள் எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்’. எங்கள் எதிரிகள் யாரென்பதை நாங்களே தீர்மானிக்கிறோம்.அமைதி என்பது யுத்தத்திற்குப் பிந்தையது. யுத்தம் இன்னும் முடிவுக்கு வரவில்லை அல்லது இப்போது தான் தொடங்கியிருக்கிறது.பின்குறிப்பு :இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு அருகில் இளையாங்குடியில் பிறந்த இயக்குனர் சீமானுக்கு:‘தெருவில் குரங்கு குட்டிக் கரணம் போட்டாலும் வேடிக்கை பாக்குறீங்க, கொலை நடத்தாலும் வேடிக்கை பாக்குறீங்க’என பொதுப்புத்தியைச் சாடும் உங்கள் சமூகக் கோபம் ‘தம்பி’க்கு மரியாதையைத் தந்திருக்கிறது.பசும்பொன் தேவரை அறிந்த உங்களுக்கு, பரமக்குடியில் நடுவீதியில் படுகொலை செய்யப்பட்ட போராளி இம்மானுவேல் சேகரனையும் தெரிந்திருக்கும். வேலு தொண்டைமானின் இடத்தில் இம்மானுவேல் சேகரனின் தலைமுறையிலிருந்து ஒருவனைக் கதாநாயகனாக்கியிருந்தால், ‘தம்பி’யின் திரைக்கதை தடம்மாறிப் போயிருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக