செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

எதிர்திசை

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்திலும் இந்துக்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் இடையே ஒரு நிரந்தர யுத்தம் நடைபெற்றுவருகிறது. அது வெளியே தெரிவதில்லை. அதனை விளம்பரப்படுத்த இந்துக்களின் பத்திரிகைகள் தயாராக இல்லை; உலகக் கண்ணோக்கில் தங்களது சுதந்திர லட்சியத்துக்கு அது ஊறு விளைவித்துவிடுமோ என்று அவற்றுக்கு அச்சம், ஆனால் ஒரு மௌனப் போராட்டம் நடைபெற்று வருகிறது என்பது மட்டும் உண்மை’- அம்பேத்கரின் இவ்வரிகள் (அம்பேத்கர் நூல் தொகுப்பு-17, 1999;38) தலித்துகளுக்கும் சாதி இந்துக்களுக்கும் இடையேயான மோதலை ஆழமாக ஆராயத் தூண்டுகிறது. சாதி மோதல் குறித்த ஆய்வு இன்று கல்வியாளர்களிடம் முதன்மையான இடம்பிடித்துள்ளது.தமிழ்ச்சமூகத்தில் ஒதுக்கப்பட்ட சாதியான மள்ளர்களுக்கும்*, ஆதிக்கச்சாதியான தேவர்களுக்கும் இடையே 1990களில் நடைபெற்ற மோதலை-பத்திரிகைகள் ‘’கலவரம்’’ எனக் கூறின; கல்வியாளர்கள், தலித் ‘எழுச்சி’ என்று கண்டறிந்தனர். (Manikumar, K.A. 1997; Pandian, M.S.S. 2000).கலவரமா? அல்லது தலித் எழுச்சியா? என்பதனை ஆராய்வதற்கு சிவந்திபட்டி கிராமத்தை தேர்வு செய்தேன். இந்த ஆய்விற்கு, சிவந்திப்பட்டி ஒரு பொருத்தமான கிராமம் தானா?. இக்கிராமத்தில் மள்ளர்களுக்கும் தேவர்களுக்கும் இடையே மிகக் கடுமையான மோதல் நடைபெற்றிருக்கிறது.காலனி ஆட்சிக் காலத்திலும், அதற்குப் பின்னரும் சிவந்திப்பட்டியில் நடைபெற்று வந்த-சமூகப் பொருளாதார பரிவர்த்தனை அங்கே வசித்து வந்த சாதிகளுக்கிடையேயான குறிப்பாக-பண்ணையார், உழவுரெட்டி, தேவர் மற்றும் மள்ளர்-ஆகியோருக்கிடையே ஏற்கனவே இருந்துவந்த ஏற்றத்தாழ்வுகளையும் முரண்களையும் மேலும் அதிகரிக்கச் செய்திருக்கிறது. இதன் விளைவு மள்ளர்களுக்கும் தேவர்களுக்கும், மோதல்களும் படுகொலைகளும் நிகழ்ந்துள்ளன. இந்த காரணங்களினால், நாம் எடுத்துக் கொண்ட சிக்கலை ஆராய்வதற்கு சிவந்திப்பட்டி சந்தேகத்திற்கிடமின்றி ஒரு பொருத்தமான கிராமமே.அம்பேத்கர் கூறியதுபோல் கிராமங்களில் இந்துக்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் இடையேயான மோதல்கள் வெளியுலகிற்கு தெரியாததால், மோதல் குறித்த பதிவுகளும் இல்லாமல் போய்விடுகிறது. இருப்பினும், அம்மக்களிடையே இன்றும் இருந்து வரும் வாய்மொழி வரலாறுகள் சான்றுகளாக கிடைக்கின்றன. எனவே, சிவந்திப்பட்டியில் வசிக்கும் மக்கள், அங்கிருந்து இடம் பெயர்ந்தோர் மற்றும் சிவந்திப்பட்டி குறித்து அறிந்த வர்கள் ஆகியோரிடம் வாய்மொழித்தரவுகள் சேகரிக்கப்பட்டன. பத்திரிகை செய்திகள், ஆய்வு அறிக்கைகள் மற்றும் இரண்டாம்தர ஆதாரங்கள் இக்கட்டுரையை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. 2005, ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலும், அவ்வப்போது சில தனிநபர்களிடமும் தரவுகள் சேகரிக்கப்பட்டன. இக்கட்டுரை தலித்துகளுக்கும் சாதி இந்துக்களுக்கு மிடையேயான நடைபெற்ற மோதலுக் கான காரணிகளை புரிந்துகொள்வதற்கு.சிவந்திப்பட்டி வரலாறு:சிவந்திப்பட்டி, திருநெல்வேலியிலிருந்து சுமார் 19கி.மீ. தூரத்தில் 1930.90 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. 1991ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கின்படி இங்கு 3166 பேர் வசித்து வருகின்றனர் (The Census of Panchayat book, 1991, Tirunelveli, p.5).இவர்களில் மள்ளர், பறையர், தேவர், ரெட்டியார், கோனார், போன்றோர் அடங்குவர். ரெட்டியார் ஆந்திராவிலிருந்தும் (நேர்காணல்: குமாரசாமி, வ.62, காந்திநகர், 29.01.05), தேவர் ராமநாதபுரத்திலிருந்தும் (Kadirvel.S. 1977;7),கோனார் திருச்சியிலிருந்தும் இடம் பெயர்ந்து சிவந்திப்பட்டியில் குடியேறினர்.கோனார், தாங்கள் திருச்சிராப்பள்ளி பகுதியிலிருந்து இங்கு இடம் பெயர்ந்து வந்ததற்கான வாய்மொழி வரலாற்றினை இன்றும் தங்களின் கோயில் திருவிழாவின்போது பாடலாக பாடிவருகின்றனர். மேற்குறிப்பிட்ட சாதியினர் வருகைக்கு முன்னரே தலித்துகள் இங்கு வசித்து வருகின்றனர். (கால்டுவெல், 2004; 5-6 ). மிகப் பழங்காலத்திலிருந்தே அவர்கள் தாங்களாகவே குளங்கள் தோண்டி விவசாயம் செய்து வந்ததனை மள்ளர் ஒருவர் பின் வருமாறு கூறினார்: ‘கொடியவன், நெறிஞ்சான் ஆகியோர் தலைமையில் எங்கள் சாதியினர் குளங்கள் அமைத்து நிலங்களை சீர்படுத்தி விவசாயம் செய்தனர். அப்பொழுது ஆந்திராவிலிருந்து இங்கு வந்த ரெட்டியார்கள் எங்களை ஆயுதபலத்தால் ஒடுக்கினர். வன்முறையால் எங்களின் விவசாய உற்பத்தியினை அபகரித்தனர். இவர்களின் வருகைக்கு முன்னர் எங்கள் ஊர் கொடிக்குளம் தென்பாகம் என அழைக்கப்பட்டது’. (நேர்காணல், ராம சாமி, வ67, சிவந்திப்பட்டி, 27.01.05).டேவிட் லடன் என்பவர் (1989;53-54) தெலுங்கர்களின் வருகைக்கு முன் திருநெல்வேலி பகுதிகளில் குளத்துப் பாசனமே அதிகம் இருந்திருக்கிறது என்று கூறியிருப்பது மள்ளர்களின் வாய் மொழி வரலாற்றிற்கு வலுசேர்க்கிறது. ரெட்டியார் சாதியினரின் குடியேற்றம், மள்ளர்கள் மீது ஒடுக்குமுறையாலும், வன்முறையாலுமே நிகழ்ந்திருக்கிறது என்பது நினைவில் கொள்ளவேண்டிய வரலாறு. ரெட்டியார்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கொடிக்குளம் தென்பாகம், சிவந்திப்பட்டி என்று 18ம் நூற்றாண்டில் சிவந்தி நாயக்கரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது (Bala,V. 2001;2-3).இதுவே, மள்ளர் மீது ரெட்டியார்களால் நடத்தப்பட்ட முதல் ஒடுக்குமுறை. இதன் விளைவு, மள்ளர்கள் ரெட்டியார்களிடம் அடிமை போல் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.சமூகப் பொருளாதார பின்னணி:ரெட்டியார்களில் ஒரு பிரிவினரான கெண்டாரத்தார், சிவந்திப்பட்டியின் நிலவுடைமையாளர்கள். உழவுரெட்டி, மள்ளர், பறையர் விவசாய வேலை களையும், தேவர், அருந்ததியர் முறையே காவல், விவசாயத்திற்குத் தேவையான தோல் பொருட்களைத் தயாரித்தல் பணிகளையும் செய்து வந்தனர். கோனார்கள் நிலவுடைமைக் கட்டமைப்பிற்குள் இருந்திருக்கவில்லை; அவர்கள் மேய்ச்சல் வாழ்வினையே மேற்கொண்டிருந்தனர். பண்ணையாளர்களிடம் தொடர்ச்சியாக வேலை செய்துவந்த மள்ளர் குடும்பங்கள் ‘பதிவாள்’, ‘உழவு பள்ளன்’ என்றழைக்கப்பட்டனர். ஒரு பண்ணையாரின் பதிவாள் மற்றொரு பண்ணையாரிடம் வேலைக்குச் செல்வது தடை செய்யப்பட்டிருந்தது.உழவு ரெட்டியார்களும் பண்ணையாளர்களிடம்தான் விவசாய வேலைகள் செய்துவந்தனர். இவர்கள் மீதான பொருளாதார-சமூக மதிப்பீடுகள் தலித்துகளிடமிருந்து பெரிதளவு வேறுபட்டிருக்கவில்லை.உழவு ரெட்டிகளும் தலித்துகள்,தேவர்களைப்போல் பண்ணையாளர்களை ‘ஐயா’ என்று பணிவோடு தான் அழைக்க வேண்டிய நிலையிருந்தது. சுருக்கமாகக் கூறுவதென்றால், உழவுரெட்டியின் சமூகப்-பொருளாதார-பண்பாட்டு வாழ்க்கை முறை தலித்துகளிடமிருந்து வேறுபட்டிருக்கவில்லை. அதாவது, மள்ளர்களைப்போல் இவர்களும் ஒடுக்கு முறைக்குள்ளாகி இருந்தனர்.இந்த நிலபிரபுத்துவக் கட்டமைப்பில் ஆளும் வர்க்கமாக பண்ணையார்களும், ஆளப்படும்- உழைக்கும் வர்க்கமாக உழவு ரெட்டி, மள்ளர், ஆதி-திராவிடர், அருந்ததியர் சாதிகளும் இருந்தன. தேவர் சாதியினரின் பணியானது விளைச்சலை காவல் காத்தல், பண்ணையார்களின் ஏவலை நிறை வேற்றுதல். இப்பணி பண்ணையார்களின் அதிகாரத்தினையும் பாதுகாத்தது. தேவர்களின் பணி, ஒருபுறம், ஆளும் வர்க்கத்தை பாதுகாத்தலும்; மற்றொரு புறம் உழைக்கும் வர்க்கம் மீது ஆதிக்கத்தை செலுத்துதலுமாகும். அதாவது, தேவர்கள் பண்ணையார்களால் ஆளப்படும் வர்க்கமாகவும், மற்ற சாதியினரை ஆளும் வர்க்கமாகவும் இருந்தனர். ஆனால் தலித், உழவு ரெட்டி, தேவர் சாதிகளுக்கிடையே இந்து மதம் வழங்கியிருக்கும் சமூக ஏற்றத்தாழ்வு களைத் தவிர வர்க்க வேறுபாடுகள் இருந்திருக்கவில்லை.சிவந்திப்பட்டியில் வசித்த ஒவ்வொரு சாதியும் இதர கிராமங்களில் வசித்து வந்த தனது சாதி உறுப்பினர்களோடு இன்ப-துன்ப உறவுகளைக் கொண்டிருந்தது. இவ்வுறவானது கிடைமட்ட அளவில் சுமார் 30கி.மீ.தான் இருந்துள்ளது. இவர்களின் திருமணங்கள் பெரும்பாலும் இரவுநேரங்களில் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவையாகவே நடந்துள்ளன. இச்சமூக-பொருளாதார கட்டமைப்பும் பண்பாடும் காலனிய ஆட்சிக்காலத்திலிருந்து மாற்றத்திற்கு உள்ளானது.களவு உருவாக்கிய பகைமை:காலனிய ஆட்சிக்காலத்தில் சிவந்திப்பட்டி பறையர் மற்றும் உழவு ரெட்டி சாதியினைச் சேர்ந்த ஆண்கள் (மனைவி மக்களை இங்கேயே விட்டுவிட்டு) உள்நாட்டின் பெருநகரங்களுக்கும் வெளிநாட்டிற்கும் இடம் பெயர்ந்தனர் (நேர்காணல் சுப்புராயலு, வ.62, திருநெல்வேலி, 19.01.05). இவ்விடப் பெயர்வு சமூக, பொருளாதார ஒடுக்கு முறையிலிருந்து விடுவித்துக் கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு வகைப் போராட்டமாகும். பறையர், உழவு ரெட்டிகளின் இடப்பெயர்வு, சிவந்திப் பட்டி நிலப்பிரபுத்துவக் கட்டமைப்பில் ஒரு மாற்றத்தைக் ஏற்படுத்தியது. அதாவது, ஆளும் வர்க்கமாக பண்ணையாளர்களும் தேவர்களும், உழைக்கும் வர்க்கமாக மள்ளர்களும் இருந்தனர். இக்காலத்தில் காலனி ஆட்சி அறிமுகம் செய்த நவீன காவல் துறை தேவர்களின் காவல் தொழிலை அப்புறப்படுத்தியது. இச்சூழலில் தேவர்களுக்கும் மள்ளர்களுக்கும் முரண்பாடு தோன்ற ஆரம்பித்தது. வேலையற்ற தேவர்கள் திருநெல்வேலி, மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒதுக்கப்பட்ட மக்களை அச்சுறுத்தி ‘காவல்கட்டு’ பெற்று வந்தனர் (Public (Police), G.O. No. 124, 8 March 1933).மேலும் பிறர் பொருட்களை களவு செய்தும் வந்தனர் (இது குறித்த ஆழமான வாசிப்புக்கு பார்க்க, Arnold, David.1979)). சிவந்திபட்டியில் மள்ளர் கள் தம் விவசாயப் பணிகளை முடித்து இரவுநேரங்களில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் சமயங்களில் தேவர்கள் அவர்களின் வீடுகளில் புகுந்து வெண்கலப் பாத்திரங்கள், ஆடு, கோழி போன்றவற்றைத் திருடினர். திருட்டு நடந்த அடுத்தநாள் தமது உடைமைகள் திருடப்பட்டிருப்பதை மள்ளர்கள் தங்களுக்குள் அதிர்ச்சியோடு பகிர்ந்து கொண்டனர். தேவர்களின் இச்செயல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஒருமுறை தேவர்கள் அவ்வூர் தலையாரியின் (தேவர்) கிணற்றிலிருந்து பாத்திரங்களை எடுத்து பழைய பாத்திர வியாபாரியிடம் விற்பனை செய்ததை மள்ளர்கள் பார்த்து விட்டனர் (நேர்காணல்: சங்கரசுப்பு, வ.53, 20.01.05). தேவர்கள் அக்கிணற்றிலிருந்து நகர்ந்த பின்னர் மள்ளர்கள் கிணற்றில் குதித்து சோதனையிட்டு அங்கே பாத்திரங்கள் பதுக்கி வைக்கப் பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.அப் பாத்திரங்களில் சிவந்திப்பட்டி மள்ளர்களின் பெயர்களே பொறிக்கப்பட்டிருந்ததால் அவை தமது பாத்திரங்கள் என்பதனை உறுதி செய்தனர் (மேலது). இத்திருட்டு குறித்து கிராம அதிகாரியிடம் மள்ளர்கள் புகார் செய்தனர். அவர் தலையாரியை அழைத்து திருட்டில் தொடர்புடையவர்களை விசாரித்தார். ஆனால் குற்றத்தை தேவர்கள் ஒப்புக் கொள்ளாததால் விசாரணை நடத்த ஆங்கிலேய காவல் அதிகாரி வரவழைக்கப்பட்டார். அவரது விசாரணையில் குற்றவாளிகளான தேவர்கள், தாங்கள் மள்ளர்கள் வீட்டில் களவாடியதை ஒப்புக் கொண்டதால் அவர்கள் மீது தண்டனை விதித்தார். தேவர்களின் தொடர் திருட்டு நடவடிக்கையால் பாதிப்புக்குள்ளான ஒரு சில மள்ளர் சிறு விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். அவர் காவல்துறையினர் மூலம் சிவந்திப்பட்டி தேவர்களை குற்றப் பரம்பரை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்குக் கட்டளையிட்டார். இதனால் தேவர்கள் அன்றாட இரவில் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் தங்கும் சூழல் உருவானது. (நேர்காணல்:பொற்செழி யன், பாளையம்கோட்டை, 16.05.05).இத்திருட்டுச் சம்பவத்தில் ஊர் மக்கள் முன்னிலையில் தேவர்கள் தங்களின் குற்றத்தினை ஒப்புக்கொள்ள வேண்டியதாகிவிட்டதால் மள்ளர்கள் மீது தணியாதக் கோபம் கொண்டனர். இதுவே, சிவந்திப்பட்டி மள்ளர்-தேவர்களுக்கிடையே உருவான முதல் முரணாகும். இம்முரண் உருவாக அடிப்படைக் காரணமாயிருந்த தேவர்களின் திருட்டு நடவடிக்கையில் பண்ணையார்களின் நிலைப்பாட்டினை காண்பது அவசியம். பண்ணையார்கள், திருட்டு தொடர்பான விசாரணையின் போது ‘தங்களின் உழவன்’ என்ற முறையில்கூட மள்ளர்களுக்கு ஆதரவாக எந்தவிதத்திலும் செயல்பட்டிருக்கவில்லை. இந்த மவுனம் இன்னொருபுறத்தில் தேவர்களின் செயல்களுக்கு ஆதரவாகவே இருந்தது. (ஆனால் மறவர்களின் திருட்டு நடவடிக்கைக்கு எதிராக இதர சாதிகள் இணைந்து நடத்திய போராட்ட வரலாறு உள்ளது. பார்க்க: Pandian, Anand. 2005).பண்ணையார்களின் நிலைபாட்டிற்கு அடிப்படைக் காரணம் உண்டு. பண்ணையார்கள் மள்ளர்களின் உழைப்பினைச் சுரண்டியதற்கும், தேவர்கள் மள்ளர் உடைமைகளைக் கொள்ளையடித்ததற்கும் இடையில் என்ன வேறுபாடு இருக்க முடியும்? சுரண்டல் அன்றாடம் நிகழும், கொள்ளை திடீரென நடைபெறும். இவ்விரண்டும் மள்ளரது உழைப்பையும் பொருளையும் அபகரிப்பதில் ஒன்றுபட்டவை; நிகழ்த்தப்படும் காலம் மட்டுமே வேறுபடுகிறது. இக்காரணங்களினால் பண்ணையார்களும் தேவர்களும் ஒரே வர்க்கமாகவும் இருக்கின்றனர். எனவே, பண்ணையார்கள் தேவர்களின் திருட்டை எதிர்க்காமல் இருப்பதில் வியப்பொன்றுமில்லை.‘பள்ளக்குடி பஸ்’: நவீனத் தீண்டாமை:இம்முரணுக்கு நடுவில் மற்றொரு மாற்றம் நிகழத் தொடங்கியது. இலங்கைக்கு இடம் பெயர்ந்த உழவு ரெட்டியார்கள் அங்கு ஈட்டிய பொருளாதாரத்தைக் கொண்டு சிவந்திப்பட்டியில் நிலம் வாங்கத் தொடங்கினர் (நேர்காணல்: சுப்புராயலு, வ.60.) இந்நிலங்கள் பெரும்பாலும் பண்ணையார்களிடமிருந்தே வாங்கப்பட்டது. சமூக ஆதிக்கத்தின் குறியீடாக உள்ள நிலத்தை பண்ணையார்கள் பிறரிடம் விற்பதற்குப் பின்னணியாக இருந்த காரணிகள் எவை? பொதுவாகவே, பண்ணையார்கள் தங்கள் வாரிசுகளை படிக்க வைத்தல், சடங்கு சம்பிரதாயங்களுக்கு செலவு செய்தல், ஆடம்பரமாக திருமணம் செய்தல் போன்றவற்றால் ஏற்பட்ட அதிக பொருட்செலவானது அவர்களை நிலத்தை விற்கும் நிலைக்குத் தள்ளியதென எம்.என். ஸ்ரீனிவாஸ் கருதுகிறார். (1996;77). அத்தோடு குடி, கூத்தியாள் போன்ற பழக்கவழக்கங்களாலும் அவர்கள் நிலத்தை விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் அவர்கள் தம் வாரிசுகளை படிக்க வைத்திருக்கவில்லை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி.பண்ணையார்கள் தம் நிலங்களை உழவு ரெட்டியார் களிடம் விற்கத் தொடங்கியதால், உழவுரெட்டியார்கள் புதுப் பண்ணையார்களாக மாறிக் கொண்டிருந்தனர். இதன் விளைவு ஒருபுறம், பண்ணையார்களுக்கும் மள்ளர்களுக்கும் இருந்து வந்த உறவு அறுபடத் தொடங்கியது மறுபுறம், சமூகப் பொருளாதாரத்தில் தங்களின் நிலைக்கு இணையாக இருக்கின்றனர் என்று மள்ளர்களால் கருதப்பட்ட உழவு ரெட்டிகளான புதுப் பண்ணையார்களின் நிலத்தில் பணி செய்யவேண்டிய சூழல் உருவானது. இம்மாற்றங்களுக்கிடையே பண்ணையார்களில் சிலர் இடம்பெயரத் தொடங்கினர். இம்மாற்றம் சிவந்திபட்டி கட்டமைப்பில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை. பண்ணையார்களில் நபர்கள்தான் மாறினார்களே யொழிய, பண்ணையார்-பதிவாள் உறவுமுறை நீடித்துவந்தது.ஆனால், மள்ளர்களின் சமூகப் பொருளாதாரத்தில் சில அடிப்படையான மாற்றம் நிகழத் தொடங்கியது. கல்வி வேலைவாய்ப்பில் தலித்துகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. தீண்டாமை கொடுமைக்கும் பொருளாதார சுரண்டலுக்கும் உள்ளாகி வந்த மள்ளர்கள் அதிலிருந்து விடுதலை பெற முயற்சித்தனர். 1940களின் இறுதியிலும் 1950களின் தொடக்கத்திலும் பிறந்த மள்ளர் குழந்தைகள் கல்வி கற்கத் தொடங்கினர். தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு எனப்படும் பாளையம்கோட்டை சிவந்திப்பட்டியிலிருந்து சுமார் 10கி.மீ. தூரத்திற்கு அப்பால் இருந்தபோதிலும் பேருந்து வசதி இல்லாததால் நடந்து சென்றே கல்வி கற்றுவந்தனர். இந்த இளந்தலைமுறையினர் கல்வி மட்டுமன்றி பண்பாட்டு அளவில் தம் நடை உடைகளை மாற்றிக் கொண்டனர்; சமத்துவம் குறித்த கருத்துக்களையும் கற்கத் தொடங்கினர். தம் மக்களை முன்னேற்ற வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், சிவந்திப்பட்டியும் வளர்ச்சியடைய வேண்டும் என்ற ‘பொது சமூக’ நோக்கத்தோடு மள்ளர்களில் கல்வி கற்ற இளம்தலை முறையினரான சிவந்தி கா. செல்வராசு, பொற்செழியன் முன்முயற்சியில் ‘வளர்மதி’ என்ற சங்கம் 1967ல் ஆரம்பிக்கப்பட்டது.மின்விளக்கு, சாலை, பேருந்து உட்பட இதர அடிப்படைத் தேவைகளைப் சிவந்திப்பட்டி ‘பொது’மக்களுக்கு பெற்றுத்தரும் பணியில் வளர்மதி சங்கம் ஈடுபட்டு வந்தது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தல், தனியார் பேருந்து உரிமையாளர்களை சந்தித்து பேருந்தின் தேவையை வலியுறுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் பல வசதிகளைப் பெற்றனர்.1969ல் பேருந்து வசதி கிடைத்தது. பேருந்தின் இறுதி நிறுத்தம் மேல்சாதியினரின் வசிப்பிடம் அருகேயே இருந்தது. மேல்சாதியினர் பேருந்தின் இருக்கையில் அமர்ந்து பயணிக்கத் தொடங்கினர்; ஆனால் பேருந்து பெற்றுத் தருவதற்கு உழைத்த வளர்மதி சங்கத் தலைவர்களுக்கும் தலித்துகளுக்கும் பேருந்தில் அமர்ந்து பயணம் செய்ய அனுமதியை மறுத்தனர் சாதி இந்துக்கள். இருக்கைகள் காலியாக இருந்த போதிலும், தலித்துகள் நின்று கொண்டு தான் பயணிக்க வேண்டும் என்ற புதியதொரு தீண்டாமை வடிவத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தனர். இதனால் பேருந்தின் நிறுத்தத்தை பொதுவானதொரு இடத்திற்கு மாற்ற வேண்டி வளர்மதி சங்கம் முயற்சி எடுத்தது. அம்முயற்சி பலனளிக்கவில்லை.இருப்பினும் ஒரு புதிய பேருந்து அனைவருக்கும் பொதுவான இடம்வரை சென்றுவருவதற்கான ஏற்பாடு நடந்தது. இப்பேருந்தை மள்ளர்கள் மட்டுமே பயன்படுத்தினர். சாதி இந்துக்கள் இதில் பயணம் செய்வதனை தவிர்த்ததோடு மட்டுமல்லாமல் அப்பேருந்தை ‘’பள்ளக்குடி பஸ்’’ என்றழைத்தனர். பொதுவாகவே, தீண்டாமையை நிலைநிறுத்துவதற்கு, தலித்துகளுக்கெதிரான இத்தகைய சூழல் சாதி இந்துக்களிடத்தில் உருவாகி யிருந்தது (M. N. Srinivas, 1960; 368). தீண்டைமைக் கெதிராகவும், சமத்துவக் கருத்துக்களையும் வளர்மதி சங்கம் மள்ளர்களிடத்தில் விதைத்தது.‘அருவாக்கட்டு’: மரபுரிமைப் போராட்டம்அன்றாடம் அறுவடை முடிந்த பின்னர் அறுவடைக்குப் பயன்படுத்தப்பட்ட அருவாவில் சிறிதளவு நெற்கதிர்களைக் கட்டிக்கொள்ளும் ‘அருவாக் கட்டு’ முறை ஒரு மரபாக இருந்து வந்திருக்கிறது; இது அறுவடைக்கான கூலியோடு சேர்த்துக் கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. 1970களில் புதுப் பண்ணையார்கள் அருவாக்கட்டு உரிமையை பறித்தனர். இதனால் கோபமுற்ற மள்ளர்கள் புதுப் பண்ணையார்களுக்கெதிராக கிளர்ந்தெழுந்தனர். போராட்டத்திற்கு ஆதரவாக வளர்மதி சங்கத்தினரும் எதிராக பண்ணையார்கள் மற்றும் தேவர்களும் செயல்பட்டனர். (நேர்காணல் : சின்னச்சாமி, வ.60) இச்சமயம் மள்ளர் ஒருவர் தனது புதுப்பண்ணையார் வீட்டுக்குள் சென்று தனது கொடும்பசியை ஆற்றிக்கொள்ள அங்கிருந்த சோற்றை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது, அங்கு வந்த புதுப் பண்ணையார் குடும்பத்தினர் ஆத்திரமுற்று அவர் மீது சோற்றைக் கொட்டி அனுப்பினர்.இதனால் கோபமுற்ற மள்ளர்கள் புதுப் பண்ணையார்களிடம் வேலைக்குச் செல்வதில்லை என்று முடிவு செய்தனர் (நேர்காணல்: ராமசாமி, வ.67.). இதனால் புதுப் பண்ணையார்களோடு மள்ளர்களின் உறவு முற்றிலும் திடீரென அறுந்து போனது. இதுவே, மள்ளர்கள் தங்கள் மரபுரிமைக்காக நடத்திய முதல் வர்க்கப் போராட்டமாகும். இருப்பினும், இப்போராட்டத்தை ‘வர்க்கப்’ போராட்டம் என்று மட்டும் அணுக முடியாது. காரணம், பண்ணையார் மற்றும் தேவர்களின் எதிர்ப்பு நிலைப்பாடு தன்னகத்தே தீண்டாமையைக் கொண்டுள்ளது. இந்த வர்க்க போராட்டமானது எந்த அரசியல் இயக்கப் பின்னணியுமின்றி சிவந்திபட்டி மள்ளர்களாலேயே ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.இக்காலத்தில் நிலப்பறி இயக்கம் நடத்திவந்த இந்திய பொதுவுடைமைக் கட்சி 1970களில் , திருநெல் வேலி மாவட்டம் உட்பட, தமிழகம் முழுவதும் உள்ள பண்ணையார்களின் நிலங்களைப் பறிக்கப் போவதாக அறிவித்திருந்த போதிலும் (நல்லகண்ணு, ஆர்.1970), அவ்வியக்கம் சிவந்திப்பட்டியில் நடைபெற்றுவந்த போராட்டத்தின் மீது கவனம் செலுத்தியிருக்கவில்லை.இப்போராட்டத்தினால் மள்ளர்களுக்கு பொருளாதாரச் சிக்கல் உருவானது. இதைத் தீர்ப்பதற்காக அவர்கள் ஒன்றிந்து சிவந்திபட்டியில் வெள்ளாளர் களுக்குச் சொந்தமாயிருந்த தரிசு நிலங்களை ‘தசைக்கூலி (தசைக்கூலி: உற்பத்தியில் நிலஉரிமையாளருக்கு பங்கீடு கொடுப்பதோடு குத்தகைக்கு எடுத்த நபரே நிலத்திற்கான தீர்வினையும் கட்ட வேண்டும்) அடிப்படையில் பெற்று அந்நிலங்களைச் சீர்படுத்தி காட்டுப் பருத்தி, கரும்பு, ஆமணக்கு போன்ற பணப்பயிர்களை பயிர்செய்தனர். ஒருவருக்கொருவர் எந்தவித கூலியும் பெற்றுக்கொள்ளாமல் தமது உழைப்பினை மட்டுமே பரிமாற்றம் செய்து கொண்டு மிகப் பரந்த அளவில் பயிரிட்டனர். பயிரிடும்போதும் அறுவடையின்போதும் அனைவரும் கூட்டு உழைப்பில் ஈடுபட்டனர்.1970கள் முழுவதும் நடைபெற்ற இக்கூட்டுழைப்பு மள்ளரது பொருளாதார விடுதலைக்கு தீர்மானகரமான உந்து சக்தியாக இருந்தது. மேலும், இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி சில மள்ளர் இளைஞர்கள் அரசு ஊழியர்களாயினர். சில பத்தாண்டுகள் நடைபெற்றுவந்த மள்ளர்களின் கூட்டுழைப்புமுறை, இட ஒதுக்கீட்டின் மூலம் கிடைத்த பலன் ஆகியவை மள்ளர்களுக்கு பொருளாதார விடுதலையைக் கொடுத்தது. ஆனால் புதுப் பண்ணையார்களும் தேவர்களும் பொருளாதாரச் சிக்கலை சந்திக்க வேண்டிய நிலை உருவானது. முன்னவர்களிடமுள்ள உறவினை மள்ளர்களின் போராட்டம் அறுத்து விட்ட காரணத்தினால் அவர்களின் விவசாய உற்பத்தி சிக்கலுக்குள்ளானது; அவர்களிடம் காவல்கட்டு பெற்றுவந்த தேவர்களுக்கும் பொருளாதார பிரச்னை ஏற்பட்டுவிட்டது. இந்த பொருளா தாரச் சிக்கல் புதுப் பண்ணையார்களை வேறு தொழிலைத் தேடி இடம்பெயர வைத்தது.உடைந்து நொறுங்கிய நிலவுடைமைபண்ணையார், புதுப்பண்ணையார்களின் பொருளாதாரச் சுரண்டலிலிருந்து விடுதலை பெற்றிருந்த போதிலும் மள்ளர்கள் சமூக விடுதலை பெற்றுவிடவில்லை. இந்து சமூக ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவதற்காக கல்வி கற்று வந்த மள்ளர் இளைஞர்கள் தம் பண்பாடுகளையும் மாற்றிக் கொண்டனர் என்பதனை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். ஆனால் மள்ளர் அல்லாத, குறிப்பாக தேவர் சாதி இளைஞர்கள் கல்வி கற்பதில் அக்கறையின்றியிருந்தனர். இந்து சமூக அமைப்பில் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சமூக ‘மரியாதை’ கல்விகற்கும் அக்கறையின் மையை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அது மிகையான கூற்றல்ல. நேர்மாறாக தலித்துகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் சமூக ‘அவமரியாதை’ அவர்களை கல்வி கற்பதற்குத் தள்ளியது; தங்கள் மீதான அன்றாட பண்பாட்டு ஒடுக்கு முறையை மீறத் தூண்டியது. மள்ளர் இளைஞர்களின் கல்வியறிவையும் அவர்களின் பண்பாட்டு மாற்றத்தையும் கண்டு வெறுப்புற்ற தேவர் இளைஞர்கள் பேருந்து பயணத்தின் போது மள்ளர் இளைஞர்களிடம் ‘வீண்வம்பு’ செய்து வந்தனர்.மேலே விவாதித்த வர்க்க போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த சூழலில் இளம்தலைமுறையினரிடையே சமூக பண்பாட்டு முரண்பாடு உருவாகிக் கொண்டிருந்தது. இந்த முரண்பாடு கல்வியின் மீது அக்கறையற்றிருந்த தேவர் இளைஞர்களால் உருவாக்கப்பட்டது என்பது கவனத்தில் கொள்ள வேண்டும். இருசாதி இளைஞர்களுக்கிடையையான முரண்பாடு வாய்த்தராறு மோதல் என்ற வடிவத்தை அடையத் தொடங்கியது. இதற்காக நடத்தப்பட்ட பஞ்சாயத்தில் இருசாதி இளைஞர்களும் தேவர்களின் கோயிலுக்கு எண்ணெய் ஊற்ற வேண்டும் என்ற தண்டனை வழங்கப்பட்டது (நேர்காணல்: முருகானந்தம், வ.59. சிவந்திப் பட்டி 29.06.05). தேவர் இளைஞர்களால் உருவாக்கப்படும் மோதல்களுக்கு தாங்களும் தண்டனைக்குள்ளாவது அநீதி என்பதை உணர்ந்த மள்ளர்கள் தாங்கள் இதுவரை தேவர்களுக்கு வழங்கிவந்த காவல்கட்டை நிறுத்தி விட்டனர்(நேர்காணல்: ராமசாமி, வ.67). இது தேவர்களுக்கு மேலும் பொருளாதார சிக்கலை உருவாக்கியது.பொருளாதாரச் சிக்கலிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள விரும்பிய தேவர்கள், தாம் ஏற்கனவே செய்து வந்த திருட்டுத்தொழிலோடு கள்ளச் சாராயம் காய்ச்சி விற்றல், வட்டிக்குக் கொடுத்தல் மூலமாக பொருளீட்டத் தொடங்கினர். உடல்உழைப்பற்ற இத்தொழில்கள் அடிப்படையில் பிறரை சுரண்டும் தன்மை கொண்டது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. தேவர்களின் வட்டித்தொழில் தலித்துகளை மிகக் கடுமையாகச் சுரண்டியது. கள ஆய்வின்போது தேவர் ஒருவர், ‘என் தந்தையிடம் தாழ்த்தப்பட்டவர்கள் சிலர் வட்டிக்கு பணம் வாங்கிவிட்டு திருப்பி தராமலேயே இருக்கின்றனர். எனது தந்தையும் இறந்துவிட்டார். நான் தற்போது பாளையம்கோட்டையில் வசிக்கிறேன். வட்டிக்கு பணம் வாங்கிய ஆவணங்களை எடுத்துச் செல்ல இங்கு வந்தேன். இதில் நாங்கள் எங்கள் விருப்பம்போல் ஆயிரக் கணக்கில் அல்லது லட்சக்கணக்கில் நிரப்பிக்கொள்வோம்’ என்றார் (நேர் காணல்:சந்தானம்(60) பாளையம்கோட்டை)இச்சூழலுக்கு நடுவில் மள்ளர்களுக்கும் தேவர்களுக்கும் தகராறுகள் அதிகரித்துக் கொண்டிருந்தன. மேலும், தேவர்கள், புதுப்பண்ணையார்களின் பெண்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட னர் (நேர்காணல்: கணேசன், வ.64, சிவந்திப் பட்டி, 29.06.05). மள்ளர்-தேவர்களுக்கிடையே அவ்வப்போது மூண்ட சிறிய வாய்த்தகராறுகளால் மள்ளர்கள் தம் வசிப்பிடத்திலிருந்து ஆதிக்கச்சாதியினர் வசிக்குமிடத்திற்கு செல்வது தடைபட்டது. இதனால் புதுப்பண்ணையார்களிடம் விவசாய வேலை செய்து வந்த சொற்ப அளவிலான மள்ளர்களும் அவர்களிடம் வேலைக்குச் செல்வது முற்றாக நின்றுபோனது. மேலும் தேவர்கள் பண்ணையார்களின் வீடுகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதால் அவ்வப்போது காவல்துறை சோதனை தேவர்களின் வசிப்பிடத்தில் (பண்ணையார்கள் முன்னர் வசித்த இடம்) நடைபெற்றது.காவல்துறையினர் இவ்விடத்திற்கு வருவதற்காக புதுப் பண்ணையார்களின் வசிப்பிடத்தினை கடந்து செல்வதால், இச்சோதனை அவர்களின் வாழ்வையும் கடுமையாக பாதித்தது. இந்நிலையில் புதுப்பண்ணையாளர்களின் வாரிசுகள், ஏற்கனவே நகரங்களில் உணவுவிடுதி தொழில் நடத்திவரும் ரெட்டியார்களுடன் இணைந்து தொழில் செய்ய சிவந்திப்பட்டியை விட்டு வெளியேறி விட்டனர். தம் வாரிசுகள் வருமானம் ஈட்டுவதால் புதுப்பண்ணையார்கள் பலரும் தங்களின் நிலங்களை 1980களில் விற்கத் தொடங்கினர். ஓரளவுக்கு பொருளாதாரத்தை வைத்திருந்த மள்ளர்களே புதுப் பண்ணையார்களிடமிருந்து நிலம் வாங்கினர்.1970களின் இறுதியில் தொடங்கி 1980களின் ஆரம்பம்வரை மள்ளரது போராட்டத்தினால் சிவந்திப்பட்டி நிலவுடைமை உறவில் ஏற்பட்ட மாற்றம் அங்கு புதுப் பண்ணையார்களின் பொருளாதார ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. குறைவான எண்ணிக்கையில் வசித்து வந்த பண்ணையார், புதுப் பண்ணையார்களின் நிலங்கள் அதிக எண்ணிக்கையில் வசித்துவரும் மள்ளர்களால் வாங்கப்பட்டன. இது, மேலும் ஒரு சாதி மற்றொரு சாதியின் மீது பொருளாதார ஆதிக்கம் செலுத்தும் நிலையையோ அல்லது ஒரு சாதி மற்றொரு சாதியை சார்ந்து வாழ வேண்டிய நிலையையோ முற்றிலுமாக அழித்து விட்டது. இதனால் சிவந்திப் பட்டியின் நிலவுடைமைக் கட்டமைப்பு உடைந்து நொறுங்கியது எனலாம்.அரசியல் சூழ்ச்சியும் படுகொலையும்பொருளாதார விடுதலையடைந்த மள்ளர்கள் பண்பாட்டு விடுதலையை எட்டத் தொடங்கினர். கல்வி கற்ற வளர்மதி சங்கத்தினர் அப்போது தமிழகத்தில் உச்சத்திலிருந்த தமிழர் அடையாள அரசியலை உள்வாங்கியிருந்தனர். இந்த இளைஞர்கள் தமிழர் பண்பாட்டை தங்கள் கிராமங்களில் கொண்டாட முடிவு செய்தனர்.தமிழர் திருநாளான பொங்கல் திருநாள், உழவர் திருநாள், திருவள்ளுவர் திருநாள் ஆகிய மூன்றுநாட்களிலும் திருவள்ளுவரின் அகராதிகளிலிருந்து ஏதாவதொரு தலைப்பில் கருத்துரை, சமூகம்-அரசியல் தொடர்பான பட்டிமன்றம், உழவர் திருநாளன்று வேளாண்துறை சார்பில் அலுவலர்களை அழைத்து கருத்துரை, போர்முறைகள், விளையாட்டுப் போட்டிகள் போன்றவைகளை 1985 ஆண்டு முதன்முதலில் கொண்டாடினர் (சு. பெரியசாமி, தலைவர் விழாக்குழு, விழா அழைப்பிதழ், 1985). ‘தேர்தலில் அரசியலாளர்களின் நடைமுறையால் மக்கள் மனநிலை சீரழிகிறா? சீரடைகிறதா?’ என்ற பட்டி மன்றம், ‘வள்ளுவரின் வாழ்க்கை நெறி’, ‘’வள்ளுவரின் பார்வையில் உழவர்’’ ஆகிய தலைப்புகளில் சிறப்புரை நிகழ்த்தப்பட்டதானது, வளர்மதி சங்கத்தினர் தமிழ்பற்று மற்றும் அரசியல் ஆர்வத்துடன் இருந்திருக்கின்றனர் என்பதை எடுத்துரைக்கிறது. ஆனால் இத்தகையதொரு விழா தேவர்களால் கொண்டாடப்படவில்லை என்பது இங்கு கவனத்திற்கொள்ள வேண்டும்.இம்மாற்றங்களுக்கு நடுவே, அதாவது 1980களின் நடுப்பகுதியில், பஞ்சாயத்து களுக்கான தேர்தல் தமிழகத்தில் நடத்து வதற்கான அறிவிப்பு வெளியானது. அரசியல் நிலைப்பாட்டில் தேவர்கள் தி.மு.க.வோடும், மள்ளர்கள் காங்கிரசோடும் இணைந்திருந்தனர். சிவந்திப்பட்டியில் இதுவரை பஞ்சாயத்து தலைவர்களாக பண்ணையார்கள்தான் இருந்திருக்கின்றனர். ஆனால் தற்போது அங்கு பண்ணையார்களும் இல்லை, புதுப்பண்ணையார்களும் பொருளாதார ஆதிக்கத்தினை இழந்துவிட்டனர். ஆனால் பொருளாதாரப் பலம் படைத்தவர்களாக மள்ளர்களும் தேவர்களும் இருக்கின்றனர். மள்ளர்களின் பொருளாதார பண்பாட்டு விடுதலைகளுக்கிடையே அச்சமுகத்தினரிடம் தேர்தலில் பங்கேற்பதா? வேண்டாமா? என்று விவாதித்தனர்.தற்போதைய சூழலில் அரசியல் போராட்டத்தில், குறிப்பாக சிவந்திப்பட்டி பஞ்சாயத்து தேர்தலில் பங்கேற்க வேண்டாம் என்றே மள்ளர்கள் முடிவு செய்தனர். அப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருந்த சமூக-பண்பாட்டு போராட்டமே அவர்களை இம்முடிவுக்கு இட்டுச் சென்றது. ஆனால் அவ்வூர் மக்களுக்காக தன் வாழ்வினை அர்ப்பணித்து வந்த முத்தையா என்பவர் தான் போட்டியில் பங்கேற்பதாக தெரிவித்தபோது அதை மள்ளர்கள் ஆதரிக்கவில்லை. இதனால் மனமுடைந்த அவர் அவ்வூரைவிட்டே வெளியேறிவிட்டார். (இன்றுவரை அவர் எங்கு வசிக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை).இதற்கிடையில் மள்ளர்களும் தேவர்களும் தங்களுக்குள் ஓர் எழுதப்படாத உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டனர். அதன்படி, மள்ளர்கள் அதிகமாக வசிக்கும் முத்தூர் பஞ்சாயத்தில் அவர்கள் போட்டியிடுவது என்பது முடிவானது. சிவந்திப்பட்டியில் வசிக்கும் மள்ளர்கள் பெரும்பான்மையானோர் முத்தூர் பஞ்சாயத்திலேயே இணைக்கப்பட்டிருந்ததே இவ்வுடன்பாட்டிற்கு காரணமாக அமைந்தது. தேவர்கள் சிவந்திப்பட்டி பஞ்சாயத்தில் குறைந்த எண்ணிக்கையில் இருந்தபோதிலும் அப்பஞ்சாயத்தில் அவர்கள் போட்டியின்றியே வெற்றிபெற விரும்பினர். இத்தேர்தலில் பங்கேற்பதற்கு மனுதாக்கல் செய்ய வந்த பண்ணையார் தேவர்களின் அச்சுறுத்தலுக்குப் பயந்து திரும்பிச் சென்றுவிட்டார். (நேர்காணல் ராமசாமி, வ.67). இதனால் சிவந்திப்பட்டி பஞ்சாயத்தில் போட்டியின்றியே கோட்டியப்பன் (தேவர்) தேர்வு செய்யப்பட்டார்.முத்தூர் பஞ்சாயத்திற்கு, வளர்மதி சங்கத்திற்கு தலைவராக இருந்த பரமானந்தம் (25) போட்டியிட்டார். அப்போது தலித்துகளிடத்தில் எழுச்சி பெற்றுக் கொண்டிருந்த ஜான் பாண்டியன் பரமானந்தத்திற்கு ஆதரவு தெரிவித்தார். இங்கு தேவர்சாதியினைச் சேர்ந்த பூலையா என்பவரும் மள்ளர்-தேவர்களின் எழுதப்படாத உடன்பாட்டை மீறி போட்டியிட்டார். இப்பஞ்சாயத்தில் மள்ளர்களே எண்ணிக்கையில் அதிகமாக வசிப்பதால், வாக்களிக்கும் தினத்தன்று பரமானந்தம் வெற்றி பெற்றுவிட்டார் என்றதொரு வதந்தி மதியவேளையில் பரவியது. அப்போது நூற்றுக்கணக்கான மள்ளர்கள் வாக்களிக்காதிருந்தனர். இதனால் மள்ளர் இளைஞர்கள் வாக்களிக்காமலிருந்த தங்கள் மக்களை வாக்களிக்கச் செல்லுமாறு வேண்டினர். தேவர்கள் வசிக்கும் கொடிக்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு தேவர்கள் அவர்களை வாக்களிக்கவிடாது தடுத்ததோடு மள்ளர்களின் மிதிவண்டிகளையும் அடித்து நொறுக்கினர்.ஆத்திரமடைந்த மள்ளர்கள் எதிர்தாக்குதல் தொடுக்கத் தொடங்கினர். இம்மோதல் மள்ளர்களை வாக்களிக்க வந்த நோக்கத்திலிருந்து திசை திருப்பியது. இறுதியில் அவர்கள் வாக்களிக்க முடியாமற்போகவே, தேவர் சாதி பூலையாவே வெற்றி பெற்றார். இத்தேர்தலினால் ஏற்பட்ட மோதலால் மள்ளர்களே அதிகம் பாதிப்புக்குள்ளாயினர். பாதிக்கப்பட்ட மள்ளர்களை தலித் தலைவரான இளையபெருமாள் வந்து பார்த்து விட்டு, அரசு அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார் (மருதமலர், 1986,மே-ஜூன்). இம்மோதலுக்குப் பின் மள்ளர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி நலனை முன்னிட்டு டாக்டர் அம்பேத்கர் மழலைப்பள்ளியை 07.06.1987 அன்று தொடங்கினர். காரணம், அவர்கள் ஏற்கனவே படித்து வந்த பள்ளி சாதி இந்துக்களின் வசிப்பிடத்தில் அமைந்திருந்ததால் தங்களின் குழந்தைகளுக்கு அவர்களால் அச்சுறுத்தல், தகராறுகள் ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கை மள்ளர்களை தமக்கென தனி பள்ளிக்கூடம் அமைக்க வித்திட்டது.பஞ்சாயத்து தேர்தலில் தேவர்களால் ஏற்படுத்தப்பட்ட மோதலானது இது வரை நடைபெற்று வந்த வாய்த்தகராறுகளை அந்நிலையிலிருந்து, தேவர் களின் தாக்குதல் - மள்ளர்களின் எதிர் தாக்குதல் என்ற வன்முறை நிலைக்கு மாற்றிவிட்டது. மோதல் நடைபெற்ற சில மாதங்களுக்குள் தேவர் சாதியைச் சேர்ந்த உச்சிமாளி மள்ளர்களின் விளை நிலத்தில் திருடினார். காவல் காத்துக் கொண்டிருந்த மள்ளர்கள் திருடனை அடித்து கொன்றுவிட்டனர். இதுவே தேவர்களின் திருட்டு நடவடிக்கைக்கு எதிராக முதன்முறையாக மள்ளர்கள் எடுத்த ‘வன்முறை’ நடவடிக்கை ஆகும். இக்கொலை வழக்கில் 50க்கும் மேற்பட்ட மள்ளர்கள் கைது செய்யப் பட்டனர் (நேர்காணல்). இவர்களில் காவல்துறையின் பலத்த தாக்குதலுக்கு இலக்கானோர் ஒருசில வருடங்களி லேயே இறந்துவிட்டனர்.இக்காலங்களில் தமிழக அளவில் உருவாகிக் கொண்டிருந்த சாதிச் சங்கங்களில் மள்ளர்கள், தேவர்கள் முறையே, தேவேந்திரகுல வேளாளர் சங்கத்திலும், ‘முக்குலத்தோர்’ சங்கத்திலும் இணையத் தொடங்கினர். இதனால் இவர்கள் தங்களின் சாதிப் பெயர்களை தேவேந்திரர், தேவர் (Manikumar,K.A. 1997) என்று அழைக்கத் தொடங்கினர். தேவேந்திரர்களுக்கு இம்மானுவேல் சேகரனும், தேவர்களுக்கு முத்து ராமலிங்கத்தேவரும் குறியீடாயினர். அ.தி.மு.க. அரசு 1993ம் ஆண்டு முதல் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாளை ‘தேவர் குருபூசை’ (தற்போது தேவர் ஜெயந்தியாகிவிட்டது) என்று அரசு விழாவாக அறிவித்ததில் தொடங்கி அச்சாதியினருக்கென்று அதிக முக்கியத்துவம் கொடுத்தது (Pandian, M.S.S., 2000, p.503). இது தேவர்களின் ஆதிக்கத்திற்கு மேலும் வலு சேர்ந்தது. ஆனால், இத்தகைய அரசியல் ஆதரவு மள்ளர்களுக்கு கிடைத்திருக்கவில்லை.தேவர்களின் கொலைவெறியும் - மள்ளர்களின் எதிர்படுகொலையும்இச்சூழலில் பருவமழை பொய்த்தல், விவசாயத்தில் நட்டம் போன்ற காரணங்களால் மள்ளர்களில் பல இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபடாமல் கட்டிடம் கட்டும் வேலையிலும், பெண்கள் பீடி சுற்றுவதிலும் ஈடுபடலாயினர். மள்ளளர்கள் கட்டிடத் தொழில் ஈடுபடுவதற்கு காரணம், அச்சமயத்தில் சிவந்திப்பட்டியிலிருந்து சுமார் 8கி.மீ. தூரத்தில் தியாகராஜர் நகர் என்ற நடுத்தரவர்க்க குடியிருப்பு உருவாகிக் கொண்டிருந்தது. மள்ளர் சமுகத்தினைச் சேர்ந்த சபாபதி என்ற இளைஞர் கட்டிட ஒப்பந்த வேலைகள் மூலம் மள்ளர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து வந்தார். கட்டிடம், பீடி சுற்றும் தொழிலானது விவசாயத் தினை போலல்லாமல், அவர்களுக்கு வாராவாரம் பணம் கொடுத்தது.ஆனால் தேவர்கள் சாராய விற்பனை, வட்டித்தொழிலையே செய்து வந்தனர். இந்நிலையில் இரண்டு சாதியினருக்கும் இடையேயான மோதலும் வலுத்துக் கொண்டேயிருந்தது. மேலும் 1990 களின் ஆரம்பத்தில் தென்தமிழகத்தில் மள்ளர்கள் தங்கள் விடுதலைக்கான போராட்டத்தினை நடத்திக் கொண்டிருந்தனர். ஆனால் இவர்களின் முயற்சிகளை ஒருபுறம் ஒடுக்கிய ஆளும் அரசுகள் மறுபுறம் தேவர்களுக்கு ஆதரவான பல செயல்களைச் செய்தது. புறநிலையாக நடைபெற்றுக் கொண்டிருந்த மள்ளர்களின் எழுச்சியும் தேவர்களின் ஆதிக்கமும், சிவந்திப்பட்டியில் அக நிலையாக இருந்துவந்த மள்ளர்-தேவர் மோதலை பெரும் முரணாக மாற்றும் வினையூக்கியானது.சிவந்திப்பட்டியிலிருந்து திருநெல்வேலிக்கு சென்றுவந்த பேருந்துகள் குறித்து ஏற்கனவே விவரித்திருந்தோம். பேருந்தில் பயணம் செய்கிற பொழுது மள்ளர்களும் தேவர்களும் உரச நேரிடும் சமயங்களில் தாக்கிக் கொண்டனர். சிவந்திப்பட்டிக்கும் முத்தூருக்குமிடையில் (சுமார் 2 கி.மீ.) மக்கள் வசிப்பிடங்கள் இல்லை. தேவர்கள் வசிப்பிடமான முத்தூருக்கும் ராஜகோபாலபுரம் என்ற ஊருக்கும் இடையில் (5கி.மீ) காட்டுப் பகுதியாகும். ராஜகோபாலபுரம் மள்ளர் வசிக்கும் பகுதியாகும். பேருந்தில் ஏற்படும் வாய்த்தகராறுகளுக்கு தேவர்கள் முத்தூரிலும், மள்ளர்கள் ராஜ கோபாலபுரத்திலும் பேருந்தை நிறுத்தி மாறிமாறித் தாக்கிக் கொண்டனர். இது வரை சிவந்திப்பட்டிக்குள் நடைபெற்று வந்த போராட்டம் அவ்வூருக்கு வெளியே நடைபெறத் தொடங்கியது.மேற்குறிப்பட்ட ஊர்களில் ஒருசாதியினர் மற்றொரு சாதியினரை தாக்கும் போது அவ்வூரிலுள்ள மக்கள் தங்கள் சாதி இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து நேரடியாக களத்தில் இறங்கவில்லை. இருப்பினும், மோதலில் ஈடுபட்ட இளைஞர்கள் தங்கள் சாதி மக்கள் வசிக்குமிடத்தில் பிறரைத் தாக்குவது தமக்கு பாதுகாப்பானதாகக் கருதினர். இம்மோதலில் சபாபதி மள்ளர் இளைஞர்களை ஒருங்கிணைத்து தேவர்களை எதிர்த்து தாக்கி னார். முத்தூருக்கும் ராஜகோபாலபுரத்திற்குமிடையில், அதாவது, இரு பிரிவினருக்கும் ஆதிக்கமற்ற பகுதியான காட்டுப்பகுதியில் ஒருமுறை மள்ளர்கள் பேருந்தை நிறுத்தி தேவர்களை கடுமையாகத் தாக்கிவிட்டனர். இது தொடர்பாக காவல்துறை இருதரப்பையும் அழைத்து சமாதானமாக பேசிமுடித்த பின்னர் அதில் திருப்தியடையாத தேவர்கள் மள்ளர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.இப்பேச்சுவார்த்தையில் தங்கள் முதியோர்கள் பங்கேற்பதற்கு மள்ளர் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் அவர்கள் 1996 ஜூனில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் பங்கேற்றனர். மள்ளர், தேவர்கள் தவிர இதர ஆதிக்கச் சாதியினரும் பங்கேற்றனர். பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் சபாபதி தியாகராஜநகரில் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி சிவந்திப் பட்டியை வந்தடைந்தது. உடனடியாக சமாதானக் கூட்டம் ரத்து செய்யப் பட்டது. சபாபதி கொலை செய்யப் பட்ட செய்தியால் கொதிப்படைந்த மள்ளர்கள் அருவாள், கம்பு, கத்தி போன்ற ஆயுதங்களுடன் தேவர்களின் வசிப்பிடத்திற்குச் சென்றனர். ஆனால் அங்கு ஒருசில முதியவர்களைத் தவிர யாரும் இல்லாததால், சபாபதி படுகொலை திட்டமிட்டே தேவர்களால் நடத்தப்பட்டுள்ளது என்பதனை புரிந்து கொண்ட மள்ளர்கள் ஆத்திரத்தில் சுமார் 50வயதான ஆறுமுகத்தேவர் என்பவரை கொலை செய்தனர்.இச்சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திருநெல்வேலியிலிருந்து ஒரு பேருந்து சிவந்திப்பட்டிக்கு வந்து கொண்டிருந்தது. ஊர் எல்லையிலேயே பேருந்து நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். மோதலின் சூழலினை கணக்கில் கொண்டு பயணிகள் தத்தமது சாதி சாதியாகப் பிரிந்து கூட்டம் கூட்டமாகச் சென்றனர். ஒவ்வொருவரும் தமது சாதி உறுப்பினர்களோடு செல்வது பாதுகாப்பானதாகவும், பலமானதாகவும் கருதியே அவ்வாறு கூட்டம் கூட்டமாக பிரிந்தனர். மள்ளர்கள் கூட்டமாகச் செல்வதற்காகத் தயாரானபோது, மனநிலை சரியில்லாத சுமார் 24 வயதான ராசையா என்பவர் மட்டும், ‘என்னை யாரும் ஒன்றும் செய்ய மாட்டார்கள்’ (நேர்காணல்) என்று கூறி விட்டு அவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.இந்நிலையில் மள்ளர்களால் தேவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட செய்தியறிந்த தேவர்கள் சமாதானக் கூட்டத்திற்கு வந்திருந்த 55வயதான ராசையா என்பவரையும், மனநிலை சரியில்லாத ராசையாவையும் அடுத்தடுத்து படு கொலை செய்தனர். இளம் வயது ராசையா மனநலம் சரியில்லாதவர் என்பது தேவர்களுக்கு தெரியாமலிருக்க வாய்ப்பே இல்லை. சாதிய மோதல் ஏற்பட்டால் ஒரு சாதியினரை மற்ற சாதியினர் கொலை செய்யும் பொழுது அவர் வயதானவரா? ஊனமுற்றவரா? மனநிலை பாதிக்கப்பட்டவரா? என்றெல்லாம் பார்ப்பதில்லை. பைத்தியமாக இருந்தாலும் அவர் தனக்கு எதிரான சாதியின் உறுப்பினரென்றால் படுகொலை செய்யப்படுவதிலிருந்து தப்பமுடியாது என்பதை ராசையா படுகொலை விளக்குகிறது. ஊனமுற்றவர் என்றாலும் அவர் என்ன சாதியைச் சேர்ந்தவர் என்பதுதான் மோதலின்போது வெளிப்படுகிறது. இப்படுகொலைகளுக்குப் பின்னர் சிவந்திப்பட்டியின் எல்லையில் புறக்காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டு அங்கே பேருந்து நிறுத்தப்பட்டு விட்டது. ஊரில் எல்லை என்பது தேவர்கள் உட்பட இதர ஆதிக்கச் சாதியினருக்கு மிகஅருகாமையில் உள்ள பகுதியாகும்.சபாபதி படுகொலையில் முக்கியப்பங்கு வகித்ததாகக் கருதப்பட்ட சிவந்திப்பட்டி பஞ்சாயத்து தலைவர் கோட்டியப்பனையும் (தேவர்) அவரது தம்பி தங்கபாண்டியனையும் மள்ளர்கள் கொலை செய்ய முடிவுசெய்தனர். இந் நிலையில் கோட்டியப்பன் கொலை செய்யப்படவே மள்ளர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் கோட்டியப்பனை கொலை செய்தது தேவர்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. தங்கபாண்டியனை கொல்ல மள்ளர்கள் மூன்று முறை முயற்சி மேற்கொண்டனர் (தினமலர், 29.07.01, 05.08.01). இதில் ஒரு முறை நடந்த முயற்சியில் தங்கபாண்டியனின் ஆதரவாளர் கோட்டியப்பன் இறந்துவிட்டார். ஆனால் தங்கபாண்டியனை மள்ளர்களால் கொல்ல முடியவில்லை. அதன்பின் மீண்டும் மள்ளர்கள் எந்த முயற்சி யும் எடுத்ததாகத் தெரியவில்லை.இன்றைய சிவந்திப்பட்டிநாம் இதுவரை சிவந்திப்பட்டியின் ஒரு நூற்றாண்டு கால சமூக, பொருளாதார, பண்பாட்டு, அரசியல் மாற்றங்களைக் கண்டோம். தற்போது அங்கு வசிக்கும் மக்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு மற்றும் அரசியல் நிலை என்ன என்பதனைக் காணலாம். சிவந்திப் பட்டியில் தற்போது மள்ளர், பறையர், கோனார், சில புதுப்பண்ணையார் போன்ற சாதியினர் வசித்து வருகின்றனர். நிலவுடைமைக் கட்டமைப்பில் இச்சாதிகளிடையே இருந்து வந்த சமூக உறவு முற்றிலும் உடைந்து நொறுங்கி விட்டது. குறிப்பாக நாம் கட்டுரை முழுவதும் கண்ட மள்ளர்-தேவர்-பண்ணையார், புதுப்பண்ணையார் ஆகியோருக்கிடையே தற்போது எவ்வித உறவுமில்லை.சிவந்திப்பட்டி என்ற பெயர் பெயரளவில்தான் உள்ளது. இங்கு வசிக்கும் அனைத்துச் சாதிகளுக்குமிடையேயான சமூக உறவினைவிட வெளிக்கிராமங்களில் உள்ள அந்தந்தச் சாதியினரோடுதான் உறவுடன் இருக்கின்றனர். அதாவது, ஒரு மள்ளருக்கு தேவர், கோனார் போன்ற சாதிகளுடன் இருக்கின்ற உறவினைவிட, வெளிக் கிராமங்களிலுள்ள மள்ளருடனேயே தான் வலுவான உறவு இருக்கிறது. தேவர்களுக்கும் கோனார்களுக்குமிடையே நெருக்கமான உறவு இல்லை. ஆனால் 1990களில் மள்ளர்களுக்கெதிரான தேவர்களின் ஒடுக்குமுறையின் போது இவர்கள் தேவர்களுக்கு ஆதரவான நிலைபாட்டுடனேயே இருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.வெளியூரிலிருந்து ஒருவர் தன் உறவினரைப் பார்க்க வேண்டுமென்றாலோ அல்லது இங்குள்ள சாதிகளைக் குறித்து ஆய்வு செய்ய விரும்பினாலோ, தன் உறவுக்காரரை அல்லது தான் ஆய்வு செய்ய விரும்பும் சாதியினரை அடையாளம் காண்பதானது மிக எளிது. அதாவது, அன்று ஒரு சாதியின் பெயரைக் குறிப்பிட்டு அவர்கள் வசிக்கின்ற தெருவுக்கு எவ்வாறு போக வேண்டும் என்று கேட்கவேண்டும். ஆனால், இன்று ஒவ்வொரு சாதியும் தனக்காக தேர்வு செய்து வைத்திருக்கும் வண்ணங்களைத் தெரிந்திருந்தாலே போதுமானது. அனைத்துச் சாதியினரும் அவர்களின் தெரு நுழைவாயிலில் அவர்களுக்கான வண்ணங்களைத் தீட்டியுள்ளனர். மள்ளர்கள், தேவர்கள் முறையே பச்சை-சிவப்பினையும், மஞ்சள் நிறத்தைனயும் தங்களுக்கான வண்ணமாகக் கொண்டிருக்கின்றனர். அன்று குடிசைகளாக இருந்த மள்ளர் தேவர்களின் வீடுகள் இன்று நவீனவீடுகளாகி விட்டன. பண்ணையார்களின் வீடுகள் சிதைந்து காணப்படுகின்றன. சில பண்ணையார்களின் வீடுகளில் தேவர்கள் குடியிருந்து வருகின்றனர்.1980களில் பள்ளர்கள் தொடங்கிய பொங்கல் விழாவினை 1990களில் மறவர்களும் கொண்டாட ஆரம்பித்தனர். ஆனால் இவ்விழா மள்ளர்களைப் போல் தமிழ் பண்பாட்டைக் கொண்டாடாமல் அதிலிருந்து மாறுபட்டிருக்கிறது. மள்ளர்களின் பொங்கல் விழாவிலும் முன்னர் போன்றுதான் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படினும் அன்று மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றது போல் இன்று இல்லை. அவர்களை தொலைக்காட்சிப் பெட்டியில் அரங்கேற்றப்படும் சினிமா நட்சத்திரங்களின் கவர்ச்சிகள் கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கிறது (நேர் காணல்:பொற்செழியன்).இச்சாதிகளின் திருமண உறவுகளிலும் குறிப்படத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. அன்று ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் இரவு நேரங்களில் நடந்தன; இன்று பகல் நேரங்களில் தனித்தனியாக நடைபெறுகிறது. திருமணம் ஒரு ஆண் பெண் இணைவு என்பதனை விடவும் சம்பந்தபட்டவரின் சாதி, பொருளாதார வலுவை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது.மள்ளர்களில், மணப்பெண்ணுக்கு பீடி சுற்றத் தெரிந்திருப்பதோடு குறைந்தபட்சம் 10 அல்லது +2 படித்திருக்கவேண்டும். மாப்பிளை விவசாயக் குடும்பமாக இருக்கக்கூடாது, ஆனால் தினக்கூலியாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளத்தயராக இருக்கின்றனர் பெண்வீட்டார். தேவர்களில் பெண் வீட்டார், மாப்பிளை இடைஞ்சல் தரக்கூடிய எத்தொழிலையும் பார்க்கக்கூடாது என்றும், மாப்பிளை வீட்டார் பெண் பீடி சுற்றத் தெரிந்தவளாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். பட்டம் அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் தனக்கு இணையாகக் கற்றவர்களின் துணையையே விரும்புகின்றனர். இவர்களின் உணவிலும் பல மாற்றங்கள் நடந்துவிட்டன. இம்மாற்றத்தில் மட்டும் அனைத்துச் சாதி முதியவர்களும் ஒரே கருத்தினை வெளிப்படுத்தினர். அதாவது, ‘அன்று எங்கள் ஊரில் விளையும் காய்களை சமைக்கும்போதே நல்ல மணமும், சாப்பிடும்போது ருசியும் மிகநன்றாக அதேசமயம் மிகச் சத்தாக இருந்தது. ஆனால் இன்று இங்கு விளையும் காய்களின் ருசி மட்டரகமாக உள்ளது’ என்றனர். இங்குள்ள இளைஞர்கள் உணவில் நடந்த சத்து, ருசி போன்ற மாற்றங்களை அறிந்திருக்கவில்லை.மள்ளர்கள் தற்போது விவசாயம், அரசு, தனியார் நிறுவனங்களில் அலுவலகப் பணிகள், கட்டிடம் கட்டுவது மூலம் பொருளீட்டுகின்றனர். மள்ளர்கள் மேலும் நிலம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இது நிலத்தின் மீதான வெறுப்பல்ல, மாறாக விவசாயத்தில் ஏற்பட்டுவரும் நட்டமாகும். உள்ள நிலத்தைப் பராமரித்தாலே போதுமானது என்று நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர். தேவர்கள் சாராயம் வடித்தல், வட்டி கொடுத்தல் போன்றவற்றிலிருந்து விலகிவிட்டனர். சில தேவர்கள் திருட்டுத்தொழிலில் ஈடுபட்டு வருவதும் தொடர்கிறது (தினத்தந்தி, 20.06.2006, பக்.15, நெல்லை பதிப்பு). இச்சமூகத்தின் பல இளைஞர்கள் வெளியூர்களில் தின்பண்டங்கள் விற்பனை செய்தல் மற்றும் கூலித்தொழிலிலும் ஈடுபடுகின்றனர். இது அம்மக்களிடத்தில் நடைபெற்றுள்ள மிகப்பெரும் மாற்றமாகும்.ஒருசில புதுப்பண்ணையார்கள் தங்களின் நிலங்களில் தாங்களே உழைப்பாளர்களாக இருந்து உற்பத்தி செய்கின்றனர். மேலும் தம் வாரிசுகள் வெளியூர்களிலிருந்து அனுப்பும் பணத்தில் மூலம் வாழ்க்கை நடத்துகின்றனர். பஞ்சாயத்து அதிகாரத்தினை பொறுத்தமட்டிலும் சிவந்திப்பட்டியில் தேவர் சாதியைச் சேர்ந்தவரும், முத்தூரில் 1986ல் தோல்வியுறச் செய்யப்பட்ட பரமானந்தமும் தற்போது தலைவராக இருக்கின்றனர். எனவே, சிவந்திப்பட்டியில் ஒரு சாதி மற்றொரு சாதியினை சமூகம், பொருளாதாரம், பண்பாடு, அரசியல் ஆகிவற்றில் ஆதிக்கம் செலுத்தவில்லை என்று கூறலாம். ஆனால் 1990களின் மோதலின் போது நிறுத்தப்பட்ட பேருந்து இன்றுவரை மீண்டும் தனது பழைய நிறுத்தத்திற்குச் (மள்ளர்கள் வசிப்பிடம் அருகே) செல்லவில்லை. இதற்கு அரசு சட்டம்-ஒழுங்கு என்று கூறிவருகிறது ( திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலர் கடிதம், எண்.52917/உ1/99).பேருந்து பழைய நிறுத்தம் வரை வந்து செல்ல வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கு பல ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டது. இப்பிரச்சினைக்காக சி.பி.எம். கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. வழக்கும் தொடுத்தது. இதே கோரிக்கையினை முன்வைத்து சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கும் போரட்டத்தை மள்ளர்கள் அறிவித்தனர் (The Hindu, 25.04.2006). ஆனாலும் எவ்வித பலனும் ஏற்படவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதி மன்றம் (மதுரை) பேருந்து வசதி அளிக்கவும், பிரச்னை ஏற்படாமல் தடுக்கவும் காவல் துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் உத்தரவிட்டது. இவ்வுத்தரவு வழக்கு தொடரப்பட்டு பதினொரு ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியிடப்பட்டது என்பது கவனத்திற்கொள்ள வேண்டும். தலித்துகளின் விடுதலையில் நீதிமன்றங்களின் பொறுப்பினை விளக்குவதற்கு இது சிறந்த சான்றாக விளங்குகிறது.போராட்டம் ஓர் விவாதம்மள்ளர்களின் போராட்டம் ஒரு அமைப்பின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட மக்களோடு திட்டமிட்ட இலக்கினைக் கொண்டிருந்ததா? அல்லது அவ்வப்போது ஆதிக்கச் சாதியினருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட எதிர்தாக்குதலா? 1940 களில் தேவர்களின் திருட்டு நடவடிக்கைக்கு எதிராகவும், அருவாக்கட்டு பறிக்கப்பட்டதை எதிர்த்தும் நடந்தவை மள்ளர்களது முக்கியமான போராட்டங்களாகும். சாதி இந்துக்களின் ஒடுக்கு முறைகளால் விளைந்த இந்த எதிர் நடவடிக்கையில் மள்ளர்கள் ஒருங்கிணைந்ததானது திட்டமிட்டு நடைபெறாமல் திடீரென உருவானதாகும். சாதி இந்துக்கள் எதனால் தங்களை ஒடுக்குகிறார்களோ, எதனை அபகரிக்கிறார்களோ அதிலிருந்து பாதுகாத்தல் அபகரிக்கப்பட்டதை மீட்டெடுத்தல் இவையே இலக்காக இருந்தது. ஆனால் இப்போராட்டத்தால் உருவான கூட்டு உழைப்புமுறை மள்ளர்களால் விரிவான விவாதத்திற்குப் பின்னர் உருவானதாகும்.வளர்மதி சங்கத்தின் தொண்டும் தமிழ்ப்பண்பாட்டை கொண்டாடுதலும் திட்டமிட்டே நடத்தப்பட்டன. தேவர் இளைஞர்களுக்கெதிராக மள்ளர் இளைஞர்களின் வன்முறையானது, தேவர்களின் திட்டமிட்ட வன்முறையால்தான் உருவானது. சபாபதி கொலையானது தேவர்களால் முன்கூட்டியே திட்டமிட்டே நடத்தப்பட்டிருக்கிறது. இவர்களின் குரூர உளவியலை மள்ளர் இளைஞர்கள் தமது போராட்ட அனுபவம் மூலம் உணர்ந்திருக்கின்றனர்; ஆனால் முதியவர்கள் உணர்ந்திருக்கவில்லை. தேவர் இளைஞரது தொடர் ஒடுக்குமுறைக்காளான மள்ளர் இளைஞர்களின் இலக்கு யாருக்கும் ஆதரவற்ற பகுதியில் தேவர் இளைஞர்களைத் தாக்குவதாகும்; உண்மையில் இதில் வெற்றி கண்டனர். மள்ளர் போராட்டம் சிவந்திப்பட்டிக்குள்ளேயே பண்ணையார், புதுப்பண்ணையார், தேவர் என மூன்று ஒடுக்குமுறையாளர்களையும் எதிர்த்து நடைபெற்றது. விளைவு, சமூகப் பொருளாதார அரசியல் பண்பாட்டு ஒடுக்குமுறையையும் ஏற்றத்தாழ்வையும் கொண்ட செங்குத்தான கிராமக் கட்டமைப்பு சிதைவுக்குள்ளானது.சிவந்திப்பட்டி போராட்டம் எழுப்பும் கேள்வி, தலித்துகள் ஒடுக்குமுறைக்கு எதிராக போராட வேண்டிய களம் எது? அங்கு மள்ளர்கள் சாதி இந்துக்களால் ஒடுக்கப்பட்டபோது அவர்கள் சிவந்திப்பட்டிக்கு வெளியே ஒரு பொது இடத்தில் போராட்டம் நடத்தினால் என்ன பலன் கிடைத்திருக்கும்? யாரால் எங்கே தலித்துகள் ஒடுக்கப்படுகிறார்களோ அங்கேயே ஒடுக்குமுறையாளர் களை எதிர்த்துப் போராடுவதுதான் சரியான களமாக இருக்கும். பொது இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது அல்லது அரசு எந்திரத்திடம் புகார் கொடுப்பது இவற்றினால் பலன் கிடைப்பதற்கு ஆண்டுகள் பல காத்திருக்க வேண்டும் என்பதற்கு பேருந்துக்காக அம்மக்களும் அவர்கள் சார்பில் பிறரும் நடத்திய போராட்டம் சாட்சியாக இருக்கிறது.மள்ளரது போரட்டத்தினால் விளைந்த பொருளாதாரச் சுதந்திரமே அவர்களுக்கு பண்பாட்டு விடுதலையைக் கொடுத்தது. இவ்விடுதலையால் இவர்கள் பிறர் மீது ஆதிக்கம் செலுத்தவில்லை; மாறாக, தமிழ்ப் பண்பாட்டை நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர். இது இன்னொருபுறத்தில் பார்ப்பனிய பண்பாடுகளைப் புறக்கணித்தலாகும். மள்ளர்கள் குடிப்பழக்கத்தை புறக்கணித்ததை பார்ப்பனியமயமாக்கல் என்று புரிந்து கொள்ளக்கூடாது. காரணம் சிவந்திப்பட்டியில் சாராய உற்பத்தியாளராக தேவர்களும் அதனை நுகர்வதன் மூலம் பொருளை இழப்பவர்களாக மள்ளர்களும் இருந்தனர். மதுவை புறக்கணித்ததன் மூலம் மள்ளர்கள் தம் பொருளாதாரத்தை வளப்படுத்திக் கொண்டனர். மற்றொரு புறம் இது தேவர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தியது.இக்கட்டுரையில் விவாதித்த தேவர்களின் காவல் பணியானது, ஒருபுறம் நிலவுடைமையாளர்களுக்கு அடிமைப் பணியாகவும், அதேசமயம் பிறசாதியினர் மீது ஆதிக்கம் செலுத்தும் பணியாகவும் இருந்தது. விவசாய உற்பத்தியை பாதுகாத்த இப்பணியானது ஆளும் வர்க்கத்தையும் பாதுகாத்தது. எனவே, ஒரேநேரத்தில் அடிமைப்பணி, ஒரு ஆளும் வர்க்க குணாதிசயத்தோடு இருப்பது ஆகிய இருவிதப் பண்புகள் இவர்களிடம் இயங்கிக் கொண்டிருந்தன. அடிமைத்தனத்திலிருந்து விடுபட போராட முற்பட்டனரா? என்ற கேள்வி சிக்கலானதே. பொருளாதாரரீதியாக முன்னேற விரும்பிய தேவர்கள் பண்ணையார்களிடமிருந்து அதிகக் கூலியைப் பெற போராடவில்லை. மாறாக பண்ணையார்களிடம் கூலி வேலை செய்து வந்த மள்ளர்களிடம் திருடினர். பண்ணையார்களிடம் திருடியிருந்தால் அதனை ஒரு போராட்ட வடிவமாகக் கருதலாம். ஆனால் தம்மையொத்தக் கூலிகளான மள்ளர்களிடம் திருடியதானது, தேவர்களை திருடர்களாகவும், தலித்களிடம் சொத்து இருக்கக் கூடாது என்ற மநு அதர்மத்தை அமுல்படுத்தும் நபர்களாகவும் அடையாளப்படுத்துகிறது. பின்னர் குறிப்பிட்ட செயல்பாட்டில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.தேவர்களின் அன்றைய காவல் பணியை இன்றைய காவல்துறையின் பணியோடு ஒப்பிடலாம். பொதுவாகவே காவலர்கள் தமது உரிமைக்காகப் போராடுவதில்லை. பொருளாதாரத் தேவைக்காக ஏழை எளிய மக்களிடம் ‘லஞ்சம்’ வாங்குவதை சிவந்திப்பட்டி தேவர்களின் ‘திருட்டு’ நடவடிக்கையோடு ஒப்பிட்டால் இவ்விருவருக்கிடையே வேறுபாடு காண்பதரிது. பண்ணையார்கள், புதுப்பண்ணையார்கள், தேவர்களின் நடவடிக்கையை ஒருபோதும் எதிர்த்திருக்கவில்லை. மள்ளர்களுக்கு எதிரான கூட்டணியில் இணைந்தே செயல்பட்டனர். இதற்கு காரணமாகயிருந்திருப்பது, மள்ளர்கள் தலித்துகள் என்பதாலேயே.முடிவுசிவந்திப்பட்டி மள்ளரது போராட்டம் விரிவாகவே எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து, ‘கலவரம்’ என்ற ஊடக சித்தரிப்பு தவறானது; உண்மையில் அது சாதி இந்துக்களின் ஒடுக்கு முறைக்கு எதிரான ‘தலித் எழுச்சி’ என்பதே ஆய்வின் முடிவு. மேலும், தலித்துகளின் விடுதலை வர்க்க போராட்டத்தில் மட்டும் இல்லை. வர்க்க விடுதலையை விடவும் சமூகப் பண்பாட்டு விடுதலைக்கு தலித்துகள் அதிக விலைகொடுத்தாக வேண்டியிருக்கிறது. தலித்துகளின் போராட்டம் சம்பந்தப்பட்ட இடத்தில் அல்லாது அதற்கு வெளியே நடத்துவது பயனற்றது என்பது தெளிவு. மேலும், தலித் விடுதலைக்கான போராட்டத்தில் ‘வன்முறை’ தவிர்க்க இயலாததாகி விடுகிறது. சிவந்திப்பட்டி மள்ளரது போராட்ட அனுபவம், கிராமங்களில் ஒடுக்குமுறைக்குள்ளாகிவரும் தலித்து களுக்கு ஒரு மாதிரி என்று கூறினால் அது மிகையான மதிப்பீடு அல்ல.சான்றுகள்ARNOLD, DAVID. 1979. Dacoity and Rural Crime in Madras,1860-1940. Journal of Peasant Studies, 6.BALA,V. 2001, History of Sivanthipatti, A dissertation submitted to the MS University, Tirunelveli (Unpublished).LUDDEN, DAVID. 1989. Peasant History in South India. Delhi: Oxford University Press.PANDIAN, ANAND. 2005. Securing the Rural Citizen: The anti-Kallar Movement of 1896. The Indian Economic and Social History Review , Vol. XLII, 2005.PANDIAN, M.S.S. 2000. Dalit Assertion in Tamil Nadu: An Exploratory Note. Journal of Indian School of Political Economy, 12(3,4).MANIKUMAR, K.A. 1997. Caste Clashes in South Tamil Nadu. EPWeekly, XXXII (36).SRINIVAS, M.N. 1960. The Indian Road to Equality. EPW, XII (23,24 & 25).SRINIVAS, M.N. 1996. Village, Caste, Gender and Method - Essays in Indian Social Anthro pology. New Delhi:Oxford University Press.அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 17.கால்டுவெல். 2004. திருநெல்வேலி சரித்திரம். சென்னை: காவ்யா.கா.அ.மணிக்குமார். 2003. தென் மாவட்டச் சாதிய மோதல்கள்-1995, வல்லினம்.நல்லகண்ணு, ஆர். 1970. நிலப்பறி நடத்தியது யார்?. சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தோன்றிய பள்ளு நூல்கள் மூலமாக மள்ளர், பள்ளராக மாறி பரவலாகியதென்று இரா. தேவ ஆசீர்வாதம், பள்ளர் அல்ல மள்ளர் ஆம் மன்னர் (1991) என்ற நூலில் நிறுவியுள்ளார். ம என்னும் ஒலி ப என தமிழ்மொழியில் மாறிட வாயப்புகள் இருப்பதைக் கூறும் சிவசண்முகம் (1996;13-16) மள்ளர் பள்ளராக மாறியிருக்க இடமுள்ளது என்கிறார். எனவே இக்கட்டுரையில் சம்பந்தப்பட்ட பட்டியல் வகுப்பின மக்கள் விரும்பும் பெயரான மள்ளர் என்றே சுட்டப்படுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக