சனி, 28 ஆகஸ்ட், 2010

கருணாநிதி குடும்ப சண்டையால் பழிவாங்கப்பட்டு பலிகடாவாக்கப்பட்டுள்ளார் உமாசங்கர்-ஜெ.

முதல்வர் கருணாநிதியின் குடும்ப சண்டையில் சிக்கி, பின்னர் அவர்கள் ஒன்று சேர்ந்ததைத் தொடர்ந்து இப்போது பழிவாங்கப்பட்டு பலிகடாவாக்கப்பட்டுள்ளார் ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் தாற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருப்பதில் உள்நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது. அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு இடையூறாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைத்தவர் உமாசங்கர். ஆனால் இடையூறு செய்தவர்கள் பிற்காலத்தில் ஆட்சியாளர்களுடன் சமாதானம் ஆகிவிட்டதால் இப்போது உமாசங்கர் பழி வாங்கப்படுகிறார். மாறன் சகோதரர்களுக்கும், மு.க.அழகிரிக்கும் இடையே சண்டை ஏற்பட்ட காலத்தில், மதுரையில் நடந்த வன்முறை அனைவருக்கும் தெரிந்ததே. அதன் பின்னர் தமிழக அரசு அரசு கேபிள் டிவி கார்ப்பேரஷனை அமைத்தது. அதில் ரூ. 400 கோடிக்கு முதலீடு செய்யப்பட்டது. ஆனால் அதில் நடந்த முறைகேடுகள், ஊழல்களை வெளிக் கொணர்ந்தார் உமாசங்கர். இதற்காக இப்போது பழிவாங்கப்படுகிறார் அவர். எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்த காலத்தில், எல்காட்டின் துணை நிறுவனமான எல்நெட் என்ற நிறுவனம் தனியார் நிறுவனமாக மாற்றப்பட்டது பற்றியும் உமாசங்கர் கேள்வி எழுப்பியிருக்கிறார். அந்த நிறுவனத்துக்கு ரூ.700 கோடிக்கு சொத்து இருக்கிறது. இந்த எல்நெட் நிறுவனம் இடிஎல் நிறுவனம் என்ற பெயரில் சென்னை அருகே பள்ளிக்கரணையில் தகவல் தொழில்நுட்ப பூங்காவை நிறுவியிருக்கிறது. இதில் தியாகராஜன் செட்டியார் உள்ளிட்டோர் பங்குதாரர்களாக உள்ளனர். இது எல்காட் நிறுவனத்தின் துணை நிறுவனமாக காட்டிக் கொண்டு பல சலுகைகளைப் பெற்றுள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளது. இதை தனியார் நிறுவனமாக ஆக்கியதில் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்களுக்குத் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. இந்த தியாகராஜன் செட்டியார் யார், இவருக்கும், கருணாநிதிக்கும் என்ன தொடர்பு என்பதை கருணாநிதி மக்களுக்கு விளக்க வேண்டும். அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் ரூ.400 கோடி முதலீடு செய்து வாங்கிய நவீன கருவிகள் இப்போது என்னவாயிற்று என்றும் தெரியவில்லை. கருணாநிதியின் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், பிறகு சமாதானம் ஆகியவற்றால் மக்களின் வரிப் பணம் பல கோடி வீணாகியுள்ளது. அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தொடங்கப்பட்ட சூழ்நிலை, அதற்கு செய்த முதலீடு, இப்போது அந் நிறுவனம் உள்ள நிலை, முதலீட்டின் இப்போதைய நிலை, எல்நெட் நிறுவனம் தனியார் நிறுவனமாக மாறியது உள்ளிட்ட விவரங்கள் குறித்து முதல்வர் கருணாநிதி மக்களுக்கு விளக்கம் தர வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக