செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010
தேசியத் தலைவர்கள் காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் மீது பாசம் -டாக்டர் அம்பேத்கர் மீது காழ்ப்புணர்ச்சி -இதுதாண்டா தமிழ்த்தேசியம்
தமிழ்த்தேசியவாதிகள் அம்பேத்கரை புறக்கணிப்பதற்கு காரணம் அவர் இந்திய தேசியத்தை வலியுறுத்தினார் என்பதினாலா?
-எம். முருகன்
தோற்றத்தில் அப்படி தெரியலாம். ஆனால் அது மாயத்தோற்றம்.
தேசியத்திற்காக டாக்டர் அம்பேத்கரை புறக்கணிக்கணிப்பதாக சொல்லிக்கொள்கிற, அல்லது வெளியில் சொல்லமால் அவரை குறிப்படுவதை தவிர்க்கிற இந்த தமிழ்த்தேசியவாதிகள்தான், தன் வாழ்நாள் முழுக்க இந்திய தேசியத்தை வலியுறுத்திய, அதற்காகவே தன் வாழ்நாளை அர்பணித்துக்கொண்ட காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் போன்றவர்களை மனமார விரும்புகிறார்கள். அல்லது அவர்களை விமர்சிக்க மறுக்கிறார்கள்.
டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்திய இந்திய தேசியத்தில் ஒரு நியாயம் இருந்தது. அது இந்தியா முழுக்க தாழ்தத்தப்பட்ட மக்களின் துயரம் ஒரு போலவே இருப்பது. ஊருக்கு வெளியே சேரி இந்தியா முழுக்க ஒரே மாதிரியாக இருப்பது. தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகளை நிகழ்த்துவதில் அரியான ஜாட், உத்திரபிரதேச யாதவ், ஆந்திர ரெட்டி, தமிழகத்து தேவர், வன்னியர் ஜாதியை சேர்ந்தவர்களிடம் எந்த பிராந்திய வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரியான ‘இந்திய குணம்’ இருப்பது.
இந்திய தேசியத்திற்கு அடையாளமாக இருக்கிற தலித் விரோத போக்கையும், ஜாதியையும், ஜாதிவெறியர்களையும் எதிர்த்து போராடியதால்தான் டாக்டர் அம்பேத்கர், இநதியா முழுவதும் உள்ள தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக உயர்ந்து நின்றார்.
ஆனால், காமராஜர் – முத்துராமலிங்கத் தேவர் போன்றவர்கள் வலியுறுத்திய தேசியத்தில் எந்தவிதமான முற்போக்கு அம்சங்களும் கிடையாது. பார்ப்பனர்கள், இந்து கண்ணோட்டம் கொண்டவர்கள் என்ன காரணத்திற்காக இந்திய தேசியத்தை வலியுறுத்தினார்களோ, அதுபோன்ற பிற்போக்கு காரணங்களும், ஆளும் வர்க்க மனோபாவமும்தான் இவர்கள் வலியுறுத்திய தேசியத்திலும் இருந்தது.
‘காமராஜர் கிராம பள்ளிக்கூடங்களை திறந்தார், அதற்காகத்தான் அவரை ஆதரிக்கிறோம்’ என்று தெளிவாக காமராஜரை தேசியத்தில் இருந்து பிரித்துப் பார்த்து ஆதரிக்கத் தெரிந்து இருக்கிற தமிழ்த்தேசியவாதிகள், அதைவிட பல படிகள் மேலேபோய் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்வுக்காக இடஒதுக்கீடு, இந்து மத எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு என்று விஸ்வரூபம் எடுத்து நின்ற டாக்டர் அம்பேத்கரை விமர்சிக்கிறார்கள் அல்லது புறக்கணிக்கிறார்கள் அல்லது அவரை கொண்டாட மறுக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம், இந்திய தேசியமா? அல்லது அவர்கள் மனதில் இருக்கிற இந்து ஜாதியமா?
காமராஜரை ஆதரிப்பதற்குக்கூட இதுபோன்ற ஒரு காரணமாவது இருக்கிறது. ஆனால் முத்துராமலிங்கத் தேவரை ஆதரிப்பதற்கு இதுபோன்ற எந்த முற்போக்கு காரணங்களும் இல்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இருந்தார். தேசியமும், தெய்வீகமும் இரண்டு கண்கள் என்று தன் வாழ்நாள் முழுக்க வாழ்ந்தார். முக்குலோத்தோர் சமூகத்தைச் சேர்ந்த பெருவாரியான மக்களை இந்திய தேசியத்தை காப்பதற்காக ராணுவத்தில் போய் சேரச் சொன்னார்.
ஆனால், தலைவர் பெரியார் தேசியத்தையும் தெய்வீகத்தையும் தன் இறுதி மூச்சு உள்ளவரை எதிர்த்தார். அதற்காகவே அவரை மிக கேவலமான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார் முத்துராமலிங்கத் தேவர். தேசியத்தை ஆதரித்த காமராஜரையும் அவரின் இடஒதுக்கீடு கொள்கைக்காக கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். திராவிட இயக்கத் தலைவர் என்ற காரணத்திற்காகவே அண்ணாத்துரையை அசிங்கமான வார்த்தைகளால் திட்டினார் முத்துராமலிங்கத் தேவர்.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக இருந்தார் என்பதை கூட விட்டுவிடுங்கள், ‘அதை குறித்து விமர்சித்தால் தமிழனின் ஒற்றுமை குலைந்து விடும்’ என்று ஒரு தமிழ்த்தேசிய காரணமாவது கூச்சமில்லாமல் கூறிக்கொள்ளலாம். ஆனால், இவர்கள் தீவிரமாக எதிர்க்கிற, அவர் தீவிரமாக வலியுறுத்திய தேசியத்திற்காகக் கூட அவரை விமர்சிக்க மறுக்கிறார்களே தமிழ்த்தேசியவாதிகள். இதற்கு எது காரணம்?
தத்துவத் தெளிவில்லாமல் இருப்பதைக்கூட அறியாமை என்று புரிந்து கொள்ளலாம். அதுகூட ஒன்றும் மாபெரும் தவறல்ல. ஆனால், தவறாகவோ, சரியாகவோ தான் தீவிரமாக சொல்லுகிற ஒரு விஷயத்திற்குக்கூட உண்மையாக இல்லாத இந்தப் போக்கு பச்சையான சந்தர்ப்பவாதம்.
பல தமிழ்த்தேசியவாதிகள், சில பெரியாரிஸ்டுகள், சில மார்க்சிஸ்டுகள் நேரடியாகவே ஜாதி அடையாளத்தோடு இருக்கிறார்கள். இன்னும் சிலர் தன் ஜாதி அடையாளத்தை மறைத்தாலும், தான் தலித் அல்ல என்பதை மறைமுகமாக அடையாளப்படுத்தி விடுகிறார்கள்.
இந்த ஜாதிய மனோபாவமும், தலித் வீரோத போக்கு அல்லது தலித் மக்கள் மீதான் வன்கொடுமைகள் பற்றிய அலட்சியப் பார்வைதான் டாக்டர் அம்பேத்கரை புறக்கணிப்பதற்கு அல்லது முக்கியத்துவம் தராமல் இருப்பதற்கு காரணம். மற்றபடி அவர் தமிழனல்ல என்பதோ, தேசியத்தை வலியுறுத்தினார் என்பதோ காரணமல்ல. (சேகுவேராவும், எம்.ஜி. ஆரும் தமிழர்களா?)
தந்தை பெரியாரின் இந்துமத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு என்கிற கண் கொண்டு பார்த்தால் டாக்டர் அம்பேத்கர் பச்சைத் தமிழனாகத்தான் தெரிவார்.
பெரியாரின் பார்வையில்லையேல், சந்தன கடத்தல் வீரப்பனுக்கு கொடுக்குற முக்கியத்துவத்தில் ஒரு சதவீதம் கூட டாக்டர் அம்பேத்கருககு தரமாட்டார்கள் தமிழ்த்தேசியவாதிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக