ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

பிரபாகரனும் ராஜபக்சேவும் போராளிகளே!

சமீபகாலமாக கருத்தியவாதிகளிடம் பரவலாக எதிர்மறைக் கருத்துக்களும், அதன் சுருதிகளும் காற்றலையாய் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. திரைப்பட இயக்குனர் சீமான், முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை சூட்டியதில் இருந்து தொடங்கிய இக்கருத்தியல் வாதங்கள் சாமானிய மக்களை எந்த விதத்தில் எதிர் கொண்டது என்பது விளங்கவில்லை. ஆனால் சமீப காலங்களில் தமிழ் தேசிய முனைப்போடு களத்தில் இருக்கும் சீமான், தாம் செய்த செயலுக்காக நேர்மையோடு தம்மை சுய விமர்சனம் செய்வதற்கு பதிலாக, அதை நியாயப்படுத்த மேலும், மேலும் தமது அதிமேதாவிதனத்தை வெளிக்காட்டி, இன்று கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். இச்சாதிய கோட்பாட்டமைப்பு என்பது இந்திய தேசிய அரசியலின் குருதியோடு கலந்துவிட்டக் கொள்கையாகும். சாதிய கட்டுமானத்தை உடைத்தெறிவது என்பது மிக இயல்பாக ஒன்றல்ல. பாபா சாகேப் அம்பேத்கர் கூறுகிறார், " சாதியம் என்பது இந்துக்கள் ஒருவரோடு ஒருவர் கலந்துவிடாமல் தடுக்கின்ற செங்கல் சுவரோ, முள்வேலியோ அல்ல. சாதி வெறும் சுவராகவோ, வேலியாகவோ இருந்தால் அதைத் தகர்த்து விடலாம். சாதி என்பது ஒரு கண்ணோட்டம். ஒரு மனநிலை. எனவே, சாதியை தகர்ப்பது என்றால் ஒரு வேதியியல் தடையைத் தகர்ப்பது என்பதல்ல. சாதியைத் தகர்ப்பது என்றால், இந்து மக்கள் மனநிலையில் ஒரு மாறுதல் உண்டாக வேண்டும்" என்பதே அகும். ஆக, சாதிய மன ஓட்டத்தைத் தகர்த்தெறிய தமிழ் மண்ணில் தந்தை பெரியார் ஆற்றிய மகத்தான பணி திராவிட கோட்பாட்டிற்கு ஊடாக தமிழ் தேசியத்தையும், சாதிய ஒடுக்கு முறையையும், பெண்ணடிமைத்தனத்தையும் அழித்தொழிக்க அல்லது அதன் எதிர்கட்டுமானத்தைத் தகர்த்தெறிய தன் வாழ்நாளின் இறுதிவரை தந்தை பெரியார் அர்ப்பணிப்போடும், ஈகச்சிந்தனையோடும் களத்திலிருந்தார். அவர் ஒருசில அடிப்படை நிலைகளைத் தவிர வேறெந்த நிலையிலும் தம்மை சமரசப்படுத்திக் கொண்டது கிடையாது. அதேபோன்று தம்முடைய கருத்துக்களின் செயல்பாட்டிலும் அவர் பின்வாங்கியதில்லை. தந்தை பெரியார் அவர்கள் 1956ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கூட்டத்தில், இப்போது தென்னாட்டில் நாங்களும், வடநாட்டில் டாக்டர் அம்பேத்கரும்தான் சாதியை ஒழிக்கப் பாடுபடுகிறோம் என பதிவு செய்து வைத்திருக்கிறார். அவர் மேலும் கூறுகையில் சாதி ஒழிய வேண்டும் என்று தாம் சாவதற்கு பத்து நாட்களுக்கு முன்னர் தான் அறிவித்தார் என்றும், சாதியைப் பற்றியக் கவலை காந்திக்கு இருந்ததில்லை. சாதியைக் காப்பாற்றியதால் தான் அவர் மகாத்மா என்று போற்றப்பட்டார் என்று கூறியிருக்கிறார். ஆனால், தம்மை பெரியாரின் பேரன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் சீமான் தாம் செய்தது தவறு என்பதற்கு பதிலாக தாம் செய்த செயலுக்கு நியாயம் கற்பிக்க தந்தை பெரியாரை துணைக்கு அழைக்கிறார். பெரியாருக்கு திருநீறு பூசியபோது பெரியார் ஏற்றுக் கொண்டதைப்போல, தாமும் சூட்டிக்கொண்டாராம். சீமான் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். சீமான் பெரியாரல்ல. தமிழ்நாட்டில் சாதிய கலவரங்களுக்குத் தலைமைத் தாங்கிய தமிழ்நாட்டின் ஒரு சிறப்பு வாய்ந்த பச்சைத் தமிழன் என்று போற்றப்பட்ட காமராசரை சாதியைச் சொல்லி சிறுமைப்படுத்திய முத்துராமலிங்கத் தேவரை போராளி என்று அழைத்தது மூலம் நடுநிலை என்ற ஒரு கேவலப் பண்புக்கு சீமான் தரந்தாழ்ந்துவிட்டான். ஒன்று சீமானின் தமிழ்தேசிய உணர்வு அவரின் ஓட்டு அரசியலின் பக்கம் உந்தித் தள்ளியிருக்கிறது. ஓட்டு அரசியல்வாதிகள் பொதுவாக முன் வைக்கும் எல்லாச் சாதியும் ஒன்று என்ற தத்துவார்த்த அரசியலுக்கு சீமான் இழுத்து செல்லப்பட்டார். ஆனால், இம்மானுவேல் கல்லறைக்கும் மாலை சூட்டுவேன், முத்துராமலிங்கத்தேவருக்கும் மாலை சூட்டுவேன் என்பது அடித்தவனையும் புகழ்வேன், அடிப்பட்டவனையும் புகழ்வேன் என்கிற தாம் தாழ்ந்த தத்துவத்தை சீமான் புரிந்து கொள்ள தவறிவிட்டார். இம்மானுவேல் சேகரனின் கொலைவழக்கில் முத்துராமலிங்கம் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சாகடித்தவனையும் வணங்குவேன், செத்துப்போனவனையும் வணங்குவேன் என்ற சொல்வது என்ன அரசியல் தளம் என்பது நமக்கு விளங்கவில்லை. சீமான் தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்து நாடுமுழுக்க சூறாவளியாய் வலம் வந்தபோது ஒரு புதிய நம்பிக்கையாகத் தெரிந்தார். ஆனால், இவ்வளவு சீக்கிரத்தில் அம்பலப்பட்டுப் போவார் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் மாவட்டங்களுக்கு தலைவர்களின் பெயரைச் சூட்டி அழைத்தபோது காயுதே மில்லத் மாவட்டம் என்று உருவான அடுத்த கணமே மிகப்பெரிய கலவரங்களும், மோதல்களும் நடந்தது. ஆனால், எந்த மாவட்டத்துக்கும், ஒரு தாழ்த்தப்பட்டவரின் பெயர் சூட்டப்படவில்லை என்பது மிகப்பெரிய கொள்ளை மோசடியாகும். அதே நேரத்தில் ஒரு போக்குவரத்துக் கழகத்திற்கு சங்கரலிங்கரனார் பெயரைச் சூட்டியவுடன் ஆதிக்க சாதிவெறி கொண்டவர்கள் ஆடிய ஆட்டமும் அதைத் தொடர்ந்து அரசு எடுத்த கொள்கை முடிவாய் அனைத்து பெயர்களும் நீக்கப்பட்டதும் இந்த நாட்டின் வரலாறு ஆகும். ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் பிரதிநிதியின் பெயரைச் சூட்டிய போது ஏற்ப்பட்ட எதிர்ப்பலைகளைக் கண்டு அரசு பின்வாங்கிய நிகழ்வு ஆதிக்க சாதிவெறியர்களின் அடிப்படைக் கட்டமைப்புக்குள் நம் தமிழக அரசு புதைந்து போனதை வெளிக்காட்டியது. ஆனால், சீமான் சொல்கிறார், "முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க பல்லர் பறையர்களை உடனழைத்துச் சென்றாராம்". நாம் தமிழர் என்ற இயக்கத்தைக் கட்டிவிட்டு எந்த அடிப்படையில் இவர் சாதிய கூறுகளை வெளிக்கொணர்கிறார் என்று விளங்கவில்லை. திரைப்படங்களில் முற்போக்குக் கருத்துக்களால் மக்களைக் கவர்ந்து பணம் கொழிக்க வாழும் விவேக் போன்றவர்கள் தான் ஒரு சாதிவெறியன் என்பதை பல்வேறு தருணங்களில் அடையாளப்படுத்தியிருக்கிறார். அப்படியல்ல சீமான். பெரியார், பிரபாகரன் பெயரை உரக்கச்சொல்லி ஊர் கூட்த் தமக்கான ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டபின், அரசியல் அதிகாரத்தைப் பெறவேண்டும் என்ற நோக்கத்திற்காக கருத்தியல் சமரசவாதியாக மாறிவிட்டார். இவரை நம்பி இயக்கத்தில் இருப்பவர்கள் தான் பாவம், மீண்டும் ஒருநாள் சொல்வார்: பிரபாகரனும், ராஜபக்சேவும் ஒன்று என. ஏனென்றால் முத்துராமலிங்கத்தேவர் தம் இன மக்களைக் குற்ற பரம்பரையில் இருந்து மீட்டெடுத்தா ரட்சகர் எனச் சொல்லி சீமான் முத்துராமலிங்கத் தேவரின் இந்துத்துவா வெறியையும் சாதிய வெறியையும் மறுவாசிப்பு செய்ய வேண்டும். இது எந்த அளவிற்கென்றால் தந்தை பெரியார் மறைந்தபோது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் கொடிகளும் அரைக்கம்பத்தில் பறந்தது. ஆனால், முத்துராமலிங்கத்தேவர் தலைமை வகித்த பார்வார்டு கட்சிக்கொடி மட்டும் உச்சிக் கொம்பில் சுடர்விட்டுப் பறந்தது. இந்த அளவிற்கு பெரியாரைக் கீழ்மைப்படுத்திய முத்துராமலிங்கத்தேவரை கேவலம் வாக்குகளுக்காக உயர்த்திப்பிடித்துக் கொண்டு இனிமேல் தம்மைப் பெரியாரின் பேரன் என்று சொல்லிக் கொள்ள வேண்டாமென சீமானைக் கேட்டுக் கொள்வோம். நாம் முன்னர் கூறியதைப் போல பிரபாகரன் தமிழினத்திற்காகப் போராடினார். ராஜபக்சே சிங்கள இனத்திற்காகப் போராடினார். ஆகவே, இருவரும் ஒன்றுதான். இருவருமே போராளிகள் என சீமான் திருவாய் மலர்ந்தாலும் வியப்பதற்கில்லை. ஒடுக்குபவனும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகிறவனும் ஒன்றல்ல, புரிந்து கொள்ளுங்கள் சீமான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக