ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010
வரலாறு மன்னிக்காது!
"சுரண்டல்காரர்களையும், சுரண்டப்படுபவர்களையும் கொண்ட ஒரு கூட்டுக் கதம்பம், அரசியல் சுதந்திரத்தை அடைவதற்குத் தேவையாக இருக்கலாம். ஆனால், சுரண்டுபவர்களையும், சுரண்டப்படுபவர்களையும் கொண்ட ஒரு கட்சி சமூகத்தை மறு சீரமைக்கும் என்று சொல்வது, மக்களை ஏமாற்றும் செயல்.''
- டாக்டர் அம்பேத்கர்
அண்மையில் நடைபெற்ற மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில், 1 லட்சத்து 17,190 வாக்குகள் பதிவாகியது. நேற்று தொடங்கப்பட்ட தே.மு.தி.க. பெற்ற வாக்குகள் : 21,272 (மூன்றாவது இடம்). ஆனால், தலித்துகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ‘புதிய தமிழகம்' கட்சி பெற்றிருக்கும் வாக்குகள் 175. இதன் மூலம் தலித்துகள் என்ன சாதிக்க முடியும்? தேர்தல் அரசியல் கிரிமினல்மயமாகி/ஜாதிமயமாகி/லஞ்சமயமாகி விட்டது என்றெல்லாம் வாதிடலாம். அதில் ஒடுக்கப்பட்ட மக்களின் பங்கு என்னவாக இருக்கப் போகிறது? ‘புதிய தமிழகம்' எந்த தலித் செயல்திட்டத்தை இத்தேர்தலில் முன்னிறுத்தியது? இதுபோன்ற படுதோல்விகளுக்குப் பிறகும், மீண்டும் மீண்டும் தேர்தல் அரசியலைதான் - ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தீர்வாக இவர்கள் முன்வைக்கிறார்கள். இதுகுறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டிய தருணமிது.
விடுதலைச் சிறுத்தைகள், 17.6.2007 அன்று நடத்திய மண்ணுரிமை மாநாட்டில் – ‘போராளிகளுக்கு சிறப்பு' என்ற தலைப்பில் மூன்று தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள். அப்போராளிகள் : 1. அய்யா வைகுண்டர் 2. தியாகி இம்மானுவேல் சேகரன் 3. ஒண்டிவீரன் 4. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
"தாழ்த்தப்பட்ட மக்களின் தலைநிமிர்விற்காக தலைகொடுத்த போராளி தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் அய்ம்பதாமாண்டு நினைவு நாளை (செப்டம்பர் 11, 2007) தமிழக அரசு அவரது நினைவைப் போற்றும் நாளாகக் கடைப்பிடிக்க வேண்டும்'' - தீர்மானம் 17(1). "பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு (அக்டோபர் 30,2007) அரசு விடுமுறை நாளாக அறிவித்துச் சிறப்பிக்க வேண்டும்'' - தீர்மானம் 17(3). தலை கொடுத்தவருக்கும் பாராட்டு; தலை எடுத்தவனுக்கும் பாராட்டு!
மாவீரன் இம்மானுவேல் சேகரனை, இதைவிட யாரும் கொச்சைப்படுத்திவிட முடியாது. மாவீரன் இம்மானுவேல் சேகரன் படுகொலைக்கு காரணமான ஒரு ஜாதி வெறியனுக்கு அரசு விடுமுறை என்று தீர்மானம் போடுவதற்காகத்தான் - இவர்கள் இத்தனை நாட்களாக விடுதலையை அடைகாத்திருக்கிறார்கள் என்றால், இதைவிட வெட்கக்கேடு வேறு என்ன இருக்க முடியும்? பிற சாதிகளில் இருக்கும் ஜனநாயக சக்திகளை அங்கீகரிப்பது என்ற வகையில், பேராசிரியர் கல்விமணிக்கு ‘அம்பேத்கர் சுடர்' விருது அளிக்கப்பட்டது பாராட்டுக்குரியது. ஆனால், ஜாதி இந்து ஆதிக்கத்தின் குறியீடாக முன்னிறுத்தப்படும் ஒருவரை அங்கீகரிப்பது - ஜாதி வெறியை நியாயப்படுத்துவதாகத்தானே பொருள். விடுதலைச் சிறுத்தைகளின் எழுச்சிக்கு மூல காரணம் மேலவளவு. ஆனால், இன்றைக்கு அதிகாரப் பங்காளிகளாக இருக்கும் அவர்கள், மேலவளவு வழக்கில் குற்றவாளிகளைத் தண்டிக்க அரசை நிர்பந்திக்க மறுக்கும் காரணம், தெள்ளத் தெளிவாகி விட்டது. ‘பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்' என்று ஒரு தலித் கட்சி இருந்தால், வரலாறு அவர்களை மன்னிக்காது.
தமிழ் நாட்டில் பட்டியல் சாதியினர் என்ற தொகுப்பில் 78 (உட்) சாதிகள் உள்ளன. இதில் மூன்று சாதிகளின் பிரச்சனைகள் பற்றி மட்டுமே இன்று பரவலாகப் பேசப்படுகிறது. பிற சாதிகளின் பிரதிநிதித்துவம் பற்றியெல்லாம் யாரும் அக்கறை செலுத்துவதில்லை. இருப்பினும், இம்மூன்று சாதிகளும்கூட சாதி அமைப்பின் படிநிலைத் தன்மைக்கு இரையாகியுள்ளன என்பதுதான் வேதனையானது. படிநிலைப்படுத்தப்பட்ட சமூகத்தில் கடைநிலையில் இருக்கும் அருந்ததியர்கள், தலித் (அம்பேத்கர்) கருத்தியலை தலைமையேற்று வளர்த்தெடுப்பதன் மூலம் - தற்போதைய பின்னடைவை நேர் செய்ய முடியும். ஆனால், அவர்கள் தற்பொழுதுள்ள தலித் அரசியல் கட்சிகளை அப்படியே நகல் எடுப்பதால் வந்த விளைவு, இன்று 54 அருந்ததியர் அமைப்புகள் தோன்றியுள்ளன.
இந்நாட்டின் தொல்குடி மக்களை, ஆயிரக்கணக்கான சாதிகளாக கூறுபோடுவதுதான் பார்ப்பனியம். அவர்களை சாதியற்ற மக்களாக ஒன்றிணைத்து, விடுதலையை வென்றெடுப்பதுதான் அம்பேத்கரியம். தலித் இயக்கங்களின் செயல்திட்டத்தில் அம்பேத்கரியம் அச்சாணியாக இருக்கிறதா, இல்லையா என்பதைத் தீர்மானிப்பதில்தான் எதிர்காலம் இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக