சனி, 4 செப்டம்பர், 2010
தமிழகத்தில் அரசியல் மாற்றம் மிக அவசியம் - டாக்டர்.க.கிருஷ்ணசாமி
எங்களை கூட்டணியில் சேர்த்துள்ளதன் மூலம் புதிய தமிழகம் கட்சிக்கு மட்டுமின்றி தமிழகம் தழுவி வாழும் கோடான கோடி அடித்தட்டு மக்களுக்கும், தேவேந்திர குல வேளாளர்களுக்கும் அங்கீகாரம் கொடுத்துள்ளார் அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்று கூறியுள்ளார் புதிய தமிழகம் கட்சித் தலைவர்.
அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது குறித்து அவர் கூறியதாவது:
தமிழக அரசியல் வரலாற்றில் புதிய தமிழகம் கட்சி, ஏழை-எளிய மற்றும் அடித்தட்டு மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க உருவான அடிப்படை ஜனநாயக இயக்கம் ஆகும். 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசியலில் பல்வேறு சமூக பிரச்சினை, அரசியல் பிரச்சினைகளை கையில் எடுத்து போராடி வருகிறது.
இருந்தாலும், வலுவான கூட்டணியில் இடம் பெற வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. 19-ந் தேதி மாலை 3.00 மணிக்கு அ.இஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதாவை அவர்களை புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகளுடன் சந்தித்து பேசினேன்.
அ.தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம்பெறும் வாய்ப்பை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவர்கள் உறுதி செய்துள்ளார். இது புதிய தமிழகம் கட்சிக்கு மட்டுமின்றி தமிழகம் தழுவி வாழும் கோடான கோடி அடித்தட்டு மக்களுக்கும், தேவேந்திர குல வேளாளர்களுக்கும் கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறோம்.
இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்களுக்கும், அக்கட்சியின் முன்னணி தலைவர்களுக்கும், கூட்டணியில் உள்ள ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் கடந்த நாலரை ஆண்டுகளாக நடைபெற்று வரும் தி.மு.க. ஆட்சியில், தேர்தல் அறிக்கையில் சொன்ன பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நிலம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு இரண்டரை ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்றும், வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்ட 3 சென்ட் இடம் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்கள். அதை நிறைவேற்றவில்லை.
தமிழகத்தில் அரசியல் மாற்றம் கொண்டு வருவது மிக மிக அவசியம் ஆகும். அது, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் தலைமையில் அமையும் கூட்டணியால்தான் முடியும். இந்த கூட்டணியை வலுப்படுத்த புதிய தமிழகம் கட்சி இணைந்து பணியாற்றும். தாழ்த்தபட்ட அமைப்புகளையும் இந்த கூட்டணிக்கு கொண்டுவர முயற்சி எடுப்பேன்.
2001-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க.வுடன் அமைந்த மெகா கூட்டணியை விட வலுவான கூட்டணி வரும் தேர்தலில் அமையும் என்றார் டாக்டர்.கிருஷ்ணசாமி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக