வியாழன், 16 செப்டம்பர், 2010
உமா சங்கர் உணர்த்துவது என்ன?
'ஆடத் தகுதியுடையோரின் விளையாட்டே அரசியல்' - அம்பேத்கர் அடிக்கடி பயன்படுத்தும் பிஸ் மார்க்கின் வாசகம் இது!
ஆடத் தகுதி படைத்தவராக இருந்தாலும், நேர்மையாளனுக்கு எதிராக மோதும்போது, வழுக்கி விழ நேரிடும் என்பதற்கு இந்த வார உதாரணம், உமா சங்கர் விவகாரம்!
1991-96ம் ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சி, ஊழலின் ஊற்றுக்கண்ணாக இயங்கியது என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரமாக 'சுடுகாட்டுக் கொட்டகை'யைப் பிரித்துப் போட்டவர் உமா சங்கர் ஐ.ஏ.எஸ். தங்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு உடன்படாத ஓர் அதிகாரி எவ்வளவு நேர்மையாளராக இருந்தாலும், அவர் மீது எந்தப் பழியையும் சுமத்தி, தூக்கி எறியத் தயங்க மாட்டோம் என்பது இன்றைய ஆளும் கட்சியின் நெறிமுறையாக மாறிப்போனதையும் அறிவிக்க அவரே காரணமாகிவிட்டார்.
ஜூலை 21-ம் தேதி தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டார். செப்டம்பர் 2-ம் தேதி அந்த உத்தரவு நீக்கப்பட்டது. ஒரு நிர்வாகக் கட்டமைப்பைக் குரங்காகவும் பிள்ளையாராகவும் மாற்றி மாற்றிப் பிடிக்கும் கோளாறை உணர்த்துவதாகவே இந்த 40 நாட்களும் இருந்து உள்ளன.
உமா சங்கர் உருட்டிவிடப்பட்ட வரலாறே பெரியதுதான். 1990-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், 95-ம் ஆண்டு மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியராக இருந்தபோது 'சுடுகாட்டுக் கொட்டகை, முறைகேட்டை வெளிச்சப்படுத்தியதன் மூலம் வெளியுலகம் தெரியவந்தார். 96-ல் உருவான தி.மு.க. அரசு, அவருக்கு லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறையின் விழிப்பு உணர்வுப் பணியை வழங்கியது. ஊழல் புகாருக்கு உள்ளான அனைவரின் மீதும் புகார்களைப் பதிவு செய்தார். இதை விரும்பாத அரசு, நிர்வாகத்தைக் கணினிமயமாக்கும் பொறுப்பைக் கொடுத்தது. திருவாரூரைத் தலைமை இடமாகக்கொண்டு புதிய மாவட்டம் உருவானபோது, இவரையே மாவட்ட ஆட்சியராக உட்காரவைத்தார் கருணாநிதி. அடுத்து ஆட்சி மாறியதும் ஒழுங்கு நடவடிக்கை ஆணையராக சேலத்தில் தனித்துவிடப்பட்ட உமாசங்கர், 2006-ல் தி.மு.க. வந்ததும் 'எல்காட்' நிர்வாக இயக்குநர் ஆனார். அதன் பிறகு, அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷனைக் கவனிக்கும் பொறுப்பு. பிறகு, அதில் இருந்து மாற்றப்பட்டு, சிறு சேமிப்புத் துறை ஆணையராகத் தொடர்ந்தார். அதில் இருக்கும்போதுதான் கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
'எல்காட்' எனப்படும் தமிழ்நாடு மின்னணுக் கழகம் குறித்து உமா சங்கர் கிளப்பிய, '700 கோடி மதிப்பிலான சொத்து மாயமாகிவிட்டது' என்ற குற்றச்சாட்டை அரசு இன்னமும் அதிகாரபூர்வமாக மறுக்கவில்லை. இந்த நிலையில் ஊழல் செய்தார், சாதிச் சான்றிதழை மாற்றினார் என்ற குற்றச்சாட்டுகளை உமா சங்கர் மீதே செலுத்தி, தற்காலிகப் பணி நீக்கம் செய்தது அரசு.
'நான் நேர்மையாளன்!' என்று சொல்லி, நீதிமன்றத்தின் படிக்கட்டுக்களில் ஏறினார் உமா சங்கர். தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணையத்தின் கதவைத் தட்டிய உமா சங்கர், 'மத்திய அரசின் பாதுகாப்பு எனக்கு வேண்டும்!' என்றும் கோரிக்கை வைத்தார். இவை அனைத்துக்கும் மேலாக, சென்னை தொடங்கி குமரி வரை பல்வேறு ஊர்களில் அவருக்கு ஆதர
வாக ஆர்ப்பாட்டம், கருத்தரங்கம், உண்ணாவிரதங்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன. தனது சாதிக்காரர்களை உமா சங்கர் தூண்டிவிட்டார் என்று சிலர் கொச்சைப்படுத்தினார்கள். ஆனால், உமா சங்கருக்கு ஆதரவாக, தலித் அல்லாதவர்களே அதிகமாக நின்றார்கள். 'தலித்துக்களுக்காக உயிரையே தரத் தயார்!' என்று பேசிய தலித் தலைவர்கள் சிலர், உமா சங்கருக்காக ஓர் அறிக்கையைக்கூடத் தரத் தயாராகவில்லை என்பதை உற்று நோக்கினால் அதன் அரசியல் புரியும்!
சாதிச் சான்றிதழை மாற்றினார் என்பது இவர் மீதான முக்கிய குற்றச்சாட்டு. 'எனது தந்தை இந்து மதத்தையும் தாய் கிறிஸ்துவ மதத் தையும் சேர்ந்தவர்கள். என்னு டைய பெயர் அசோக். 1984 பிப்ர வரியில் என் பெயரை உமா சங்கர் என என் தந்தை மாற்றினார். இது அரசு இதழில் வெளியிடப்பட்டது. சாதிச் சான்றிதழை எனது சொந்தக் கிராமத்தில் வாங்காமல், வேறு இடத்தில் பெற்றதாக என் மீதான குற்றச் சாட்டில் கூறப்பட்டுள்ளது. சாதிச் சான்றிதழைப் பிறந்த இடத் திலோ அல்லது வசிப்பிடத்திலோ பெற்றுக்கொள்ள சட்டத்தில் வகை உள்ளது. ஐ.ஏ.எஸ்., பணியில் சேருவதற்கு முன் ஒன்றரை ஆண்டுகள் தேசியமயமாக்கப்பட்ட மூன்று வங்கிகளில் நான் பணியில் இருந் தேன். ஐ.ஏ.எஸ்., பணியில் சேர்ந்தபோதும், இதே சான்றிதழைத்தான் அளித்தேன். சான்றிதழ் சரி பார்க் கும் குழு, எனது சான்றிதழில் தவறு எதுவும் இல்லை என்று கூறியது!' - சாதிச் சான்றிதழ் குறித்து உமா சங்கரின் விளக்கம் இது.
ஒரு தலித், அவர் இந்துவாக இருந்தாலும் கிறிஸ்துவராக இருந்தாலும் அந்த சாதிக்கு உரிய சலுகைகளை அனுபவிக்கலாம் என்பதுதான் திராவிட இயக்கங்களின் நீண்ட நாள் கொள்கையாக இருந்து வருகிறது. 'தலித் கிறிஸ்துவர்களுக்கு, பட்டியல் சாதியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும்!' என்று பிரதமருக்கு முதல்வர் கருணாநிதியே கடிதம் அனுப்பியிருக்கிறார். ஆனால், அது உமா சங்கர் விவகாரத்தில் பார்க்கப்படாமல் போனது விநோதம்தான்!
உமா சங்கர் விஷயத்தை முன்னோட்டமாகவைத்து, ஒரு வெளிப்படையான விசாரணையை நடத்த அரசு தயாராக இருக்குமா? சாதியின் பெயரால் வழங்கப்படும் சலுகைக்காகச் சான்றிதழைத் திருத்துவது மிகச் சாதாரணமாக நடக்கும் நிகழ்வுதான். திருத்தவே முடியாதது என்று கருதப்பட்ட 10, 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்களிலேயே போலி வந்த பிறகு, சாதிச் சான்றிதழ் எம்மாத்திரம்! நிர்வாக, அதிகார வளையத்தில் வலம் வருபவர் அனைவரின் சான்றிதழ் களையுமே சரிபார்க்கலாமே!
"எனக்கு எதிராக அரசு தொடர்ந்துள்ள வழக்குகளை சட்டரீதியாகச் சந்திப்பேன். சட்டப்படி விசாரணை நடத்தவில்லை என்றால், நீதிமன்றத்துக்குச் செல்வேன்" - என்று உமா சங்கர் அறிவித்து உள்ளார்.
உமா சங்கருக்கு வழங்கப்பட்ட தற்காலிகப் பணி நீக்க உத்தரவைத் திரும்பப் பெற்றதே அவருக்குக் கிடைத்த வெற்றிதான். ஒரு தனி மனிதன் வெற்றி பெற்றது குறித்து பெருமைப்பட எதுவும் இல்லை என்று சொல்லலாம். ஆனால், ஓர் அரசாங்கத்தின் சறுக்கல் அம்பலமாகி இருக்கிறது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக