வியாழன், 23 டிசம்பர், 2010

வெள்ளை அறிக்கை வேந்தருக்கு பாராட்டு விழா!

தமிழக மத்திய மாநில அரசு ஊழியர் கூட்டமைப்பு சார்பாக மதுரை தமிழ்நாடு ஓட்டலில் 18-12-2010 அன்று இடஒதுக்கீடு தொடர்பாக வெள்ளை அறிக்கை பெற்றுத் தந்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டார். சுங்கத்துறை ராசாராம் தலைமை தாங்கினார். நாகூர்கனி அனைவரையும் வரவேற்றார். விழா ஒருங்கிணைப்பாளர் சா.சத்தியசெல்வன் கருத்துக்களை வழங்கினார். சென்னை அய்யர், கடையநல்லூர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் பாஸ்கர் மதுரம் உள்பட நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டனர். விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து அரசு ஊழியர்கள் ஏறத்தாழ இரண்டாயிரம் பேர் கலந்து கொண்டனர். மேலும் கட்சித் தொண்டர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



ஒரு நாள் முழுவதும் நடைபெற்ற இந்த பாராட்டு விழா மற்றும் கருத்தரங்கில் டாக்டர் கிருஷ்ணசாமி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். மேலும் வருகின்ற 2011 சட்டமன்ற தேர்தலில் தேவேந்திர குல மக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.



தி.மு.க.வை கடுமையாக சாடிய டாக்டர் கிருஷ்ணசாமி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து குற்றச்சாட்டுகளை கூறினார். மேலும் தி.மு.க. அரசினால் தேவேந்திர குல வேளாளர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் எவ்வாறு பழிவாங்கப்படுகின்றனர் என்று விரிவாக எடுத்துரைத்தார். சுதந்திர போராட்ட மாவீரர் மற்றும் உலகின் முதல் தற்கொலைப் படை வீரர் சுந்தரலிங்க தேவேந்திரரை மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதல்வர் கருணாநிதி ஆதிதிராவிடர் என்று கொச்சைப்படுத்துவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் வருகின்ற 2011 சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியை மண்ணைக் கவ்வச் செய்ய தேவேந்திரர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும், அதற்கு அரசு ஊழியர்கள் ஒத்துழைப்பு வழங்குவதுடன், கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக