சனி, 22 ஜனவரி, 2011

சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் சுந்தரலிங்கம் சிலை திறப்பு:எம்.பி. மீது வழக்கு!


தூத்துக்குடி அருகே சுதந்திரப் போராட்ட தியாகி மாவீரன் சுந்தரலிங்கம் சிலை திறந்த உ.பி., பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி., பிரமோத் குரில் உள்ளிட்ட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.





தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி அருகேயுள்ள காசிலிங்கபுரத்தில் அக்கிராமக்கள் சார்பாக, கடந்த ஐந்து ஆண்டிற்கு முன், வீரன் சுந்தரலிங்கம் சிலை நிறுவப்பட்டது. சிமின்ட்டால் ஆன அந்த சிலையை நிறுவவோ, திறக்கவோ மாவட்ட நிர்வாகம் அனுமதி தரவில்லை. அதைமீறி, அப்போது திறக்கப்பட்ட அச்சிலையை, அதிகாரிகள் சீல்வைத்து மூடினர். இதனையடுத்து தனியார் இடத்தில் உள்ள அந்த சிலை திறக்க அனுமதி வேண்டி கடந்த மூன்று ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் முயற்சித்து வருகின்றனர்.





மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம், துணைமுதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கருப்புக்கொடி என பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். திருவைகுண்டம் இடைத் தேர்தலின்போது அக்கிராமத்திற்கு வருகை தந்த துணை முதல்வர் 'தேர்தல் முடிந்த ஒரு மாதத்தில் அரசு சார்பில் சிலை திறப்பு விழா நடத்தப்படும்' என அறிவித்தார். இதில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் ஒருமுறை தமிழக முதல்வர் கருணாநிதியையும், இரண்டு முறை துணை முதல்வர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.



இந்நிலையில், பொங்கல் விழாவுக்காக இந்த கிராமத்திற்கு வந்த, உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி ராஜ்யசபா எம்.பி., பிரமோத்குரில், கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து அச்சிலையை திறந்துவைத்தார். அரசின் முறையான அனுமதி பெறாமல் சிலை திறக்கப்பட்டது குறித்து, சிங்கத்தாகுறிச்சி வி.ஏ.ஓ., பேச்சிமுத்து, புளியம்பட்டி போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக, பிரமோத் குரில் எம்.பி., பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயலர் ஜீவன்குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்ட இளைஞர் செயலாளர் குபேந்திரன், காசிலிங்கபுரம் செல்வம், மகாராஜன், கந்தன்பெருமாள், அழகுதுரை, வக்கீல் அதிசயக்குமார் உள்ளிட்ட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.











காசிலிங்கபுரம் வந்த ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரா, போலீஸ் ஏ.டி.எஸ்.பி.,ராஜராஜன், மணியாச்சி டி.எஸ்.பி. நாராயணன் ஆகியோர், அனுமதியின்றி சிலை திறக்கப்பட்டது தவறு என, கிராமத்தினரிடம் விளக்கினர். மக்கள் பெரும் திரளாக கூடி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.





வெண்கல சிலை நிறுவி, மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதிபெற்று, அதன்பின் அச்சிலையை திறந்து கொள்ளுமாறு வலியுறுத்திய தாசில்தார் சந்திரா திறக்கப்பட்ட சிலை போலீஸ் பாதுகாப்புடன் துணிபோட்டு மூடப்பட்டது. சிலைக்கு சீல்வைக்கப்பட்டதைக்கண்டித்து, அக்கிராமத்தினர் அதன் அருகே அமர்ந்து தொடர் உன்னாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அக்கிராமத்தில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பதட்டமான சூழ்நிலை நிலவுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக