சனி, 29 ஜனவரி, 2011

தேவேந்திர குல வேளாளர் என்ற பெயர் பிரச்சினை டாக்டர் கிருஷ்ணசாமி

தேவேந்திர குல வேளாளர் என்ற பெயர் பிரச்சினை குறித்து தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள ஒருநபர் கமிசன் குறித்து கருத்து கூறிய டாக்டர் கிருஷ்ணசாமி, ரோஜாவை ரோஜா என்று அழைப்பதற்கு ஒருநபர் கமிசனாம் என்று கூறினார்.




இதுகுறித்து இன்று(28-01-11) ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்கள், புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து கிருஷ்ணசாமி கூறியதாவது:-



தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் உட்பிரிவுகளான குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திரகுலத்தார், பள்ளர், வாதிரியார் ஆகியவற்றை ஒன்றிணைத்து “தேவேந்திர குல வேளாளர்” என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்று நேற்று ஏற்பட்டது அல்ல. ஏறத்தாழ முப்பது வருடங்களாக வைக்கப்பட்டு வரும் கோரிக்கையாகும். தேவேந்திர குல சமூகத்தின் எந்த இயக்கமானாலும், எந்த கட்சியானாலும் நடத்தும் மாநாடு மற்றும் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் முக்கிய தீர்மானமே இதுவாகத்தான் இருக்கும். குறிப்பாக புதிய தமிழகத்தின் சார்பில் பல்வேறு தருணங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் இவ்வளவு காலமும் இருந்திருக்கிறது.



சென்ற சட்டமன்ற தேர்தலில் தேவேந்திரர்களின் வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்ற தி.மு.க. அரசு, ஆட்சியமைந்தவுடன் தேவேந்திரர்களை மறந்தது. தேவேந்திர குலத்தின் மாவீரனான, வீரபாண்டிய கட்டபொம்மனின் படைத்தளபதியும், சுதந்திர போராட்ட வரலாற்றின் முதல் தற்கொலைப் போராளியுமான வீரன் சுந்தரலிங்கத்தை ஆதிதிராவிடர் என்று கூறி அவமானப்படுத்தியதும் தி.மு.க. தலைவர் கருணாநிதிதான். தி.மு.க. அரசில் தேவேந்திரர்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் ஏராளம். குறிப்பாக உமாசங்கர் ஐ.ஏ.எஸ். பழிவாங்கப்பட்டது மற்றும் இ.கோட்டைப்பட்டியில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் சுரேஷ் என்ற இளைஞர் பலியானது இப்படி கூறிக்கொண்டே போகலாம். சில நாட்களுக்கு முன்னர் கூட தூத்துக்குடி மாவட்டம் காசிலிங்கபுரத்தில் வைக்கப்பட்டிருந்த வீரன் சுந்தரலிங்கம் சிலையை தமிழக அரசு மூடி சீல் வைத்துள்ளது. இதனால் தேவேந்திர குல மக்கள் தி.மு.க. மீது கடும் ஆத்திரத்தில் உள்ளனர். இதனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது தேவேந்திரர்களின் ஓட்டுக்களைப் பெறுவதற்காக கருணாநிதியின் முயற்சிதான் இது. 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோதெல்லாம் கமிசன் அமைக்காத கருணாநிதி, தேர்தல் வருகிறது என்றவுடன் கமிசன் அமைத்து உத்தரவிட்டுள்ளார். கமிசனை தேர்தல் வரை இழுத்தடித்து விட்டு தேவேந்திரர்களை ஏமாற்றி ஓட்டுக்களை பெற்று விடலாம் என்று முதல்வரின் எண்ணம் நிறைவேறாது. ஒரு நபர் கமிசன் அமைக்கப்பட்டது ரோஜாவை ரோஜா என்று அழைக்க கமிசன் அமைப்பது போன்றது. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக