சனி, 29 ஜனவரி, 2011

தூத்துக்குடியில் சர்ச்சையில் வீரன் சுந்தரலிங்கம் சிலை!






சிலைகளுக்கும் தென்மாவட்டங்களுக்கும் ‘ரத்த’ பந்தம் உண்டு என்பது விவரமறிந்த எல்லாருமே அறிந்ததுதான். அந்த வகையில் இப்போது தூத்துக்குடியில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது வீரன் சுந்தரலிங்கம் சிலை. வீரன் சுந்தரலிங்கம், கட்டபொம்மனின் தளபதிகளில் ஒருவர். சுதந்திரப் போராட்டத்தில் தற்கொலைப் படை வீரராக மாறி, ஆங்கிலேயரின் ஆயுதக்கிடங்கை அழித்தது மட்டுமல்லாமல் தன்னையும் நாட்டுக்காக அழித்துக்கொண்டவர்.



தூத்துக்குடி மாவட்டம் காசிலிங்கபுரத்தில் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டு, பின் தமிழக அரசால் மூடப்பட்ட வீரன் சுந்தரலிங்கம் சிலையை ஜனவரி 16ம் தேதி உத்தரபிரதேச பகுஜன் சமாஜ் எம்.பி., பிரமோத் குரில் திறந்துவைத்தார். மறுநாளே தமிழக அரசு, சிலைக்கு மீண்டும் சீல் வைக்க… வெடித்திருக்கிறது பிரச்சினை.



இதையடுத்து 17ம் தேதி காலையே அங்கு பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆயுதம் ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டனர். ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் வசந்தா தலைமையிலான அதிகாரிகள் சிலைக்கு மீண்டும் சீல் வைக்க முயன்றபோது, புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் குபேர பாண்டியன் தலைமையில் திரண்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மக்கள் உரிமை இயக்க குழு தலைவர் வக்கீல் அதிசயகுமார் உள்ளிட்டோரும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். ஆனாலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஏற்கனவே திறந்த சிலையை மீண்டும் மூடி சீல் வைத்தனர் அதிகாரிகள். இதையடுத்து அப்பகுதி மக்கள் சிலை, முன்பு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். மேலும் இது தொடர்பாக பிரமோத் குரில் எம்.பி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில முதன்மை பொதுச்செயலாளர் ஜீவன்குமார் உள்ளிட்ட 12 பேர் மீது புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில முதன்மை பொதுச்செயலாளர் ஜீவன் குமாரிடம் இதுபற்றி பேசினோம். “தமிழகத்தில் தலித் தலைவர்களின் சிலைகள் அமைக்கப்பட்டு திறக்கப்படாமலேயே இருப்பது குறித்து எங்கள் தலைவர் மாயாவதிக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதினோம். இந்த நிலையில் தமிழ்நாட்டில் கட்சியின் அமைப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காகவும், திறக்கப்படாமல் உள்ள சிலைகளை திறப்பதற்காகவும் கடந்த 16ம் தேதி தூத்துக்குடிக்கு எம்.பி., பிரமோத் குரில் வருகை தந்தார். அப்போது காசிலிங்கபுரத்தில் சுதந்திரப் போராட்ட வீரன் சுந்தரலிங்கம் சிலைக்கு ஏற்பட்டுள்ள அவலத்தை அவரிடம் காட்டினோம். அதற்கு அவர், “தனியார் நிலத்தில் அமைக்கப்பட்ட சிலைகளை திறக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை. இந்தியா முழுவதும் காந்தி, நேரு, இந்திராகாந்தி உள்ளிட்டோர்களின் சிலைகள் பெரும்பாலும் அனுமதி பெறாமல் அரசு நிலத்திலேயே உள்ளது. குறிப்பாக, அதிக இடங்களில் காந்தியின் சிலை அனுமதி பெறாமலேயே உள்ளது ” என்று கூறி, அவரே அந்த பகுதி மக்கள் முன்னிலையில் சிலையை திறந்து வைத்தார். அதன் மேல் உள்ள தூசிகளை துடைத்து சிலைக்கு மாலையும் அணிவித்தார்.



இதையடுத்து அவர் மேல் வழக்கு போட்டிருக்கிறது போலீஸ். ராஜ்யசபா எம்.பி.யான பிரமோத்குரில் மீது வழக்கு தொடரவேண்டுமானால் நாடாளுமன்றத்தில் அனுமதி பெற வேண்டும். இதையெல்லாம் பின்பற்றவில்லை போலீஸ். இதன் மூலம் இந்த பிரச்சினையை இந்திய அளவில் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது தமிழக அரசு. அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் எம்.பி.யான பிரமோத் குரில் வருகிற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வீரன் சுந்தரலிங்கத்துக்கு நாடாளுமன்ற வளாகத்திலேயே சிலைவைக்க வேண்டுமென்று பேசவுள்ளார்.



தாழ்த்தப்பட்ட மக்களின் அடையாளமாக உள்ள டாக்டர் அம்பேத்கர், வீரன் சுந்தரலிங்கம், தியாகி இமானுவேல் சேகரன் உள்ளிட்டவர்களின் சிலைகள் இன்னும் தமிழகத்தில் ஏராளமாக திறக்கப்படாமல் உள்ளன. அவற்றை அரசு உடனே திறக்க வேண்டும். இல்லையெனில் பிரமோத் குரில் மீண்டும் வந்து திறக்காமல் உள்ள அனைத்து சிலைகளையும் திறந்து வைப்பார்” என்றார் ஆவேசமாக.



போராட்டத்தில் கலந்து கொண்ட புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட இளைஞரணி செயலாளர் குபேர பாண்டியனிடம் பேசினோம். “5 வருடத்திற்கு முன்பு நிறுவப்பட்ட சிலைக்கு அனுமதி இல்லை என்று தி.மு.க. அரசு சீல் வைத்தது. இதற்காக பலமுறை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். 2009ல் நடைபெற்ற ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத்தேர்தலின் போது இந்த பகுதிக்கு வாக்கு சேகரிக்க வந்த துணை முதல்வருக்கு இது தொடர்பாக கறுப்புக்கொடி காட்டினோம். அதையடுத்து, ‘தற்சமயம் தேர்தல் நடக்க உள்ளதால் இந்த சிலையை திறக்க முடியாது. தேர்தல் முடிந்தவுடன் நானே வந்து சிலையை திறந்து வைக்கிறேன்’ என்று வாக்குறுதி கொடுத்தார் ஸ்டாலின். ஆனால், ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற பிறகு எங்களை மறந்து விட்டார். ஆனால், இப்போது திறந்த சிலையை தமிழக அரசு மீண்டும் மூடி சீல் வைத்தது தேவேந்திரகுல மக்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேவேந்திரகுல மக்களின் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்ற தி.மு.க. அரசு எங்களை திட்டமிட்டே புறக்கணிக்கிறது. இதற்கு வரும் தேர்தலில் பாடம் புகட்டுவோம்” என்றார்.



பிரச்னைக் குறித்து ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் வசந்தாவிடம் பேசினோம். “குறிப்பிட்ட அந்த தனியார் இடத்தில் வெண்கலத்தில் சுந்தரலிங்கம் சிலை அமைக்க அனுமதி கேட்டிருக்கிறார்கள். அது நிலுவையில் உள்ள நிலையில்… அனுமதி இன்றி சிமென்ட் சிலையை திறந்துவிட்டனர். எனவே சிலையை ஏற்கனவே இருந்த நிலைக்குக் கொண்டுவந்துள்ளோம்” என்றார்.



தேர்தல் நேரத்தில் வாக்குகளுக்கான வழிமுறைகளாக மாறும் சிலைகள்… மற்ற நேரத்தில் அரசு எந்திரத்துக்கு வெண்கலமாகவும், சிமென்ட்டாகவும் தெரிவது வியப்பான வேதனை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக