வியாழன், 10 பிப்ரவரி, 2011

குற்றப் பரம்பரை சட்டம்: சில வரலாற்றுத் தகவல்கள்






காவல் நிலையங்களிலும், சமூக பஞ்சாயத்துக்களிலும் சில குறிப்பிட்ட சமூகத்தினர், அன்றாடம் கைவிரல் ரேகையைப் பதிய வேண்டும் என்ற ஒரு மனித விரோத சட்டம் பிரிட்டிஷ் ஆட்சியில் அமுலில் இருந்தது. இந்த சட்டத்தை நீக்கும் போராட்டங்கள் நடந்தன. இந்த சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டங்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்களை முன்வைத்து தோழர் பெரியார் டாட்காம் இணையதளத்தில் அதி.அசுரன் வெளியிட்ட கட்டுரை இது.



மறைந்த முத்துராமலிங்க தேவர் மட்டுமே இதை எதிர்த்துப் போராடியதாகவும், பெரியார், போராட்டம் எதையும் நடத்தவில்லை எனவும், அண்மையில் சில முகாம்களில் நடக்கும் தவறான பரப்புரைக்கு உரிய விளக்கமாக இக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.



கி.பி. 1871 இல் ஆங்கிலேய இந்தியாவின் வட மேற்குப் பகுதிகளிலும் பஞ்சாப் மாகாணங்களிலும் நாடோடிக் கூட்டமாக இடம் விட்டு மாறி மாறி திருட்டு, கொள்ளை போன்ற செயல்களைப் பரம்பரையாக செய்து கொண்டிருந்த மக்களை அடக்குவதற்காக ஆங்கிலேயர்களால் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தியா முழுவதிலும் சுமார் 213 சாதிகளை குற்றப் பழங்குடியினர் பட்டியலில் பிரிட்டிஷ் அரசு இணைத்திருந்தது. தமிழ்நாட்டில் முக்குலத்தோராகிய கள்ளர், மறவர், அகமுடையர் மட்டுமே குற்றப்பரம்பரைச் சட்டப்படி கொடுமைப்படுத்தப்பட்டனர் என்று ஒரு தவறான கருத்து அனைத்து மட்டங்களிலும் உள்ளது. உண்மையில் தமிழ்நாட்டில் 89 சாதிகள் இப்பட்டியலில் இருந்தன.



அதில் குறவர், உப்புக் குறவர், ஆத்தூர் மேல்நாட்டுக் குறவர், சி.கே. குறவர், ஒட்டர், போயர், வன்னியர், படையாச்சி, புலையர், அம்பலக்காரர், புன்னன் வேட்டுவக் கவுண்டர், வேட்டைக்காரர், பறையர், ஊராளிக் கவுண்டர், டொம்பர், கேப்மாரி, தொட்டிய நாயக்கர், தெலுங்கம்பட்டி செட்டியார், தலையாசி, இஞ்சிக்குறவர் போன்ற ஜாதிகளும் அடங்காத, அடங்க மறுக்கும் ஜாதிகளும் குற்றப் பரம்பரைப் பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தன.



குற்றப்பரம்பரைப் பட்டியலில் உள்ள சாதிகளில் பிறந்த அனைத்து மக்களும் கைரேகை வைக்கப்படச் சொல்லி கட்டாயப்படுத்தப்படவில்லை. அப்படிச் சொல்லப்பட்டிருந்தால் தமிழ்நாட்டில் அப்போதிருந்த மக்கள் தொகை முழுதும் சுமார் 2 கோடிப் பேர் தினமும் கையெழுத்துப் போட்டிருக்க வேண்டும். அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை.



மேற்கண்ட சாதிகளில் குறிப்பாக கள்ளர், மறவர், அகமுடையார்களிலும் விவசாய நிலம் வைத்திருந்த விவசாயிகள், நிலவரி கட்டுபவர்கள், நிரந்தரத் தொழில் செய்வோர், அலுவலர், நிரந்தரமாக ஒரே இடத்தில் வசிப்போர் ஆகிய பெரும்பான்மையோர் கைரேகைச் சட்டத்தில் இணைக்கப்படவில்லை.



அதேபோல கைரேகை வைக்கும் இடம் காவல் நிலையம் அல்ல. உள்ளூரிலேயே அதே சாதியைச் சேர்ந்த கள்ளர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களும் இடம் பெற்றிருந்த ஒரு குழுவிடம் ஒரு பதிவேடு இருக்கும் அதிலேயே கைரேகை வைக்கலாம். வெளியூர் செல்ல வேண்டுமென்றால் அந்தக் குழுவிடம் அடையாளச் சீட்டு வாங்கிச் செல்ல வேண்டும். தாம் செல்லும் ஊரில் இருக்கும் ஊர்ப் பெரியவர் குழுவில் இந்த அடையாளச் சீட்டைக் காண்பிக்க வேண்டும். அடையாளச் சீட்டு இல்லாதவர்கள் கைது செய்யப்படுவார்கள். அடையாளச் சீட்டு இல்லாமல் அடிக்கடி கைதாகும் நபர்கள் தனியாகப் பட்டியலிடப்பட்டு அவர்கள் நேரடியாக காவல்நிலையத்தில் கைரேகை வைக்க நிர்பந்திக்கப்பட்டனர்.



சில மாகாணங்களில் மட்டும் இருந்த இந்த சட்டம் 1911 இல் இந்தியா முழுமைக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தக் கொடூரச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய குழுவின் பொறுப்பாளர் தமிழ்நாட்டுப் பார்ப்பானான இராமானுஜ அய்யங்கார் ஆவார்.



1921 ஆம் ஆண்டில் கள்ளர்கள் தலைமையிலேயே கள்ளர்களைக் கண்காணிக்கும் கண்காணிப்பு கிராமங்களாக ‘கள்ளர் பஞ்சாயத்துக்கள்’ உருவாக்கப்பட்டன. இப்படி கள்ளர்களை வைத்தே கள்ளர்களை அடக்கிய நுட்பத்தை ஆங்கிலேயருக்கு அறிவுறுத்தி செயல்படுத்தியவன் அப்போது மதுரை மாவட்ட துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய ஏ.கே. இராஜா என்ற பார்ப்பான்.



ஆகவே, இச்சட்டம் தேவர்களுக்கு மட்டும் இருந்த சட்டமல்ல. தேவர்களிலும் அனைத்து மக்களுக்கும் பொருந்திய சட்டமல்ல. அனைத்து ஜாதிகளிலும் இருந்த உண்மையாகவே திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளையில் ஈடுபட்ட மக்களைக் கட்டுப்படுத்தக் கொண்டு வரப்பட்ட சட்டம். 1932 ஆம் ஆண்டு இராமநாதபுரத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பசும்பொன்தேவர் இப்படிப்பட்ட உண்மைக் குற்றவாளிகளை ஒடுக்குவது தவறில்லை என்றே பேசியிருக்கிறார்.



இச்சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுமைக்கும் பல்வேறு தலைவர்கள் போராடியிருக்கிறார்கள். எதிர்த்திருக்கிறார்கள். அதில் முத்துராமலிங்கத் தேவரும் ஒருவர். சரியாக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்தவர்கள் பட்டியலில் கடைசியாக இடம்பெற வேண்டிய பெயர் தேவரின் பெயர் என்ற உண்மையை அறியலாம்.



தமிழ்நாட்டில் செய்யூர் ஆதி திராவிடர் பேரவை, வன்னியகுல சத்திரிய சபா ஆகிய அமைப்புகள் போராடி அந்தந்த ஜாதிகளை பட்டியலில் இருந்து விடுவித்தன. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலசாமி ரெகுநாத ராஜாளியார் என்பவர் தஞ்சை, திருச்சி மாவட்ட கள்ளர்களை குற்றப் பரம்பரைப் பட்டியலில் இருந்து மீட்கப் போராடி வெற்றி பெற்றார். 1911-லேயே ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை நேரில் சந்தித்துப் பேசி குற்றப் பரம்பரைப் பட்டியலில் இருந்து தஞ்சைப் பகுதி ஈச நாட்டுக் கள்ளர்களை மீட்டிருக்கிறார். இந்தப் போராட்டங்களுக்கும் முத்துராமலிங்கத் தேவருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அப்போது அவருக்கு வயது 3.



1920 ஆம் ஆண்டு உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் என்ற கிராமத்தில் இச் சட்டத்தை எதிர்த்து பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து கடுமையான போராட்டம் நடைபெற்றது. அதை அடக்குவதற்காக அரசாங்கம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாயாக்காள் என்ற பெண் உட்பட 17 கள்ளர்கள் வீரமரணம் அடைந்தனர். குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து தமிழ்நாட்டில் நடைபெற்ற மிக முக்கியப் போராட்டம் இதுதான். இந்தப் போராட்டத்திற்கும் முத்துராமலிங்கத் தேவருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவருக்கு அப்போது வயது 12. மதுரைக்கு அருகே பசுமலையில் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்தார்.



அதன் பிறகு 1921 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக கேரளாவைச் சேர்ந்தவரும் மதுரையில் குடியிருந்தவருமான ஒரு வழக்கறிஞர், வைக்கம் போராட்டத்திற்கு பெரியாரை வரவழைத்த மலையாளியான ஜார்ஜ் ஜோசப். இவர்தான் முதன்முறையாக கள்ளர் நாடு முழுமைக்கும் சுற்றுப் பயணம் செய்து மக்களைத் திரட்டி குறிப்பாக குற்றப் பரம்பரைச் சட்டத்திற்கெதிராக மட்டுமே போராட்டங்களை முன்னெடுத்தவர். இவரை அப்பகுதி கள்ளர்கள் அப்போது ‘ரோசாப்பு துரை’ என்றே அழைத்தனர். அவரது நினைவாக இன்று வரை குழந்தைகளுக்கு ரோசாப்பூ என்று பெயர் சூட்டுகின்றனர்.

1933 இல் இந்திய அரசியல் சட்ட சீர்திருத்தக் குழு முன்னிலையில் நடந்த விசாரணையில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் இச்சட்டத்தின் கொடுமைகளையும் தீர்க்கும் வழிமுறைகளையும் குறித்து,



.... இந்தியா மந்திரி அவர்களே குற்றப் பரம்பரையினர் எனப்படுபவரின் கொடூர நிலையை எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன். குற்றப் பரம்பரையினர் நாட்டு மக்களிடையே சிதறிக் கிடக்கின்றனர். பம்பாயில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தில் இருந்து பேசுகிறேன்.



.... இந்த மக்களின் நடமாட்டத்தை ஒழுங்குப்படுத்தவும், நலன்களைப் பாதுகாக்கவும் அந்த சட்டத்தில் ஆளுநருக்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சட்டம் பத்தி 108-ன் கீழ் ஆளுநர் சில ஆணைகளைப் பிறப்பித்து, நாடு முழுவதும் சிதறிக் கிடக்கின்ற அந்த மக்களின் நலனைப் பாதுகாக்கவும் அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க முடியாதா என்ன?



.... ஒருவர் ஆதிவாசியா அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவரா என்று ஆளுநருக்குத் தெரிந்தவுடன் அவர்களது நலனுக்குச் சில சட்டங்கள் இயற்றலாம் அல்லவா? அவர்கள் ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்தால் என்ன? மக்களிடையே வசித்தால் என்ன? கிரிமினல் இன மக்கள் சம்பந்தப்பட்ட சட்டம் அந்தக் குறிப்பிட்ட இன மக்கள் எங்கே இருந்தாலும் அவர்களுக்குப் பாதகமாகவே இருக்கிறது.



என விரிவாகப் பேசி, இந்திய அரசின் சாதகமான பதிலையும் பெற்றார். இந்த விசாரணையில்தான் மிக முக்கியமாக குற்றப் பரம்பரைச் சட்டத்தில் திருத்தம் செய்யவோ, குற்றப் பரம்பரையினர்க்கு மறுவாழ்வு அளிப்பதற்கோ, அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கோ இந்திய அரசின் ஆளுநரைவிட அந்தந்த மாகாண அரசுகளுக்கே அதிக அதிகாரம் இருக்கிறது என்பதை இந்திய அரசே பதிவு செய்தது. அதற்கு காரணம் புரட்சியாளர் அம்பேத்கர்.



இதற்கெல்லாம் பிறகுதான் முத்துராமலிங்கத் தேவர் வருகிறார். 1933 செட்பம்பர் 25 ஆம் தேதி பசும்பொன் தேவரது சொந்த ஜாதியான அவர் பிறந்த உட்பிரிவான ஆப்பநாட்டு கொண்டையங்கோட்டை மறவர்களை குற்றப் பழங்குடியினர் சட்டத்தில் இணைக்கிறார்கள். இந்தச் சமயத்தில் தான் தேவர் அச்சட்டத்தை எதிர்க்கத் தொடங்குகிறார். 1934 மே மாதம் 12 ஆம் தேதி கமுதி அருகே உள்ள அபிராமம் என்ற ஊரில் காங்கிரஸ் தலைவரும் பெரியாருடன் சேரன்மாதேவி குருகுலக் கிளர்ச்சியில் இணைந்து போராடியவருமான பி. வரதராஜூலு நாயுடு தலைமையில் இச்சட்டத்தை எதிர்த்து ஒரு மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டுக்கு 6 மாதத்திற்கு முன்பு பெரியார் இன்றைய ஆட்சிமுறை ஒழிய வேண்டும் ஏன்? என்ற கட்டுரையை எழுதியதற்காக இராஜதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டு, இராஜமகேந்திரம் சிறையில் கடுங்காவல் தண்டனையில் இருந்தார். அவரை வரதராஜூலு நாயுடு நேரில் சந்தித்தார். அதன் பிறகுதான் குற்றப் பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாட்டுக்கு வருகிறார். ஆப்ப நாட்டு மறவர்களை இப்பட்டியலில் இருந்து நீக்கக் கோரி அரசைச் சந்தித்துப் பேச ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவர் வரதராஜூலு நாயுடு. உறுப்பினர்களாக நவநீதிக்கிருஷ்ணத் தேவர், பிள்ளையார்குளம் பெருமாள் தேவர், சசிவர்ணத் தேவர், முத்துராமலிங்கத் தேவர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அப்போதைய அரசை சந்தித்து இக்குழு மனு ஒன்றை அளித்துள்ளது.



மிக முக்கியமாக தினகரன் என்ற பத்திரிகையின் ஆசிரியரும், முதுகுளத்தூர் கலவரம் என்ற மிக முக்கிய வரலாற்றுப் பதிவை வெளியிட்ட தேவர் ஜாதியைச் சேர்ந்த தினகரனும் இக்கொடுஞ் சட்டத்தை எதிர்த்துப் போராடியுள்ளார்.



1934 இல் அபிராமத்தில் நடைபெற்ற மாநாட்டைத் தவிர குற்றப் பழங்குடி சட்டத்திற்கு எதிராக குறிப்பிட்டுச் சொல்லும்படியான எந்தப் போராட்டத்தையும் பசும்பொன்தேவர் நடத்தவில்லை. பல கூட்டங்களில் அது பற்றி பேசியுள்ளார். இரண்டாம் உலகப் போர் நடந்த காலங்களில் 1945 வரை தேவர் ஆங்கிலேயே அரசால் கைது செய்யப்பட்டு சிறையிலேயே இருந்தார். 1945 செப்டம்பர் 5 ஆம் நாள் விடுதலை ஆனார். 1947 ஜூன் 5 ஆம் நாள் வெள்ளைக்காரன் இருக்கும் போதே குற்றப் பரம்பரைச் சட்டம் முழுமையாக ரத்து செய்யப் பட்டது. அச்சட்டம் நீக்கப்படுவதற்கு முன்பு சுமார் 10 ஆண்டுகளாக முத்துராமலிங்கத் தேவர் உட்பட யாரும் குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக பெரும் போராட்டங்களையோ குறிப்பிடத்தகுந்த போராட்டங்களையோ நடத்தவில்லை. தேவர் காங்கிரசோடு அனுசரித்து, இச்சட்டம் பற்றி கவலைப்படாத போதும் பெரியார் உறுதியாக அச்சட்டத்தை கடைசி வரை எதிர்த்திருக்கிறார்.



திராவிடர் இயக்கத்தின் சாதனைகள்



1919 இல் பிரிட்டிஷ் காமன்ஸ் அவையின் இந்திய அரசின் செயலரான எட்வின் சாமுவேல் மாண்டேகு மற்றும் இந்திய கவர்னர் ஜெனரல் பிரடிரிக் ஜான் நேப்பியரின் பேரனான செம்ஸ்போர்ட் ஆகியோர் இந்தியர்களுக்குப் படிப்படியாக அதிகாரங்களை வழங்க, அது தொடர்பாக மக்களின் கருத்துக்களை அறிய அனைத்துப் பிரிவு மக்களையும் சந்தித்தனர். அப்போது நீதிக்கட்சி, திராவிட சங்கம் ஆகியவற்றின் சார்பாக டி.எம்.நாயர், கே.வி. ரெட்டி, சர்.ஏ. இராமசாமி முதலியார் ஆகியோர் கருத்துருக்களை முன் வைத்தனர். அச்சமயத்தில் மறவர் மகாஜனசபை என்ற அமைப்பை உருவாக்கச் சொல்லி, அதன் சார்பிலும் கருத்துருக்களை வைக்கச் செய்தவர் டி.எம். நாயர். இலண்டனில் மாண்டேகு - செம்ஸ்போர்டு குழுவை நேரில் சந்தித்து இறுதி வடிவான கருத்துருக்களை சமர்பிக்கச் சென்றபோது இலண்டனில் மருத்துவமனையில் மறைந்தார் டி.எம்.நாயர். அதையடுத்து கே.வி. ரெட்டி அந்த கருத்துருக்களைச் சமர்பித்து, அதன் அடிப்படையில் இந்தியாவில் தேர்தல் நடைபெற்றது. சென்னை மாகாணத்தில் 1920 ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று கடலூர் சுப்பராயலு ரெட்டியார் முதல் முதலமைச்சராகக் கொண்டு நீதிக்கட்சி ஆட்சி தொடங்கியது. அதன் பிறகு பனகல் அரசர் 1921 முதல் 1926 வரை முதல்வராக பணியாற்றினார்.



பெருங்காமநல்லூர் போராட்டத்திற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி அரசுதான் குற்றப் பரம்பரைச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்து கள்ளர்களில் பெரும்பான்மையான மக்களை அச்சட்டத்தின் கோரப்பிடியிலிருந்து விடுவித்தது.



கள்ளர் சீரமைப்புக்கு என தனியாக ஒரு ஐ.சி.எஸ். அலுவலரை நியமித்தது. லேபர்கமிஷனர் என அப்பதவி இருந்தது. அந்த லேபர் கமிஷனர் அளித்த சிபாரிசுகளின்படி நீதிக்கட்சி அரசு கள்ளர் சீரமைப்புப் பணிகளை கள்ளர் சீரமைப்புத் திட்டம் என்ற பெயரில் முழு வீச்சில் செயல்படுத்தியது.



கள்ளர்கள் விவசாயம் செய்ய இலவச நிலங்களை வழங்கியது.



கள்ளர்கள் தனியாக நிரந்தரத் தொழில் தொடங்க வங்கிக் கடனுதவி அளித்தது.



கள்ளர்களுக்கென்று இலவசக் குடியிருப்புகளைக் கட்டிக் கொடுத்து, அவற்றை நிர்வகிக்கவும் செய்தது.

இளைஞர்களுக்குத் தொழிற் பயிற்சி அளித்து அவர்களை மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் குடியமர்த்தியது.



மதுரை, திண்டுக்கல், உசிலம்பட்டி, சின்னாளப்பட்டி, செம்பட்டி, திருமங்கலம், தேனி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கள்ளர் பள்ளிகளை உருவாக்கியது.



தஞ்சை மாவட்டத்தில் கள்ளர் மகாஜன சங்கத்தாலேயே கைவிடப்பட்ட கள்ளர் பள்ளிகளை அரசு ஏற்று நடத்தியது.



பெரியாறு அணைப் பாசனத் திட்டத்தில் கள்ளர் நாட்டுப் பகுதிகளையும் இணைத்து தேனி, திண்டுக்கல், மதுரை, இராமநாதபுரம் மாவட்டத்தில் கள்ளர்களை விவசாயத்தில் ஈடுபடச் செய்தது.



1922 இல் வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் கள்ளர்கள், விவசாயத்திற்காக வாங்கிய கடனை கட்ட இயலாத நிலையில் அந்தக் கூட்டுறவு சங்கங்களுக்கு நிதி அளித்திருந்த சென்ட்ரல் வங்கி சங்கங்களை கடுமையாக நெருக்கத் தொடங்கியது. அப்போது திக்கற்று இருந்த 34 கள்ளர் கூட்டுறவு சங்கங்களுக்கு மாகாண அரசே நிதி கொடுத்து சங்கங்களின் கடனை அடைத்து, அடுத்த கட்ட விவசாயத்திற்கும் கடனை அளித்தது.



இப்படி கள்ளர்கள் வாழ்வில் ஒரு புரட்சியை உருவாக்கியது நீதிக்கட்சி அரசுதானே ஒழிய முத்துராமலிங்கத் தேவர் அல்ல. இந்த மாற்றங்கள் நடக்கும்போது தேவர் பொது வாழ்வுக்கே வரவில்லை.



அதன் பிறகு 1934 ஆம் ஆண்டு ஆப்ப நாட்டு கொண்டையங்கோட்டை மறவர்களை குற்றப்பழங்குடி சட்டப் பட்டியலிலிருந்து மீட்டதும் நீதிக்கட்சி அரசுதான். வரதராஜூலு நாயுடு தலைமையில் முத்துராமலிங்கத் தேவரும் இடம் பெற்றிருந்த குழு இந்த நீதிக்கட்சி அரசிடம்தான் மனு அளித்தது. வெறும் மனு அளித்த உடனேயே அப்பிரிவு மக்களை அப்பட்டியலில் இருந்து நீக்கியது. பெரியாரின் நண்பரான பெரியாரின் ஆதரவு பெற்ற ஆட்சியின் தலைவரான பொப்பிலி அரசர் என்ற இராமகிருஷ்ண ரங்காராவ் தலைமையிலான நீதிக்கட்சி அரசுதான்.



இறுதியாக 1947 இல் ஏப்ரல் மாதம் சென்னை மாகாண உள்துறை அமைச்சராக இருந்த பெரியாரின் தொண்டரும், சுயமரியாதை இயக்கத் தலைவர்களில் ஒருவருமான டாக்டர் பி. சுப்பராயன் தான் இந்தக் கொடிய சட்டத்தை ஒழிக்கும் சட்ட முன் வடிவை ஆளுநரிடம் சமர்பித்து அவரது ஒப்புதலுக்குப் பின் 1947 ஜூன் 5 ஆம் நாளில் இச்சட்டத்தை ஒழித்தார்.



ஆக குற்றப் பழங்குடியினர் சட்டத்தை ஒழிப்பதற்கும் அச்சட்டத்தால் கொடுமைப்படுத்தப்பட்ட கள்ளர்கள் உட்பட அனைத்து ஜாதி மக்களும் தலைநிமிர்ந்து வாழ்வதற்கும் தொடக்கத்திலிருந்து இறுதி வரை உழைத்தது பெரியாரின் தொண்டர்கள் தான். காங்கிரஸ் அரசானாலும், நீதிக்கட்சி அரசானாலும் அரசியல்வாதியாக இருந்தாலும் அரசுப் பதவியில் இருந்தாலும் குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து சரியான செயல்களைச் செய்தவர்கள் பெரியார் ஆதரவாளர்களே! பெரியார் தொண்டர்களே! திராவிடர் இயக்கத்தவர்களே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக