சனி, 5 மார்ச், 2011

தேவேந்திர இன மக்களுக்கு மரியாதை கொடுத்தால் கூட்டணி!’’-ஜான்பாண்டியன்










 















எட்டாண்டு சிறை வாசத்திற்குப் பிறகு மீண்டும் தேவேந்திர இன மக்களை ஒன்று திரட்டப் புறப்பட்டிருக்கிறார் ஜான்பாண்டியன். அவருடைய தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மதுரையில் பிப்ரவரி 27&ம் தேதி விழிப்புணர்வு மாநாடு நடந்தது.



அ.தி.மு.க.வை ஆதரிக்கும் டாக்டர் கிருஷ்ணசாமியை தனிமைப்படுத்த வேண்டும் என்ற ஒற்றை அஜெண்டாவோடு அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்கம், தியாகி இமானுவேல் பேரவை, மள்ளர் இலக்கிய கழகம், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் என பல்வேறு அமைப்புகளும் ஜான்பாண்டியனின் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.



மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் இருந்து மதியம் 2 மணியளவில் பேரணியை ஜான்பாண்டியனின் மனைவியும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளருமான பிரிசில்லா பாண்டியன் துவக்கி வைத்தார். மனைவி, மகன், மகள் என குடும்பத்தோடு மேடை ஏறி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார் ஜான்பாண்டியன்.



'அவர் போகும் இடமெல்லாம் கலவரம் வெடிக்கும்' என்று உளவுத்துறை எச்சரித்தபடியே லாடனேந்தல், மதுரை கோமதிபுரம் ஆகிய இடங்களில் பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது.



மாநாட்டில் தேவேந்திர குல வேளாளர் என அரசு ஆணை வெளியிட வேண்டும், தியாகி இமானுவேல் சேகரனுக்கு மத்திய அரசு வெளியிட்ட அஞ்சல் தலை வெளியீட்டை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



ஜான்பாண்டியனின் அண்ணன் வன்னிய குடும்பன் பேசும்போது, ''மதுரை இதற்கு முன்பு 'மள்ளர் மாநகர்' என்றுதான் இருந்தது. மதுரை மீனாட்சியும் மள்ளி(?)தான்...'' என்று தன் பங்குக்கு சூட்டை கிளப்பினார்.



தியாகி இமானுவேல் பேரவை தலைவர் சந்திரபோஸ் பேசும்போது, ''கோபாலபுரமும் போயஸ் கார்டனும் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு இங்கே அரசியல் அங்கீகாரத்திற்காக ஒன்றுகூடி இருக்கிறோம். திராவிடக் கட்சிகள் நம் வாக்குகளை திருடுகிறார்கள். தென்தமிழகத்தில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தி தேவேந்திர குல மக்கள் தான். ஆகையால், ஒரு சீட்டு ரெண்டு சீட்டுக்காக நாம் போகாமல் மந்திரிசபையில் ஆதி திராவிட நலத்துறை என்றுதான் இல்லாமல் பொதுப்பணித் துறை வீட்டு வசதித் துறை போன்ற துறைகளையும் நம்முடைய சமூக எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுக்க வேண்டும்'' என்றார்.



இறுதியாக இரவு 11.30 மணிக்கு மைக் பிடித்த ஜான்பாண்டியன், ''உங்கள் எண்ணப்படியே கூட்டணி அமையும். ஒரு சில அரசியல் சூழ்ச்சிகளால் செய்யாத குற்றத்திற்காக எட்டு வருடம் சிறை தண்டனை அனுபவித்தேன். நம் மக்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்க வேண்டும். இங்கே இருக்கிற தமிழன் தினம் தினம் செத்துக்கிட்டு இருக்கான். இதைப் பத்தி கவலைப்படாம ஈழத் தமிழனைப் பத்தி சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்'' என்று திருமாவை ஒரு பிடிபிடித்தபோது, ''நம்மளும் இதே மாநாட்டில் ஈழத் தமிழின ஒழிப்பைக் கண்டிச்சு தீர்மானம் நிறைவேத்திருக்கோம்ணே' என்று ஓரத்தில் ஓர் முனகல் சத்தம் கேட்டது.



தொடர்ந்து பேசிய ஜான்பாண்டியன், ''நமக்கு கொடுக்கும் மரியாதையை கொடுத்தால் கூட்டணி உண்டு'' என தி.மு.க.வை ஒரு அழுத்து அழுத்தி முடித்தார்.







இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-



தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்று அழைக்க அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஜனார்த்தனன் தலைமையிலான கமிசன் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.



தேவேந்திர குலத்தினரை ஆதிதிராவிடர்கள் என்று கூறாமல் பட்டியலின மக்கள் என்று அழைக்க வேண்டும். மதுரை விமான நிலையத்தின் விரிவாக்கத்திற்கு தேவேந்திர குல மக்கள்தான் அதிக அளவில் நிலத்தினை வழங்கியுள்ளனர். எனவே விமான நிலையத்திற்கு தியாகி இமானுவேல் சேகரனார் பெயரை சூட்டுவதுடன், அவரது நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்.



பட்டியலின மக்களுக்கு அனைத்து நிலை பதவி உயர்விலும் இடஒதுக்கீட்டினை முழுமையாக அமல்படுத்த வேண்டும். மேலும் தனியார் துறையிலும் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். பட்டியலின கிறிஸ்தவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஐந்தாண்டு திட்டத்தில் பட்டியலின மக்களின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. இதனை இந்த மாநாடு கண்டிக்கிறது.



இந்தியா-இலங்கை இடையிலான சர்வதேச எல்லைக்கோடு பிரச்சினை காரணமாக இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தீர்வு காண வேண்டும். மேலும் கச்சத்தீவினை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



இலங்கையில் உள்ள தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு அவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்.



சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு மாத வருமானத்தை உறுதி செய்வதற்காக ஒரு ஆய்வு கமிசனை அமைக்க வேண்டும்.



60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரத்து 500 ஓய்வூதியம் வழங்குவதுடன், விவசாயத்துக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்.



பட்டியல் இன மக்களின் 18 சதவீத இடஒதுக்கீட்டினை இன்றைய மக்கள் தொகை கணக்கீட்டின் அடிப்படையில் 25 சதவீதமாக உயர்த்த வேண்டும்.



இயற்கை வளங்களை பாதிக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். விவசாயிகளின் துன்பத்தை போக்கும் வகையில் நதிநீர் இணைப்பை செயல்படுத்த வேண்டும்.



மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



முன்னதாக தொண்டர்களின் பேரணி நடந்தது. பேரணியை தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் பார்வையிட்டார்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக