புதன், 9 மார்ச், 2011

அரசியல் விழிப்புணர்வு மாநில மாநாடு

மதுரை : பட்டியலின மக்களின் இட ஒதுக்கீட்டை 18ல் இருந்து 25 சதவீதமாக உயர்த்த வேண்டும் என மதுரையில் நடந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுச் செயலாளர் பிரிசில்லா பாண்டியன் தலைமை வகித்தார். மாநில தலைவர் ஜான்பாண்டியன், புத்தபிட்சு சுமேதா, நிர்வாகிகள் சரவணபாண்டியன், வழிவிடுமுருகன், பகத்சிங் உட்பட பலர் பங்கேற்றனர். நேற்று மாலையில் மதுரை தெப்பக்குளம் பகுதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ரிங்ரோட்டில் உள்ள மாநாட்டு பகுதிக்கு சென்றனர்.






பின்னர் நடந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தேவேந்திர குலவேளாளர்களின் உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குலவேளாளர் என உடனடியாக அறிவித்து ஆணை வெளியிட வேண்டும். பட்டியலின மக்களை ஒட்டுமொத்தமாக தலித் என அழைக்காமல், பட்டியலின மக்கள் அல்லது அந்தந்த குறிப்பிட்ட ஜாதியின் பெயரால் அழைக்க வேண்டும். இம்மானுவேல் சேகரன் தபால் தலை வெளியீட்டை அரசு விழாவாக நடத்தாததை கண்டிப்பது, பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீட்டில் தரப்படும் 18 சதவீதத்தை 25 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். தேவேந்திர குலவேளாளர்களின் வரலாற்றை மீட்டெடுக்கும் ஆராய்ச்சியாளர்கள், பத்திரிகைகள் தினமலர், ஆனந்தவிகடனுக்கு நன்றி தெரிவிப்பது, 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகள், விவசாய கூலிகளுக்கு மாதம் 2500 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும், விவசாய பட்ஜெட் தாக்கல் செய்து, அதில் விவசாயத்திற்கு 50 சதவீதம் முழுமையாக பயன்படும் வகையில் நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும் என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக