செவ்வாய், 3 மே, 2011

ஈழத்தின் பெயரால் இங்கே நடப்பது நாற்காலி அரசியல்



உலகத் தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐ.நா. சபை அறிக்கையின் விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்துவிட்டன. ஈழத்தில் தமிழினம் இரக்கமற்ற முறையில் கொன்று குவிக்கப்பட்டதற்காக, ராஜபக்ஷே அரசு சர்வதேச நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் நேரம் நெருங்கிவிட்டது. 'ஆட்சி அதிகார நாற்காலியில் அமரப்போவது யார்?' என்ற போட்டியில் கடுமையாக ஈடுபட்டுக் களைத்துப்போன நம் தலைவர்கள், தேர்தல் முடிவை எதிர்பார்த்து இளைப்பாறும் வேளையில், பொழுதுபோவதற்கு ஈழம் குறித்த லாவணிக் கச்சேரியில் இறங்கிவிட்டனர்!




கலைஞரும் ஜெயலலிதாவும், 'ஈழத் தமிழரின் இன்னல் குறித்து இங்கு இருந்தபடியே அதிகமாக இரு விழி நீர் ஆறாகப் பெருக்கியவர் யார்?' என்று அறிக்கைப் போர் நடத்தத் தொடங்கிவிட்டனர். 'இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை; இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை' என்ற பாடல்தான் நெஞ்சில் நிழலாடுகிறது.







'இலங்கையில் நடந்த இனப் படுகொலையை வேடிக்கை பார்த்ததற்காக, கருணாநிதி பொது மன்னிப்பு கேட்க வேண்டும்' என்றார் ஜெயலலிதா. 'நடந்த கொடுஞ்செயலுக்கு எதிராக சர்வதேச அளவில் கூக்குரல் எழுப்பப்பட்டதோடு மட்டுமல்லாமல், இலங்கை அதிபர் ராஜபக்ஷே சர்வதேச நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, போர்க் குற்றத்துக்காக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், இந்திய அரசோ, தமிழக அரசோ, இது குறித்து எதிர்ப்பையோ அல்லது வருத்தத்தையோகூட தெரிவிக்க​வில்லை' என்று குற்றம் சாட்டுகிறார் முன்னாள் முதல்வர். 'இந்திய அரசு இலங்கைக்கு உதவியது, இந்திய அரசுக்குக் கலைஞர் உதவிக் கரம் நீட்டினார்' என்பது யாராலும் மறுக்க முடியாத உலகறிந்த உண்மை. ஆனால், வன்னிப் பகுதியில் தமிழருக்கு எதிராக இலங்கை ராணுவத்தின் வெறியாட்டம் நிகழ்ந்தபோது, முள்ளி வாய்க்காலில் எம் இனம் முற்றாக அழித்து ஒழிக்கப்பட்டபோது ஜெயலலிதா என்ன செய்தார்? 'ஒரு கோடிக்கு மேல் உறுப்பினர்கள் உள்ள அரசியல் அமைப்பு அ.தி.மு.க.' என்று அடிக்கடி அறிவித்துப் பரவசப்பட்டுக்கொள்ளும் 'புரட்சித் தலைவி' மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கில் தன்னுடைய தொண்டர்களை வீதியில் நிறுத்தி இந்திய அரசுக்கு எதிராக ஏன் போர்க் குரல் கொடுக்கவில்லை? நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில், 'இந்திய ராணுவத்தை அனுப்பி ஈழத்தைப் பெறப் பாடுபடுவேன்' என்று திடீரென்று சன்னதம் வந்ததுபோல் மேடை​களில் ஆவேசக் குரல் கொடுத்த 'அம்மா', தேர்தல் முடிவுகளுக்குப் பின்பு ஈழம் குறித்து இதழ் திறந்து இரண்டு வார்த்தைகள்கூட இயம்பாமல் மௌனத் தவம் இயற்றியது ஏன்? ஈழம் பற்றி ஜெயலலிதா பேசுவது தகாது. அப்படியானால், 'தமிழினத் தலைவர்' கலைஞர் பேசுதல் தகுமா?



ஈழத் தமிழர் நலன் காக்க இன்று வரை கலைஞர் செய்த அளப்பரிய சேவைகளை, எண்ணிலடங்காத தியாகங்களை, கை வலிக்க எழுதிய கடிதங்களை, மாநாடுகளில் நிறைவேற்றிய தீர்மானங்களை, நெஞ்சு வலிக்க மேடைகளில் முழங்கிய வீர முழக்கங்களை, மூன்று மணி நேரம் பசியடக்கி நடத்தி முடித்த உண்ணாவிரத சாகசங்களை, மக்கள் மழையில் நனைந்தபடி மனிதச் சங்கிலியாய் நிற்க, காரில் அமர்ந்தபடி பார்வையிட்ட வெஞ்சமர் வேள்வியை விரிவாக விளக்கி அறிக்கை வடிவத்தில் அளித்து இருக்கிறார்.



கலைஞரின் தியாகப் பயணத்தின் திருப்பு முனை நிகழ்வுகளில் ஓர் அரிய அரசியல் உண்மை புதையுண்டு​கிடக்கிறது. எம்.ஜி.ஆர். 1977 முதல் 1987 வரை முதல்வராக இருந்தபோது, கோட்டை நாற்காலியில் அமர முயன்றும் கலைஞரால் கோபாலபுரத்தில்தான் முடங்கிக்கிடக்க நேர்ந்தது. அவர் பட்டியலிடும் போராட்டங்களின் புறமுகம் 'ஈழ மக்கள் ஆதரவு' என்றாலும், அவற்றின் உண்மையான சுயமுகம் 'எம்.ஜி.ஆர். எதிர்ப்பு' என்பதுதான் அரசியல் சூட்சுமம்!



ஈழத் தமிழருக்காக 1977-ல் சென்னையில் 5 லட்சம் பேரையும், 1983-ல் 7 மணி நேரத்தில் 8 லட்சம் பேரை​யும் திரட்ட முடிந்த கலைஞரால், செப்டம்பர் 2008 முதல், மே 2009 வரை ஈழ நிலத்தில் தமிழர் ரத்தம் வெள்ளம் எனப் பாய்ந்தபோது, எண்ணற்ற குலப் பெண்டிர் கற்பிழந்து கதறித் துடித்தபோது, சின்னஞ்சிறார்கள் சிதைக்கப்பட்டபோது, உறுப்பிழந்து - உடைமையிழந்து - வாழ்விழந்து வதை முகாம்களில் மூன்று லட்சம் தமிழர் நரகத்தின் பாழ்வெளியில் நடைப்பிணங்களாக உருக்குலைந்தபோது, வெள்ளைக் கொடியுடன் சரணடையச் சென்ற நடேசனும், புலித்தேவனும், நூற்றுக்கணக்கான தமிழ்க் குடும்பங்களும் கொன்றழிக்கப்பட்டபோது, தமிழகத்தின் வீதிகளில் கழக உடன்பிறப்புகளைப் போர் நிறுத்தம் வேண்டி லட்சக்கணக்கில் திரட்டி இந்திய அரசுக்கு நிர்ப்பந்தம் தரமுடியாமற் போனதன் பின்னணி என்ன?!



'இரு வாரங்களில் ஈழப் போர் நிறுத்தப்படாவிடில், 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்வார்கள்' என்று அறிவித்துவிட்டுப் புறநானூறு பேசியவர்கள், அதை நடைமுறைப்படுத்தாமல் புறமுதுகிட்டதின் மர்மம் என்ன?!



எம்.ஜி.ஆர். இருந்தபோது கலைஞர் ஈழ மக்களுக்காக அணி திரட்டியது, முதல்வர் நாற்காலியைக் கைப்பற்று​வதற்காக!



இன்று ஈழ மக்களைக் கை கழுவியது, அமர்ந்திருக்கும் முதல்வர் நாற்காலியைக் காப்பாற்றிக்​கொள்வதற்காக!



சிங்களப் படை ஈழத்தில் இழைத்த மனித உரிமை மீறல்களைக் கண்டித்து சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றுவதற்குக்கூட முன்வராத முதல்வர், தன்னை விமர்சித்த இளங்கோவனையும், காடு வெட்டி குருவையும் கண்டித்துத் தீர்மானம் தீட்டு​வதற்குக் கழகத்தின் உயர்மட்டக் குழுவைக் கூட்டியவர். அதே உயர்மட்டக் குழுவில் ராஜ​பக்ஷேவைக் கண்டித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றத் துணி​வற்றவர் கலைஞர். ஈழம் குறித்துக் கலைஞர் கண்ணீர்விடுவதும், ஜெயலலிதாவின் ஈழ உணர்வு குறித்து ஆய்வு நடத்துவதும், கலைஞரின் வழக்கமான 'ஆதாய அரசியல் நாடகம்' அல்லாமல் வேறு என்ன?



தியாகத் திருவிளக்கு, சொக்கத் தங்கம் சோனியா காந்தியின் தயவுக்காகத் தவம் இருப்பது ஒரு பக்கம்... 'மத்திய அரசு ஐ.நா-வின் மூவர் குழு அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளிவந்ததும் கால தாமதம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பணிவோடு விண்ணப்பம் தருவது மறு பக்கம்... இதுதான் நம் கலைஞரின் இன்றைய 'இரு' பக்கம்!



'கனைக்கும் உரிமைகூட மாநிலக் குதிரைகளுக்கு டெல்லிப் பேரரசின் லாயத்தில் கிடையாது' (கலைஞர் கடிதம் 3.12.1973) என்று 37 ஆண்டுகளுக்கு முன்பே அறிந்துகொண்டவர் நம் முதல்வர். ஆனால், மேடைகளில் மட்டும் அவருக்குப் பாரதிதாசன் எழுதி அனுப்பிவைத்த 'கிளம்பிற்றுக்காண் தமிழ்ச் சிங்கக் கூட்டம் - கிழித்தெறியத் தேடுது காண் பகைக் கூட்​டத்தை' என்று மறவாமல் முழங்குவார்.



'கூட்டாட்சியும், மாநிலச் சுயாட்சியும் பிரிக்க முடியா​தவை. சுயாட்சி இல்லாமல், கூட்டாட்சி இருக்​கவே முடியாது' என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுப்பாராவ் சொன்னதை (கலைஞர் கடிதம் 23.6.74) உடன்பிறப்புக்கு உணர்த்தியவர், 'ஈழத் தமிழருக்குக் கொஞ்சம் போட்டுக் கொடுங்கள்' என்ற பாணியில் மத்திய அரசிடம் மனுப் போடுகிறார். 'கொட்டும் மழையைச் சுட்டுப் பொசுக்குகிறேன் பார் என்று கொள்ளிக் கட்டையை எடுத்து நீட்டினால் கட்டைதான் அணையுமே தவிர, மழையா நின்றுவிடும்?' (கலைஞர் கடிதம் 6-10-74) என்று எள்ளல் சுவையோடு கேள்வி கேட்ட நம் கலைஞர், இன்று ஈழம் காண எந்தக் கட்டையைக் கையில் எடுத்திருக்கிறார்?!



ஈழத்தைவைத்து இங்கே கலைஞரும் ஜெயலலிதாவும் தொடர்ந்து செய்து வருவது கடைந்தெடுத்த ஆதாய அரசியல்! போகட்டும், நம் இனவுணர்வாளர்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள்? வழக்கம்போல் வைகோவும் நெடுமாறனும் ஒரு பக்கம் கூடுவார்கள். வீரமணி வேறு ஒரு நாள் வீதியில் குரல் கொடுப்பார். சீமான் தனியாக மேடை போட்டு சீற்றவுரை ஆற்றுவார். தமிழினத்தின் நலிவு நீங்கக் குரல் கொடுக்கும்போதும் கூடி நிற்க முடியாதவர்கள், எதற்காகத் தமிழினத்தின் பேரால், தமிழின் பேரால் ஆளுக்கு ஓர் அரசியல் கடை திறக்க வேண்டும்? தமிழ்நாட்டில் இனி யாரும் ஈழத் தமிழர் குறித்துப் பேசாதிருப்பதே... அவர்களுக்குச் செய்யும் பெருந்தொண்டு!



'மனித குலத்தின் மிகப் பெரிய அவலம் சிலரால் இழைக்கப்படும் கொடுமைகள் அன்று; அந்தக் கொடுமைகளை எதிர்க்கத் துணிவின்றி வேடிக்கை பார்க்கும் பலரின் மௌனம்' என்றார் கறுப்பினப் போராளி மார்ட்டின் லூதர் கிங். தமிழ் மண்ணில் நாம் அந்த அவலத்தைத்தான் அரங்கேற்றி வருகிறோம். இனி ஒரு விதி செய்வோம். கட்சி அரசியல் கலக்காமல் ஏழு கோடி மக்களும் நம் இனம் காக்க எழுந்து நின்று போராடுவோம். கலைஞரும், ஜெயலலிதாவும், இனவுணர்வுப் போராளிகளும், ஈழத்துக்காக இணைந்து குரல் கொடுக்க முடியாதெனில், அதுபற்றிப் பேசுவதை அறவே விட்டுவிடுவோம். கொசோவா குடியரசாக முடியும் எனில், இந்தோனேஷியாவின் பிடியில் இருந்து கிழக்கு திமூர் விடுபட இயலும் எனில், 2 சதுர கிலோ மீட்டருக்கும் குறைவான, 35 ஆயிரம் மக்கள் மட்டுமே வாழும் 'மொனகோ' ஒரு தனி நாடாக இயங்குவது சாத்தியம் எனில், ஈழமும் ஒரு நாள் உலக அரங்கில் தனி நாடாய் நிச்சயம் உருவாகும். அதற்கான அடித்தளத்தைப் புலம் பெயர்ந்த தமிழர்களே அமைத்துக்கொள்வார்கள். ஈழத்தின் பெயரால் இங்கே நடப்பது நாற்காலி அரசியல். அதை அவர்கள் நன்றாக அறிவார்கள்.



கவிஞர் இளம்பிறை இங்கு உள்ள தமிழரை நெஞ்சில் நிறுத்தி எழுதிய அர்த்தமுள்ள கவிதையின் கடைசி வரிகள் போதும், நம் இயலாமையைத் தோல் உரிக்க...



'உம் இறந்த உடல்களில் அசைகிறது உயிர்



எம் உயிருள்ள உடல்களில் நடக்கிறது பிணம்!'








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக