வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

தூக்கு தண்டனை பற்றி பேச அனுமதி மறுப்பு: சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்கிறேன்: டாக்டர் கிருஷ்ணசாமி

 சட்டசபையில் இன்று (26.08.2011) புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஒரு பிரச்சினை பற்றி பேச அனுமதி கேட்டார். சபாநாயகர் ஜெயக்குமார், இந்த பிரச்சினை குறித்து பின்னர் எனது அறையில் வந்து பேசுங்கள். தற்போது பேச அனுமதி இல்லை என்றார். கிருஷ்ணசாமியின் பேச்சு அவை குறிப்பில் இடம் பெறாது என்றும் அறிவித்தார்.






இதையடுத்து அவர் இருக்கையில் அமர்ந்தார். சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே பிரச்சினை குறித்து பேச முயற்சி செய்தார். அதற்கும் சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து கிருஷ்ணசாமி சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.



அவையில் இருந்து வெளியேறிய பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:



ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கிலிடுவதற்காக உத்தரவு வந்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் தூக்கிலிடும் நிலைமை உள்ளது.



தமிழக சட்டமன்றத்தில் அவர்களை காப்பாற்ற கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தால் மட்டுமே அவர்கள் உயிரை காப்பாற்ற முடியும். கடந்த ஒரு வாரமாக இந்த பிரச்சினையை சட்டசபையில் எழுப்ப முயற்சி செய்து வருகிறேன். ஏற்கனவே இரண்டுமுறை இதற்கு எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. இன்றும் அனுமதி கேட்டேன். சபாநாயகர் அனுமதி வழங்க வில்லை. எனவே நான் வெளிநடப்பு செய்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக