ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

பசும்பொன் தேவரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

நீண்ட முடியும், விபூதிப் பட்டையும், குங்குமப் பொட்டும் கொண்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரது படத்தை அநேக தேவர் சமுதாய மக்கள் வீட்டிலோ, கடைகளிலோ வைத்து வணங்குகிறார்கள். தினசரி, மாதாந்திர சிவகாசி காலெண்டர்கள் மூலம் இந்தப் படம் பிரபலமாயிருக்கிறது. மேலும் பிழைப்பு தேடி நகரங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்லும் தேவர் சாதி மக்கள் தமது அடையாளங்களை மீட்டெடுக்கும் வழியாகவும் தேவர் படத்தை வைத்து வணங்குகிறார்கள். 90களில் தென்மாவட்ட கலவரங்கள் துவங்கிய பிறகு தேவர் குருபூஜை என்பது ஒரு வெட்டியான கௌரவப் பிரச்சினையாகவும் மாற்றப்பட்டு விட்டது. இதே காலத்தில் வந்த தேவர் மகன் திரைப்படத்தின் “போற்றிப் பாடடி பெண்ணே, தேவர் காலடி மண்ணே” பாட்டு அச்சாதி மக்களின் தேசிய கீதமாகவும் மாறியது.
சரி, விசயத்துக்கு வருவோம். தேவர் சாதி மக்கள் பசும்பொன் தேவரை வணங்குவதற்கு சுயசாதி பற்று அன்றி வேறு எந்தக் காரணமுமில்லை. 47க்குப் பிறகு சீர்திருத்த முறையில் முன்னேறி வரும் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல்வேறு பிற்படுத்தப்பட்ட சாதிகள் வளர்ந்திருக்கின்றன. அரசு பதவிகள், வணிகம், ஓரளவு நிலவுடைமை என்று வளர்ந்த நிலையில் சுயசாதி அடையாளத்தின் வீச்சு முன்னெப்போதைக் காட்டிலும் வளர்ந்து விட்டது.
நவீன தொழில் நுட்ப வசதிகள் வளர்ந்த அளவுக்கு சாதி அபிமானம் குறைந்து விடவில்லை. மணமக்கள் விளம்பரங்களில் கூட சுய சாதி, உட்பிரிவு விதிகளுக்குட்பட்டே மணமக்கள் தேவை விளம்பரங்கள் வருகின்றன. சிதறிக்கிடந்த சாதி மக்களை ஊடகங்களும், திருமண நிலையங்களும், சாதி சங்கங்களும் ஒன்று சேர்த்திருக்கின்றன. இன்னொரு புறம் அரசியலில் அனைத்து சாதிகளும் தத்தமது செல்வாக்கை நிரூபித்து அதிகாரத்தின் பங்கை கேட்பதும் இக்காலத்தில்தான் துவங்கியது.
ஆனால் இத்தகைய முன்னேற்றங்களோடு தேவேந்திரகுல மக்கள் கொஞ்சம் தலைநிமிரத் துவங்கியதை மட்டும் ஆதிக்க சாதியினர் விரும்பவில்லை. தீண்டாமைக்கு எதிர்ப்பு தெரிவித்த இடங்களிலெல்லாம் ‘கலவரங்கள்’ எழுந்தன. கொடியங்குளம் கலவரம் தொடர்ந்து அதிக பரப்பளவில் நீடித்ததற்கு இதுவே காரணம்.
முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் சாதி கலவரங்கள் நடந்ததில்லை, அமைதியாக இருந்த தமிழகம் என்றெல்லாம் பலர் அபத்தமாக ‘ஆய்வு’ செய்து அப்போது கண்டுபிடித்தனர். அந்த அமைதிக்கு காரணம் என்ன? அன்று தேவேந்திரகுல மக்கள் எல்லா வகைக் கொடுமைகளையும் எதிர்க்க இயலாமல் ஏற்றுக் கொண்டு வாழ்ந்தனர். ஆயிரமாண்டுத் தீண்டாமைக் கொடுமை, காலம் காலமாக இருக்கும் ஒரு நியமம் என்ற அளவில் அவை சமூகத்தால் கேள்விக்கிடமின்றி பின்பற்றப்பட்டு வந்தன. தனித்து விடப்பட்ட சேரிகள் ஊரை எதிர்ப்பதற்கு அன்று வழியே இல்லை. இதுதான் அந்த அமைதியின் காரணம். பின்னர் பொருளாதார சுயபலம் வந்த பிறகு அவர்கள் அந்த கொடுமைகளை எதிர்த்துக் கேட்கின்றனர். அமைதி குலைந்து கலவரம் வருகிறது.
இந்த வரலாற்றுப் பின்புலத்தில்தான் பசும்பொன் தேவரது வாழ்க்கையை நாம் மதிப்பீடு செய்ய வேண்டியிருக்கிறது. அமைதிக் காலத்தில் ஆதிக்க சாதிகளது ஆட்சியில் அடங்கிக்கிடந்த காலத்தில் தேவேந்திரகுல மக்களுக்கு தேவர் என்ன செய்திருக்க முடியும்? அவர் கஞ்சி ஊற்றினார், பால்கனியில் இருந்து பொற்காசுகளை அள்ளி வீசினார், தான தருமம் செய்தார் என்றுதானே அதிகபட்சம் இருந்திருக்க முடியும்? எங்கேயாவது தேவேந்திரகுல  மக்கள் மீதான தீண்டாமைகளை தேவர் எதிர்த்திருக்கிறார் என்று பேச்சளவில் கூட எதுவும் வந்ததில்லையே?
தேவர் செய்த பண்ணையார் தரும சிந்தனைகள் கூட புதுச்சரக்கு அல்ல. காந்தி முதல் பல காங்கிரசு தலைவர்கள் அதைத்தான் செய்தனர். அந்த வகையில்தான் தேவேந்திரகுல  மக்களை அரிஜனங்கள் என்று காந்தி அழைத்தார். “ஆயிரங்காலம் அடிமை என்றாயே அரிசனன்னு பேரு வைக்க யாரடா நாயே” என்ற ம.க.இ.க பாடல் வரி அந்த தரும சிந்தனையின் மீதான வரலாற்றுக் கோபத்தை வெளிப்படுத்துகிறது. இன்றளவும் தமிழக தலித் மக்களின் தேசிய கீதமாக அந்தப்பாடல் பாடப்பட்டு வருகிறது.
இமானுவேல் சேகரன் ஒரு தலைவராக சரிக்கு சமமாக தன் முன் பேசுவதை தேவரால் கிஞ்சித்தும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதன் தொடர்ச்சியாகத்தான் அவர் தேவரது அடியாட்களால் கொல்லப்படுகிறார். இதற்கு மேல் தேவரது வாழ்வில் நடந்த சம்பவங்களை கீழே தருகிறோம்.
தேவரது சாதிவெறியை தனியாக தொகுத்தே தர முடியும். 1937 இல் காங்கிரசு வேட்பாளராக இருந்த தேவர் அன்றைய நீதிக்கட்சி வேட்பாளராக போட்டியிட்ட சேதுபதிக்கு ஓட்டுப்போட்ட குற்றத்துக்காக தேவேந்திரகுல  மக்களிடம் உடனடியாக கடனை வசூலிக்குமாறு தமது சாதியினருக்கு கட்டளையிட்டார். ஒரு சப் மாஜிஸ்டிரேட் கொல்லப்பட்டதும், டிஎஸ்பி ஒருவருக்கு காலில் வெட்டு விழுந்த்தும் இந்த கலவரத்தில் நடந்தது.
1957 தேர்தலில் கூட இப்படி ஆன பிறகும் கலவரம் நடத்தினார் தேவர். காமராசர் தமிழக முதல்வராக வந்ததை இழிவாக பார்க்கும் வகையில் அவருக்கு ஓட்டுரிமை பெறுவதற்காக சொத்து வாங்கிக் கொடுத்ததே தன்னால்தான் என்பதை அடிக்கடி வலியுறுத்தி வந்தார். காமராசர் ஆட்சியில் விருதுநகர் நாடார்கள் கள்ள நோட்டு அடித்து தமிழகமெங்கும் புழக்கத்தில் விடுவதாக அவதூறு செய்தார். “சாணாப்பய எல்லாம் பிரதமராகி விடுவதும், கைநாட்டுப் பய எல்லாம் மானத்தை வாங்குகிறார்கள்” என்றும் காமராசரைப் பற்றி சாதிவெறி வன்மத்துடன் கூறியிருக்கிறார்.
காமராசர்
குமாரசாமி காமராஜ்
ஒரே நாளில் நாடுமுழுக்க ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை நியமித்து ஆரம்ப கல்விக்கு உதவிய காமராசரது திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக தங்களது பகுதிக்கு பள்ளிகள் வருவதை தடுக்கவும் பேசியிருக்கிறார். இங்கிலீசு படிப்பு சொல்லிக் கொடுத்தால் மதம் அரசிலிருந்து பிரிந்துவிடும் என்று அந்த முருக பக்தர் கூறவும் தவறவில்லை. காந்தியின் சுதந்திரப் போராட்டத்தை விமர்சிக்கும் எவரும் கூட அவரது கொலையை கொண்டாட முடியாது. ஆனால் அதற்காக மறைமுகமான நோக்கத்துடன் கோல்வால்கருக்கு  மதுரையில் பணமுடிப்பு வழங்கி விழா நடத்திவர் தேவர். இந்துமத துரோகி என்று காந்திக்கும் பெயர் சூட்டினார்.
தங்களது உழைப்பு, சுய சாதி சமூக உதவி, சீர்திருத்தம் காரணமாக நாடார் சாதியினர் இன்றும் முன்னேறுவதை நாடே அறியும். 19 ஆம் நூற்றாண்டில் முன்னேற்றம் காணத் துவங்கிய அச்சாதியினருக்கு சமூக அந்தஸ்து ஒன்றும் ஆரம்பத்தில் எளிதாக கிடைத்து விடவில்லை. விவசாயம்,வணிகம் மூலம் முன்னேறிய நாடார் மற்றும் நாயக்கர் சாதியினர்களில் வர்ணாசிரம வரிசையில் கீழ்நிலையில் இருந்த நாடார்கள் மீது முத்துராமலிங்கத் தேவருக்கு ஆண்ட பரம்பரையின் இழந்துபோன வெறுப்பு மேலோங்கி இருந்த்து.
அவரது தேவர் சாதியினரோ நாயக்கர் கால ஆட்சியில் ஊர்க்காவல் வேலையைப் பார்த்து வந்தனர். வெள்ளையரின் முதலாளித்துவ பாணி காவல்துறை எல்லாம் வந்தபிறகு அவர்களுக்கு வேலை இல்லாமல் போகவே அவர்களில் சிலர் திருடுவதை கையிலெடுக்க வேண்டிய அவசியம் வந்தது. எனினும் தேவர் சாதிப் பெண்கள் காடுகளில் பாடுபட்டு உழைத்துக் கொண்டுதான் இருந்தனர். நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த சிவகாசி கலவரம் என்பதே இதுபோல ஆடு திருடும் கள்ளர்களுக்கும், ஆடுகளைப் பறிகொடுத்த நாடார்களுக்குமிடையில்தான் நடந்தது. திருடப் போகும்போதும், கன்னம் வைக்க முதலில் போகும் நபருக்கும் சிறப்பு பூஜைகளையெல்லாம் செய்யுமளவுக்கு திருட்டை சமூகமயமாக்கினர்.
அப்போது சில சாதியினர் குற்றப் பரம்பரையினர் என்று கூறி அரசு கொண்டுவந்த கட்டுப்பாட்டு சட்டத்தினால் அச்சாதி ஆண்கள் எல்லாம் காவல் நிலையங்களில் இராத் தங்க நேரிட்டது. இச்சாதிகளில் முக்குலத்தோரும் இருந்த காரணத்தால் அன்றைய கம்யூனிஸ்டு கட்சியினருடன் சேர்ந்து அச்சட்டத்திற்கு எதிராகப் போராடினார் பசும்போன் தேவர்.
காங்கிரசில் திறமை இல்லாமல் முன்னுக்கு வந்தவர் காமராசர் என்ற கணிப்பு தேவருக்கு நிரம்பவே இருந்தது. குலக்கல்வி திட்டம் கொண்டு வந்த காரணத்தால் பதவி விலக நேரிட்ட ராஜாஜி தனிமைப்பட்டிருந்த வேலையிலும், ஆசி வாங்க வந்த காமராசரிடம் “நீ முதலமைச்சர் ஆகாமல் கட்சித் தலைவனாகவே இருக்கலாமே” என்று கூறினாராம் தேவர்.
சாலைகளை குக்கிராமங்களுக்கும் விஸ்தரிக்க முனைந்தபோது, அது தங்களது நாட்டு அரசுகள் என்ற கட்டப்பஞ்சாயத்துக்கு எதிரானது என்பதால் “நாங்க எல்லாம் இன்றைக்கு அடித்துக் கொள்வோம் நாளை பேசி தீர்த்துக்கொள்வோம். சாலை எல்லாம் போட்டால் போலீசு எல்லாம் ஊருக்குள் வந்து விடும்” என்று கூறி மறவர் நாடுகளில் சாலை போடுவதையே தடை செய்தவர் தேவர். நம்ம வீட்டு கருமறத்திகள் வெயிலிலும் மழையிலும் பாடுபட்டு எடுக்கும் பருத்தியால விருதுநகர், கமுதி சாணாத்திகள் (நாடார் சாதிப் பெண்கள்) காது மூக்கு எல்லாம் தங்கமாக தொங்குகிறது என பொதுக்கூட்டத்திலே பேசி சாதி துவேசத்தை வளர்த்துவிட்டவர்தான் தேவர்.
ஆனால் இதனால் எல்லாம் தேவர்சாதி மக்கள் அனைவரும் நாடார் இனத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொள்ளவில்லை. அவரது கைத்தடிகள்தான் இதுபோன்ற கலவரங்களில் ஈடுபட்டனர். இந்து முன்னணி ராமகோபாலன் இன்று ”முசுலீம் கடையில் வாங்காதே” என முழங்குவதைப் போலவே அன்றும் “சாணார் கடையில் சாமான் வாங்காதே” என முழங்கினார் தேவர். இந்தியா – பாக் பிரிவினையின்போது பாதிக்கப்படும் இந்துக்களுக்கு ஆதரவாக இங்குள்ள முசுலீம்களை விரட்டிவிடவும் வேண்டும் என்றும் பேசியிருக்கிறார் தேவர்.
இமானுவேல் சேகரன்
இமானுவேல் சேகரன்
1957- இல் தேவேந்திரகுல மக்கள் சமூகத்தின் தலைவரான இமானுவேல் சேகரனை தனக்கு சமமாக நாற்காலியில் அமர வைத்து பேச வைத்த காரணத்தாலும், அந்த முதுகுளத்தூர் கலவரத்துக்கு பின்னான சமாதானக் கூட்டத்தில் இமானுவேல் சேகரனது வாத திறமையாலும் வெறியூட்டப்பட்ட முத்துராமலிங்கத் தேவர் வெளியே வந்து ஒரு பள்ளப்பய கூட உட்கார்ந்து பேச வச்சுட்டீங்களே என தனது அல்லக்கைகளிடம் சொல்லவே மூன்று நாள் கழித்து பரமக்குடியில் வைத்து இமானுவேல் சேகரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து வந்த கீழத்தூவல் துப்பாக்கிச் சூடும் அதில் அரசு கடைபிடித்த பிரித்தாளும் சூழ்ச்சியும் தனிக்கதை.
தனது தந்தையிடம் வேலை பார்த்த தேவேந்திரகுல  சமூகத்தை சேர்ந்த சோலைக் குடும்பன் என்பவரையே அடியாளாக பயன்படுத்தி வந்த தேவர் அதை வைத்து தான்தான் தேவேந்திரகுல  மக்களுக்கும் தலைவன் என்றும், இமானுவேல் சேகரன் இல்லை என்றும் பேசினார். அண்ணாத்துரை உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களை வேசி மகன் என்றும் குறிப்பிட்ட்டிருக்கிறார். பொதுவில் அவர் திராவிட இயக்கத்தை பார்ப்பனிய வருணாசிரம கண்ணோட்டத்துடனே கீழானவர்கள் என்பதாக வசைபாடியிருக்கிறார்.
சில தொழிற்சங்க போராட்டங்களை இவர் ஆதரித்தபடியால் ஈர்க்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இவரை ஆதரிக்கவும் செய்தனர். அரசியலற்ற பொருளாதாரவாதமும், காங்கிரசுக்கு வால்பிடிப்பதும் அன்று அவர்களிடம் மேலோங்கிய காரணத்தால் தேவரை ஒரு இடதுசாரியாக தவறாக பார்க்க வைத்தது. முதுகுளத்தூர் கலவரத்தில் குறிப்பிட்ட அளவுக்கு அவரை கேடிகே தங்கமணி போன்றவர்கள் ஆதரித்தும் பேசி உள்ளனர்.
மற்றபடி தேவரின் காமடிகளுக்கு அளவே இல்லை.
நேதாஜி இதோ அங்கே வருகிறார். இங்கே பார்த்தேன். என்றெல்லாம் அடித்து விட்டதும், மடியில்தான் அணுகுண்டு இருப்பதாகவும், நேதாஜி யிடமிருந்து டிரங்கால் வந்தவுடன் முதுகுளத்தூரில் இருந்து மூன்றாம் உலகப்போரை தான் ஆரம்பிக்கப் போவதாகவும், தான் வைத்திருக்கும் மேக்கனடிக் எந்திரத்தால் உலகத்தில் உள்ள தண்ணீரை எல்லாம் பனிக்கட்டி ஆக்க முடியும் என்றும், அதனைக் கொண்டு அமெரிக்க சீன கப்பல்களை எல்லாம் ஆங்காங்கே அப்படியே நிற்குமாறு செய்து அமெரிக்காவை பிடிக்க ஐடியா தன்னிடம் இருப்பதாக சொன்னதும் இருபதாம் நூற்றாண்டு கண்ட தேவரின் காமடிகளில் சில.
தனது சொந்த சாதியினரின் கல்வியையும், நகருக்கு போய்வருவதற்கான வாய்ப்பையும் நாடாரான காமராசரை எதிர்க்க வேண்டும் என்ற தனது ஈகோவிற்காக பலிகொடுத்த தேவரை உழைக்கும் தேவர் சாதியினரோ அல்லது முன்னேற நினைக்கும் அச்சாதி அபிமானிகளோ கூட போற்ற முடியாது. இன்றும் மற்ற சாதியினர் படித்து பல்வேறு வேலைகளுக்கு போக முடிந்த வேளையில் கூட ரவுடிகளாவும், கொஞ்சம் முயற்சி செய்தால் போலீசாகவும் மட்டுமே போக முடிந்த அளவுக்குத்தான் மதுரையை சுற்றிலும் அச்சாதியின மக்களில் கணிசமானர் இருக்கின்றனர். இதற்கு ஒருவகையில் காரணமான தேவரை அம்மக்கள் குருபூசை நடத்தி கவரவிப்பது வியப்பாகவே உள்ளது.
நோயை சரிசெய்ய வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய்த போது, இறைவன் கொடுத்த உடம்பில் இறைவனே அளித்த நோயை மனிதர் சரிசெய்வதா என்று கூறி அதற்காக ஆபரேஷனே செய்துகொள்ளாமல் செத்தவர்தான் தேவர் திருமகன்.
ஆதாரம்:
1) தேர்தல் மேடைகளில் பசும்பொன் தேவர் – தொகுப்பு கே.ஜீவபாரதி
2)
பசும்பொன் தேவரும் கம்யூனிஸ்ட்களும் – தொகுப்பு கே.ஜீவபாரதி
3)
பசும்பொன் தேவரின் கட்டுரைகள் – தொகுப்பு கே.ஜீவபாரதி
4)
சட்டப்பேரவையில் பசும்பொன் தேவர் – தொகுப்பு கே.ஜீவபாரதி
5)
பசும்பொன் தேவரும் திராவிட இயக்கங்களும்- தொகுப்பு கே.ஜீவபாரதி
6)
சட்டப் பேரவையில் தேவர் பற்றிய சதி வழக்கு – தொகுப்பு கே.ஜீவபாரதி
90களில் ஜெயா சசி கும்பல் ஆட்டம் போட்ட காலம் முதல் தேவர் சாதி வெறி அதிகார அமைப்புகளிலும், அரசியலிலும் வெகுவாக செல்வாக்கு செலுத்துகிறது. ஆனால் இந்த தேவர் சாதி வெறியின் மூலம் சாதாரண உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த தேவர்களுக்கு என்ன பயன் கிடைத்திருக்கிறது?
தேவர் சாதியினர் நடத்தும் சுயநிதிக் கல்லூரிகளில் தேவர் சாதி மக்களுக்கு இலவச கல்வி வழங்ப்படுகிறதா? ஆம்னி பேருந்துகளில் ஐம்பது சதம் தள்ளுபடி தரப்படுகிறதா? தேவர் சாதியினர் கந்து வட்டித் தேவர்களிடம் கடன் வாங்கினால் வட்டியில்லாமல் அனுமதிக்கப்படுகிறதா? இல்லை சேதுராமலிங்கத்தின் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தேவர் சாதி மக்களுக்கு மலிவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? எதுவுமில்லையே?
இப்படி இருக்கையில் இந்த சாதி உணர்வால் என்ன பயன்? தேவர் சாதி நண்பர்கள் பரிசீலிக்க வேண்டும். வாழ்க்கைப் பிரச்சினைகள் அதிகரித்து வரும் காலத்தில் சாதி கடந்து உழைக்கும் வர்க்கமாய் நாம் ஒன்றிணைய வேண்டிய தருணத்தில் இந்த சாதிப் பிரிவினைகளும், ஆதிக்க சாதி மனப்பான்மைகளும் நம்மை பிரித்து முடக்குகிறது. சம்பந்தப்பட்டவர்கள் பரிசீலத்து மாற்றிக் கொள்ளட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக