ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

முத்துராமலிங்கத்திற்கு வக்காலத்து! பரமக்குடி துப்பாக்கி சூட்டிற்கு கண்டனம்! பெ.தி.கவின் இரட்டை வேடம்!

பெரியார் திராவிடர் கழகம் (பெ.தி.க) நடத்தி வரும் மரணதண்டனை ஒழிப்பு பிரச்சாரப் பயணத்தின் ஒரு பகுதியாக சென்னை இராயப்பேட்டையில் செப்டம்பர் 20 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் பேரா.தீரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு, மதிமுக வைகோ, கொளத்தூர் மணி (பெ.தி.க), காஞ்சி மக்கள் மன்றம் உள்ளிட்ட பலர் அக்கூட்டத்தில் பேசினர். அக்கூட்டத்தில் பெ.திக மூத்த தலைவர், வழக்கறிஞர் துரைசாமி பேசியதில் இருந்து:

“ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் பொய்வழக்கு சோடனை செய்யப்பட்டிருந்தது. இதனை விசாரிக்க ஆரம்பிக்கும் முன் நான் இவ்வாறு சொன்னேன். 1957 ஆம் ஆண்டு இம்மானுவேல் சேகரன் கொலை வழக்கில் முத்துராமலிங்கத் தேவர் கைதாகி இருந்தார். அவ்வழக்கில் முத்துராமலிங்கத் தேவருக்கு எதிராக 100 அரசு சாட்சியங்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள். வழக்கை மதுரையிலோ ராமநாதபுரத்திலோ வைத்து நடத்த இயலாத சூழ்நிலை. புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடந்தது. நாடே எதிர்பார்த்த வழக்கு அது. முத்துராமலிங்கத் தேவருக்கு தூக்கு தண்டனைதான் கிடைக்கும் என எதிர்பார்ப்பில் இருந்தார்கள். அரசு தரப்பில் பப்ளிக் ப்ராசிக்யூட்டராக பாரிஸ்டர் எத்திராஜ், எத்திராஜ் கல்லூரியின் நிறுவனர் ஆஜரானார். அவர் எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிட்டார். நீதிபதியைப் பார்த்து, ‘இந்த வழக்கு பொய் வழக்கு. சாட்சிகள் எல்லாம் அரசால் ஜோடிக்கப்பட்டுள்ளனர். சாட்சியங்களில் இருவர் கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் ஆவர். எனவே இந்தப் பொய்வழக்கில் இருந்து தேவரை விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அரசு தரப்பே அவ்வழக்கைப் பொய் வழக்கு எனச் சொன்னதால் வழக்கு தேவருக்கு ஆதரவாகத் தீர்ப்பானது.. ஆகவே நீதிபதி அவர்களே, எப்படி தேவர் வழக்கை ஜோடித்தார்களோ அதே போல பொய்களால் புனையப்பட்ட இந்த வழக்கினையும் ஜோடிக்கப்பட்ட வழக்காகவே கருத வேண்டும் என நான் வாதாடினேன்”

இப்பேச்சினை அடுத்துப் பேசிய கொளத்தூர் மணி, துரைசாமியின் இந்தக் கருத்தை மறுத்து ஏதும் பேசவில்லை. வைகோவும் இதைக் குறிப்பிடவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு, இப்பேச்சின்போது மேடையில்தான் இருந்தார். அவரிடமும் எதிர்ப்பேதும் வரவில்லை.

இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிக்க வந்த தாழ்த்தப்பட்டோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி ஜெயா அரசு 7 பேர் உயிரைப் பறித்தெடுத்துள்ளது. இதைக் கண்டித்தும் பெரியார் தி.க அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ஆனால் இவர்களின் மூத்த உறுப்பினரும், நாடறிந்த வழக்கறருமான துரைசாமி இம்மானுவேல் சேகரன் கொலை வழக்கையே பொய் வழக்கு என பகிரங்கமாக பேசுகிறார். அதைவிட இந்த வெட்கம் கெட்ட விசயத்தை வைத்து மூவர் தூக்கையும் எதிர்க்கிறார்.

ஆக இம்மானுவேல் சேகரனை பகிரங்கமாக ஆள்வைத்துக் கொன்ற முத்துராமலிங்கத்தை ஒன்னுமே தெரியாத அப்பாவி என்பதுதான் பெ.தி.கவின் நிலைப்பாடா? அது உண்மையெனில் இப்போது பரமக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து அவ்வியக்கத்தினர் பேசுவது நாடகமா? சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்கட்டும். என்னதான் சாதி எதிர்ப்பு, தலித் ஆதரவு என்று பேசினாலும் உண்மை என்னவோ இப்படி பச்சையாக வெளிவருகிறதே? பெ.தி.க சுயவிமரிசனம் செய்து கொள்ளுமா? பேசியவரை கண்டிக்குமா? பேசியவரை கண்டிக்காமல் மேடையில் அமைதி காத்த பெருந்தலைகளை கண்டிக்குமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக