ஞாயிறு, 18 செப்டம்பர், 2011
பரமக்குடி கலவரம்?
FILEஜான் பாண்டியன் வந்தால் சட்டம் ஒழுங்கு கெடும் என்று முன்னெச்சரிக்கையாக காவல் துறை கைது செய்தது, பிறகு ஏன் கலவரம் நடந்தது? ஆக, சட்டம் ஒழுங்கு யாரால் கெடும் என்பதை காவல் துறை சரியாக கணிக்கவில்லை என்பது புலனாகிறதே. கலவரம் ஏற்படும் என்று கணித்தால், அதனை முனையிலேயே தடுக்கும் வல்லமையோடுதான் - கூடுதல் படைகளை கொண்டு வந்து நிறுத்தி, அப்படி ஒரு சூழல் ஏற்படும் போது நிலைமையை கையாள வேண்டும். அதைச் செய்யாமல், ஜான் பாண்டியனை கைது செய்ததன் மூலம் கலவரத்திற்கு வித்திட்டுவிட்டது அல்லது கலவரம் நிகழ்த்த திட்டமிட்டிருந்தவர்களுக்கு வழியேற்படுத்தித் தந்துவிட்டது. இதன் விளைவே 7 பேரின் உயிர் பறிப்பு. சமூகத்தின் அடித்தட்டு மக்களான தாழ்த்தப்பட்ட மக்களில் 7 பேரின் குடும்பம் இப்போது நடுத்தெருவில்!
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட முறை தவறானதே
கலவரத்தில் ஈடுபட்டவர்கள் காவல் வாகனங்களை தீ வைத்துக் கொளுத்தினர், அங்கிருந்த கடைகளுக்கு தீ வைத்தனர், காவல் துறையினர் மீது கட்டைகளையும், கற்களையும் வீசித் தாக்கினர். எனவே கலவரத்தை ஒடுக்க முதலில் தடியடி நடத்தி, பிறகு கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கட்டுப்படுத்த முடியாததால் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர், அதற்குப் பிறகும் கலவரம் அடங்காததால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று எப்போதும் கூறும் கதையை காவல் துறையினர் கூறியுள்ளனர்.
அவர்களின் முதல் தவறு, சனிக்கிழமை அங்கு ஒரு தாழ்த்தப்பட்ட மாணவர் கொல்லப்பட்டதால் பதற்றம் நிலவிய சூழலில், கலவரத்திற்கான வாய்ப்பு உள்ளது என்று கணித்த காவல் துறையினர், அதனை முளையிலேயே முடக்கும் அளவிற்கு போதுமான படைகளை இறக்கியிருக்க வேண்டும். அதைச் செய்யவில்லையே, ஏன்? இரண்டாவதாக, துப்பாக்கிச் சூடு நடத்தித்தான் கலவரத்தை கட்டுப்படுத்த வேண்டுமெனில், எதற்காக தலையை நோக்கியும், மார்பைக் குறி வைத்தும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது? கலவர சூழலை கட்டுக்குள் கொண்டு வர ஒரு அச்சுறுத்தலாகவே துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டும் என்பது கட்டளை. அப்படிச் சுடும்போதும், முழுங்காலைக் குறிவைத்தே சுட வேண்டும் என்று காவல் துறையினருக்கான நடைமுறைக் கையேடு (Drill Manual) கூறுகிறது. இதனை மனித உரிமையாளர்களும், நீதிமன்றங்களும் பலமுறை எடுத்துக் கூறிவிட்டன. அப்படியிருந்தும், நடைமுறையைக் கையேட்டிற்கு முரணாக முழங்காலுக்கு மேல் குறிவைத்து சுட்டது ஏன்? அதன் விளைவுதானே 7 பேர் உயிர் பறிப்பு? இது திட்டமிட்ட கொலையல்லவா? இதற்குத்தான் தமிழக காவல் துறையும், தமிழக அரசும் பதில் கூற வேண்டும்.
தமிழக அரசு விசாரணை ஆணையத்தை அமைத்திருக்கிறது. பத்தோடு பதினொன்று. இதனால் வெளிவரவுள்ள உண்மை எந்த உயிரையும் திரும்ப அளிக்கப்போவதில்லை. எனவே, இதன் பிறகாவது, சொந்த நாட்டு மக்களை, சட்டம் ஒழுங்கு என்ற பெயரில் சுட்டுப் பொசுக்குவதை காவல் துறை நிறுத்த வேண்டும். விடுதலை பெற்று 64 ஆண்டுகள் ஆகிவிட்டது, எத்தனையோ விடயங்கள் இந்த நாட்டில் மாறிவிட்டது. ஆனால் காவல் துறை மட்டும் இன்னமும் வெள்ளைக்கார காலத்து அடக்குமுறைத் துறையாகவே உள்ளது. அதன் பார்வையும் அணுகுமுறையும் மாற வேண்டும், மாறாதவரை இப்படிப்பட்ட கலவரக் கொலைகள் எதிர்காலத்திலும் நடக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக