செவ்வாய், 20 செப்டம்பர், 2011

ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் செல்வதை போலீசார் தடுக்கக்கூடாது: ஜான்பாண்டியன் வழக்கு

பரமக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காக ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் நான் செல்வதை போலீசார் தடுக்கக்கூடாது என்று உத்தரவிடக்கோரி ஜான்பாண்டியன் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் ஜான்பாண்டியன், வக்கீல் ஆர்.ஆனந்த் மூலம் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:- பரமக்குடியில் உள்ள இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் நானும், எனது கட்சியினரும் அஞ்சலி செலுத்துவதற்காக கடந்த 11-ந் தேதி பகல் 3 மணி முதல் 5 மணி வரை போலீசாரால் நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதற்காக நெல்லையில் இருந்து புறப்பட்ட என்னை போலீசார் தடுத்து நிறுத்தி வல்லநாடு துப்பாக்கி சுடும் மையத்தில் காவலில் வைத்தனர். காரணம் கேட்ட போது, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் 144 தடை உத்தரவு பிறப்பித்து இருப்பதாக கூறி அந்த உத்தரவு நகலை போலீசார் வழங்கினர். என்னை போலீசார் காவலில் வைத்த விசயத்தை அறிந்த எனது கட்சியினர் பரமக்குடியில் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அப்போது தான் போலீசார், மனிதாபிமானமற்ற முறையில் துப்பாக்கியால் சூடு நடத்தி உள்ளனர். இதில் 6 பேர் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காக செல்ல விடாமல் போலீசார் என்னை தடுத்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் சென்றால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரிக்கின்றனர். 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாக கூறி, என்னை போலீசார் ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கின்றனர். 144 தடை உத்தரவை பொறுத்தமட்டில் பேரணியாகவோ அல்லது ஊர்வலமாகவோ செல்லக்கூடாது. பொதுக்கூட்டம் நடத்தக்கூடாது. நான் எனது கட்சி நிர்வாகிகள் 6 பேருடன், 2 கார்களில் மட்டுமே செல்ல திட்டமிட்டுள்ளேன். அதுபோன்று செல்ல அனுமதி மறுப்பது எனது உரிமையை தடுக்கும் செயலாகும். எனவே எனது உரிமையில் தலையிட்டு, எனக்கு போலீசார் தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும். துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காக ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் செல்வதை போலீசார் தடுக்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக