வியாழன், 15 செப்டம்பர், 2011

பரமக்குடி சம்பவத்தில் தென் மண்டல ஐஜி மீதுதான் முழுத் தவறும்- ஜான் பாண்டியன் புகார்

நெல்லை: பரமக்குடி, மதுரையில் நடந்த சம்பவங்கள் முழுக்க காவல்துறை நடத்திய திட்டமிட்ட நாடகமாகும். அரசுக்கு தவறான தகவல் கொடுத்து கலவர சம்பவத்திற்கு காரணமாகி துப்பாக்கி சூடும் நடத்தி 7 பேர் உயிரை எடுத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு முழு காரணம் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. ராஜேஷ் தாஸ்தான். இவரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் கோரியுள்ளார். போலீஸ் காவலிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ஜான் பாண்டியன் பின்னர் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பரமக்குடியில் நடைபெற்றது இன கலவரம் அல்ல. சிலரின் தூண்டுதலின் பேரிலும் காவல்துறை அதிகாரிகளின் தவறான நடவடிக்கை காரணமாக துப்பாக்கி சூடு நடைபெற்று 7 பேர் பலியாகியுள்ளனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகளை வைத்து விசாரிக்க வேண்டும். பலியான குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பலியானவர்களின் குடும்பத்தினரை சென்று பார்த்து ஆறுதல் சொல்ல கூட போலீசார் அனுமதி தர மறுக்கின்றனர். இதனால் நீதிமன்ற அனுமதியோடு அவர்களை சந்தித்து ஆறுதல் கூற செல்லவுள்ளேன். இந்த சம்பவங்கள் முழுக்க காவல்துறை நடத்திய திட்டமிட்ட நாடகமாகும். வேண்டும் என்றே அரசுக்கு தவறான தகவல் கொடுத்து கலவர சம்பவத்திற்கு காரணமாகி துப்பாக்கி சூடும் நடத்தி 7 பேர் உயிரை எடுத்துள்ளனர் . இந்த சம்பவத்திற்கு முழு காரணம் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. ராஜேஷ் தாஸ். இவர் மீது தமிழக அரசு துறை ரீதியான நடவடிக்கை எடுத்து நிரந்திர பணிநீக்கம் செய்ய வேண்டும். இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை சீர் குலைக்கும் விதத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட துயர சம்பவம் இது . அதே போல் மதுரையில் அமைதியாக வேனில் சென்று கொண்டிருந்தவர்களை வேண்டும் என்றே இறக்கி துப்பாக்கியால் இரண்டு பேரை சுட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் மீது தமிழக அரசு கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும். ஏன் சுட்டீர்கள் என்று கேட்டதற்கு பெண் போலீஸ் கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ததாக கூறுகின்றனர் பட்டப் பகலில் இதுபோன்ற சம்பவத்தில் யாராவது ஈடுபடுவார்களா? விரைவில் அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து பரமக்குடி மற்றும் மதுரையில் நடைபெற்ற சம்பவம் குறித்து அங்குள்ள நிலவரங்களை அவர்களே அறிந்து அறிக்கையாக அரசுக்கு சமர்பிக்கவுள்ளோம். நடைபெறவுள்ள எங்கள் கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம். பரமக்குடியில் மாணவன் கொலைக்கு காரணம், பசும்பொன் முத்துராமலிங்கதேவர் குறித்து தவறான வாசகம் எழுதப்பட்டதால்தான். இதனால்தான் அங்கு கலவரம் நடைபெற்றதாக முதல்வர் சட்டசபையில் கூறிய கருத்து தவறானது. அப்படி ஒரு வாசகம் அங்கே எழுதப்படவில்லை. காவல்துறையினர் தவறான தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் சட்டசபையில் கூறிய முதல்வர் விளக்கம் தவறானது என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக