ஞாயிறு, 23 அக்டோபர், 2011

பரமக்குடியில் காவல்துறை 6 பேரை சுட்டுக் கொன்றது.


இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தச் சென்ற தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்டதையடுத்து, பரமக்குடியில் நடந்த சாலை மறியல் வன்முறையாக உருவெடுத்தது. அப்போது காவல்துறை 6 பேரை சுட்டுக் கொன்றது.
அதிகாரத்தின் வாயிலாக நிகழ்த்தப்பட்ட அரச பயங்கரவாதம் குறித்து ஆய்வுசெய்ய, சமூகப் பொறுப்பும் படைப்பு மனமும் கொண்ட பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள், ஆய்வு மாணவர்களை உள்ளடக்கிய ஒரு குழு அமைக்கப்பட்டது. அமெரிக்கன் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம், மதுரை காமராஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் தர்மராஜன், அன்புச்செழியன், எழுத்தாளர்கள் ஆதவன் தீட்சண்யா, அ.முத்துக்கிருஷ்ணன், ரேவதி, சந்திரா, கவின்மலர், ஓவியர் சந்துரு, வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், பகத்சிங், மக்கள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார், சுரேஷ், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்றப் பதிவாளர் பரமக்குடி ந.சேகரன், எஸ். அர்ஷியா உள்ளிட்டோர் அக்குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, தங்கள் மன வருத்தத்தை வெளிப்படுத்தினர். சம்பவம் நடந்த இடங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதிகாரிகளை சந்தித்துப் பேசினர்.
அதையொட்டி எழுதப்பட்டக் கட்டுரை இது...
ஆதிக்க சக்திகளின் எண்ணங்களும்...
சாதியத்தின் வீரியமும்...
அதிகார வன்முறை
கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி, தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியம் குறித்த விவாதம் நடந்தது. காவல்துறையை தன்வசம் வைத்திருக்கும் முதல்வர் ஜெயலலிதா, விவாதத்திற்கு பதிலளித்துப் பேசினார். குரலில் பெருமிதம் இருந்தது. அவர் பேசியது, இது தான். "மெட்ராஸ் போலிஸ் முறையாக அமைக்கப்பட்டு, ஒண்ணரை நூற்றாண்டு ஆகின்றது. இன்றைய தமிழகக் காவல்துறை நவீனமடைந்துள்ளது. மரபான பாரம்பரியமும் கொண்டுள்ளது. 1991 முதல் 1996 வரை நான் முதல்வராக இருந்த எனது முதல் ஆட்சியின் காலகட்டத்தில்தான் மாநிலக் காவல்துறை நவீனமாக்கப்பட்டது. தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்தவர்கள் முதிர்ந்த மனிதத்துடனும் நவீனத்துவத்துடனும் பொது மக்களைக் கனிவாக அணுகி, அவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டுவருகிறார்கள்!"
அவர் பேசி, சரியாகப் பத்தொன்பது நாட்கள்தான் கடந்து போயிருக்கின்றன. முதல்வர் தமிழக சட்டப்பேரவையில், என்ன சொல்லி மகிழ்ந்துப் பேசினாரோ, அதற்கு நேர்மாறாக மிருகவெறி யுடனும் நவீன ஆயுதங்களுடனும் கூடியிருந்த பொதுமக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 6 பேரைக் கொன்று, செப்டம்பர் 11 ஆம் தேதி பகல் 12 மணியளவில், முதல்வரின் பெருமிதத்தைச் சிதைத்து அவமரியாதைக்கு உள்ளாக்கியது, தமிழகக் காவல்துறை.
1957 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி, பரமக்குடியில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டுவிட்டு இரவு 9 மணியளவில் வீடு திரும்பிய இமானுவேல் சேகரனை 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடியது. படுகொலை செய்யப்பட்ட அந்தநாளை, தேவேந்திர குல வேளாள மக்கள், 'ஆதிக்க சக்திகளிடமிருந்து தங்கள் சமூகம் மீளப்பெற கடுமையாக உழைத்த' இமானுவேல் சேகரனின் நினைவுநாளாக, கடந்த 54 ஆண்டுகளாக அனுசரித்து, அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்த ஆண்டும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டு வந்தது.
இமானுவேல் சேகரனின் கல்லறை, பரமக்குடி நகரின் பேருந்து நிலையத்தையடுத்த ஒரு குறுகிய தெருவின் கடைசியில், ரயில் தண்டவாளத்துக்கு முன்புள்ள பராமரிக்கப்படாத ஒரு கல்லறைத் தோட்டத்துக்குள் இருக்கிறது. பிற சாதித் தலைவர்களின் நினைவிடங்களைப் போல, தனித்த இடமாக அது இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்சிக்காக, சுயம்புவாக உருவாகிய அந்தத்தலைவரின் சமாதிகூட மக்களிடமிருந்து அந்நியப்படாமல், மற்ற சமாதிகளுக்கு இடையிலேயே இருக்கிறது.
நினைவு தினத்துக்கு, முதல்நாளிலிருந்தே தேவேந்திர குல வேளாள மக்களும் அரசியல் கட்சி களின் தலைவர்களும் முக்கியப் பிரமுகர்களும் வரத்துவங்கினார்கள். மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டுப் போனார்கள். அதுபோலத்தான் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தின் தலைவர் ஜான் பாண்டியன் செப்டம்பர் 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று அஞ்சலி செலுத்தப் புறப்பட்டு வந்துகொண்டிருந்தார். அவருக்கான நேரம் மாலை 3 மணியிலிருந்து 5 மணிவரை காவல்துறையால் அனுமதிக்கப்பட்டிருந்தது. முன்கூட்டியே வழங்கப்பட்ட அனுமதியையொட்டித்தான் அவரது பயணம் அமைந்தது.
புறப்பட்டு கொஞ்ச நேரத்திலேயே ஜான் பாண்டியன் காவல் துறையினரால் வழி மறிக்கப்படு கிறார். அவரது பயணத்துக்குத் தடை விதிக்கப்படுகிறது.
காரணமற்றத் தடையைக் கண்டித்து, ஜான் பாண்டியன் வாக்குவாதம் செய்து, பயணத்தைத் தொடர முயற்சி செய்தபோது, அவர் கைது செய்யப்படுகிறார். ஏற்கனவே முறையான அனுமதி வழங்கியிருந்தக் காவல்துறை, அவரது கைதுக்கு இப்போது சொன்ன புதிய காரணம்: 09092011 அன்று கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவன் பழனிக்குமார் வீட்டுக்கு அஞ்சலி செலுத்த ஜான் பாண்டியன் செல்லக்கூடும். சென்றால்... அதனால் அசம்பாவிதம் ஏற்பட்டு விடும்.
மண்டல மாணிக்கம் எனும் ஊருக்கு அருகேயுள்ள பள்ளப்பச்சோந் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேலு என்பவரின் மகன் பிளஸ் ஒன் மாணவன் பழனிக்குமார், அருகேயுள்ள முத்துராமலிங்க புரத்தில் நடந்த நாடகத்தைப் பார்த்துவிட்டு நள்ளிரவில் ஊர் திரும்பும்போது 09092011 அன்று கொலை செய்யப்பட்டார். இப்படியான அசம்பாவிதங்கள் நடந்துவிடும்போது பாதிக்கப் பட்டவர்களின் வீட்டுக்குச் சென்று தலைவர்கள், பிரமுகர்கள் ஆறுதல் சொல்வது வழக்கத்தில் உள்ளது. அதைத் தடைசெய்வதுபோல காவல்துறையின் புதிய காரணம் உள் அர்த்தம் கொண் டதாக இருக்கிறது.
இமானுவேல் சேகரனின் நினைவு நாளுக்கு முன்பாக, தேவேந்திர குல வேளாளச் சமூகத்தைச் சேர்ந்த யாரையாவது, பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொலை செய்து, மாவட்டம் முழுவதும் பதற்றத்தை உருவாக்கிவிடுவது நீண்டகாலமாகவே வழக்கத்தில் இருந்துவருகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டில் மட்டும் அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை என்பது சற்றே ஆறுதல் தரும் விஷயம்.
ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்டதுடன் மாவட்டம் முழுவதும் 144 தடை விதிக்கப் படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்ட சம்பவம் அவரது ஆதரவாளர்களுக்கு தெரியவந்ததும், அவர்கள் ஜான் பாண்டியனை விடுதலை செய்யக் கூறி, பரமக்குடி ஐந்து முனை ரோட்டில் கூடுகிறார்கள். ஐந்து முனை ரோடு என்பது பரமக்குடி நகரின் இதயப் பகுதி. பிற மாவட்டங்களிலிருந்து மட்டுமன்றி உள்ளூர்காரர்களே நகருக்குள் நுழையவும் வெளியேறவும் அந்த இடத்தைக் கடந்துதான் ஆகவேண்டும்.
ஏற்கனவே அந்த இடத்தில் காவல்துறையின் உயர் அதிகாரியிலிருந்து சாதாரணக் காவலர் வரை குவிந்து நிற்கிறார்கள். கூட்டத்தின் மீது தண்ணீர் பாய்ச்சிக் கலைக்கும் வஜ்ரா வாகனமும் அங்கிருக்கிறது. சென்னையிலிருந்து சிறப்புச் சேவைக்காக செந்தில்வேலன் எனும் காவல் அதிகாரியும் வந்திருந்தார்.
ஜனநாயக ரீதியில் தங்கள் தலைவரை விடுதலை செய்யக்கூறி, சாலை மறியல் செய்வதெல்லாம் எங்கேயுமே சகஜமான ஒன்றுதான். இதற்கு முன்பும் பல இடங்களில் பலமுறை நடந்திருக் கிறது. அதுதான் பரமக்குடியிலும் நடைபெற்றது.
144 தடையைப் பற்றி அறியாத பொதுமக்கள், ஜான் பாண்டியன் ஆதரவாளர்களின் சாலை மறியலை வேடிக்கைப் பார்த்தபடியே கடந்துபோகிறார்கள். அவர்களின் அன்றாடப் பாடு ஒன்றும் அங்கே தடைபடவில்லை. செய்தி கேள்விப்பட்டு ஜான் பாண்டியனின் ஆதரவாளர்கள் மேலும் சிலர் அங்கே கூடுகிறார்கள். அப்போதும்கூட குவிக்கப்பட்டிருந்தக் காவலர்களின் எண்ணிக்கைதான் அங்கே அதிகமாக இருந்தது. காவலர்களின் எண்ணிக்கை சாலை மறியல் செய்தவர்களுக்கு மிரட்சியைத் தந்தாலும் அவர்கள் மிரண்டு கலையவில்லை. விடுதலை செய்யச் சொல்லி தொடர்ந்து குரல் எழுப்புகிறார்கள்.
அப்போது பரமக்குடி காவல் ஆய்வாளர் சிவகுமார், ஆயுதப்படை துணை ஆய்வாளர் கந்த முனியசாமி, காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கணேசன், துணை ஆணையர் செந்தில் வேலன் ஆகியோர் அவர்களைக கலைந்துபோகச் சொல்லி பேசினார்கள். அவர்கள் கலைய வில்லை. உரிய அதிகாரிகளை வைத்து பேச்சு வார்த்தை எதுவும் அவர்களிடம் நடத்தாத காவல் துறை அதிகாரிகளில் செந்தில் வேலன், நிராயுதபாணியாக இருந்து சாலை மறியல் செய்தவர் கள் மீது திடீரென்று தாக்குதலைத் தொடங்கியதும் மற்றவர்கள் எதிரே இருந்தவர்களை ரவுண்டு கட்ட ஆரம்பித்துவிட்டனர். இதை எதிர்பார்த்திராத சாலைமறியல் செய்தவர்கள் நாலா புறமும் சிதறி ஓடி... கையில் கிடைத்ததையெல்லாம் எடுத்து காவல்துறை ஆட்கள் மீது எதிர்தாக்குதல் நடத்த...
திடீரென்று துப்பாக்கிகள் முழங்கும் சத்தமும், போலிஸ் பூட்ஸ்களில் கல்லும் மண்ணும் நெறிபடும் சத்தமும் ஒருபுறம் எழ, மறுபுறம் குண்டடிபட்டுக் கீழேவிழுந்து கதறும் ஓலமும், அதைப் பார்த்து மரண பீதியில் அலறிக்கொண்டு மக்கள் ஓடும் அவலமும் நடந்தேறியது.
மக்கள் சகஜமாக வந்துபோய்ப் புழங்கிக் கொண்டிருக்கும் ஓரிடம், கொஞ்ச நேரத்தில் காவல் துறையினரால் எதிர்த்து நிற்க ஆளில்லாதப் போர்க்களமாக ஆக்கப்பட்டிருந்தது. ஐந்து முனை ரோட்டில் எங்கு பார்த்தாலும் கற்கள். அறுந்த செருப்புகள். கிழிந்த ஆடைகள். அடித்து உடைக் கப்பட்ட சைக்கிள்கள். இருசக்கர மோட்டார் வாகனங்கள். கிழித்து வீசப்பட்டு கொழுந்துவிட்டு எரிந்த பிளக்ஸ்கள். கிழித்துக் கொண்டுவரப்பட்ட பிளக்ஸ் துணிகளால் மூடப்பட்ட பிணங்கள். துப்பாக்கிச் சூட்டுக்கு முன்பு, தங்கள் சொந்தவேலை விஷயமாக ஐந்துமுனை ரோட்டைக் கடந்து, சாலை மறியலை வேடிக்கைப் பார்த்தபடி போனவர்கள் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்தார்கள்.
உக்கிரமடைந்தக் காவல்துறை கண்ணில் பட்டவர்களையெல்லாம் விரட்டிவிரட்டி அடித்தது. மண்டை உடைந்தவர்கள்; கைகால்களில் சதை பிய்ந்துத் தொங்கியவர்கள்; கால் உடைந்தவர் கள்; புட்டத்திலும் முதுகிலும் அடிவாங்கி அலறியபடி ஓடி ஒளிந்தவர்கள்; கை ஓயாத காவல் துறை நகரின் நாலாபக்கமும் சுழன்று அசுர ஆட்டம் ஆடியது.
காக்கித் தாண்டவம் முடிந்து நகரம் நாசமாகி வெறிச்சோடியபோது, ஊருக்குள் வந்தவர்களைத் தேடி வரும் உறவினர் கூட்டம் பதற்றத்துடன் ஒவ்வொரு இடமாய் அலைந்து திரிந்தது. காயம் பட்டவர்களையோ... குண்டடிபட்டுச் செத்துக் கிடந்தவர்களையோ... அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. அவர்கள் வருவதற்கு முன்பாகவே அடையாளமற்றுச் செத்துக் கிடந்த வர்களை ஆளுக்கு ஒரு கைபிடித்து காவல்துறையே அப்புறப்படுத்தி, அங்கிருந்த பிளக்ஸ் களையே கிழித்து மூடிப்போட்டிருந்தது. தரையில் பிளக்ஸ்களுக்குக் கீழே மறைக்கப்பட்டிருந்த பிணங்கள் யார் கண்ணுக்கும் தட்டுப்படவில்லை. அவர்கள் வேறு இடங்களைத் தேடியோ... 'அப்பாடா... நம்மாளுக்கு ஒண்ணும் ஆகலை' என்றோ ஆறுதல்பட்டுக்கொண்டு போனார்கள். ஆனால் அந்த ஆறுதல் நெடுநேரம் நீடிக்கக் கூடியதாக இருக்கவில்லை.
நடந்த முடிந்த இந்த சம்பவம் இருவேறு சாதிகளுக்கு இடையிலான மோதல் இல்லை என்பதை கவனிக்க வேண்டும். அதற்கான பலிகளும் இல்லை. இது கைது செய்யப்பட்ட தலைவரை விடுதலை செய்யச் சொல்லி, சாலை மறியல் செய்த தேவேந்திர குல வேளாள மக்கள் மீது காவல்துறை நடத்திய அதிகாரத் தாக்குதல்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30 ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் கமுதிக்கு அருகிலிருக்கும் பசும்பொன்னில் நடக்கும் உ.முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை, அரசு விழாவாக நடத்தப்படுகிறது. அதற்கு தமிழகத்திலுள்ள அத்தனை அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பிறமாநில அரசியல் பிரமுகர்களும் வந்துபோகிறார்கள்.
முக்குலத்து இனமக்கள் உ.முத்துராமலிங்கத் தேவரை வழிபடுவதுபோல தேவேந்திர குல வேளாள மக்கள் இமானுவேல் சேகரனை வழிபடத் துவங்கியுள்ளனர். மக்கள் தொகை எண்ணிக்கையில் முக்குலத்தோரைக் காட்டிலும் தேவேந்திர குல வேளாள மக்களே அதிகமாக உள்ளனர். அவர்கள் தங்கள் இனத் தலைவராகக் கொண்டாடப்படும் இமானுவேல் சேகரனின் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க, அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
1988 ஆம் ஆண்டிலிருந்து தியாகி இமானுவேல் பேரவை, நினைவு நாளை அனுசரித்து வருகிறது. ஆண்டுக்காண்டு இமானுவேல் சேகரனின் கல்லறைக்கு வந்து அஞ்சலி செலுத்து பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இது, அவர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆதிக்க சக்திகளின் கண்ணில் பொறாமையையும் நெஞ்சில் ஆற்றாமையையும் உருவாக்கியிருக்கிறது.
ஆதிக்க Œõதி வட்டாரத்தில் நாலைந்து கிராமங்களை ஒன்றுசேர்த்து 'நாடு' என்று அழைப்பது வழக்கம். அப்படி பலநாடுகள் ராமநாதபுர மாவட்டத்தில் உண்டு. அதில் முக்கியமான ஒரு நாடு, ஆப்ப நாடு. அங்கு ஒரு சங்கம் உண்டு. அதன்பெயர் ஆப்பநாடு மறவர் சங்கம். அந்த சங்கம் சில நாட்களுக்கு முன்பு தனது சாதியினருக்கு ஒரு சுற்றறிக்கை விடுகிறது. நீண்டு செல்லும் அந்த அறிக்கையில் இரண்டு தீர்மானங்களைச் செயல் வடிவாக்கும் அறிவிப்பும் இருக்கிறது. ஒன்று: ஆண்டு தோறும் அதிகரித்துவரும் இமானுவேல் சேகரனின் நினைவு நாளுக்கான கூட்டம் பற்றிய பொருமல். இரண்டு : இமானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிப்பு செய்யவிடாமல் அரசைத் தடுப்பது குறித்துப் பேசுதல் என்று போகிறது. அங்கிருக்கும் பலநாடுகளின் சங்கங்களும் இதுபோன்ற தீர்மானங்களை நெடுநாட் களாகவே கையில் வைத்திருக்கின்றன.
இந்தத் தீர்மானங்களுக்கு அல்லது வரைவுகளுக்குப் பின்னாலிருக்கும் சாதி அரசியல் மிக முக்கியமானது. தேவேந்திர குல வேளாள மக்கள் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளா தார நிலைகளில் படிப்படியாக முன்னேறி வருகின்றனர். சமூகத்தின் பிறநிலைகளில் தேவேந்திர குல வேளாள மக்களுக்கு சமூக மதிப்பு கிடைத்து இருக்கிறது. சாதியத்தின் பேரில் இதுவரை நடந்துவந்த ஆதிக்க அரசியலையும் அதன் மூலம் கிடைத்துவந்த அதிகாரத்தையும் சுயசாதி பெருமிதத்தையும் இந்த வளர்ச்சி இழக்கச் செய்வதாக இருக்கிறது.
அப்படி இழக்கும்போது புதிதுபுதிதாய் யோசிப்பதும், குறிப்பாய் மாற்று சமூகத்துத் தலைவர் களின் சிலைகளை, போஸ்டர்களை அவமதிப்பதும், உடைப்பதும், செருப்பு மாலைகள் சூட்டு வதும், அதன் வாயிலாகக் கலவரங்களுக்கு வழிவகுத்து உயிரைப் பறிப்பதுமாக, சாதியத்தின் இழிவான அரசியல் பன்முகம் காட்டியிருக்கிறது. காட்டியும் வருகிறது. இது எல்லோருக்குமே பொதுவான ஒன்று. அதன் மூலம் சாதியத்தின் கூர்முனை மழுங்கடிக்கப்படாமல் பாதுகாக்கப் படுகிறது. அதுதான் சாதியத்தின் மூலதனம். மூலதனத்தை அரச அதிகாரத்தில் இருப்பவர்கள் பாதுகாப்பதில் கவனமாக இருக்கிறார்கள். அல்லது இருக்க வைக்கப்படுகிறார்கள். இதற்கு இறந்துபோன தலைவர்களின் காலகட்டத்தில் நிலவிய வன்மத்தின் வெப்பம், பொத்திப் பொத்திப் பாதுகாக்கப்பட்டு, அதிகார வேட்கையுடன் திரிபவர்களால் அரசியலுக்கு தீ மூட்டி பயன்படுத்தப்படுகிறது.
சமீபத்தில், நடிகர் விக்ரம் நடித்த ஒரு திரைப்படம் "தெய்வத் திருமகன்' என்ற பெயரில் வெளி யாவதாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது. தெய்வத் திருமகன் என்ற பெயரில் அந்தப் படம் வெளியாகக் கூடாது என்பதில் ஆதிக்க சக்திகள் மும்முரம் காட்டினார்கள். கவனமாக இருந்தார்கள். பெயர் மாற்றம் செய்யப்பட்ட பின்புதான் அந்தப் படம் திரையிட அனுமதிக்கப் பட்டது. அதன் ஒரே காரணம் நடிகர் விக்ரம் பிறந்த Œõதியின் அடையாளம் அவர், தெய்வத் திருமகன் என்ற பெயரில் நடிப்பதை ஆதிக்க சக்திகள் விரும்பவில்லை. அதேவேளையில் தேவர்மகன் என்றொரு படம். ஆதிக்க Œமூகத்திலிருந்து வந்த கமலஹாசன் நடித்து வெளியிடப்பட்டது. மிக உயர்ந்த (?) மேட்டுக்குடியைச் சார்ந்த ஒருவரால் நடிக்கப்பட்டு, தங்கள் தலைவர் பெருமிதப்படுத்தப்படுகிறார் என்பதாலேயே அந்தப் படத்துக்கு ஆதிக்கச் சமூகம் முழு ஆதரவு தந்ததை இங்கே பொருத்திப் பார்க்கலாம்.
சாதியத்தை பெரியார் தன் இறுதிமூச்சுவரை சாடியதுடன் சாதியத்துக்கு எதிரானப் பிரச்சாரத்தை செய்து வந்தார். அவர் வழி வந்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் சரி... அவ்வப்போது அவர் பெயரைச் சொல்லி ஆட்சி செய்பவர்களும் சரி... சுயலாப அரசியலின் இழிவான சாட்சியத்தின் ஆட்சியைத்தான் செய்துவருகிறார்கள். திராவிடக் கட்சிகள் இரண்டுக் குமே சாதியக் கட்சிகளின் தேவை அதிகமாக இருக்கின்றது. தேவையின்போது வரையறுக்கப் பட்ட, திட்டமிட்ட செயல்களால் அரசே வன்முறையை செய்து முடிக்கிறது. அல்லது செய்பவர்களை செய்யவிட்டு வேடிக்கை மட்டும் பார்க்கிறது.
பரமக்குடி சம்பவத்தில், அதிகாரத்தின் வாயிலாக அரச பயங்கரவாதம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இதற்கான உத்தரவு மேலிருந்து வந்ததாக ஒரு கருத்து நிலவுகிறது. அது உண்மைக் கருத்தா... உலவவிட்டக் கருத்தா... என்று ஆராயும் தருணம் இதுவல்ல. என்றாலும் நிறைய சந்தேகங்களையும் மேலிருந்து வந்ததாகச் சொல்லப்படும் கருத்து பூடகமாகக் கொண்டிருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. தொடர்ந்து கீழிருந்துக் கொடுக்கப்பட்டு வந்த Œõதி அழுத்தம் மேலிடத்தின் நிழலை அசைத்திருப்பதையும் அதன் மூலம் இந்த சம்பவத்துக்கான இசைவு வழங்கப்பட்டதாகவும் உணர முடிகிறது.
பரமக்குடி பயங்கரத்தில் மூன்று உயிர்கள் காவல்துறையின் குண்டுகளுக்கு சம்பவ இடத்தி லேயே பலியாகியிருக்கின்றன. இரண்டு உயிர்கள் சதை பிய்ந்து எலும்புகள் முறிந்து வாதை யினால் செத்துப்போயிருக்கின்றன. ஓர் உயிர், சம்பவம் நடந்து ஆறேழு மணி நேரத்துக்குப் பின்பு பரமக்குடியிலிருந்து அள்ளிக்கொண்டு செல்லப்பட்டு, வழியில் இளையாங்குடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறையின் வாகனத்திற்குள் கிடந்து பரலோகம் போயிருக் கிறது.
இந்தப் படுகொலைகளுக்கானப் பின்னணி அரச அதிகாரத்தின் உளவியலிலிருந்து பிறந்திருப் பது கண்கூடு. இதற்கு முன் நிகழ்ந்த நிகழ்வுகளின் ஒட்டுமொத்த எதிர் தாக்குதலாகத்தான் காவல்துறையின் இந்த ப(லி)ழிவாங்கலோ என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது.
கைதுசெய்யப்பட்ட தங்கள் தலைவரை விடுதலை செய்யச் சொல்லி மக்கள் திரள்வது வாடிக்கை. அப்போது உணர்வெழுச்சி உருவாவதும் இயற்கைதான். வன்முறைக்கான சாத்தியமும் உண்டு. அப்போது உருவாகும் வன்முறைப் போக்கைக் கலைப்பதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. அதன் இறுதிவடிவம்தான் துப்பாக்கி. ஆனால், அங்கு திரண்ட மக்களின் உணர்வெழுச்சியான வன்முறைப் போக்கிற்குத் தீர்வாக, காவல்துறை உடனடியாகத் துப்பாக்கிகளை கையாண்டிருக்கிறது. இது எதன் பொருட்டும் ஏற்புடையதும் அல்ல. துப்பாக்கியை எடுத்த எடுப்பிலேயே கையாண்டதன் மூலம் காவல்துறை சாதித்தது : ஆறு உயிர்களைக் கொன்றது மட்டும்தான். இதில் அதிகார முகத்தின் /ஆதிக்க சாதி முகத்தின் பிம்பம் தெரியவே செய்கிறது. மக்களாட்சி தத்துவத்தின் முகத்திரை ஜனநாயகம் கிழிந்து தொங் குகிறது.
இந்தப் பயங்கரத்தில் பலியானவர்கள் குறித்தத் தகவல்கள் மிகவும் வேதைன தருவதாக இருக்கிறது. அதிகார ஆணவத்தால் குண்டுகளை உமிழும் துப்பாக்கிகளுக்கு சுடப்படுபவர் வன்முறையாளரா என்று பார்க்கத் தெரியாது. ஆனால் அதை இயக்குபவரால் கண்டறிய முடியும். இங்கே துப்பாக்கிக்கும் அதை இயக்குபவருக்கும் தேவை, சுடப்படுவதற்கு உடல்கள் மட்டுமே. காரண காரியத்தை பிறகு பார்த்துக் கொள்ளலாம். சொல்வதற்கு எளிதான வாசகங்கள் உண்டே. "திரண்டிருந்த வன்முறையாளர்கள் எங்களைத் தாக்கினார்கள். நாங்கள் எங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்களைச் சுட்டோம்'. ஆனால் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் எல்லோருமே சம்பவங்களுக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத, வன்முறையில்லாத மனிதர் களாகவே இருந்திருக்கிறார்கள்.
ஒருபுறம் ஆதிக்க சாதி நடத்தும் குருபூஜையை அரசுவிழாவாகவே நடத்தி அவர்களை ஆற்றுப் படுத்தும் அரசு, அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்வுகளின்போது உருவாகும் வன்முறையை அனுமதிக்கும அரசு, ஒடுக்கப்பட்ட மக்கள் சிறிய கிளர்ச்சியை, அதுவும் கைது செய்யப்பட்ட தங்கள் தலைவனை விடுதலை செய்யச் சொல்லி கிளர்ச்சி செய்யும்போது தடாலடியாக துப்பாக்கிகளைத் தூக்கச் செய்திருப்பது, கொடுங்கோன்மைக்கு சற்றும் குறைவில்லாததுதான். அதற்கு முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் பேசிய பேச்சு பக்கபலமாக இருந்திருக்கிறது.
செப்டம்பர் 11 பரமக்குடி சம்பவம் இன்றைய ஆட்சியாளர்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட பிரச்ச னையல்ல. ஆட்சியாளர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், ஆதிக்க சக்திகளின் எண்ணங்களும் சாதியத்தின் வீரியமும் மாறுவதேஇல்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் துயரம் நிறைந்த வாழ்வும், அவர்கள் மீதான ஆதிக்க அதிகார வன்முறையும் எல்லா ஆட்சிகளிலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
மதுரை இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது மஞ்சூர் கிராமம். நாளொன்றுக்கு நாலாயிரம் வாகனங்கள் கடக்கும் பகுதி அது. அதிலிருந்து பிரியும் சாலையில் ஒருகிலோ மீட்டர் தூரத்திலேயே இருக்கிறது, மஞ்சூர் காலனி. மாவட்டத்துக்கே உரித்தான வறட்சியான கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். 19 வயது. தலித் பிரிவைச் சேர்ந்தவர். பொன்னையாபுரத்தைச் சேர்ந்தவர் காயத்ரி. 18 வயது. இடை Œõதி வகுப்பைச் சேர்ந்தவர்.
ஜெயபால் காயத்ரியை விரும்பிக் காதலிக்கிறார். அதை ஜெயபால் வீட்டில் ஏற்கவில்லை. காயத்ரியின் அம்மாவே "நல்ல பையனாக இருக்கிறான்' என்று சொல்லி மகளைக் கட்டிவைக்கிறார். ஒன்பது மாதமாகிறது, கல்யாணமாகி. இப்போது காயத்ரி ஒன்பது மாத கர்ப்பிணி. ஒரு குழந்தை இன்னொரு குழந்தையைச் சுமக்கிறது. தோள் கொடுக்க ஜெயபால்தான் இன்று இல்லை. மனைவியைப் பார்க்க பொன்னையாபுரம் போனவர், கலவரத்துக்குப் பயந்து ஒரு தெரு வில் ஓடிஒளிந்து, 'போலிஸ் துரத்துகிறதா?' என்று திரும்பிப் பார்க்க, காவல்துறையின் துப்பாக்கி கக்கிய குண்டு, அவர் நெஞ்சில் பாய்ந்து முதுகு வழியாக வெளியேறிவிட்டது.
ஜெயபால் அப்பா பாண்டி சொல்வதைக் கேட்போம். "துப்பாக்கியால போலிஸ் சுட்டு கலவரம் பண்ணிக்கிட்டுருக்குனு எங்களுக்குத் தெரியும். எங்க ஊர்க்காரங்க வந்து சொன்னாங்க. எங்கப் பையன் எந்தவம்பு தும்புக்கும் போகாதவன். அதனால போனவன் வந்துருவான்னு சும்மா இருந்துட்டோம். சாயங்காலம் அஞ்சு மணிவாக்குல பையனோட செல்லுலருந்து நம்பர் அடிச் சுச்சு. எடுத்து,'எங்கப்பா இருக்க?'ன்னு கேட்டேன். பேசுனது அவன் இல்ல. இன்ஸ்பெக்டர் சிவக்குமார்னு சொன்னாரு. எம்பையன் பேரு கேட்டாரு. சொன்னேன். ஊரு கேட்டாரு. சொன்னேன். போன் கட்டாயிருச்சு. எனக்கு பயமும் வந்துருச்சு. எதுக்கு போன் போட்டு கேக்க ணும்ன்னு நெனைச்சுக்கிட்டே பரமக்குடிக்கு ஓடுனா, அஞ்சு முக்கு அப்டிக் கெடந்துச்சு. அங்கன இருந்த போலிஸ்கிட்டக் கேட்டப்ப, 'கலவரம் செய்யச் சொல்லி அனுப்பி வைச்சுட்டு இப்ப வந்து எங்கக்கிட்ட கேக்குறியா?'னு என்னியவே கேக்குறாங்க. போ... போய் காட்டுப் பரமக்குடி ஆஸ்பத்திரில பாருன்னு சொன்னாங்க. அங்கன எம்புள்ளை இல்ல. புள்ளையக் காணாமேன்னு தேடுனப்ப அங்கனருந்த ஒரு ஆளு சொன்னாரு. செத்தவங்க கைகாலப் புடிச்சு செத்த நாய தூக்குற மாதிரி தூக்கிட்டுப் போனாங்க. சாக்கடைக்குள்ளாற தேடிப் பாருன்னு. அங்கனயும் தேடுனேன். எங்கன பாத்தாலும் ரத்தம். ஆனா எம்புள்ளை அங்கன இல்ல. கொஞ்ச பேத்தை ராமநாதபுரத்துக்கு தூக்கிட்டுப்போனதா சொன்னாங்க. அலறிய டிச்சுக்கிட்டு ராமநாதபுர ஆஸ்பத்திரிக்கு ஓடுனா... அங்கன உள்ளேயே விடமாட்டேன் னுட்டாங்க. ராத்திரி முழுசும் அங்கனயே இருந்தோம். மறுநாள் திங்கக்கிழமை சாயங்காலம் அஞ்சு மணிக்குத்தான் எம்புள்ளையோட முகத்தையே பாக்க முடிஞ்சுது. அதுவரைக்கும் அது எம்புள்ளையா இருக்காது. எங்கிட்டுருந்தாச்சும் 'அப்பா'ன்னு சொல்லிக்கிட்டு வந்துருவான்னு நெனச்சுக்கிட்டே இருந்தேன். ஆனா மனசுல ஒரு ஓரத்துல நம்ம புள்ளையா இருக்குமோன்னு தவிப்பும் இருந்துச்சு. அங்கேருந்த இன்ஸ்பெக்டருக்கிட்ட ஒரு தடவை பாத்துருறேனேன்னு சொன்னதுக்கு, 'ஒம்மகன்னு என்னடா நிச்சயம்?'ன்னு என்னை உள்ளாறயே விடல. பாடிய போலிஸ்காரங்க 40, 50 பேர்வரைக்கும் கொண்டு வந்து குடுத்தாங்க. எரிச்சிறணும்னு சொன்னாங்க. அவங்கள ஊர் எல்லையிலேயே தடுத்துட்டோம். ஊருக்குள்ளாற வரவிடலை. பாடிய எரிக்கலைய்யா. பொதைச்சுட்டோம். ஆளு அப்டியிருப்பான். குண்டு தொலைச்சுதுல கையகலத்துக்கு சதை பிய்ஞ்சுபோயிருந்துச்சு"
பெற்ற பிள்ளையை இழந்த தந்தையின் கதறல் அப்படியென்றால், திருமணத்துக்குப் போன உறவுக்காரர் இருவரில் ஒருவர் குண்டடிபட்டுச் சாக, அதைப் பார்த்துத் திகைத்துப் போன சின்னாள் சொல்கிறார். "மதுரைல கல்யாணம். ஆர்த்தி ஓட்டல்ல சாப்பாடு. பத்துக்கெல்லாம் வெள்ளைச்சாமியும் நானும் பஸ் ஏறிட்டோம். ஓட்டப்பாலத்துக்கிட்டயே பஸ் நின்னுருச்சு. எல்லாரும் எறங்கி நடந்தாங்க. வெள்ளைச்சாமியும் நானும் எறங்கி நடந்தோம். எனக்கு எழுவது வயசு. கொஞ்சம் மெதுவா நடந்தேன். ஒரு நாலடி முன்னால வெள்ளைச்சாமி போனாரு. திடு திடுன்னு ஏழெட்டுப் பத்து போலிஸ்காரங்க ஓடியாந்தாங்க. கையில் தடி, லத்தின்னு வெச்சுக் கிட்டு, போற வர்ற ஆளுகளைக் கண்ணு மண்ணு தெரியாம அடிச்சாங்க. முன்னாலப்போன வெள்ளைச்சாமிக்கு செமத்தியா அடி. அடிபட்டவங்க எல்லாரும் தப்பி ஓடுறாங்க. நான் அடிக்காதீங்கன்னு கத்துனேன். எனக்கு குண்டில நாலு அடி. அடின்னா அப்டியொரு அடி. இதுக்கு முன்னால நான் அப்டியொரு அடி வாங்குனதே இல்ல. பக்கத்துல சாக்கடை. நான் அதுல குதிச்சு பக்கத்து வீட்டுக்குள்ளாற பூந்துட்டேன். கம்பிக்கதவு போட்ட வீடு. அங்கனருந்து பாத்தா என்னோட வந்த வெள்ளைச்சாமிய போலிஸ்காரங்க மாத்தி மாத்தி அடிக்கிறாங்க. அவரு மயங்கி விழுந்துட்டாரு. அங்கனயே வெயில்ல அவரு கெடந்தாரு. அவரு மயங்கிக் கெடக்குறதப் பாத்ததும் நான் பதுங்கியிருந்த வீட்லருந்து வெளியே வரலாம்ன்னு வந்தேன். வீட்டுக்காரங்க விடமாட்டேன்னுட்டாங்க. 'போனா... போலிஸ் அடிச்சுக் கொன்னுரும்'ன்னு என்னையத் தடுத்துட்டாங்க. அங்கனருந்து பாத்தா எல்லாமே தெரியுது. யாரோ ஒருத்தரு 'ஏம்ப்டி செய்றீங்க?'ன்னு கேட்டாரு. அவருக்கும் செமத்தியா அடி. போலிஸ்காரங்களே தீயணைக்குற தண்ணீ லாரிக்கும் ஊதாக்கலர் லாரிக்கும் தீ வெச்சுக்கிட்டாங்க. அப்ப அங்கன ஒரு ஆளையும் செமத்தியா அடிச்சாங்க. அப்புறமா ஒரு போலிஸ் லாரில அங்கன கெடந்தவங் களையெல்லாம் செத்த நாய்களை தூக்கிக் குப்பை லாரில வீசுற மாதிரி போட்டு எடுத்துக்கிட்டு போனாங்க. வெள்ளைச்சாமி கெடந்த எடத்துல அவரக் காணாம்''
மறுநாள் காலை பரமக்குடியிலிருந்து 6 மணிநேரம் நடந்தே ஊருக்கு வந்துவிட்ட சின்னாள், திங்கட்கிழமை மதியம் 1 மணிவாக்கில் நடந்த சம்பவத்தைச் சொல்ல, தொலைக்காட்சிப் பெட்டிகளும் அந்தச் செய்தியைச் சொன்னனவாம். சம்பவத்தை நேரடியாகப் பார்த்த சாட்சியாக சின்னாள் இருக்கிறார்.
வெள்ளைச்சாமியின் பிணம் பல இடங்களில் தேடியலைந்த பின், மதுரை ராஜாஜி மருத்துவ மனை சவக்கிடங்கில் இருப்பதாக சத்திரக்குடி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் தகவல் தந்தாராம். சத்திரக்குடி போலிஸ் ஏற்பாடு செய்து தந்த வேன் மூலம் மதுரைக்குப் போய் வெள்ளைச்சாமி யின் பிணத்தை வாங்கியிருக்கிறார்கள். அதற்கு போலிஸ் ஆறாயிரம் ரூபாய் வசூல் செய்து கொண்டதாம்.
மகன் கல்யாணத்துக்குப் பந்தக்கால் நட்டுவிட்டு, பத்திரிக்கை கொடுக்க பரமக்குடிக்குப் போன வர் பல்லவராயநேந்தல் கணேசன். அதிமுக பிரதிநிதி. அவர் வயிற்றில் பாய்ந்த குண்டும் முதுகு வழியாக வெளியேறியிருக்கிறது. சம்பவங்களுக்கு சற்றும் தொடர்பில்லாத ஆட்கள் பலியாகியிருப்பது மட்டுமன்றி, பலியானவர்களெல்லாம் தேவேந்திர குல வேளாள மக்களாக மட்டுமே இருப்பதும் கேள்விக்கு உரியதாக இருக்கிறது.
பரமக்குடி சம்பவம் நடந்த அதேநேரத்தில் மதுரை சிந்தாமணி புறவழிச் சாலையிலும் காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது. அதில் இரண்டு பேர் படுகாயமடைந்தார்கள். இந்த இரண்டு இடத்திலும் ஒரே நேரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான உத்தரவு அல்லது மனநிலை எங்கிருந்து அல்லது எப்படி உருவானது என்பது ஆச்சரியமளிப்பதாக இருக்கிறது.
அன்று மாலை ஆறு மணியளவில் இளையாங்குடி காவல்நிலையம் அருகில் ஒரு துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. ஆனந்த் என்ற 16 வயது இளைஞர் கையில் குண்டு பாய்ந்து, மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் இளங்கோ என்பவரால் அந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி தியாகி இமானுவேல் பேரவையின் ஒன்றியச் செயலாளர் வி.முனியாண்டி சொல்கிறார். "எங்க அமைப்பு சார்பா மூணு பேனர்கள் வெச்சுருந்தோம். அதை போலிஸ் அறுத்து வீசிருச்சு. சம்பவத்தன்னிக்கு 54 வேன்கள்ல 1500க்கும் அதிகமான நாங்க பரமக்குடிக்கு புறப்படுறதுக்குத் தயாராகிட்டு இருந்தோம். அப்ப எங்களுக்கு ஜான் பாண்டியன் கைது ஆனத் தகவல் வந்துருச்சு. அடுத்து துப்பாக்கிச் சூடு தகவலும் வந்துருச்சு. நாங்க இங்கேயே இருந்துக்கிட்டு அடுத்த என்ன செய்றதுங்க்ற தகவலுக்காகக் காத்துக்கிட்டு இருந்தோம். இந்தப்குதி முழுசும் போலிஸ் குவிஞ்சுருந்துச்சு. டிஎஸ்பி இளங்கோ இங்குட்டும் அங்குட்டுமா போய்வந்துகிட்டு இருந்தார். என்னியக் கூப்புட்டு எதுவும் செஞ்சுறாதீங்கன்னு வேற சொன்னாரு. நான் அதெல்லாம் எங்க ஆளுக எதுவும் செய்ற ஐடியால இல்லன்னு சொன்னேன். அனாலும் அவரு இங்குட்டும் அங்குட்டுமா போய் வந்துகிட்டுதான் இருந்தாரு. அந்தப்போக்கு எனக்கு சந்தேகமாவே இருந்துச்சு. அதுனால நாங்களும் அவரு பின்னாலயே போய்ட்டு வந்துகிட்டு இருந்தோம். இதுலயே சாயங்காலம் ஆறு மணியாயிருச்சு. இளையாங்குடி பைபாஸ் ரோட்டுல ஒரு இருபத் தேழு பசங்க நின்னுகிட்டுருந்தாங்க. எல்லாரும் சின்னச்சின்னப் பசங்க. அப்ப டிஎஸ்பி இளங்கோ அந்தப் பக்கமா வந்துருக்காரு. அவரப் பாத்ததும் பசங்க சிதறி ஓடியிருக்காங்க. அப்ப ஆனந்த்ங்க்ற பயலோட செருப்பு அறுந்து போயிருச்சு. அதை எடுக்க அவன் குனிஞ் சுருக்கான். அவன் எதையோ எடுக்குறான்னு நெனச்சுக்கிட்ட டிஎஸ்பி அவனைப் பாத்து சுட்டுட்டாரு. அது அவன் கையில பாஞ்சுருச்சு. தகவல் கெடைச்சு நான் ஓடிப்போய் என்ன சார் அப்டி பண்ணீட்டீங்கன்னு கேட்டதுக்கு அவரு வில்லன் மாதிரி சிரிக்கிறாரு. நாங்க ஆளுக திரண்டுட்டோம். அப்ப ஒரு வேன் இங்கன ரொம்ப நேரமா நின்னுக்கிட்டு இருந்துச்சு. அதுக்குள்ளாறருந்து ஏதோ சத்தம். என்னன்னு எட்டிப்பாத்தா குப்பை மாதிரி ஏழெட்டுபேரு ஒண்ணுமேல ஒண்ணாக் கெடக்குறாங்க. கைகாலெல்லாம் ரத்தம். என்னசார் இப்டிப்போட்டு வெச்சுருக்கீங்கன்னு கேட்டதுக்கு அதுக்கும் சிநூந்ச்சாரு. எனக்கு பக்குன்னுருச்சு. ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போவோம் சார்ன்னதுக்கும் சிரிச்சாரு. இந்த ஊர்ல தமுமுக ஆளுங்க கொஞ்சம் ஆக்டிவா இருப்பாங்க. அவங்களுக்கு போன் போட்டேன். அவங்க அம்பது அறுபது பேர் வந்துட்டாங்க. அவங்களும் ஆஸ்பத்திரில சேக்காம இப்டிப்போட்டு வெச்சுருக்கீங்களேன்னு கத்துனதும் எல்லாத்தையும் வெரட்டி அடிச்சுட்டு வேனை கௌம்பிட்டாங்க. அப்ப வேன்ல கெடந்த தீர்ப்புக்கனிங்க்கறவரு செத்துட்டாரு. அடிபட்டு ஆறேழு மணி நேரம் வரைக் கும் எதையும் கண்டுக்காம போட்டு வெச்சுருந்து கொன்னுட்டாங்க. அப்பவே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருந்தா அவரக் காப்பாத்தியிருக்கலாம்" என்றார்.
இமானுவேல் சேகரனுக்குப் பிறகு அந்தப் பகுதியில் செல்லத்துரை எனும் ஆசிரியர் செயல்பட்டு வந்திருக்கிறார். அவரும் படுகொலைக்கு உள்ளாகிறார். அவரது மகன் காமராஜ் என்பவர் சொல்லும் விஷயங்கள் மிக முக்கியமானதாகப்படுகிறது. "தாழ்த்தப்பட்ட மக்களுக்காக எங்கப்பா தொடர்ந்து போராடுனார். அவரைக் கொன்னுட்டாங்க. ஏற்கனவே இராமநாதபுரம் மாவட்ட எஸ்பியா செந்தில்வேலன் இருக்கும்போது, எங்கப்பா நினைவுநாள் பூஜைக்கு அனுமதி கேட்டேன். 'ஒங்கப்பா நினைவு நாள்ன்னா அத வீட்டுல வெச்சுக் கொண் டாடு'னு சொல்லி என்னைய வெளில அனுப்பிட்டாரு. ஆனா நாங்க அதையும் மீறி நடத்து னோம். இந்தவருஷ இமானுவேல் சேகரன் குருபூஜைக்கு போக்குவரத்து ஊழியர் சங்கம் 'தியாகி தெய்வத்திருமகன் இமானுவேல் சேகரன்'ன்னு ஒரு பிளக்ஸ் வெச்சாங்க. உடனே முக்குலத்தோர் போலிஸ்ல ஒரு புகார் கொடுத்து, அதை அகற்றச் சொன்னாங்க. தெய்வத்திரு மகன்ங்க்ற வார்த்தையை எடுத்துட்டுதான் அந்த பிளக்ஸ் அங்கே வைக்க முடிஞ்சது"
இதுபோன்ற சம்பவங்கள் காவல்துறை அதிகாரிகளின் அதிகாரச் செயல்பாட்டுக்கு பின்புலமாக இருக்க வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது. அதை சம்பவம் நடந்து ஆறு மணி நேரத்துக்குப் பின் காவல் ஆய்வாளர் சிவகுமார் கொடுத்திருக்கும் புகாநூந்ன் அடிப்படையில் பதிவு செய்யப் பட்டிருக்கும் முதல் தகவல் அறிக்கையில் காணமுடிகிறது. துப்பாக்கி குண்டுகளுக்கும் குண்டாந்தடிகளுக்கும் பலியான ஆறுபேர் மட்டும் பெயரும் அடையாளமும் தொந்ந்த ஆட்களாக இருக்கிறார்கள். வழக்கு பதியப்பட்ட 2000 பேரும் அடையாளம் தெரியாதவர்களாக இருப்பது, புதிர்தான்.
இதைத்தான் இளையாங்குடி சம்பவமும் காட்டுகிறது. நிராயுதபாணியாக நின்றிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடந்து இரண்டு நாட்களுக்குப் பின் சம்பவம் நடந்த இடத்தில், கற்களை யும், செருப்புகளையும் போட்டு சம்பவத்தின்போது அவர்கள் கற்கள் எறிந்ததாகவும் தற்காத்துக் கொள்ள துப்பாக்கிச் சூடு நடத்தியதாக செட்அப் நாடகம் நடத்தப்பட்டிருக்கிறது.
அதுபோல பார்த்திபனூருக்கு அருகிலுள்ள எச்.பரளையிலும் ஆண்கள் யாருமில்லாத நேரத் தில் போலிஸே கலவரக்காரர்கள் வேடமிட்டு கற்களை வீசியும் கம்புகளால் தாக்கியும் மாறி மாறி நடித்து, அதை பதிவு செய்துகொண்ட சம்பவமும் நடந்திருக்கிறது.
பரமக்குடி தாசில்தார் எழுத்து மூல உத்தரவு கொடுத்த பின்பே துப்பாக்கிச்சூடு நடத்தப் பட்டதாக ஆய்வாளர் சிவகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. தாசில்தார் மணியிடம் அதுபற்றிக் கேட்டால், வாயைத் திறக்க மறுக்கிறார். சம்பவத்தை நடத்தி முடித்துவிட்டு அவாந்டம் உத்தரவு வாங்கியதாக அதிகாரத்தரப்பிலிருந்தே தகவல்கள் கசிகின்றன.
அதுபோல இளையாங்குடியில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்று காவல் துறை தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் அந்த ஊர் கிராம நிர்வாக அலுவலர் துப்பாக்கிச் சூடு நடந்ததாக அறிக்கை கொடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக