வெள்ளி, 14 அக்டோபர், 2011

சுயமரியாதைப் போர்......பரமக்குடி

“நமக்கு சுதந்திரம் இல்லாவிட்டாலும், நம் உரிமைகளுக்காக துணிச்சலுடன் கிளர்ந்தெழ வேண்டும்.'' – மாவீரன் இம்மானுவேல் சேகரன்
அண்மையில், இங்கிலாந்து நாட்டில் ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், காவல் துறையால் கொல்லப்பட்டதைக் கண்டித்து மிகப்பெரிய கலவரம் மூண்டு, அக்கலவரம் பல நாட்கள் நீடித்தது. பல கோடி ரூபாய் சொத்துகள் நாசமாக்கப்பட்டன. அந்நாட்டின் முக்கிய
மாநகரங்களில் உள்ள மிகப் பெரிய வணிக வளாகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இருப்பினும், கலவரக்காரர்களுக்கு எதிராக காவல் துறையினர் ஓரிடத்தில்கூட துப்பாக்கிச்சூடு நடத்தாமல் கலவரத்தைக் கட்டுப்படுத்தினர். அந்நாட்டிற்கு தன் குடிமக்களை மதிக்கத் தெரிந்திருக்கிறது.
ஆனால், இங்கு ஒரு சுயமரியாதைப் போராளியின் நினைவு நாளை கடைப்பிடிக்கச் சென்ற மக்களை, எந்தக் காரணமுமின்றி (எட்டுப்பேரை) சுட்டுக் கொன்றிருக்கிறது அதிமுக அரசு. தமிழக அரசு ஒப்புக்கொண்ட எண்ணிக்கை இது. ஆனால், இந்த எண்ணிக்கை இருமடங்காக இருக்கும் என்று அங்கிருக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். சுட்டுக் கொல்லப்படும் அளவுக்கு இம்மக்கள் என்ன குற்றத்தை செய்து விட்டனர்? தாங்கள் ஏற்றுக் கொண்ட ஒரு தலைவருக்கு (சாதி ஆதிக்க எதிர்ப்பின் குறியீடான இம்மானுவேல் சேகரனின் 54 ஆவது நினைவு நாள் 11.9.2011) மரியாதை செய்ய – ஆண்டுதோறும் எழுச்சியுடன் பரமக்குடியில் சங்கமிக்கின்றனர். இதைச் செய்பவர்கள் தமிழர்கள்தான் எனினும், அவர்கள் இத்தமிழ்ச் சமூகத்தின் பார்வையில் கீழ்ஜாதியினர். அவர்கள் இந்த ஜாதியில் பிறந்து விட்டனர் என்பதைத்தவிர, அவர்களை சுட்டுக் கொல்வதற்கு இந்த அரசுக்கும், காவல் துறைக்கும் வேறு எந்த முகாந்திரமும் இல்லை.
விலங்குகளை சுட்டுக் கொல்வதற்குக்கூட, இந்த நாட்டில் ஆயிரம் நிபந்தனைகள் உண்டு. ஆனால், தலித்துகளைச் சுட்டுக் கொல்வதற்கு எவ்வித நிபந்தனையும் இல்லை என்பது எவ்வளவு கொடூரமானது. நாயும் பன்றியும் தெருவிலே நடப்பதற்கும், குரைப்பதற்கும் இங்கு எந்தத் தடையுமில்லை; அது அவற்றின் பிறப்புரிமை. ஆனால், தலித்துகள் சாலையோரத்தில் கூடி நின்று, தங்கள் எதிர்ப்பைக் காட்டும் முகமாக கத்தக்கூட உரிமை இல்லை. இது, ஜனநாயக நாடு என்று சொல்வதற்கு இந்த அரசும், சமூகமும் வெட்கப்பட வேண்டாமா?
தாமிரபரணி படுகொலைக்கு அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனால் என்ன நீதி கிடைத்துவிட்டது என, எல்லாரும் விசாரணை ஆணையம் வேண்டும் என்று கூக்குரலிடுகின்றனர் என்று தெரியவில்லை. சட்டப்பேரவையில் முதலமைச்சர் அளித்த அறிக்கையின் நகலாகவே அந்த ஆணையம் செயல்படப் போகிறது. அடுத்த சடங்கு, நிவாரணம். தலித் மக்களின் உயிருக்கு ஆளாளுக்கு 1 லட்சம், 3 லட்சம், 10 லட்சம் என விலை பேசுகிறார்கள். தலித் மக்கள் சோற்றுக்காகப் போராடவில்லை; இன்றளவும் அவர்களின் போராட்டம் சுயமரியாதைக்கானது என்பதைப் புரிந்து கொள்ளாத – சுரணையற்றவர்கள் மத்தியில்தான் வாழ்ந்து தொலைக்க வேண்டியிருக்கிறது. இருப்பினும், அரசு தலித்துகளின் உயிருக்கான விலை பிச்சைக் காசு ஒரு லட்சத்திற்கு மேல் கிடையாது என்று அறுதியிட்டுக் கூறிவிட்டது. கீழ் ஜாதிகளுக்கு இழைக்கப்படும் இந்த அநீதிகளைக் கண்டித்து, சாகும்வரை யார் உண்ணா நோன்பு இருக்கப் போகிறார்கள்?
மரண தண்டனைக்கு எதிராக தமிழகம் ஆர்த்தெழுந்திருக்கிற தருணமிது. மரண தண்டனைக்கு எதிராக தீர்மானம் போடும் அதிமுக அரசு, அதைவிடக் கொடிய – எந்த விசாரணையுமின்றி நிறைவேற்றப்படும் மரண தண்டனையான போலிஸ் துப்பாக்கிச் சூட்டை கண்டிக்காமல் (இந்தக் காவலர்களை இடைநீக்கம்செய்யக் கூட தயாரில்லை) ஆதரிக்கிறது எனில், இந்த அரசு நிறைவேற்றிய மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம் போலியானது அல்லவா?
நிவாரணம் பற்றிப் பேசுகிற எவரும் தென்மாவட்டங்களில் உள்ள ஓர் ஆதிக்க சாதி, இக்கலவரத்தின் பின்னணியில் செயல்படுகிறது என்பதையும், அச்சாதியினர் பெருமளவில் குறிப்பாக காவல் துறையில் சாதி ஆதிக்க உணர்வுடன் செயல்படுகிறார்கள் என்பதையும் சொல்வதற்கு திராணியற்றவர்களாக இருக்கிறார்கள். வெறும் நிவாரணங்களோ, உண்மைகளைக் கண்டறிவதோ மட்டும் வரவிருக்கும் கலவரங்களைத் தடுத்துவிடாது. தலித் மக்களுக்கு எல்லா துறையிலும் போதிய பிரதிநிதித்துவம் இல்லை; இம்மக்களுக்கு தொடர்ச்சியாக கடும் அநீதி இழைக்கப்படுகிறது என்ற பேருண்மையைப் பற்றி பேச இங்கு எவருமில்லை.
தலித்துகள் இந்துக்களாக இருக்கும்வரை, இதுபோன்ற நிவாரணங்களைத்தான் கோர முடியும்; விடுதலையைப் பெற முடியாது. தலித்துகள் மானத்தோடு வாழவும், சாகவும் விரும்பினால், "நான் இந்துவாக சாகமாட்டேன்' என்று அம்பேத்கர் முழங்கினாரே அதைச் செய்யத் துணிய வேண்டும். ஏனெனில், தலித்துகளை மானத்தோடு வாழவிடாத அரசும், இந்து சமூகமும் – அவர்களை மானத்தோடு சாகவும் விடாது. இதுதான் "பரமக்குடி படுகொலை' உணர்த்தியிருக்கும் பாடம். தலித்துகள் இந்துவாக இருக்க விரும்பினால், அவர்கள் காக்கை, குருவிகளைப்போல சுட்டுத் தள்ளப்படுவார்கள். தட்டிக் கேட்பதற்கு ஒரு நாதியுமிருக்காது. இந்துக்களாக இருக்க மறுத்து, கிளர்ந்தெழுவதுதான் இம்மானுவேல் சேகரனுக்கு நாம் செலுத்தும் வீரவணக்கம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக