செவ்வாய், 18 அக்டோபர், 2011

நெல்லையில் முதல்வர் ஜெ., பிரசாரம்; ஜான் பாண்டியனுக்கு தடை போலீசாருடன் வாக்குவாதம்

திருநெல்வேலி:நெல்லையில் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதையடுத்து டவுன் பகுதியில் பிரசாரம் செய்ய ஜான் பாண்டியனுக்கு போலீசார் "திடீர்' தடை விதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.நெல்லையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதையொட்டி முதல்வரின் ஹெலிகாப்டர் வந்திறங்கிய பாளை. ஆயுதப்படை மைதானம் முதல் நெல்லை டவுன் வரை ரோட்டின் இரு புறமும் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.

முதல்வர் பிரசாரம் நடந்த போது நெல்லை டவுன் பகுதியில் வேறு கட்சி வேட்பாளர்கள் பிரசாரம் செய்ய போலீசார் அனுமதிக்கவில்லை.தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான் பாண்டியன் தன் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய டவுன் பாப்பா தெருவிற்கு சென்றார். ரயில்வே பீடர் ரோட்டில் அவர் கார் வந்த போது அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் முதல்வர் வருகை குறித்து கூறி பிரசாரத்திற்கு தடை விதித்தனர்."பிரசாரத்திற்கு அனுமதிக்காவிட்டால் மறியல் செய்வோம்' என ஜான் பாண்டியனுடன் வந்த தொண்டர்கள் கூறினர். அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஜான் பாண்டியன் பாப்பா தெருவிற்கு பிரசாரத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் ஜான் பாண்டியனுடன் பாதுகாப்புக்கு சென்றனர்.நெல்லை டவுன் 40, 41 வார்டுகளில் காங்., வேட்பாளர் ஜூலியட் பிரேமலதா நேற்று காலை பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். முதல்வர் வருகையை காரணம் காட்டி மாலையில் பிரசாரம் செய்யும்படி போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் பேட்டை பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக