வியாழன், 27 அக்டோபர், 2011

என்கவுண்டருக்கு நாம் தரும் ஒப்புதலில் இருந்து முளைக்கிறது துப்பாக்கிச் சூட்டுக்கான துணிச்சல்.துப்பாக்கிச் சூட்டுக்கான துணிச்சல்.



போலீஸ் நடத்தும் என்கவுண்டருக்கும் துப்பாக்கிச்சூட்டுக்கும் என்ன வேறுபாடு? பெயர் தெரிந்து சுட்டால் அது என்கவுண்டர். சுட்டபிறகு பெயரைத் தெரிந்துகொண்டால் அது துப்பாக்கிச்சூடு.
சுட்டார்கள், செத்தார்கள் எனும் சாதாரண மனோநிலையுடன் நம்மில் பலரும் இந்த செய்தியை கடந்து செல்கிறோம். பத்திரிக்கைச் செய்திகளை அப்படியே நம்புவோர், கலவரம் பண்ணினா போலீஸ் என்னதான் செய்யும் என நியாயம் பேசலாம். ஜான் பாண்டியன் மாதிரி தலைவர்களுக்காகவெல்லாமா ரோட்டுக்கு வந்து போராடுறது என சிலர் சலித்துக்கொள்ளலாம்.. ஒட்டுமொத்தமாக நம் சமூகத்திலிருந்து வெளிப்படும் அலட்சியத்தால் ஏராளமான ஆபத்துக்கள் முளைக்கக் காத்திருக்கின்றன அல்லது ஏற்கனவே முளைத்துவிட்டன.
இந்த நேரத்தில் வந்த வேறொரு செய்தியையும் நாம் சாதாரணமாக எடுத்துக்கொண்டிருப்போம். அது சன் டிவி சக்சேனாவின் அடியாள் அய்யப்பன் மீதான போலீசின் தாக்குதல். இவனுக்கு நல்லா வேணும் என்பதுதான் இங்கு பொதுக்கருத்து. எப்படியோ அடிவாங்குனவன் என்ன யோக்கியனா என நாம் அவனது மீதான தாக்குதல் குறித்து மகிழ்ச்சி கொள்கிறோம். இங்குதான் போலீசின் திமிர் அங்கீகாரம் பெறுகிறது. ரவுடிகள்தானே அடி வாங்குகிறார்கள் என காவல்துறையின் கொட்டடித் தாக்குதல்கள் மக்களால் நியாயப்படுத்தப்பட்டு அவை கொட்டடிக் கொலைகளில் முடிந்தன.
பிறகு லாக்கப் மரணங்கள் பரவலான கண்டனங்களுக்கு உள்ளானபிறகு என்கவுண்டர்கள் வந்தன (இப்போதும் லாக்கப் கொலைகள் தொடர்கின்றன என்பது வேறு விசயம்). அப்போதும் நமக்கு இதே நிலைப்படுதான், சாகப்போவது ரவுடிதானே?
ஒரு கோணத்தை நாம் எப்போதும் யோசிப்பதில்லை. ஏன் அய்யப்பனை ஷிப்ட் போட்டு அடிக்கும் போலீஸ் சக்சேனாவை கொஞ்சம் மரியாதையுடன் நட்த்தியிருக்கிறது? (அது அவர் நடப்பதிலேயே தெரிகிறது). ஏன் கலாநிதியை இன்னும் விசாரிக்கக்கூட முடியவில்லை? என்கவுண்டரில் ரவுடிகள் கொல்லப்படுவது ரவுடியிசத்தை ஒழிக்கும் என்றால் இத்தனை என்கவுண்டர்களுக்கு பிறகு ஏன் ரவுடியிசம் குறையவில்லை? கொஞ்சம் யோசித்தாலே போலீசாரின் அத்துமீறல்களுக்கு காரணம் வேறு என்பது புலனாகும்.
போலீசின் துப்பாக்கிப்பிரயோகம் என்பது ஒரு கற்பித்தல் முறை. முதலில் ரவுடிகள் காவலர்களால் தாக்கப்பட்டு தாக்குதல் மீது நல்லெண்ணம் உருவாக்கப்படுகிறது. இதன் நீட்சியாக அவர்களுக்கு தேவையில்லாத ரவுடிகள் என்கவுண்டர் செய்யப்படுக்கிறார்கள். சமூகவிரோதிகள் தண்டிக்கப்படுகிறார்கள் எனும் சிந்தனை மெல்ல தண்டிக்கப்படுபவர்கள் சமூகத்தின் விரோதிகள் எனும் நிலைக்கு உருமாற்றம் பெறுகிறது. தங்களுக்கு நெருக்கமானவர்கள் பாதிக்கப்படாதவரை பெரும்பான்மையான சாமான்ய மக்கள் காவல்துறைக்கு தரப்படிருக்கும் அதீத அதிகாரம் சரியானதே எனக் கருதுகிறார்கள். முரண்நகையாக காவல்துறைதான் லஞ்ச ஊழலில் புரையோடிப்போயிருக்கும் துறை என்பதை இவர்களில் பெரும்பாலானாவர்கள் ஒத்துக்கொள்வார்கள்.
கவனமாக பரிசீலிக்கையில் காவல்துறையின் அனேக அத்துமீறல்களும் ரவுடித்தனங்களும் அவர்களது தனிப்பட்ட லாபத்துக்காக செய்யப்படுபவை அல்லது லாபத்துக்கு இடையூறு வராமல் இருக்க செய்யப்படுபவை என்பது தெரியவரும். இதனை அனுமதிப்பதால் அரசுக்கு எந்தவித லாபமும் இல்லை. ஆனால் இதனை அனுமதிப்பதன் வாயிலாக யாரை வேண்டுமானாலும் மனசாட்சியின்றி தாக்குவதற்கு அவர்கள் மனதளவிலும் உடலளவிலும் தகுதியுடையவராகிறார்கள். இந்த பயிற்சிதான் அரசு விரும்பும்போதெல்லாம் யார்மீது வேண்டுமானாலும் தடியடி நடத்தவும் யார் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தவும் அவர்களை தயார் நிலையில் வைக்கிறது. இல்லாவிட்டால் தங்களுக்கு யாதொருவகையிலும் எதிரியல்லாத மக்கள்மீது அரசு உத்தரவிட்டதாலேயே துப்பாக்கிச்சூடு நடத்த இவர்களால் எப்படி முடியும்? எதிர்த்து தாக்குமளவு உடல்வலு இல்லாத பெண்களையும்கூட மிருகத்தனமாக விரட்டிவிரட்டி அடிக்க இவர்களால் எங்கணம் முடியும்?
அரசு அதிகாரிகளுக்கு தரப்படும் அதிகப்படியான ஊதியம் அரசே அவர்களுக்கு அளிக்கும் லஞ்சம் என்கிறார் தோழர் லெனின். அரசு ஊழியர்களின் லஞ்சம் மறைமுகமாக அனுமதிக்கப்படுவதுகூட உயர்மட்டத்தில் நடக்கும் பெரிய அளவிலான ஊழலை அவர்கள் கண்டுகொள்ளாதிருப்பதற்கும் அதற்கு ஒத்துழைப்பதற்கும்தான். இந்த சாத்தியப்பாட்டை போலீசுடன் பொருத்திப்பாருங்கள். உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் போலீசின் தனிப்பட்ட விருப்பமென்றால் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் துப்பாக்கிகள் முழங்குவது அரசின் விருப்பம். இது இருவருக்குமான் புரிந்துணவு நடவடிக்கைகள்.
ஏன் துப்பாக்கிச்சூடு பெரும்பாலும் தலித் மக்கள்மீதும் பழங்குடி மக்கள் மீதும் நடத்தப்படுகிறது? காரணங்கள் இரண்டு. அவர்கள் அதிகாரவர்கத்துக்கு எளிமையான இலக்காக இருக்கிறார்கள், அத்துமீறலை சட்டபூர்வமாக எதிர்கொள்ளும் பொருளாதார வலு அவர்களிடம் இருக்காது. இரண்டாவது காரணம் அடிப்பவனுக்கும் அடிவாங்குபவனுக்கும் தெரியாத பூடகமான விசயம். எந்த நாட்டின் உரிமைப்போராட்டங்களும் சுதந்திரப்போராட்டங்களும் பொருளாதாரரீதியாகவே அல்லது இனரீதியாக ஒடுக்கப்பட்டவர்களாலேயே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே ஒரு அரசு மக்களிடம் உரிமைப்போராட்டங்களோ விடுதலைப்போராட்டங்களோ நடக்கக்கூடாதென விரும்பினால் ஒடுக்கப்பட்டவர்களை ஒன்றுகூடவிடாமல் செய்துவிட்டால் போதும். சாராயத்தையும் சினிமாவையும் மீறி ஒன்றுசேரும் சாத்தியம் தென்படும்போதெல்லாம் அரசு தடியடியையோ துப்பாக்கிச்சூட்டையோ பிரயோகிக்கிறது.
பரமக்குடி துப்பாக்கிச்சூடு அரசின் உத்தரவாலோ அல்லது போலீசின் அதிகாரத்திமிராலோ நடந்திருக்கலாம். எதனால் நடந்திருந்தாலும் அதற்குப்பின்னால் இருப்பது தலித் விரோத சிந்தனை மட்டும்தான். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் ஊர்வலம் எல்லா அராஜகங்களைமும் உள்ளடக்கியவாறு நடக்கிறது. அங்கேயெல்லாம் போலீசின் நாக்குகூட அத்துமீறுவதில்லை. மசூதிகளுக்கு அருகே சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலான வெறித்தனமான நடவடிக்கைகளை வருடாவருடம் செய்கிறார்கள். குறைந்தபட்சம் பாதையை மாற்றும் வேளையைக்கூட போலீஸ் செய்ததில்லை. முழுபோதையில் இருக்கும் விநாயக பக்தர்களிடம் போலீஸ் காட்டும் மென்மையான அணுகுமுறையையை நீங்கள் எல்லா ஊரிலும் காணலாம். பிறகு எப்படி தலித் மக்கள் ரோட்டுக்கு வந்தால் மட்டும் போலீசின் ஆயுதங்கள் உடனடியாக உயர்கின்றன??
ஜான் பாண்டியன் ஒரு ரவுடி, அவரை கைது செய்ததற்கு ரோட்டை மறிப்பார்களா என கேட்பதற்கும்  ****தானே சாகட்டும் என பேசுவதற்கு  பெரிய வேறுபாடு கிடையாது. ஒவ்வொரு சாதித்தலைவரும் ரவுடிதான். எல்லோரும் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள்தான். சிதம்பரத்தில் பல பத்தாண்டுகளாக தாதாவேலை பார்ப்பது (ஸ்ரீதர்) வாண்டையார் கோஷ்டி. போலி தங்கக்காசு விற்றது, சொந்த மனைவியை மன்நோயாளி என்று சொல்லி ஒதுக்கிவைத்தது என சேதுராமனின் முகம் பொறுக்கிகளின் எல்லா லட்சனங்களும் பொருந்தியது. இவர்களால் வராத கலவரம் ஜான் பாண்டியன் வந்தால் மட்டும் வந்துவிடுமா?
பரமக்குடி துப்பாக்கிச்சூடு நம் சமூகத்தின் பல அங்கங்களின் நிஜ முகத்தை அம்பலப்படுத்துகிறது. ஜெயலலிதாவின் விளக்க அறிக்கை அவரது போலீஸ் பாசத்தை மட்டும் காட்டவில்லை, அது அவரது தலித் மக்கள் மீதான அலட்சியத்தையும் வெறுப்பையும் காட்டுகிறது. சுட்டவர்கள் மீது போடப்படாத வழக்கு உயிருக்காக ஓடியவர்கள் மீது பாய்கிறது. கண்டன அறிக்கை எந்த வகையிலும் போலீசாரை காயப்படுத்திவிடக்கூடாது என பார்த்துப் பார்த்து தயாரிக்கப்பட்டது போலிருக்கிறது கருணாநிதியின் அறிக்கை. போலீசார் கற்களோடு காத்திருக்கும் புகைப்படத்தை வைத்திருந்தாலும் கலவரம் ஏற்பட்டதால் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டியிருந்தது என ஒப்பிக்கின்றன ஊடகங்கள்.
போலீசுக்கு எதிராக எந்த வலுவான சக்தியும் பேசுவதில்லை. ஏனெனில் அவர்களுக்கு போலீசால் ஏராளமான அனுகூலமிருக்கிறது. ஆனால் நம்மைப்போன்ற சாமான்ய மக்கள் போலீஸ் மீது பக்தி கொள்வது நம் வீட்டில் நாமே கொள்ளிவைத்துக்கொள்வதைப் போன்றதே. தன்னுடன் தகராறு செய்த பக்கத்து வீட்டுப்பெண்ணின் புகைப்படத்தை செயின் திருடர்கள் பட்டியலில் சேர்த்து பேருந்துநிலையத்தில் பேனராக வைத்தார் ஒரு காவல் அதிகாரி (திருச்சி). மாநிலத்தில் நடக்கும் நில அபகரிப்புக்களும் கட்டப்பஞ்சாயத்துக்களும் பெரும்பாலும் இவர்களது தலைமையிலோ அல்லது கவனத்திலோ நடப்பவைதான்.
இந்த அழகில் நாம் போலீசை தியாகிகள் எனவும் சமூகத்துக்காக அயராது உழைப்பவர்கள் என புகழ்வதும் இன்னும் கொடுமை. உண்மையில் இந்த புகழுரைகளுக்கு நிஜமாகவே சொந்தக்காரர்களான சுகாதாரத் தொழிலாளர்களை நாம் சக மனிதனாகக்கூட நடத்துவதில்லை. ஒரு மந்திரியோ அல்லது தாசில்தாரோகூட யாரோ ஒருவரை பொது இடத்தில் தாக்கியதற்கான ஆதாரம் கிட்டினால் அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுவது கட்டாயம் (தற்காலிகமாக). ஆனால் நடுரோட்டில் எந்த எச்சரிக்கையுமில்லாமல் மக்களை சுட்டு வீழ்த்தவும், சுட்டுக்கொன்றுவிட்டு சந்தேக மரணம் என முதல் தகவல் அறிக்கை தயாரிக்கும் அளவுக்கு இவர்களுக்கு அதிகாரமிருக்கிறது. சுடப்பட்டு இறந்தவர்கள் பலர் சொந்த வேலைக்காக அந்த சாலைக்கு வந்திருந்தவர்கள். இந்த கதி தமிழ்நாட்டில் வசிக்கும் யாருக்கு வேண்டுமானாலும் நேரலாம்.
பரமக்குடி சம்பவம் நமக்குத் தரும் செய்தி இதுதான், நாம் உடனடியாக போலீஸ் பஜனா மண்டலியில் இருந்து விலகிக்கொள்ள வேண்டிய நேரமிது. காவல்துறையின் துப்பாக்கி ரவுடிகளை சுட உருவாக்கப்பட்டதல்ல, அது அவர்களுக்கு பிடிக்காதவர்களையும் தேவையில்லாதவர்களையும் கொல்லவே உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை பெரிய விலை கொடுத்து நாம் தெரிந்துகொண்டிருக்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக