திங்கள், 17 அக்டோபர், 2011

ஐந்து தேவேந்திர குல மக்களின் உயிர்ப் பலியை தவிர்த்திருக்க முடியுமா

இந்தக் கலவரத்துக்கான வித்து,

தேவேந்திர குல மக்களின்

தலைவராகக்  கருதும் இமானுவேல் சேகரன் என்பவரின் நினைவு நாளின் போது நடக்கும்  நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, தலித் தலைவர் ஜான் பாண்டியன் கலந்து கொள்ளச் சென்ற போது, அவரை நெல்லை மாவட்டத்திலேயே தடுத்து கைது செய்ததால், தாழ்த்தப் பட்ட மக்களிடையே ஏற்பட்ட கொதிப்பு ஐவர் பலியில் முடிவடைந்திருக்கிறது.
 001.6x4_71
பல நூறு ஆண்டுகளாகவே, தென் மாவட்டங்களில் பள்ளர் மற்றும் தேவர் சமூகங்களுக்கிடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு இருந்துள்ளது.   இந்த மோதல்களை இரு சமூகங்ளையும் சேர்ந்த சாதித் தலைவர்கள் ஊக்குவித்து வந்துள்ளார்கள்.

இமானுவேல் சேகரனை தாழ்த்தப் பட்ட மக்கள் தங்களின் தலைவராக கருதுகிறார்கள் என்றால், தேவர் சமூக மக்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை தங்கள் தலைவராக கொண்டாடுகிறார்கள்.  தாழ்த்தப் பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த ஒரே காரணத்துக்காக இமானுவேல் சேகரன் கொலை செய்யப் பட்டார் என்பதால், தலித் மக்கள் அவரை கொண்டாடுவதில் வியப்பில்லை.  ஆண்டுதோறும், முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாளை தேவர் குரு பூஜை என்ற பெயரில் தேவர் சமுதாய மக்கள் கொண்டாடுகிறார்கள்.  இந்த விழாவில், திமுக, அதிமுக காங்கிரஸ், விஜயகாந்த், சரத்குமார் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் தவறாமல் கலந்து கொள்ளுகிறார்கள்.  இந்த குருபூஜை நடைபெறும் தினத்தில், தாழ்த்தப் பட்ட மக்களின் குடியிருப்புப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டு, தென் மாவட்டங்கள் முழுவதுமே ஒரு பதற்றம் நிலவுகிறது. இமானுவேல் சேகரனின் நினைவு நாளை நெடுங்காலம் அமைதியாக கொண்டாடி வந்த மக்கள், தேவர் குரு பூஜைக்கு கொடுக்கப் படும் முக்கியத்துவத்தையும், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்று இந்த விழாவை சிறப்பிப்பதற்கும் ஒரு எதிர் வினையாகவே இமானுவேல் சேகரனின் நினைவு நாளை சிறப்பாக கொண்டாடும் வழக்கத்தை கையாண்டனர்.  இமானுவேல் சேகரனின் நினைவு நாள் கொண்டாட்டங்கள் கடந்த 4 ஆண்டுகளாகத் தான் முக்கியத்துவம் பெற்றுள்ளன.  கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு செப்டம்பர் 11 அன்றும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இமானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தேவர் குரு பூஜைக்கு முக்கியத்துவம் கொடுத்து, போட்டி போட்டுக் கொண்டு அதில் கலந்து கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள், தலித் மக்கள் அனுசரிக்கும் இமானுவேல் சேகரனின் நினைவு நாளில் கலந்து கொள்வதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது உண்மையே.   இது தலித் மக்களின் மத்தியில் ஒரு குமைச்சலாக புகைந்து கொண்டிருந்தது என்பதையும் மறுக்க முடியாது.

திமுகவும் சரி, அதிமுகவும் சரி, தலித் மக்களை வெறும் வாக்கு வங்கிகளாக மட்டுமே கருதுகிறார்கள் என்பதை மறுக்க முடியாது. தலித் மக்களை வஞ்சிப்பதில், கருணாநிதி தந்திரமானவர்.   நான் தலித் வீட்டில் சம்பந்தம் செய்திருக்கிறேன் அதனால், நானே ஒரு தலித், மிகவும் பிற்படுத்தப் பட்ட சமூகத்தில் இருந்து வந்த நான் தலித்துகளை மிகவும் நேசிப்பவன் என்று பசப்புவார்.    ஆனால் இதே கருணாநிதியின் அரசு தான், 1999ம் ஆண்டு 17 தலித்துகள் தாமிரபரணி ஆற்றின் கரைகளில் சுட்டும், மூழ்கடித்தும் கொல்லப் பட காரணமாக இருந்தது.  அதையொட்டி எழுந்த எதிர்ப்புகளை சமாளிப்பதற்காக, நீதிபதி மோகன் என்ற ஒரு ஜால்ரா நீதிபதியின் தலைமையில், (தமிழகத்தில் ஜால்ரா நீதிபதிகளுக்கா பஞ்சம்) ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்து காவல்துறையின் பலப்பிரயோகம் அவசியமானதே என்ற பரிந்துரை அளிக்குமாறு ஏற்பாடு செய்தார்.
 sss88
தாமிரபரணி கலவரத்தின் போது
கருணாநிதி ராசாவைத் தானே கேபினெட் அமைச்சராக்கினார் என்ற விளக்கத்துக்கு, ஆண்டிமுத்து ராசாவைப் போன்ற ஒரு விசுவாசமான அடிமை, தன் குடும்பத்தில் கூட இல்லை என்பதற்காகத் தானே ஒழிய வேறு சிறப்புக் காரணங்கள் ஏதும் இல்லை.

கருணாநிதி இப்படி என்றால், ஜெயலலிதாவின் அதிமுக, தொடக்க காலம் முதலே தேவர் கட்சி என்றே நம்பப் படுகிறது.  எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய காலத்தில், அவருக்கு தமிழகமெங்கும் எழுச்சியான ஆதரவை தந்தவர்கள் தலித் மக்கள்.  ஆனால், ஜெயலலிதா, அவருக்கு இருக்கும் நெருக்கடிகள் காரணமாக, தேவர் மக்களுக்கு பெரும் சலுகைகளை வாரி வழங்கினார் என்றால் அது மிகையாகாது.  கள்ளர், மறவர், தேவர் என்ற மூன்று பிரிவுகளை இணைத்து முக்குலத்தோர் என்று அறிவித்தது ஜெயலலிதாவே.    சென்னை அண்ணா சாலையில், போக்குவரத்து நெருக்கடி மிகுந்த ஒரு முக்கிய இடமான நந்தனத்தில், தேவருக்கு சிலை அமைத்து, தேவர் சாதி மீதான தனது பாசத்தை வெளிப்படுத்தியவர் ஜெயலலிதா.    1991லும் சரி,  2001லும் சரி,  தேவர் சமூகத்தினர் ஆட்சி நிர்வாகத்தில் பெரும் செல்வாக்கு செலுத்தினார்கள் என்பதே உண்மை.

இன்றைய அதிமுக ஆட்சியிலும், தன்னை முக்குலத்தோர், தேவர் என்று பொய் சொல்லி, பசுத் தோல் போர்த்திய புலியாக அடையாளம் காட்டிக் கொண்டிருக்கும் கண்ணாயிரம் என்கிற ராஜேந்திரனை, கடந்த திமுக ஆட்சியில், அதிமுகவுக்கு எதிராக அத்தனை வேலைகளைச் செய்திருந்தும், உளவுத்துறையின் கூடுதல் டிஜிபியாக நியமித்திருப்பதன் ஒரே காரணம் சாதி அல்லாமல் வேறு என்ன ?

சென்னை மாநகரத்திலும், தமிழகத்தின் முக்கிய பதவிகளிலும், முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளே முக்கியப் பதவிகளில் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.  இது போக அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திலும் 75 சதவிகிதம் முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதும், மறுக்க முடியாத உண்மை.

ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் மாதத்தில் தேவர் குரு பூஜையில், ஜெயலலிதா தவறாமல் கலந்து கொள்பவர் என்பதையும் மறுக்க இயலாது.

இந்த நிலையில், இந்த அடையாளத்தோடு உள்ள ஜெயலலிதா அரசு இன்று எடுத்துள்ள நடவடிக்கைகள், ஒரு நியாயமான ஆட்சி எடுத்த நேர்மையான நடவடிக்கைகளாக பார்க்க இயலவில்லை.

இமானுவேல் சேகரனின் நினைவு நாளான இன்று ஜான் பாண்டியன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருவார்கள் என்பது காவல்துறைக்கு முன்னதாகவே தெரியும்.   இந்நிலையில், ராமநாதபுரத்துக்கு கிளம்பிய ஜான் பாண்டியனை நெல்லை மாவட்டத்திலேயே வைத்துக் கைது செய்தது காவல்துறை.   இந்தக் கைது செய்தி ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவியதே கலவரத்திற்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
DSC_0304
ஜான் பாண்டியனை கைது செய்வதற்கான காரணமாக காவல்துறை சொல்லக் கூடிய ஒரு காரணம், ராமநாதபுரம், முத்துராமலிங்கபுரம், பள்ளப்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பழனிக்குமார் தங்கவேல் என்ற தலித் மாணவனை சாதி வெறி கொண்ட கும்பல் 9ம் தேதி இரவு கொலை செய்தது.  இந்தக் கொலை காரணமாக, ஜான் பாண்டியனின் வருகை ராமநாதபுரம் மாவட்டத்தில் பதற்றத்தை அதிகரிக்கும் என்று எண்ணக் கூடும் என்பதால் கைது செய்தோம் என்று காவல்துறை சொல்லக் கூடும்.

இதே போல தேவர் குரு பூஜைக்கு முன்பாக, தேவர் சாதியைச் சேர்ந்த ஒருவர் கொல்லப் பட்டிருந்தால், தேவர் குரு பூஜைக்கு வருகை தரும் அத்தனை அரசியல் கட்சித் தலைவர்களையும், ஜெயலலிதா அரசு தடை செய்து, தேவர் குரு பூஜையை நடைபெறாமல் தடுத்திருக்குமா என்பது சந்தேகமே.

ஜான் பாண்டியனின் கைது, காவல்துறையின் முதிர்ச்சியற்ற நடவடிக்கையை காட்டுகிறது என்று மார்க்சிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது குறிப்பிடத் தக்கது.  
இப்படிப் பட்ட கலவரச் சூழலை உருவாக்கியது, அரசின் தவறான கொள்கை முடிவுதான் என்பதை மறுக்க முடியாது.   பழனிக்குமார் என்ற இளைஞனின் மரணம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதை ஒரு வகையில் ஒப்புக் கொண்டாலும் கூட, ஆயிரக்கணக்கான தலித் மக்கள் ஒரு விழாவுக்காக வந்து குவியும் ஒரு இடத்தில், ஒரு தலித் தலைவரை விழாவில் பங்கேற்க விடாமல் காவல்துறை கைது செய்தது என்ற செய்தி எப்படிப் பட்ட ஒரு எதிர்வினையை ஏற்படுத்தும் என்பதை அரசும், காவல்துறையும் உணரத் தவறியுள்ளது.

இது தொடர்பாக ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
jaya2_20110614
“தாழ்த்தப்பட்ட சமூகத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான திரு. இம்மானுவேல் சேகரன் அவர்களது 54-வது நினைவு நாளினை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது சமாதியில், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சார்ந்தோர் இன்று மரியாதை செலுத்தினர்.
இதனை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் திரு. ஜான் பாண்டியன் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் வருவது காவல் துறையால் தடை செய்யப்பட்டு இருந்தது.  இந்தத் தடையை மீறி பரமக்குடி நோக்கிச் சென்ற திரு. ஜான் பாண்டியனை காவல் துறையினர், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் கைது செய்தனர்.  திரு. ஜான் பாண்டியன் கைதினைக் கேள்விப்பட்ட அவரது ஆதரவாளர்கள், பரமக்குடி நகர போக்குவரத்தினை சீர்குலைக்கும் வகையில், பரமக்குடி ஐந்து முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், காவல் துறையின் அறிவுரையை மறுத்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் மீது கற்களை எறிந்து வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.  இருப்பினும், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் பெருமளவு வன்முறையில் ஈடுபட்டு, காவல் துறையின் வஜ்ரா வாகனம் மற்றும் தீயணைப்பு வண்டிக்கு தீ வைத்தனர்.   இதனையடுத்து, காவல் துறையினர் மீது கற்களையும், பெட்ரோல் குண்டுகளையும் வன்முறையாளர்கள் தொடர்ந்து வீசியதால், தற்காப்புக்காகவும், பொதுச் சொத்துக்களை பாதுகாக்கும் வகையிலும், காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.  இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மூவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர்.  இதனையடுத்து, வன்முறைக் கூட்டம் கலைந்தது.  மேலும் இந்த நிகழ்வில் ராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவர் திரு. சந்தீப் மிட்டல், பரமக்குடி நகர காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் திரு. கணேசன், காவல் துறை ஆய்வாளர் திரு. அதிசயராஜ், மற்றும் பல காவலர்கள் காயமடைந்தனர்.
திரு. ஜான் பாண்டியன் கைதினை எதிர்த்து மதுரை சிந்தாமணி சந்திப்பிலும் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தினர். மேலும், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் மீது கல் எறிந்தனர்.  அதன் காரணமாக மூன்று காவலர்கள் காயமடைந்தனர்.  மேலும், பாதுகாப்புப் பணியில் இருந்த ஆய்வாளரை தாக்க முற்பட்ட போது, தற்காப்புக்காக ஆய்வாளர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவருக்கு சாதாரண காயம் ஏற்பட்டுள்ளது.”
DSC_0316
ஜெயலலிதாவே தனது அறிக்கையில், “தாழ்த்தப்பட்ட சமூகத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான திரு. இம்மானுவேல் சேகரன் அவர்களது 54-வது நினைவு நாளினை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது சமாதியில், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சார்ந்தோர் இன்று மரியாதை செலுத்தினர்.

இதனை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் திரு. ஜான் பாண்டியன் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் வருவது காவல் துறையால் தடை செய்யப்பட்டு இருந்தது.  இந்தத் தடையை மீறி பரமக்குடி நோக்கிச் சென்ற திரு. ஜான் பாண்டியனை காவல் துறையினர், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் கைது செய்தனர்.” இமானுவேல் சேகரன் சமாதியில், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களை சேர்ந்தோர் மரியாதை செலுத்தினர் என்று குறிப்பிட்டு விட்டு, காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் ஜான் பாண்டியனை ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் வருவதை தடை செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புகளைச் சேர்ந்தோர் இன்று இமானுவேல் சேகரனின் சமாதியில் அஞ்சலி செலுத்தினர் என்பதை ஒப்புக் கொள்ளும் ஜெயலலிதா, தனது அறிக்கையில், ஜான் பாண்டியனை ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் நுழைய விடாமல் அரசு ஏன் தடை செய்தது என்பதற்கான விளக்கத்தை அளிக்கவில்லை.   அந்த தடை உத்தரவு தானே இன்று ஐந்து பேரின் உயிரைப் பறித்திருக்கிறது.

தான் எந்த சாதிக்கும் ஆதரவு தருபவர் அல்ல என்று ஜெயலலிதா உண்மையிலேயே நினைப்பாரானால், இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள தேவர் குரு பூஜையில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும்.  அது மட்டுமே, இது முக்குலத்தோரின் அரசாங்கம் என்ற அவப்பெயரை நீக்கும்.

இறந்தவர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் இன்று அறிவித்திருக்கும் ஒரு லட்ச ரூபாய் நிவாரணத் தொகையானது, மிகவும் குறைவு.   இந்த நிவாரணத் தொகையை 5 லட்சமாக உடனடியாக உயர்த்த வேண்டும். இறந்த அனைத்து தலித் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கும், அரசு வேலை வழங்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக