வியாழன், 13 அக்டோபர், 2011

ரத்தவெப்பத்தின் வெம்மை (பரமக்குடி)

paramakudi_530
(பரமக்குடியில் 11.9.2011 அன்று துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் துறையினரின் காயமடைந்த ஒருவரை தூக்கிச் செல்கின்றனர். நன்றி: 'தி இந்து')
எங்கும் தகிக்கிறது ரத்தவெப்பத்தின்
வெம்மை

அடிபட்ட மக்களின் துயரக்குரலை
செவிகளில் தவிர்த்துவிட்டுச் செல்கிறது
தனக்கான சாலையில்
கொலைகாரர்களின் கவச வண்டிகள்

குற்றவாளிகள் தெய்வமாக்கப்படுகையில்
விடுதலைக்காக கொலையுண்டவனின் மரணம்
அபத்தமானதாக்கப்படுகிறது

போராளிகளைவிட ஜாதி வெறியர்களே
பூஜைக்குரியவர்கள்
ரத்தகாவு வாங்கும் அவர்களின்
துப்பாக்கிமுனைகள்
விசாரணைக்குத் தூரமானவை

செத்து வீழ்ந்த தலித்தின் பிணத்தை மிதித்து
அடிபட்டுக் கிடக்கும் தலித்தை
கட்டையில் முட்டுக்கொடுத்தும்
கால்களைப் பிடித்து இழுத்தும் வரும் கொடுமை
எந்த இனவெறிக்கும் குறைந்தது அல்ல

ஆனாலும் விசாரணைக்குப் பிறகே
குற்றவாளிகள் கணிக்கப்படுவார்கள்
செத்தவர்களும் அப்போது
கைது செய்யப்படலாம்
வாழ்பவர்கள் சேரிகளிலெனில்
இப்போதே செத்துவிடலாம்

வேறென்ன செய்ய பிணங்களிலும்
ஜாதி பார்க்கும்
செந்தமிழர் தேசியந்தன்னில்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக