வியாழன், 13 அக்டோபர், 2011

பரமக்குடி துப்பாக்கி சூடு - தொடரும் தேவேந்திரகுல வேளாளர் இனப்படுகொலைகள்

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனை நிறுத்தப் போராடுதல், கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்த்துப் போராடுதல் இவை இரண்டையும் விட இக்காலகட்டத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது, பரமக்குடி கலவரத்திற்கு நாம் எல்லோரும் பொறுப்பேற்பதும், இக்கலவரத்தில் கொல்லப்பட்ட உயிர்களுக்காக நாம் என்னவிதமான நிலைப்பாட்டினை எடுக்கிறோம், நாம் யாருக்காக நிற்கிறோம், குரல் கொடுக்கிறோம் என்பதும்!


தமிழக அரசியலில் ஊழல் புரிந்தவர்கள் ரவுடித்தனம் செய்பவர்கள், ஆதிக்க சாதி வன்முறையைத் தொடர்ந்து மேற்கொள்பவர்கள் ஆகியோர் அனைவரையும் நம்முடைய மனசாட்சியால் எந்த வித வேறுபாடுமின்றி ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து ஒருவர் தலைவராக வரும்போது, அவர் அமைதியானவராகவும், வன்முறை செய்யாதவராகவும் தன்னுடைய சாதியைக் காட்டிக்கொள்ளாதவராகவும், எல்லோருக்கும் அடங்கிப்போகக் கூடியவராகவும் இருக்க விரும்புகிறோம்.


தோழர் ஜான்பாண்டியன், எப்போதும் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராகவே இருந்து வந்திருக்கிறார். ஆனால், சமூகம் அவரை ஒரு தலைவராக ஒப்புக்கொள்ள மறுக்கிறது.  அமைச்சர்களும், முதல் அமைச்சர்களும், செய்யாத காரியத்தை ஒன்றும் இவர் செய்யவில்லை. ஆனாலும், இவர் மட்டுமே தொடர்ந்து வன்முறையாளராக சித்திரிக்கப்படுகிறார்.  தமிழக அரசியல் வரலாற்றில் ஆதிக்க சாதியை எதிர்த்து நேரடியாகக் குரல்கொடுக்கும் தலைவர்களில் முக்கியமானவர் இவர்! சமூகநீதியையும், சம உரிமையையும் யாருக்கும் ஏற்றத் தாழ்வு இல்லை என்பதை அவருடைய மொழியிலேயே அவர் விளக்கும்போது, அவர் வன்முறையாளராகச் சித்திரிக்கப்படுகிறார்.


1980 – களில், போடிக்கலவரத்திலும், தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டத்திலும், அவர் பேசியதால் கலவரம் உண்டாயிற்று என்று அரசும் பொது மக்களும் உலகுக்கு தங்கள் வாதங்களை முன்வைத்தனர். ஆனால், ஜான் பாண்டியன் இரு சாதி சமூகங்களுக்கு இடையில் திருமண ஒப்பந்தங்களும், கொடுக்கலும் வாங்கலும் இருக்கவேண்டும் என்பதைத் தன்னுடைய மொழியில் கூறினார். ஆனால், இதை சமூகத்தின் எந்த ஒரு பகுதியினரும் ஏற்றுக் கொள்ளவில்லை. பெருங்கலவரங்களுக்குக் காரணம், தோழர் ஜான் பாண்டியனே என்று கோஷமிட்டனர். இந்தப் பின்னணியிலேயே, செப்டம்பர் 11, 2011 பரமக்குடியில் நிகழ்ந்த கலவரத்தையும் பார்க்கவேண்டும்.


1.   பசும்பொன் கிராமத்தில் அரசு அதிகாரத்தின் ஆதரவுடன் தேவர் ஜெயந்தி நடைபெறும்போது, மதுரையிலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் எண்ணற்ற வன்முறைச் செயல்கள் நடைபெறுகின்றன. அன்றைய நாள் முழுவ‌துமே, பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை வாழமுடியாத தன்மை ஏற்படுகிறது.  நாம் ஒரு நூறு வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றே நினைக்கத் தோன்றும். கடைகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. பொதுமக்கள் துன்பத்திற்கு ஆளாகின்றனர். பாதசாரிகள் மரண பீதியில் வலம் வருகின்றனர். ஆனால், ஒவ்வொரு வருடமும் இப்படி நடைபெறும் வன்முறைச் செயல்களுக்கு எந்த அரசும் பொறுப்பேற்பதில்லை. மாவட்ட ஆட்சித் தலைவர் எதுவும் பேசுவதில்லை. காவல் துறையினர் எல்லா வெறிச் செயல்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். பசும்பொன் கிராமத்திற்குச் செல்லும் எந்த ஒரு தலைவரும் வழிமறிக்கப்படுவதில்லை. கைது செய்யப்படுவதில்லை. ஒவ்வொரு வருடமும் வன்முறைகள் நிறைந்திருக்கவே அந்த நிகழ்வு அரங்கேறுகிறது. இதையெல்லாம் நாம் புரிந்து, உணர்ந்து கொண்டால் தான் பரமக்குடிக் கலவரத்திலும் நம்முடைய நிலைப்பாட்டினை எடுக்கமுடியும்!


2.   50–களில் நடந்த முதுகுளத்தூர் கலவரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக நடந்த மாவட்ட ஆட்சித்தலைவர் கூட்டத்தில், பசும்பொன் முத்துராமலிங்கம், தன்னிலும் மிக வயது குறைந்த இம்மானுவேல் சேகரனைத் தனக்குச் சமமாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், தாழ்த்தப்பட்ட மக்களின் மாபெரும் தலைவரான பேரையூர் பெருமாள் பீட்டர், தன்னை விட வயதில் மிகக் குறைந்த இம்மானுவேல் சேகரனை தன்னுடைய தலைவன் என்று அறிவித்தார். பின்பு, சமூக நீதி பற்றியும், சம உரிமை பற்றியும், தீண்டாமைக் கொடுமைகள் பற்றியும் மாபெரும் அரசியல் போராட்டங்களை முன் எடுத்த இம்மானுவேல் சேகரன் கொல்லப்பட்டார். அன்றிலிருந்து ஆதிக்க சாதித் தலைவரை நேரடியாக எதிர்த்தவர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது. இதிலிருந்து அறுபது வருடமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன இனக்கலவரங்கள். நீண்ட காலமாக அ.தி.மு.க.வின் பின்னணியில் இருக்கும் ஆதிக்க சாதி அணிவகுப்புகள், இம்மானுவேல் சேகரன் விழாவைக் கொண்டாடுவதை எப்போதுமே விரும்பியதில்லை. தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளவர்கள் இம்மானுவேல் சேகரனுக்கு எதிரான நிலைப்பாட்டையே எப்போதுமே எடுத்திருக்கிறார்கள்!


3.   தற்பொழுது பரமக்குடியில் நடைபெற்ற கலவரங்களுமே இதன் தொடர்ச்சி தாம்! எந்தவித வன்முறையும் இன்றி, அமைதியாக நடந்து முடிந்திருக்கவேண்டிய இம்மானுவேல் சேகரன் விழாவை அரசே வன்முறையாக மாற்றிவிட்டது. தோழர் ஜான் பாண்டியனைக் கைது செய்யவேண்டிய அவசியமே இல்லை. அவர் பாட்டுக்கு வந்து அவர் பாட்டுக்கு மரியாதை செய்து திரும்பியிருப்பார். அவர் வந்தால் கலவரம் ஏற்படும் என்றால் அந்தக் கலவரத்தைச் செய்பவர்கள் யார்? நிச்சயமாகத் தாழ்த்தப்பட்ட மக்கள் இல்லை.


ஆதிக்க சாதியினரே கலவரத்தை உண்டுபண்ணுவார்கள் என்று அரசு நினைக்கிறது. அதனால் தான் ஜான் பாண்டியனைக் கைது செய்கிறார்கள். உண்மையில் கலவரத்தை உண்டுபண்ணக்கூடிய ஆதிக்க சாதியினரைத்தானே கைது செய்யவேண்டும்!


தேவையற்ற கைதினாலேயே கலவரம் மூண்டது! அதற்கு இரண்டாயிரம் வருடங்கள் பின்னணி உள்ளது. எந்த நியாயமும் இன்றி,  தாழ்த்தப்பட்ட மக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. அதற்கும் இரண்டாயிரம் வருடம் பின்னணி உள்ளது!


ஆறு பேர் கொல்லப்பட்டது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது ஏழாகியுள்ளது. அரசு காட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை நிச்சயம் உண்மையில்லை. நமக்குத் தெரியவேண்டியவை, இந்தக் கலவரத்துக்குப் பின்னால் உள்ள காவல் துறை அதிகாரிகளின் சாதி குறித்த விவரங்களும், உண்மையான நீதியுமே! ஓய்வு பெற்ற நீதிபதிகளின் விசாரணைக் கமிஷன்கள் மூலம் நமக்கு ஓய்வு பெற்ற நீதியே கிடைக்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக