சனி, 8 அக்டோபர், 2011

பரமக்குடியில் மாநில மாநாடு நடத்தப் போவதாக ஜான்பாண்டின் அறிவிப்பு

நெல்லை: பரமக்குடியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாநில மாநாடு நடத்த உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, உள்ளாட்சி தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து போட்டியிடுகிறது. மாநிலம் முழுவதும் 89 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளோம்.
எங்கள் வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு சிறப்பாக உள்ளது. எங்கள் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், மக்களுக்கு தேவையான குடிநீர், சாலை வசதி, மின்விளக்கு போன்ற அடிப்படை பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சரி செய்வோம்.
எங்கள் கட்சி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி. ஆனால், எங்கள் கட்சியை சுயேச்சையாக அறிவித்து 89 இடங்களிலும் தனித்தனி சின்னம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக நடக்கிறது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எங்கள் வேட்பாளர்கள் அனைவருக்கும் ஒரு சின்னம் வழங்க வேண்டும்.
பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பிறகு என்னை ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம். போலீசார் அனுமதி வழங்கவில்லை என்றால் தடையை மீறி பரமக்குடி செல்வோம். பரமக்குடியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாநில மாநாடு நடத்த உள்ளோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக