புதன், 19 அக்டோபர், 2011

தேவர்சாதிவெறியின் அடையாளமாக கொண்டாடப்படும் தேவர் குருபூஜைக்கு ஜெயா, மு.க.ஸ்டாலின், நடிகர்கள், போலிக் கம்யூனிஸடுத் தலைவர்கள் உட்பட பலரும் வருவார்கள். அவர்களுக்கு முறை வைத்து அழைத்துச் சென்று பாதுகாப்பாக கொண்டு விடுவதில் இந்த அடிமைப் போலீசுக்கு பிரச்சினை இல்லை. மேலும் அந்த குருபூஜை நாளில் தேவர் சாதிவெறியர்கள் வரும் வழிகளிளெல்லாம் தேவேந்திர குல  மக்களை தாக்குவதும், வெறுப்பூட்டுவதும் வருடா வருடம் நடக்கும். அப்போதெல்லாம் போலீசின் துப்பாக்கி வேலை செய்யாது. ஆதிக்க சாதி வெறியர்களின் வன்முறைகளும் பயங்கரவாத நடவடிக்கைகளாக கருதப்பட மாட்டாது.


இதற்கு எதிர்வினையாக தேவேந்திர குல மக்கள் இம்மானுவேல் சேகரனது குருபூஜையை நடத்தத் துவங்கியதும் போலீசும், அரசும் ஆயிரத்தெட்டு நிபந்தனைகளை விதிப்பது வழக்கம். இந்த வருடம் குருபூஜைக்கு வரும் ஜான்பாண்டியனை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? கேட்டால் அவர் ஒரு ரவுடி, கட்டைப் பஞ்சாயத்து செய்பவர் என்று கூறுவார்கள். இந்த வேலைகளை எல்லாக் கட்சித் தளபதிகளும்தான் செய்கிறார்கள். எனில் ஜான்பாண்டியனை மட்டும் அப்படி சித்தரிப்பதற்கு ஆதிக்க சாதி வெறியே முக்கியக் காரணம். சரி தங்களது தலைவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஜான்பாண்டியனின் ஆதரவாளர்கள் சாலை மறியல் செய்யக்கூடாதா? அவர்களை நாய்களைப் போல அடித்து நொறுக்க வேண்டிய அவசியம் என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக