செவ்வாய், 4 அக்டோபர், 2011

தேவர் ஜெயந்திக்கு கவனம் - இமானுவேல் நினைவு நாளுக்கு மெத்தனம்

தலித் மக்களுக்காக அயராது பாடுபட்ட தலித் இனத் தலைவர் தியாகி இமானுவேல் ஜாதிய வெறியர்களால் 54 ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். வெட்டி படுகொலை செய்யப்பட்ட செப்டம்பர் 11 ம் நாளை தலித் மக்கள் தலித் தியாகி தினமாக அனுசரித்து விருகின்றனர். சில ஆண்டுகளாக மற்ற அரசியல் கட்சிகளும் இமானுவேல் நினைவு தினத்தில் மரியாதை செய்ய தொடங்கியுள்ளனர். இந்த ஆண்டும் அப்படித்தான் அமைதியாக அனுசரிக்கப்பட்டு கொண்டிருந்தது. இந்த நிலையில் தான் இமானுவேல் நினைவிடத்தில் அஞ்சலி செய்ய வந்து கொண்டிருந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் புறப்பட்டு சென்று கொண்டிருந்த போது அவரை வழி மறித்து போலிஸ் கைது செய்தது. இதை அறிந்து தான் அவரது ஆதரவாளர்கள் பரமக்குடியில் சாலை மறியல் செய்தனர். அப்போது நடந்த கலவரத்தில் 7 பேர் பலியானார்கள். பொது மக்கள் மீது தடியடி, துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார்? கலவரம் ஏற்பட்டால் தொடக்கத்திலேயே துப்பாக்கி சூடு நடத்தலாமா? சிவகங்கையில் நடக்கும் தேவர் ஜெயந்திக்கு தமிழக முதல்வர்கள், பல்வேறு கட்சி தலைவர்கள் வருவதால் போலிஸ் பாதுகாப்பை அதிகப்படுத்தி பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யும் தமிழக அரசு ஏன் இமானுவேல் நினைவு நாளுக்கு அப்படி செய்ய எந்த முதல்வரும் வரவில்லை. அரசும் தலித் மக்களை கேவலமாக பார்க்கிறதா? இமானுவேல் சேகரன் நினைவு நாளில் தமிழக முதல்வர், அமைச்சர்கள் கலந்து கொண்டிருந்தால் இப்படி ஒரு கோர சம்பவத்தில் 7 பேர் சுட்டு கொல்லப் பட்டிருப்பார்களா? தேவர் ஜெயந்தியில் கலவரம் நடந்துவிடக் கூடாது என்று கவனமாக இருக்கும் தமிழக அரசு தலித் தலைவர் நினைவு நாளுக்கு மட்டும் மெத்தன பாதுகாப்பு கொடுத்து கலவரத்தை ஏற்படுத்தி கொல்ல துடிக்கிறது ஏன் என்று தான் தெரியவில்லை. தேவர் ஜெயந்திக்கு ராஜ மரியாதை கொடுக்கும் அரசு தலித் தலைவருக்கு மட்டும் அவமரியாதை செய்கிறது. தலித் இன மக்களின் கூட்டங்களுக்குள் மட்டும் தான் போலிஸ் துப்பாக்கி சுடுகிறது. தலித் உடலுக்குள் மட்டும் தான் தோட்டாக்கள் ஊடுருவிப் போகும் போலிருக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் எங்கள் சேரி குடிசைகளுக்கு வந்து ஓட்டு கேட்டு நாங்கள் போட்ட ஓட்டில் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் பிறகு தலித் மக்களை மட்டும் ஒதுக்குவதும், சுட்டுக்கொல்வதும் வழக்கமாகி விட்டது. இப்படி ஒடுக்கப்பட்ட மக்களை சில ஜாதி வெறி இன மக்களும், தலித் ஓட்டுகளில் அரியணை ஏறிய அரசியல் கட்சிகளும் இது போன்ற சம்பவங்களுக்கு இடம் கொடுக்காமல் இமானுவேல் நினைவு நாளை நடத்த வேண்டும். இனி மேலாவது அனைத்து ஜாதி உயிர்களையும் ஒரே மாதிரியாக பாருங்கள்.மக்கள் ஆட்சி மக்கள் நலனுக்காகத்தான்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக