வியாழன், 13 அக்டோபர், 2011

ஆதிக்க சாதிவெறியும் அரச பயங்கரவாதமும்(பரமக்குடி )

தாழ்த்தப்பட்ட மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் மனித உடலின் இரு கைகளைப் போன்றவர்கள். இரண்டு கைகளும் சண்டையிட்டுக் கொண்டால் அதை இயக்கும் மூளையே பார்ப்பனியம் என்றார் புரட்சியாளர் அம்பேத்கர். பார்ப்பனியம் பிரசவித்த சாதி ஆணவமே.. பரமக்குடியில் கலவரமாக பற்றி எரிகிறது. காவல் துறை அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் ஜெயலலிதா துப்பாக்கிச் சூட்டை நடத்தி தன்னை யாரென மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறார்.
தியாகி இம்மானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்ட நினைவு தினத்தன்று.. அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் போலவே அவரைப் பின் தொடரும் வஞ்சிக்கப்பட்ட மக்களின் துயரமும் தொடருகிறது.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டல மாணிக்கம் என்கிற ஊரைச் சேர்ந்த பள்ளி மாணவன் பழனிக்குமார். ப்ளஸ் 1 படித்து வருகிறான். பக்கத்து ஊருக்கு நாடகம் பார்த்து விட்டு நள்ளிரவில் திரும்பும் வழியில் பச்சேரி என்கிற ஊரில் வைத்து கடுமையாக தாக்கப்படுகிறான். முத்துராமலிங்க தேவர் குறித்து கரித்துண்டால் தவறாக எழுதி வைத்ததாக சந்தேகத்தின் பெயரால் கொலை செய்யப்படுகிறான்.
அதனால் ஏற்பட்ட கொந்தளிப்பே ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்ச்சிப் பிரவாகமாக மாறி இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்க வேண்டிய அரசும் காவல் துறையும் குற்றவாளியை தேடி கைது செய்யாமல் ஜான்பாண்டியனை கைது செய்திருக்கிறது. அவர் வந்தால் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிடுமாம். பரமக்குடியில் இருந்து 130 கி.மீ. தூரத்திலேயே..தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அவரின் கைதைக் கண்டித்து 500-க்கும் மேற்பட்டவர்கள் சுமார் ஒன்றறை மணிநேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து போகச் சொல்லி நடந்த பேச்சுவார்த்தை பலனின்றிப் போனது. காவலர்கள் தடியடி நடத்தியுள்ளனர். அதன் எதிர்விளைவாக வன்முறை வெடித்து இருக்கிறது. காவல் துறை மீது நடந்த எதிர்தாக்குதல் காரணமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த மற்றவர்கள் மருத்துவமனையில் உயிர் இழந்திருக்கின்றனர். இதே போன்று மதுரை சிந்தாமணியில் ஜான்பாண்டியன் கைதினை கண்டித்து நடந்த சாலை மறியலில் ஈடுபட்டவர்களை பரமக்குடி பாணியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். மொத்ததில் 8 பேர் உயிர் இழந்தனர். புரட்சித் தலைவியின் பொற்கால ஆட்சி, சட்டம்- ஒழுங்கை தனக்கே உரிய காட்டுமிராண்டித்தனத்துடன் பாதுகாத்து விட்டது.
துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் எத்தகையவர்கள் என்பதை அறிந்தாலே நடவடிக்கையின் உண்மை முகம் தெரிந்து விடும். பரமக்குடி முத்தாலம்மன் பாலிடெக்னிகில் D.M.E படிக்கும் மாணவர் தீர்ப்புகனி. மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். விடுமுறை நாள் என்பதால் நண்பர்கள் அழைத்ததின் பேரில் இம்மானுவேல் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு சென்று உள்ளார். அவர் கலவரத்தில் சிக்கி சுடப்பட்டு இறந்திருக்கிறார்.
செங்கல் சூளையில் வேலை செய்யும் ஜெயபால் ஓராண்டுக்கு முன்னால் கலப்புத் திருமணம் புரிந்தவர். தன் நிறைமாத கர்ப்பிணியான மனைவிக்கு மருந்து வாங்க வந்தபோது துப்பாக்கிச் சூட்டில் இறந்திருக்கிறார். அதே போல கரிமூட்டம் போடும் கூலி வேலைக்குச் சென்று பிழைக்கும் பன்னீர்செல்வம் சாலையோரம் இம்மானுவேல் நினைவுநாள் நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்க்க நின்றவர். காவல் துறையால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரின் அன்புக்குழந்தைகள் அம்புரோஸ்,ரெபோகாள் தாங்கள் அனாதைகளாகி விட்டதாக கதறுகின்றனர். 'அவர் உயிரோடு இருக்கும்போதே சோத்துக்கு வழியில்லை. இனி என்ன செய்யப் போறமோ?' என்கிறார் அவரின் மனைவி சிரோன்மணி.
வெளிநாட்டில் வேலை செய்து வரும் தன் மகன் குணசேகரன் திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுக்க வந்த 55 வயதான தந்தை கணேசன் துப்பாக்கிச் சூட்டில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார். சுடப்பட்டதில் அடையாளம் தெரியாத பிணமாக முதலில் அறியப்பட்ட,  நடுத்தர வயதுடைய முத்துக்குமார் பரமக்குடியில் உள்ள எரிவாயு இணைப்பகத்தில் கடைநிலை ஊழியர்.
சுட உத்தரவு இட்ட காவல் துறை அதிகாரிகள் யார்? அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். நீதி விசாரணை கண் துடைப்பாக இருந்து விடக்கூடாது. கொடியங்குளம் கலவரத்தில் காவல் துறையின் அத்துமீறல் சரியே என்று விசாரணை ஆணையம் சொன்னதைப் போல தவறான முன்னுதாரணம் ஆகி விடக்கூடாது.
தேர்தலுக்கு முன்பு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் விலைவாசி குறையும் என்றார்கள். அது இப்போது உண்மையாகி விட்டது. வழக்கமாக கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்சம் தருவார்கள். சுடப்பட்டு இறந்தவர்கள் தலித் என்பதால் அம்மா ஆட்சியில் உயிரின் விலை குறைந்து விட்டது. தலா 1 லட்சம் என அறிவித்து உள்ளார். பொற்கால ஆட்சி என்றால் சும்மாவா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக