புதன், 2 நவம்பர், 2011

பரமக்குடி படுகொலை - திட்டமிட்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், 2011 செப்டம்பர் 11 அன்று நடந்த தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவேந்தல் நிகழ்ச்சியின் போது, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. ஜான் பாண்டியன், தூத்துக்குடி மாவட்டம் வல்ல நாட்டில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து – பரமக்குடியில் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதும், பொது மக்கள் மீதும் காவல் துறையினர் நடத்திய தடியடியிலும், துப்பாக்கிச் சூட்டிலும் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களில் 20க்கும் மேற்பட்டோர் கை, கால்களில் படுகாயங்களுடனும், துப்பாக்கி குண்டுகளுடனும், மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனையிலும், பிற மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மதுரை சிந்தாமணியிலும் அதே நேரத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், இரு தலித் இளைஞர்கள் குண்டடிபட்டுள்ளனர். இச்செய்திகள் வெளியானதையொட்டி இச்சம்பவங்களின் உண்மை மற்றும் பின்னணி குறித்து விசாரிக்க, மனித உரிமைகளைக் காப்பதில் ஆர்வம் கொண்ட வழக்குரைஞர்கள் மற்றும் களப் போராளிகள் அடங்கிய ஓர் உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டு, 17.9.2011 மற்றும் 18.9.2011 ஆகிய தேதிகளில் பரமக்குடி, மதுரை ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இறந்துபோன நபர்களின் கிராமங்களுக்குச் சென்றும், படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நபர்களையும், பொதுமக்களையும், தொடர்புடைய அரசு அதிகாரிகளையும் நேரில் சந்தித்து தகவல்களைக் கேட்டறிந்தது.
தியாகி இம்மானுவேல் சேகரனின் பணி :
தென் தமிழகத்திலுள்ள ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவிடம் அமைந்துள்ளது. முன்னாள் ராணுவ வீரரான அவர், தனது பகுதியில் நிலவி வரும் கடுமையான சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பல போராட்டங் களை முன்னெடுத்ததால், 11.09.1957 அன்று ஆதிக்கச் சாதியினரால் படுகொலை செய்யப்பட்டார். அவரது நினைவு நாள் அப்பகுதி தலித் மக்களால் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 2007 ஆண்டு அவரது 50ஆவது நினைவு நாள் மிகச் சிறப்பான முறையில் கடைப்பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்நினைவு நாள் நிகழ்ச்சியில் மிகப்பெரும் அளவில் மக்கள் திரள்கின்றனர். தலித் மக்கள் மட்டுமல்லாது அனைத்து அரசியல் கட்சியினரும் இந்நினைவு நாளில் கலந்து கொள்கின்றனர்.
அஞ்சல் தலை வெளியிடல் :
அப்பகுதியிலுள்ள தலித் மக்களான தேவேந்திர குல வேளாளர்களின் தொடர்ச்சியான கோரிக்கையின் அடிப்படையில், கடந்த 09.10.2010 அன்று இந்திய அரசு, தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவாக அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்தது.
அரசு விழா வாக்குறுதி :
 கடந்த ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில், பரமக்குடி வந்து பங்கேற்ற முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், “2011 சட்டமன்றத் தேர்தலில் – அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்றால், வெற்றி பெற வைத்தால், இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக அம்மா அவர்கள் இங்கு வந்து அறிவிப்பார்கள்'' என்ற உறுதிமொழியை அளித்ததாகவும் அது ஊடகங்களில் வெளிவந்துள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த எதிர்பார்ப்புடனே 2011 சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.விற்கு தலித் மக்களில் மிகப் பெரும்பான்மையினர் வாக்களித்துள்ளனர். அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்ற பின் இக்கோரிக்கையை அனைவரும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், கடைசிவரை இந்த அறிவிப்பு அரசிடமிருந்து வரவில்லை.
நினைவேந்தல் நிகழ்ச்சி :
உண்மை அறியும் குழுவினர் சந்தித்த பல்வேறு தரப்பினர், தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவேந்தல் நிகழ்ச்சி, கடந்த பல ஆண்டுகளாக மிக அமைதியான முறையில் நடைபெற்று வந்துள்ளதாகவும், அஞ்சலி செலுத்த வரும் மக்கள் முளைப்பாரி, வேல் குத்துதல், காவடி தூக்குதல், பால்குடம் ஏந்துதல், கரகாட்டம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம் என்றும், இந்நிகழ்விற்காக லட்சக்கணக்கானோர் கூடும்போதும்கூட, எந்தவொரு சிறு அசம்பாவிதமும் நடந்ததில்லை எனவும் ஒருமித்து கூறுகின்றனர்.
மாற்று சமூகப் பகைமை :
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த தியாகி இம்மானுவேல் சேகரனும், முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும் எதிரெதிர் அணிகளில் சமூக, அரசியல் தளங்களில் செயல்பட்டதால் இரு சமூகத்தினரிடையே தீராப் பகைமை நிலவிவருவது அனைவரும் அறிந்ததே.
இந்தப் பின்னணியில், சமூக – பொருளாதார வளர்ச்சியின் காரணமாக வலிமை பெற்று வரும் தலித் மக்களின் முன்னேற்றமும், அதனை நிரூபிக்கும் விதமாக இம்மானுவேல் சேகரனின் நினைவேந்தல் நிகழ்வு ஆண்டுக்கு ஆண்டு முக்கியத்துவம் பெறுவதும் மாற்று சமூகத்தினரிடையே சலசலப்பையும், தங்கள் அதிகார எல்லை சுருங்கிவிடும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி, அதன் பொருட்டு இந்நினைவேந்தல் நிகழ்வை சீர்குலைக்கும் விதமாக நினைவேந்தல் நிகழ்விற்கு முன் கடந்த ஆண்டுகளில் கொலைகளை அரங்கேற்றியுள்ளனர் என்று உண்மை அறியும் குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டது.
இதற்குச் சான்றாக, கடந்த 2007 செப்டம்பரில் வீரம்பல் கிராமத்தைச் சார்ந்த குட்டி என்ற வின்சென்ட் சாம்சனை முதுகுளத்தூரில் அம்மாற்றுச் சமூகத்தினர் படுகொலை செய்தனர் என்றும், பின்னர் 2008இல் அதே முதுகுளத்தூரில் அறிவழகன் என்பவரும் கொல்லப்பட்டார் என்றும், 2010 ஆம் ஆண்டு கொந்தகை கிராமத்தைச் சார்ந்த அரிகிருஷ்ணன் கொல்லப்பட்டார் என்றும், இச்சம்பவங்கள் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு சில தினங்கள் முன்பாக நிகழ்த்தப்பட்டவை என்றும், அதன் மூலம் தலித் மக்கள் நினைவேந்தல் நிகழ்ச்சியை சிறப்புற நடத்துவதை தடுத்துவிடலாம் என்ற எண்ணத்தில் நிகழ்த்தப்பட்டவை என்றும் அப்பகுதியில் செயல்படும் தலித் உரிமை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
"குரு பூசை' – "தெய்வத் திருமகனார்' பட்டங்கள் :
இம்மானுவேல் சேகரனின் நினைவேந்தல் நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக "குரு பூசை' என்று குறிப்பிடப்படுவது, மாற்று சமூகத்தினரான முக்குலத்தோர் மத்தியில் – "குரு பூசை' தங்கள் தலைவர் முத்துராமலிங்கத் தேவருக்கு மட்டுமே செய்யப்பட வேண்டும் என்றும், அதற்குச் சமமாக வேறு எவரும் "குருபூசை' என்ற பெயரில் செய்யக்கூடாது என்ற எண்ணமும் வலுவாக உள்ளதாகத் தெரிகிறது.
அதேபோல், தியாகி இம்மானுவேல் சேகரனை "தேசியத் தலைவர் தெய்வத்திரு மகனார்' என்று தலித் மக்கள் குறிப்பிடக் கூடாது என்றும், அந்த அடைமொழி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை மட்டுமே குறிக்கும் என்று கூறி "மறத் தமிழர் சேனை' என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் பரமக்குடி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில், 07.09.2011 அன்று காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. கணேசன் மற்றும் காவல் ஆய்வாளர் திரு. சிவக்குமார் தலித் தலைவர்களை மட்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, மேற்படி வாசகங்களை அச்சிடக் கூடாது என்று கூறியுள்ளனர். ஆனால், தலித் தரப்பினர் மேற்படி வாசகங்கள் எவருக்கும் "காப்புரிமையில்லை' என்று கூறி, அதனை ஏற்கவில்லை.
+1 மாணவன் படுகொலை :
இதன் பின்னர், 09.09.2011 அன்று ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் மண்டலமாணிக்கம் கிராமம் பள்ளப்பச்சேரியைச் சேர்ந்த பழனிக்குமார் என்ற +1 படிக்கும் தலித் மாணவன், தனது நண்பனுடன் முத்துராமலிங்கபுரம் புதூரில் நடைபெற்ற நாடகத்திற்கு சென்று திரும்பும் வழியில் நள்ளிரவில் சுமார் 10 பேர் கொண்ட கும்பல், “டே பச்சேரிகாரங்களா நில்லுங்கடா'' என்று கூறி வழிமறித்து, “நீங்க குருபூஜைக்கு எப்படி போறீங்க என்று பார்ப்போம்'' என்றபடியே தலையில் வெட்டி கொடூரமாக படுகொலை செய்துள்ளனர்.
தலித் மக்களின் மனமுதிர்ச்சி :
இந்த வகையில், இந்த ஆண்டும் நினைவேந்தல் நிகழ்ச்சியை பதற்றம் மிக்க ஒன்றாக மாற்ற, மாற்று சமூகத்தினர் முன்முயற்சி எடுத்ததாக தலித் மக்கள் உணர்ந்தனர். எனினும், நினைவேந்தல் நிகழ்ச்சியை எவ்வித அசம்பாவிதமுமின்றி நடத்த தலித் மக்கள் முடிவெடுத்தனர். அதனடிப்படையிலேயே, 11.09.2011 அன்று நிகழ்வு நடைபெறவிருந்தது என்று உண்மை அறியும் குழுவினரிடம் அப்பகுதி தலித் மக்கள் தெரிவித்தனர்.
நினைவேந்தல் நாளில்... :
11.09.2011 அன்று காலை முதலே மக்கள் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத் தொடங்கினர். வழக்கமாக, அண்டை மாவட்டங்களான மதுரை, சிவகங்கையில் இருந்து வரும் மக்கள் பரமக்குடியிலுள்ள நினைவிடத்தில் மாலை 3 மணியளவில் மிகப் பெருமளவில் திரள்வர். முன்கூட்டியே காவல் துறையினரும் திரு. ஜான் பாண்டியன் மாலை 3 மணிக்கும், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் திரு. கிருஷ்ணசாமிக்கு மாலை 4 மணிக்கும் நினைவிடம் வர அனுமதித்திருந்தனர்.
காவல் துறையின் முன் தயாரிப்பு :
இந்நிலையில், காலை சுமார் 10.30 மணியளவில் வேறொரு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த திரு. ஜான் பாண்டியனை தூத்துக்குடி மாவட்டம் வல்ல நாட்டில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இச்செய்தி, பரமக்குடியில் உள்ள இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த தலித் மக்களிடம் 11.30 மணியளவில் பரவியுள்ளது. அப்போது பரமக்குடி நகரத்தின் நுழைவாயிலாகக் கருதப்படும் "அஞ்சுமுனை ரோடு' எனப்படும் அய்ந்து சாலைகள் சந்திப்பில் 100க்கும் குறைவான நபர்களே இருந்துள்ளனர். ஆனால், காவல் துறையினர் அடையாறு காவல் துணை ஆணையர் திரு. செந்தில்வேலன், பரமக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. கணேசன், பரமக்குடி காவல் ஆய்வாளர் திரு. சிவக்குமார் ஆகியோர் தலைமையில் ஆயுதங்களுடனும் தடுப்புக் கருவிகளுடனும் பெருமளவிலான எண்ணிக்கையில் இருந்துள்ளனர். கலவரத்தை அடக்கும் "வஜ்ரா' வாகனம் ஒன்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது.
கைதும் கோரிக்கையும் :
 பெரும்பாலானோர் நினைவிடத்தை நோக்கி வாகனங்களிலும், நடந்தும் செல்லும் போது, ஒரு சிலர் இச்செய்தியை அறிந்து அங்கிருந்த காவல் அதிகாரிகளிடம் திரு. ஜான் பாண்டியனை குறிப்பாக அன்றைய தினம் கைது செய்தது ஏன் என்றும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்றும் கோரியுள்ளனர். திரு. ஜான் பாண்டியன் கைது செய்யப்படவில்லை என்று முதலில் கூறிய காவல் துறை உயர் அதிகாரிகள், பின்னர் தூத்துக்குடி காவல் துறைதான் கைது செய்தது என்றும், அது மேலிடத்தின் முடிவு தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் கைவிரித்துள்ளனர். இது அங்கு குழுமிருந்தவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்த, அவர்களில் ஒரு சிலர் திரு. ஜான் பாண்டியனை உடனடியாக விடுதலை செய்து, நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று அமைதியான முறையில் முழக்கமிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
முன்னறிவிப்பற்ற தடியடி, துப்பாக்கிச் சூடு :
இந்தப் போராட்டத்தில் எவருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படாத நிலையிலும், அங்கு திரண்டிருந்த மக்கள் அமைதியான முறையில் தங்களின் கோரிக்கையை முன்வைத்தபோதும், அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் எவ்விதப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடாமல், சுமார் 12 மணியளவில் எவ்வித முன்னறிவிப்புமின்றி தடியடியும் உடனே துப்பாக்கிச் சூடும் காவல் துறையினர் நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் சம்பவ இடத்திலும், ஒருவர் மருத்துவமனையிலும் மற்றும் 2 பேர் தடியடியிலும் இறந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தவர்கள் 9 பேர்.
மதுரை – சிந்தாமணி அருகேயும் துப்பாக்கிச் சூடு :
அதேபோல், 11.09.2011 அன்று ஏறக்குறைய அதே நேரத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள பாட்டம் கிராமத்திலிருந்து இம்மானுவேல் சேகரனின் நினைவேந்தலில் கலந்து கொள்ள பரமக்குடி நோக்கி லாரியில் வந்து கொண்டிருந்த சுமார் 100 பேர் மதுரை சிந்தாமணி அருகே சுங்கச்சாவடியில் சுமார் 11.30 மணிக்கு நிறுத்தப்பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தாங்கள் குருபூசைக்கு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியவர்களை மதுரை அவனியாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. கஜேந்திரன், எவ்வித முன்னறிவிப்புமின்றி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
அரசு அதிகாரிகளின் கூற்றுகள் :
1. தென் மண்டல காவல் துறை தலைவர் திரு. ராஜேஷ் தாஸ், அய்.பி.எஸ். அவர்களை உண்மை அறியும் குழுவினர் 18.9.2011 அன்று சந்திக்க அனுமதி கேட்டனர். அதற்கு அவர் தான் தற்போது முகாம் அலுவலகத்தில் (வீடு) உள்ளதாகவும், அலுவலகத்திற்கு வந்தால் சந்திக்கலாம் என்றும் அவரது உதவியாளர் மூலம் தகவல் தெரிவித்தார். அலுவலகத்திற்கு எப்போது வருவார் என்று கேட்டதற்கு, அந்த உதவியாளர் அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், அவர் அலுவலகத்திற்கு வருவதில்லை என்று கூறினார். இதன் மூலம் அவர் உண்மை அறியும் குழுவினரை சந்திப்பதைத் தவிர்த்து விட்டார்.
2. மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. சகாயம், அய்.ஏ.எஸ்., உண்மை அறியும் குழுவினர் சந்தித்தபோது, பொது மக்கள் மாவட்ட ஆட்சியர்தான் துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்டிருப்பார் என்று தவறாகக் கருதுகிறார்கள். ஆனால், நிர்வாகத் துறை நடுவரான வட்டாட்சியரோ, வருவாய் கோட்டாட்சியரோ உத்தரவிட சட்டத்தில் அதிகாரமுள்ளது என்று கூறியதுடன், இச்சம்பவம் குறித்து தனக்கு ஒரு மணி நேரம் கழித்துதான் தெரியும். இது குறித்து கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் 30 நாட்களில் விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
3. பரமக்குடி கோட்டாட்சியர் திருமதி. மீரா பரமேஸ்வரி, “காலையில் 8 மணிக்கு நான் ஒரு ரவுண்ட்ஸ் போய் வந்தேன். கல்லறை அருகே சென்று வந்தேன். நான் மீண்டும் ரவுண்ட்ஸ் போய்க் கொண்டிருந்தபோது சாலை மறியல் நடப்பதாக தாசில்தார் திரு. சிவக்குமார் 11 மணிக்கு தகவல் தந்தார். நான் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்தேன். அங்கே துப்பாக்கிச் சூடு நடந்துவிட்டிருந்தது. மேற்கொண்டு நடந்த சம்பவங்களை நான் கூற முடியாது. மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்றுதான் கூற முடியும். நாங்கள் அரசுப் பணியாளர் என்பதால் எங்களுக்கு வரைமுறைகள் உள்ளன. எங்களது மேலதிகாரிகளை சந்தித்துதான் நீங்கள் விவரத்தை அறிந்து கொள்ள வேண்டும்'' என்று உண்மை அறியும் குழுவினரிடம் தெரிவித்தார்.
4. பரமக்குடி வட்டாட்சியர் திரு. சிவக்குமார், “எனது வாழ்நாளில் இது ஒரு கறுப்பு நாள். என்னால் என்றைக்கும் இதை மறக்க முடியாது, எனது பணியில் இப்படி ஒரு சம்பவத்தை நான் பார்த்ததில்லை'' என்று உண்மை அறியும் குழுவினரிடம் கூறினார்.
5. சம்பவ நாளான 11.09.2011 அன்று சம்பவ இடத்தில் பணியிலிருந்த திரு. செந்தில்வேலன், அய்.பி.எஸ்., துணை ஆணையர், (தற்போது) போக்குவரத்து காவல், சென்னை (தெற்கு) அவர்களை தொடர்பு கொண்டு உண்மை, அறியும் குழுவினர் நேரில் சந்திக்க அனுமதி கேட்டபோது, தான் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும் பின்னர் சந்திப்பதாகவும் தெரிவித்தார்.
விசாரணையின் கண்டுபிடிப்புகள்
1. இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை தலித் மக்கள் சிறப்பாக அனுசரிப்பதை சீர்குலைக்கும் பொருட்டே கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் 09.09.2011 அன்று பழனிக்குமாரின் படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. பழனிக்குமாரை வெட்டும்போது கொலையாளிகள் கூறியதாக உள்ள –”டே பச்சேரிகாரங்களா நில்லுங்கடா'' என்று கூறி வழிமறித்து, “நீங்க குருபூஜைக்கு எப்படி போறீங்க என்று பார்ப்போம்'' என்று கூறியுள்ளது, மாற்று சாதியினரின் இந்த எண்ணத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.
2. துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டபோது காவல் துறையினரை தலைமை ஏற்று வழிநடத்தியவர் திரு. செந்தில்வேலன், அய்.பி.எஸ். இவர், சென்னை அடையாறு துணை ஆணையர். ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக ஏற்கனவே இருந்திருக்கிறார். இவர், இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளில் பரமக்குடிக்கு பணியில் அனுப்பப்பட்டுள்ளது, துப்பாக்கிச் சூடு திட்டமிட்டே நிகழ்த்தப்பட்டுள்ளது என்ற எண்ணத்தை பலமாகவும் பரவலாகவும் தோற்றுவித்துள்ளது.
3. சம்பவ நாளன்று தலித் மக்களும், இயக்கத் தலைவர்களும் மாலை 3 மணிக்கு மேல் நினைவிடத்தில் மிகப் பெருமளவில் கூடுவார்கள். நினைவு நாள் சிறப்பான வகையில் முடிவுறும் என்பதைத் தடுத்து, நிகழ்ச்சியை சீர்குலைக்கவும் இனிவரும் ஆண்டுகளில் இமமானுவேல் சேகரனின் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட ஒரு பய உணர்வை தலித் மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடனே இத்துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டுள்ளதாக விசாரணைக் குழு பல தரப்பினரிடம் விசாரித்த வகையில் உறுதிப்படுத்தியுள்ளது.
4. சம்பவ இடத்தில், சம்பவ நேரத்தில் சாலைகளில் பொது போக்குவரத்து என்பதே இல்லை. காரணம், பரமக்குடி நகரத்திலேயே இம்மானுவேல் சேகரனின் நினைவிடம் அமைந்திருப்பதால் – வெவ்வேறு ஊர்களில், திசைகளிலிருந்து வரும் அனைத்து போக்குவரத்தும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டு விட்டன. பரமக்குடிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாகனங்கள் மட்டுமே காவல் துறையினரால் அனுமதிக்கப்பட்டன. இந்நிலையில், திரு. ஜான் பாண்டியனின் கைது செய்தியைக் கேட்டு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் என்று காவல் துறை தரப்பில் கூறியிருப்பது உண்மையல்ல.
5. அதேபோல், மக்கள் கலவரம் செய்து பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதால்தான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று காவல் துறை கூற்றும் உண்மையல்ல. விசாரணைக் குழுவிற்கு தியாகி இம்மானுவேல் பேரவையினர் அளித்த ஒரு காணொளி குறுந்தகட்டில் பதிவாகியுள்ளபடி, துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்வரை எவ்வித வன்முறையும் நிகழவில்லை. அமைதியாக சென்று கொண்டிருந்த மக்களை திடீரென எவ்வித முன்னறிவிப்புமின்றி காவல துறையினர் தடியடி செய்துள்ளனர். தடியடி தொடங்கிய அடுத்த நிமிடமே சாலைகள் வெறிச்சோடியிருக்க, தூரத்தில் நின்று கொண்டிருந்தவர்களை நோக்கி குறிபார்த்து காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியுள்ளனர். இதற்கும் எவ்வித முன்னறிவிப்பும் இல்லை.
6. துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதற்கு முன் கடைப்பிடிக்க வேண்டிய சட்டப்படியான நடைமுறைகளான வாய்மொழி எச்சரிக்கை, தடியடி முன்னறிவிப்பு, கண்ணீர்ப் புகை வீச்சு, தண்ணீர் பீச்சியடித்தல், ரப்பர் குண்டு தாக்குதல், வானத்தை நோக்கி சுடுதல் போன்றவை முற்றிலுமாகப் புறந்தள்ளப்பட்டு, அங்கு திரளும் தலித் மக்களைக் கொல்ல வேண்டுமென்ற நோக்கத்துடனே துப்பாக்கிச் சூடு – ஆட்களை நோக்கி நடத்தப்பட்டுள்ளது. எனவேதான், நெற்றியிலும், மார்பிலும், தோள்பட்டையிலும், துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. அதேபோல், தடியடியும் உயிரிழக்கும் அளவிற்கு நிகழ்த்தப்பட்டுள்ளது. காவல் துறையால் தடியடி செய்து கைது செய்யப்பட்ட தீர்ப்புகனி உடலிலும் குண்டு பாய்ந்துள்ளது.
7. துப்பாக்கிச் சூடு நடத்தும் முன் வருவாய்த் துறையின் நிர்வாக நடுவரிடம் எழுத்துப்பூர்வமான ஆணை பெற வேண்டும் என்ற சட்டம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்போது வரை வருவாய்த் துறையினர், வட்டாட்சியர் உட்பட, எவரும் சம்பவ இடத்தில் இல்லை என்பதை மேற்சொன்ன குறுந்தகட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள காட்சிகள் மூலம் அறிய முடிகிறது. சம்பவ இடத்திலிருந்த தொலைக்காட்சிப் பத்திரிகையாளர் உண்மை அறியும் குழுவிற்கு அளித்துள்ள எழுத்துப்பூர்வ வாக்குமூலத்திலும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
8. அப்பகுதி தலித் மக்களிடையே செல்வாக்கு மிகுந்த திரு. ஜான் பாண்டியனை நினைவேந்தல் நாளன்று மாலை 3 மணிக்கு நினைவிடத்திற்கு வர அனுமதித்திருந்த காவல் துறை, காலை 10.30 மணிக்கு அவரைக் கைது செய்ததும், அவரது கைது பற்றி முன்னுக்குப்பின் முரணான தகவல்களை அளித்ததும் குழுமியிருந்த மக்களிடையே பதற்றத்தை தூண்டிவிட வேண்டும் என்பதால் என்று தெரிய வருகிறது. அப்படியும் திரு. ஜான் பாண்டியனை விடுவிக்க வேண்டும் என்று அமைதியான வழியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி, துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு கலவரம் செய்தார்கள் என்று 1000த்திற்கும் மேற்பட்ட நபர்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர்.
9. துப்பாக்கிச் சூடு, தடியடி ஆகியவற்றில் கொல்லப்பட்டவர்களும், படுகாயமடைந்தோரும் திரு. ஜான் பாண்டியனின் இயக்கத்துடன் எவ்விதத் தொடர்புமற்றவர்கள் என்பது, பாதிக்கப்பட்ட தரப்பினரின் வாக்குமூலங்களிலிருந்து தெளிவாகிறது. இந்தப் பின்னணியில், கொல்லப்பட்டவர்களும் , படுகாயமடைந்தோரும் திரு. ஜான் பாண்டியனை விடுதலை செய்யக் கோரி கலவரம் செய்ததாக காவல் துறையினர் கூறுவது, உண்மை அறியும் குழுவினரின் விசாரணையில் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் ஏற்கத்தக்கதல்ல.
10. மதுரை சிந்தாமணி அருகே அவனியாபுரம் காவல் ஆய்வாளர் திரு. கஜேந்திரன் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டிலும் இதே உள்நோக்கத்தையும் திட்டத்தையும் காண முடிகிறது. துப்பாக்கிச் சூடு 12.30 மணியளவில் நடத்துவதற்கு முன்னர் முன்னேற்பாடாக காலை 11 மணிக்கே எப்போதுமில்லாத வழக்கமாக – அப்பகுதியிலிருந்த கடைகளை அடைக்கச் சொல்லி, அடைக்கச் செய்ததும் இக்கருத்தை வலுப்படுத்துகிறது. இங்கும்கூட துப்பாக்கிச் சூட்டிற்கு முன் கடைப்பிடிக்க வேண்டிய சட்டப்படியான நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை. பின்னிட்டு, துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்த 100க்கும் மேற்பட்ட நபர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வருகிறது.
11. மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் பாதிக்கப்பட்டோரிடம் உண்மை அறியும் குழுவினர் சந்தித்து விசாரித்தபோது, கும்பலைக் கலைப்பதற்கு நிகழ்த்திய தடியடி, துப்பாக்கிச் சூடாக இல்லாமல் கொலை வெறியுடன் உயிர் போகும் வகையில் – குற்றுயிரும் கொலையுயிருமாகும் வகையில் தாக்குதல் நடந்ததை அவர்கள் அனைவரும் உறுதிப்படுத்தினர். சம்பவ சாட்சிகளான இவர்களனைவரும்கூட தடியடி, துப்பாக்கிச் சூடு ஆகியவற்றிற்கு எவ்வித வாய்மொழி எச்சரிக்கை முன்னறிவிப்பும் காவல் துறையினர் செய்யவில்லை என்பதை உறுதிபடத் தெரிவித்துள்ளனர் என்பதிலிருந்து, இச்சம்பவம் திட்டமிட்டே நடத்தப்பட்டதாகவே உண்மை அறியும் குழு கருதுகிறது.
12. தென்மண்டல காவல் துறை தலைவர் திரு. ராஜேஷ் தாஸ், அய்.பி.எஸ். சென்னை அடையாறு காவல் துணை ஆணையர் திரு. செந்தில்வேலன் அய்.பி.எஸ். ஆகியோர் உண்மை அறியும் குழுவினரை சந்திக்கத் தவிர்த்தும், உண்மை அறியும் குழுவினர் சந்தித்த பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் திருமதி. மீரா பரமேஸ்வரி, பரமக்குடி வட்டாட்சியர் திரு. வி. சிவக்குமார் ஆகியோர் சம்பவம் தொடர்பாக பேச மறுத்ததும் உண்மைகளை மறைக்க வேண்டும் என்ற நோக்குடன்தான் என்பது தெளிவாகிறது.
கோரிக்கைகள் :
1. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் குறைந்தபட்சம் ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
2. மரணத்தாக்குதல் காரணமாக காயமடைந்த ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
3. இச்சம்பவங்களில் இறந்து போன நபர்களின், காயம்பட்ட நபர்களின் குடும்பங் களுக்கு அரசுப் பணி வழங்கப்பட வேண்டும்.
4. தமிழக அரசால் தற்போது நியமிக்கப்பட்டுள்ள ஒரு நபர் விசாரணைக் குழுவான நீதிபதி திரு. கே. சம்பத் திரும்பப் பெறப்பட்டு, அதற்கு மாற்றாக ஒன்றுக்கு மேற்பட்ட தற்போது பணியில் உள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும்.
5. இறந்துபோன நபர்களின் சார்பாக தாக்கல் செய்யப்படும் புகார்கள் மீது, சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது – கொலை வழக்கும், கொடும் தாக்குதலுக்குள்ளானோர் தாக்கல் செய்யும் புகார்கள் மீது சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது கொலை முயற்சி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989இன் சட்டப் பிரிவுகளும் அவ்வழக்குகளில் சேர்க்கப்பட வேண்டும்.
6. இவை தவிர, துப்பாக்கிச் சூட்டையும், மரணத் தாக்குதல் தடியடியையும் நிகழ்த்திய அனைத்து காவல் துறை அதிகாரிகளையும் பணி இடை நீக்கம் செய்து, தக்க துறைசார் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
உண்மை அறியும் குழுவினர்
சு.சத்தியச் சந்திரன், வழக்குரைஞர், சென்னை உயர் நீதிமன்றம் 2. பெ. தமிழினியன், வழக்குரைஞர், பொதுச் செயலாளர், அம்பேத்கர் மக்கள் விடுதலை இயக்கம் 3. எஸ். நடராஜன், தலைவர், தாத்தா ரெட்டமலை சீனிவாசன் பேரவை 4. க. இளஞ்செழியன், மாநில நிதிச் செயலாளர், ஆதித் தமிழர் விடுதலை இயக்கம், தமிழ் நாடு 5. "தடா' து. பெரியசாமி, நந்தனார் பேரவை, பெரம்பலூர் 6. யாக்கன், பொதுச் செயலாளர், தமிழ் நாடு மாற்றுப் பத்திரிகையாளர் பேரவை, 7. ஆர்.எல். ரொசாரியோ, தலித் மக்கள் மன்றம், திருவண்ணாமலை 8. சா. ரஜினிகாந்த், வழக்குரைஞர், சென்னை உயர் நீதிமன்றம் 9. ஈ. தெய்வமணி, அமைப்பாளர், அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம் 10. ஆர். அழகுமணி, வழக்குரைஞர், மதுரை உயர் நீதிமன்றம் 11. பி. வேலுமணி, அமைப்பாளர், தமிழர் எழுச்சி இயக்கம், சென்னை 12. ஆர். அண்ணாதுரை, அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம் 13. கே. ஆறுமுகம், சமூகநீதி, மதுரை 14. சி. ஆனந்தராஜ், சம உரிமை, மதுரை 15. க. சீனிவாசன், மய்யக்குழு உறுப்பினர், ஆதித் தமிழர் விடுதலை இயக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக