வெள்ளி, 11 நவம்பர், 2011

பரமக்குடி படுகொலை: காவல்துறையின் குருதி பூஜை!



ன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக மெழுகு வர்த்தியைக் கையிலேந்தி, மெரினா கடற்கரையோரம் திரண்ட மிடில்கிளாஸ் மாதவன்கள்;
ராம்தேவ் கைதைக் கண்டித்து சென்னையில் சாமியானா பந்தல் போட்டு உண்ணாவிரதம் உட்கார்ந்த உயர்சாதி அம்பிகள்;
மூன்று தமிழர் தூக்கை நிறுத்தக் கோரி முழுவீச்சில் களமாடிய தமிழ்த் தேசியத் தம்பிகள்;
வறுமை ஒழிப்பு தினம் கொண்டாடி ஏழைகளை மீட்க வந்திருக்கும், தமிழ்த் திரை தந்த தலைவர்கள்;
எவரும் கண்டிக்கவில்லை பரமக்குடி படுகொலைகளை!

அரசாங்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக எப்போதும் எழுதுகோல் சுழற்றும் தமிழருவி மணியனை இப்போது காணவில்லை.
தமிழர்கள் மீது குண்டு விழுந்தாலோ; கொசு விழுந்தாலோ கொந்தளித்துக் கிளம்பும் பழ.நெடுமாறனைப் பற்றி தகவலே இல்லை.
'என் ஆத்தா, என் அக்கா, என் தம்பி என்றெல்லாம் உறவு முறை சொல்லி அழைத்து தமிழர்கள் மீது அன்பு மழைப் பொழியும் அண்ணன் சீமான், எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.
பரமக்குடியில் செத்து விழுந்தவர்கள் தலித்துகள் என்பதனால் வழக்கம் போலவே கேட்பதற்கு நாதியில்லை.

கோவையில் 19 முஸ்லிம் உயிர்களை திமுக அரசு சுட்டுப் பொசிக்கியது போலவே, இன்று பரமக்குடியில் 7 தலித் உயிர்களை அதிமுக அரசு சுட்டுப் பொசுக்கியுள்ளது. அன்று 19 முஸ்லிம் பிணங்களை வைத்து அரசுக்கு எதிரான போராட்டத்தை கூர் தீட்டியவர்கள்; இன்று 7 தலித் பிணங்கள் விழுந்திருப்பதைப் பார்த்து, வாய் மூடி மெளனியாக இருக்கிறார்கள். எஸ்.டி.பி.ஐ யைத் தவிர வேறு எந்த ஒரு முஸ்லிம் அமைப்பும் பரமக்குடி படுகொலைக்கு எதிராக களத்தில் இறங்கிப் போராடியதாக சுவடு இல்லை.

மொத்தத்தில் யாருக்கும் அந்த ஏழு பேரும் தமிழர்களாகத் தெரியவில்லை. தமிழர்களாகத்தான் தெரியவில்லை; மனிதர்களாகவுமா தெரியவில்லை?

மதுரையில் சேரிகளைக் கொளுத்தினார்கள்; ஒரு திருமாவளவன் பிறந்தார்.
கொடியங்குளத்தில் தலித்துகளைக் கொன்று வீசினார்கள்; ஒரு கிருஷ்ணசாமி வளர்ந்தார்.
பரமக்குடியில் இப்போது துப்பாக்கித் தோட்டாக்களால் பொசுக்கியிருக்கிறார்கள்; ஒரு ஜான்பாண்டியன் எழுகிறார்.
இவ்வாறு தலித்துகள் மீது திணிக்கப்படும் ஆதிக்கச் சாதி வெறியையும், அரச பயங்கரவாதத்தையும் எதிர்த்து தலித்துகள் மட்டுமே போராட வேண்டியுள்ளது. தலித் சமூகத்திலிருந்தே ஒரு தலைவர் உருவாகி வந்து அவர்களுக்காக குரல் எழுப்ப வேண்டிய அவலமும் தொடர்கிறது.

மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வும், அடக்குமுறைகளுக்கு எதிரான கருத்துருவாக்கமும் வியாபித்திருக்கிற இந்தக் காலத்திலேயே, தலித்துகளின் நிலை இப்படி இருக்கிறதென்றால், ஓர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நிலைமை எப்படி இருந்திருக்கும்? அப்படிப்பட்ட ஓர் இருண்டக் காலத்தில் ஒளிக்கீற்றாய் உதித்தவர் தான் இம்மானுவேல் சேகரன்.
.
1927 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் நாள் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள செல்லூர் கிராமத்தில், வேதநாயகம் ஞானசுந்தரி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் இம்மானுவேல் சேகரன்.

அடிமை இந்தியாவில் பிறந்த அவர் ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்து இளம் வயதிலேயே போராடத் தொடங்கினார். தமது தந்தையாரோடு இணைந்து 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் ஈடுபட்டார். அதன் விளைவாக ஆங்கிலேயரின் அடக்கு முறைகளுக்கு ஆளானார். சிறைத் தண்டனையை அனுபவித்தார்.

சிறை மீண்ட அவர், சமூகத்தில் சாதியின் பெயரால் நடைபெறும் கொடுமைகளைக் கண்டு வேதனையடைந்தார். ஆங்கிலேயரிடம் நாடு அடிமைப்பட்டுக் கிடப்பது போலவே, ஆதிக்கச் சாதியினரிடம் மக்கள் அடிமைப் பட்டு கிடக்கிறார்களே என்று கொந்தளித்தார். ஆதிக்கம் எந்த வடிவில் வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்று உறுதி எடுத்தார்.

1944 ஆம் ஆண்டு தமது 18 ஆவது வயதில் அருப்புக்கோட்டையில் ஒரு மாநாட்டை ஒருங்கிணைத்த அவர், தலித்துகளுக்கு எதிரான இரட்டைக்குவளை முறையை எதிர்த்து போர்க்குரல் எழுப்பினார். சாதிய அடக்கு முறைகளுக்கு எதிராகப் போராட வேண்டும் எனும் விழிப்புணர்வை தலித்துகளிடம் விதைத்தார்.

பின்னர் இந்திய ராணுவத்தில் இணைந்த அவர் நாட்டுக்காகத் தம்மை அர்ப்பணித்தார். 1950 களில் ராணுவத்தில் இருந்து விடுப்பில் வந்த போது, சொந்த மண்ணில் தம் சமூக மக்கள் மீது ஆதிக்கச் சாதியினர் அடக்குமுறைகளை ஏவி விடுவதைக் கண்டு கடுங்கோபம் கொண்டார். உடனடியாக ராணுவப் பணியை உதறி விட்டு 'ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்' எனும் அமைப்பைத் தொடங்கினார்.

1954 இல் தீண்டாமை ஒழிப்பை வலியுறுத்தி மாபெரும் மாநாட்டை நடத்தினார். 1957 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆதிக்கச் சாதியினரை எதிர்த்துப் போட்டியிட்ட தலித்துகளின் வெற்றிக்காக உழைத்து தமது ஆளுமையை நிறுவினார். அதே காலகட்டத்தில் காடமங்கலம் எனும் கிராமத்தில் உடல் நலக்குறைவால் இறந்த தலித் மூதாட்டி ஒருவரின் உடலை இடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதைக் கண்டு கொதித்தெழுந்த இம்மானுவேல் சேகரன், கமுதி காவல் நிலையத்தை அணுகி சட்டத்தின் துணையுடன் மூதாட்டியின் உடலை அடக்கம் செய்கிறார்.

தலித்துகளை ஒடுக்கும் வெறியுடன் அலைந்த ஆதிக்கச் சாதியினர் குடிநீர் கிணற்றில் மலத்தைக் கலந்தனர்; சேரிக் குடிசைகளுக்கு நெருப்பு வைத்தனர்; தலித் பெண்களை சூறையாடினர். முதுகுளத்தூரைச் சுற்றிலும் நடைபெற்ற இந்தச் சாதி வெறியாட்டங்களுக்கு முத்துராமலிங்கத் தேவர் தான் காரணம் என்று துணிந்து கை நீட்டினார் இம்மானுவேல் சேகரன்.

இத்தகைய துணிச்சலான தொடர் நடவடிக்கைகளின் விளைவாக தலித்துகளின் தனிப்பெரும் தலைவராக வளர்ந்தார் இம்மானுவேல் சேகரன். அவரது வேகத்தையும் வியூகத்தையும் கண்டு ஆதிக்கச் சாதியினர் ஆத்திரம் அடைந்தனர். இம்மானுவேலின் கதையை முடிக்க நாள் குறித்தனர்.

இந்நிலையில், 1957 செப்டம்பர் 10 ஆம் நாள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியாளர் சி.வி.ஆர்.பணிக்கர் முதுகுளத்தூரில் ஒரு சமாதானக் கூட்டத்தை ஒருங்கிணைத்தார். அந்தக் கூட்டத்தில் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர். அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கத் தேவரும் அக்கூட்டத்திற்கு அழைக்கப் பட்டிருந்தார். தலித்துகளின் தலைவரான இம்மானுவேல் சேகரனும் அழைக்கப் பட்டிருந்தார். கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துத் தலைவர்களுடனும் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடிய பிறகு, கலவரங்களைத் தடுக்கும் வகையில் ஒரு கூட்டறிக்கை தயார் செய்யப்பட்டு அதில் அனைத்து தலைவர்களும் கையெழுத்திட முடிவு செய்யப்பட்டது.

எல்லோரும் அதற்கு உடன்பட்ட நிலையில் முத்துராமலிங்கத் தேவர் மட்டும் முரண்டு பிடித்தார். 'ஒரு கீழ் சாதிக்காரன் எனக்கு சமமாக கையெழுத்திடுவதா?' என்று தன் சாதித் திமிரை வெளிப்படுத்தினார். கோபமடைந்த மாவட்ட ஆட்சியர் பணிக்கர், தேவரை கடுமையாக எச்சரித்தார். வேறு வழியே இல்லாமல் அறிக்கையில் தேவர் கையெழுத்திட்டார். தலித்துகளின் சார்பில் இம்மானுவேல் சேகரனும் கையெழுத்திட்டார். இச்சம்பவம் தொடர்பாக தேவருக்கும் இம்மானுவேல் சேகரனுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

ஆட்சியாளர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் முன்னிலையில், தலித்துகளிடம் தான் அடங்கிப் போகவேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதே என்று நடந்ததை எண்ணி எண்ணி ஆத்திரம் கொண்டார் முத்துராமலிங்கத் தேவர். தமக்கு அவமானம் நேர்ந்து விட்டதாக குமுறினார். ஆத்திரமும் குமுறலும் இம்மானுவேல் சேகரனின் மீதான வெறுப்பாக உருமாறியது. இம்மானுவேல் குறிவைக்கப் பட்டார்.

சமாதானக் கூட்டம் நடந்த மறுநாள், அதாவது 1957 செப்டம்பர் 11 ஆம் நாள் இரவு பரமக்குடி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த இம்மானுவேல் சேகரனை ஆதிக்கச் சாதிக் கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது. ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிய அந்த மகத்தானப் போராளி, பரமக்குடி மண்ணில் ரத்த வெள்ளத்தில் விதையாய் விழுந்தார். விழுந்த போது அவருக்கு வயது 33.

சாதி ஒழிப்புக் களத்தில் தம்மை அர்ப்பணம் செய்து கொண்ட இம்மானுவேல் சேகரன் எனும் இளம் தலைவனுக்கு பரமக்குடியில் ஆண்டு தோறும் நினைவேந்தல் விழா எடுக்கின்றனர் தலித்துகள். அந்தத் தலைவனை நினைவு கொள்வதினூடாக சாதி ஒழிப்புக் களத்தை கூர்தீட்டு கின்றனர். ஆதிக்கச் சாதியினர் தம்மீது செலுத்தும் அடக்குமுறைகளுக்கு எதிராக அந்தத் தலைவனின் வழியில் நின்று போராட உறுதி எடுக்கின்றனர். பள்ளர்; பறையர்; அருந்ததியினர் என உட்பிரிவு வேற்றுமைகளைக் கடந்து இம்மானுவேல் சேகரன் எனும் ஒற்றைத் தலைமையின் கீழ் அம்மக்கள் ஆண்டுதோறும் அணிதிரள்கின்றனர். தலித்துகளின் இந்தத் திரட்சி தான்; எழுச்சிமிகு இந்த அணிதிரள் தான் ஆதிக்கச் சாதியினரின் கண்களை உறுத்துகிறது. ஆதிக்கச் சாதியினரின் குறியீடாக விளங்கும் அரசாங்கத்தின் கண்களையும் அது உறுத்துகிறது.

இம்மானுவேல் சேகரனின் நடவடிக்கைகள் எப்படி ஆதிக்கச் சாதியினருக்கு வெறுப்பைத் தந்ததோ, அது போலவே அவரது பெயரால் அவரது சமூகம் அணிதிரள்வதும் ஆதிக்கச் சாதியினருக்கு வெறுப்பைத் தருகிறது. இம்மானுவேல் மீதான வெறுப்பு அவரது படுகொலையில் முடிந்தது போலவே, அவரது சமூக மக்கள் மீதான வெறுப்பு இன்று துப்பாக்கிச் சூட்டில் முடிந்திருக்கிறது.

பரமக்குடி சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, அதை ஒரு சாதிக் கலவரமாக சித்தரித்தார். தலித்துகள் வன்முறையில் ஈடுபட்டதனால் காவல்துறையினர் கடும் நடவடிக்கைகளில் இறங்க வேண்டியதாயிற்று என்று அனைத்தையும் நியாயப்படுத்தினார். நாய்க்கு எலும்புத் துண்டுகளை வீசுவதைப் போல, ஒரு லட்சம் ரூபாயை இழப்பீட்டுத் தொகையாக வீசியிருக்கிறார். தமது அரசும் காவல்துறையும் செய்தது அனைத்தும் சரியே என்று சான்றிதழ் வாங்குவதற்காக விசாரணைக் கமிசனை நியமித்திருக்கிறார்.
.
ஜெயலலிதா மட்டுமல்ல ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் கூட பரமக்குடியில் நடைபெற்றது சாதிக்கலவரம் தான் என்று நிறுவி வருகின்றனர். பரமக்குடியில் நடைபெற்ற கொடூரங்களை ஊன்றிக் கவனித்தால் தெரியும் அது சாதிக்கலவரம் அல்ல; இனப்படுகொலை என்று.

இரண்டு சாதிகள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டால் தான் அது சாதிக்கலவரம். ஆனால், பரமக்குடியில் அன்று அப்படி ஒரு நிகழ்வு நடக்கவே இல்லை. திரண்டிருந்த தலித்துகளை விரட்டுவதற்காகவும்; இம்மானுவேல் சேகரனின் நினைவேந்தல் நிகழ்ச்சியை சீர்குலைப்பதற்காகவும் அரசாங்கம் கையாண்ட தந்திர நடவடிக்கை தான் பரமக்குடி படுகொலைகள் என்பது அறிவுடைய அனைவருக்கும் விளங்கும்.

அரசாங்கம் ஏன் அதை சீர்குலைக்க வேண்டும்? அதற்கும் காரணம் இருக்கிறது. இன்றைய அதிமுக அரசு என்பது முக்குலத்தோரின் அரசாகவும், பார்ப்பனீயர்களின் அரசாகவுமே விளங்குகிறது. சோவும், மோடியும் அரசை இயக்கும் லாபியிங் சக்திகளாகவும், முக்குலத்தோர் சமூகத்தை சார்ந்த சசிகலா முதல்வரின் நிழலாகவும் இருப்பதனால் இயல்பிலேயே ஜெயலலிதா அரசு என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர் அரசாக விளங்குகிறது.

இன்று அதிமுக அமைச்சரவையில் பெரும்பான்மை பலத்தோடு முக்குலத்தோர் சமூகம் ஆளுமை செலுத்துகிறது. மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் முக்குலத்தோர் சமூகத்தவர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு அவர்களே வெற்றி பெற்று சட்டமன்றத்தில் கோலோச்சியுள்ளனர். காவல்துறை முதல் வருவாய்த் துறை வரை அரசாங்கத்தின் ஒவ்வொரு துறைகளிலும் அவர்கள் ஊடுருவியுள்ளனர். அரசாங்கத்தின் ஒப்பந்தங்கள், டெண்டர்கள், தொழில் முதலீடுகள் அனைத்தும் அந்தச் சமூகத்தைச் சுற்றியே நடந்து வருகிறது. வட்டித் தொழில், ரியல் எஸ்டேட், சினிமா, டாஸ்மாக், உணவகம் என பணம் புழங்கும் அத்தனைத் தொழில்களிலும் அவர்களின் ஆதிக்கம் நிலவுகிறது. மதுரை பேருந்து நிலைய வாகன நிறுத்துமிட வசூல் முதல் கட்டணக் கழிப்பறை வசூல் வரை எங்கும் எதிலும் அவர்களின் ராஜ்ஜியம் தான்.
இத்தகைய அதிகாரப் பின்புலத்தோடு முக்குலத்தோர் சமூகம் ஆதிக்கம் செலுத்துவதனால் தான், அரசாங்கம் அவர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கிறது. அவர்களின் குரலுக்கு கட்டுப்படுகிறது. அவர்களுக்குப் பிடிக்காதவர்களை பழிவாங்குகிறது. அதனால் தான் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை ஒருவிதமாகவும், இம்மானுவேல் சேகரன் நினைவேந்தல் வேறுவிதமாகவும் நடைபெறுகிறது. இரண்டுக்குமான அரசாங்கத்தின் அணுகுமுறை அப்பட்டமாக மாறுகிறது.

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை எப்படி நடக்கிறது என்பதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். மொத்த அரசு அதிகார வர்க்கமும் பசும்பொன்னில் குவிக்கப் படுகிறது. பெரியாரியம் பேசுபவர்கள், பொதுவுடைமை பேசுபவர்கள், தமிழ்த்தேசிய கருத்தாளர்கள், திராவிட இயக்கத் தலைவர்கள் என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் மலர்வளையத்தோடு அங்கு ஆஜராகின்றனர். நூற்றுக் கணக்கானத் தலைவர்கள் பசும்பொன்னில் குவிந்தாலும் அவர்களுக்கெல்லாம் முறையாக நேரம் ஒதுக்கி, பாதுகாப்பு வழங்கி, எந்த இடையூறும் இன்றி அவர்கள் அஞ்சலி செலுத்தித் திரும்புவதற்கு வழியமைத்துத் தருகிறது காவல்துறை.

தேவர் குருபூஜைக்காக வரும் இளைஞர்கள் நடந்து கொள்ளும் முறை மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் எத்தகைய பதற்றத்தை விதைக்கிறது என்பதை எல்லோரும் அறிவார்கள். தலித் சமூக மக்கள் மீது வெறுப்பை உமிழும் அவர்களின் கூச்சல்களும் கோசங்களும் சுதந்திரமாக அனுமதிக்கப் படுகின்றன. தேவர் குருபூஜை முடியும் வரை அப்பகுதி ஒடுக்கப்பட்ட மக்கள் அச்சத்தின் பிடியிலேயே வாழ்கின்றனர். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பதைபதைப்புக்கு அவர்கள் ஆளாகின்றனர். இவ்வாறெல்லாம் எந்தப் பதட்டமும் பதைபதைப்பும் இல்லாத போதும் இம்மானுவேல் சேகரனின் நினைவேந்தல் நிகழ்ச்சி கலவரக் களமாக மாற்றப்பட்டிருக்கிறது. தேவர் குருபூஜைக்கு இணையாக அதே மண்ணில் ஒரு தலித் தலைவனின் நினைவேந்தல் நிகழ்ச்சி முக்கியத்துவம் பெறுவதை தடுப்பதற்காகவே இந்த திட்டமிட்ட படுகொலைகள் நடத்தப் பட்டிருக்கின்றன.

பாபர் மஸ்ஜித் இடிப்பு நாளும், அம்பேத்கர் நினைவு நாளும் ஒரே நாளாக இருப்பது போலவே, கோவை முஸ்லிம்கள் படுகொலைக்கும் பரமக்குடி தலித்கள் படுகொலைக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன.

1997 நவம்பர் இறுதியில் கோவையில் நடைபெற்ற நிகழ்வுகள், முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையிலான பிரச்சனை அல்ல. முஸ்லிம்களைக் குறிவைத்து காவல்துறை நடத்திய இனப்படுகொலை அது. இன்று பரமக்குடியிலும் அதுவே நிகழ்ந்திருக்கிறது.

கோவையில் 19 முஸ்லிம்களை காவல்துறை சுட்டுப் பொசுக்கியபோது குண்டடிபட்ட உடல்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கே காத்திருந்த இந்துத்துவ சக்திகள் மருத்துவமனையிலேயே முஸ்லிம்களை உயிரோடு எரித்தார்கள். சிகிச்சை பெற முடியாத வகையில் தடுத்தார்கள். பரமக்குடியிலும் குண்டடிபட்டவர்களும் காயம்பட்டவர்களும் மருத்துவமனைக்குச் சென்ற போது அவர்கள் உரிய சிகிச்சையைப் பெற முடியாத வகையில் அங்கு ஆதிக்கச் சாதியினர் அட்டூழியம் புரிந்துள்ளனர். ஆதிக்கச் சாதி வெறி கொண்ட மருத்துவமனை ஊழியர்கள் வேண்டுமென்றே சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர்.

காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட 19 முஸ்லிம் உயிர்களுக்கும் குறைந்த இழப்பீட்டுத் தொகையை வழங்கி கேவலப்படுத்தியது அன்றைய அரசு. அது போலவே இன்று பரமக்குடியில் பலியான 7 தலித் உயிர்களுக்கும் மிகக் குறைந்த இழப்பீட்டுத் தொகையை அறிவித்து ஓரவஞ்சனை செய்துள்ளது இன்றைய அரசு.

அன்று 19 முஸ்லிம்களின் உடல்களைப் பார்வையிடவோ, முஸ்லிம்களுக்கு நேர்ந்த 1000 கோடி ரூபாய் இழப்பை நேரில் கண்டறியவோ, பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆறுதல் சொல்லவோ அன்றைய முதல்வர் கருணாநிதி கடைசி வரை கோவை செல்லவே இல்லை. அது போலவே இன்றைய முதல்வர் ஜெயலலிதாவும் பரமக்குடிக்கு செல்லவே இல்லை.

அன்று கோவையில் நடந்தது அனைத்தும் நன்கு திட்டமிடப்பட்ட வன்முறைகள் என்பதற்கு சாட்சியாக, பொதுப் பெயர்களில் இயங்கிய முஸ்லிம் கடைகள் கூட குறிவைத்து அழிக்கப் பட்டிருந்ததை கூறலாம். கலவரத்திற்கு முன்பாகவே காவல்துறையும் இந்துத்துவ சக்திகளும் கைகோர்த்து முஸ்லிம் வர்த்தக நிறுவனங்களை அடையாளம் கண்டு பட்டியல் தயாரித்து வைத்து அந்தப் பட்டியலின் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்டனர். அது போலவே பரமக்குடியிலும், இம்மானுவேல் சேகரனின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு யார் யார் எந்தெந்த கிராமத்தில் இருந்து வருகிறார்கள் எனும் பட்டியலை உள்ளூர் ஆதிக்கச் சாதியினரின் துணையோடு காவல் துறை முன்கூட்டியே தயார் செய்திருக்கிறது.

துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவுக்கு கோவையில் பெரிய அளவில் சமூக வன்முறைகளோ கலகமோ நடக்காத போதும், எல்லாவித முன்னேற்பாடுகளுடன் காவல்துறை திடீரென முஸ்லிம்கள் மீது பாய்ந்தது போலவே, பரமக்குடியில் எவ்வித வன்முறையும் கலவரமும் இல்லாத போதும் தலித்துகளை தாக்குவதற்காகவே கற்கள், கம்புகள் மற்றும் சகல ஆயுதங்களுடன் காவல்துறை தயாராக வந்தது அம்பலமாகியுள்ளது.

அன்று கோவையில் கொல்லப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் தான் வன்முறையாளர்களாகவும், கலவரக் காரர்களாகவும், பிரச்சனைக்கு காரணமானவர்களாகவும் சித்தரிக்கப் பட்டனர். முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்கள் தான் கலவரத்தை விதைத்தார்கள் என்று கருத்துருவாக்கமும் செய்யப்பட்டன. அதுபோலவே இன்று பரமக்குடியில் தலித்துகள் தான் கலவரத்திற்கு காரணம் என்று சித்தரிக்கப் படுகிறது. 'ஜான்பாண்டியனால் தான் பிரச்சனையே' என்ற கருத்தும் பரப்பப் படுகிறது.

அன்று கோவையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் நீதி கேட்ட போது ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல கிருஷ்ணன் தலைமையில் ஒரு விசாரணைக் கமிசனை அமைத்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி. இன்று பரமக்குடியில் தலித்துகள் நீது கேட்கும் போதும் அதே போல ஒரு விசாரணைக் கமிசனை அமைத்துள்ளார் இன்றைய முதல்வர் ஜெயலலிதா.

கோவையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீதே பல்வேறு பிரிவுகளில் வழக்குகளைப் பதிவு செய்து அவர்களை கைது செய்து அலைக்கழித்தது காவல்துறை. அது போல இன்று பரமக்குடியிலும் பாதிக்கப்பட்ட தலித்துகள் மீதே 1000 பேருக்கு மேல் வழக்குப் பதிவு செய்து அவர்களை அலைக்கழிக்கத் தயாராகியுள்ளது காவல்துறை. கடந்த 14 ஆண்டுகளாக சிறைச்சாலைக்கும் நீதிமன்றத்திற்குமாக அலைந்து கோவை முஸ்லிம்கள் பட்ட வேதனைகளை இனி பரமக்குடி தலித்துகளும் அனுபவிக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம்களுக்கும் தலித்துகளுக்கும் மட்டும் ஏன் இவ்வாறு நடக்கிறது என்பதை இனியாவது இரண்டு சமூகங்களும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். களத்தில் இணைவது பற்றி தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

கோவையில் முஸ்லிம்களை நோக்கி நீண்ட காவல்துறையின் துப்பாக்கிகள்; பரமக்குடியில் தலித்துகளை நோக்கிப் பாய்ந்த அரசாங்கத்தின் தோட்டாக்கள்; பசும்பொன்னில் கூடுவோர் மீது நீளுமா? ஆதிக்க சாதியினர் ஒருவர் மீதாவது பாயுமா? அப்படி பாய்ந்தால் தமிழகம் சும்மா இருக்குமா? இருக்காது எனில் அது ஏன் என்பதைப் பற்றி தலித்துகளும் முஸ்லிம்களும் ஆய்வு செய்ய வேண்டும்.

ஜான்பாண்டியனை வழிமறித்து கைது செய்தது போல், பசும்பொன்னில் அஞ்சலி செலுத்த வரும் ஒரு தலைவரையாவது வழிமறித்து கைது செய்ய முடியுமா? அப்படி செய்ய காவல் துறை துணியுமா? துணியாது எனில் அது ஏன் என்பதற்கான விடையை இரு சமூகங்களும் கண்டறிய வேண்டும்.

பரமக்குடி படுகொலைகள் குறித்து விசாரிக்க அரசு அமைத்திருக்கும் விசாரணைக் கமிசனை கண்துடைப்பு நடவடிக்கை என்று சொல்லி தலித்துகள் விமர்சித்துக் கொண்டிருக்கும் போது, சட்டப்பேரவையில் பேசிய எதிர்கட்சித் துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் 'இதற்கெல்லாம் எதற்கு விசாரணைக் கமிசன்; அது கூடத் தேவை இல்லை' என்று சொல்லி தன் சாதித் திமிரை உமிழ்ந்துள்ளார். இதுவே இன்னொரு சமூகத்தின் பாதிப்பாக இருந்திருந்தால் இப்படி ஒரு எதிர்க்கட்சி இப்படி ஒரு கருத்தைப் பதியுமா? அப்படி கருத்துச் சொல்லும் துணிச்சல் அந்தக் கட்சிக்கு வருமா? வராது எனில் அது ஏன் என்பதைப் பற்றி இரு சமூகங்களும் யோசிக்க வேண்டும்.

இம்மானுவேல் சேகரன் காலத்தில் நேரடியாக தலித்துகளோடு மோதிய ஆதிக்கச் சாதியினர் இன்று அவ்வாறு நேரடியாக மோதலில் ஈடுபடுவதில்லை. மாறாக இப்போது அவர்கள் அதிகார தோரணையுடன் வந்து மோதுகின்றனர். அவர்கள் காவல்துறையின் வடிவில் வருகிறார்கள். அவர்கள் நீதித் துறையின் வடிவில் வருகிறார்கள். அவர்கள் அரசாங்கத்தின் ஒவ்வொரு துறைகளின் வடிவிலும் வருகிறார்கள். முஸ்லிம்களை ஒடுக்கும் இந்துத்துவ சக்திகளும் அவ்வாறே வருகிறார்கள்.

அன்று இம்மானுவேல் சேகரனின் கழுத்தில் பாய்ந்தது ஆதிக்கச் சாதியினரின் ஆயுதம். இன்று தலித்துகள் மீது பாய்ந்திருப்பது அரசாங்கத்தின் ஆயுதம். கால மாற்றத்தில் அரிவாள் துப்பாக்கியாக பரிணாமம் பெற்றிருக்கிறது. ஆதிக்கச் சாதி அரசாங்கமாக உருமாற்றம் அடைந்திருக்கிறது.

இனி தமக்கு எதிரான அச்சுறுத்தல்களையும் அடக்குமுறைகளையும் எப்படி எந்த வடிவில் எதிர்கொள்வது என்பதைப் பற்றி தலித்துகளும் முஸ்லிம்களும் முடிவு செய்யட்டும்.

[சமநிலைச் சமுதாயம் அக்டோபர்-2011 இதழில், ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரை.]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக