வெள்ளி, 18 நவம்பர், 2011

மநுநீதியின் மடியில் மலர்ந்தவர் ஜெயலலிதா


'இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
 வகுத்தலும் வல்லது அரசு '
இது தமிழர்களின் வாழ்வியல் நூலான குறள் சொல்லும் ஆட்சி முறை.
'அழித்தலும், கிழித்தலும், மறைத்தலும், சிதைத்தலும்' - ஜெயலலிதா அரசின் ஆட்சிமுறை.
jayalalitha_300சமச்சீர்க்கல்வியில் தொடங்கி அண்ணா நூற்றாண்டு நூலகம் இடமாற்றம் என அ.தி.மு.க. அரசின் அடாவடி அதிரடிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றம் செய்யப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு, தமிழர்களின் தலையில் இடியாய் இறங்கியது என்றால் மிகையில்லை. தமிழகத்தின் குறியீடுகளில் ஒன்றாக வானளாவ உயர்ந்து நிற்கும் அந்த அறிவுக் கருவூலத்தை சிதைக்கப் போகும் அறிவிப்பு பிறப்பிக்கப்பட்ட இடம் ஜார்ஜ் கோட்டையா, கீழ்ப்பாக்கமா என்னும் சந்தேகமும் நமக்கு ஏற்பட்டதைத் தவிர்க்க இயலவில்லை.
பல ஆண்டுகளாக கல்வியாளர்களும், சமூக உணர்வாளர்களும், தமிழ் அறிஞர்களும் வலியுறுத்திய கல்விமாற்றத்திற்கான முதல் படியாக சமச்சீர்க்கல்வித் திட்டத்தைக் கைவிட எடுத்த முயற்சி (பிறகு உச்ச நீதிமன்றத்தின் சுத்தியல் உச்சந்தலையில் வைத்த குட்டால், வேறு வழியின்றி அம்முயற்சியை அம்மையார் கைவிட்டார் என்பது வேறு) பாலாறு இல்லத்தில் செயல்பட்டு வந்த செம்மொழி மையத்தை அங்கிருந்து மாற்றி, ஒரு குறுகிய பரப்புக்குள் தள்ளி அதன் செயல்பாட்டை குறைத்தது, பாரதிதாசன் செம்மொழி ஆய்வு நூலகத்திலிருந்த நூல்களை எங்கோ கொண்டுசென்று மறைத்தது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தினுள் ஆட்சியர் அலுவலகத்தைக் கட்ட முயற்சிப்பது, என அறிவுசார் கூறுகளின் மீது ஜெயலலிதா தொடர்ந்து தாக்குதல்களை நடத்திவருகின்றார். அவருடைய இந்த ஆணவப்போக்கினால் மக்கள் வேதனையுறுவது, இன்று மட்டுமன்று, இதற்கு முந்தைய அவருடைய ஆட்சிக் காலங்களிலும் நடந்ததை அனைவரும் அறிவர்.
இதுபோன்ற அவருடைய நடவடிக்கைகளுக்குப் பொதுவாக ஒரு காரணம் சொல்லப்படுகின்றது. தி.மு.கழகத்தின் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சியினால், அந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் என்ற காரணத்திற்காகவே அவற்றை மாற்றுவதில் பிடிவாதப் போக்கைக் கடைப்பிடிக்கிறார் என்பதே பொதுவாக முன்வைக்கப்படும் காரணம். உண்மைதான். அரசியல் தளத்தில், அரசியல் நோக்கில் இந்த வாதம் ஏற்புடையதுதான். ஆனால் இதுமட்டுமே காரணமன்று. நாம் உணர்ந்து உணர்வு பெற வேண்டிய, எச்சரிக்கை அடைய வேண்டிய இன்னொறு காரணமும் இருக்கிறது. சமூக தளத்தில், சமூக நீதியின்பாற்பட்டு அதை நாம் அணுகிப் பார்க்க வேண்டும் என்று கருதுகிறேன்.
'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுக்காதே' என்று சொன்ன 'மநுநீதி'யின் மடியில் மலர்ந்தவர் ஜெயலலிதா. அதனால்தான் நம் அடிமடியில் கைவைக்கிறார். ஆங்கிலேயர்களுக்கு சலாம் போட்ட பார்ப்பனர்கள், அவர்கள் கல்வியை அனைவருக்கும் பொதுவாக்கியபோது, கடுமையாக எதிர்க்கத் தொடங்கினார்கள் என்பது வரலாறு சொல்லும் உண்மை. மனிதனின் அடிமை விலங்கை உடைக்கும் வலிமைமிக்க ஆயுதம் கல்வி மட்டுமே என்பதை உணர்ந்த பெரியார், டி.எம். நாயர், நடேசனார், சர்.பிட்டி. தியாகராயர் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தந்து போராடினார்கள். அதே காரணத்திற்காகவே பார்ப்பனர்களும் தொடர்ந்து நம்மைக் கல்வித்துறையில் பின்தள்ளுவதற்கான அத்தனை முயற்சிகளையும் செய்தனர். இன்றும் செய்கின்றனர். அதை செயல்படுத்தவதற்கு அன்று சி.இராசகோபால் (ராஜாஜி) இன்று ஜெயலலிதா.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகம். ஒரு நூலகத்திற்கும், அதன் சரியான பயன்பாட்டிற்கும் என்னென்ன வசதிகள் தேவையோ அவை அத்தனையும் அங்கே செய்யப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இடங்களின் பட்டியலில் இந்த நூலகத்திற்கும் இடம் இருக்கிறது. மாற்றுத்திறனாளிகள் யாருடைய உதவியும் இன்றி இந்நூலகத்தைப் பயன்படுத்த முடியும். வெளிநாடுகளுக்கு இணையான கட்டமைப்பையும், வசதிகளையும், இலட்சக்கணக்கான நூல்களையும் தன்னகத்தே கொண்டுள்ள நூலகத்தைத்தான் மருத்துவமனையாக மாற்றப்போவதாக அறிவித்திருக்கிறார் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார். இந்நூலகம் அறிஞர் அண்ணாவின் பெயரை மட்டும் தாங்கி நிற்கவில்லை; அவருடைய நூற்றாண்டின் நினைவுகளையும் தாங்கி நிற்கிறது. அண்ணாவின் பெயரை முன்னொட்டாகக் கொண்ட கட்சியின் ஆட்சியில், அவருக்கு இத்தனை பெரிய அவமரியாதை. 'ஆரியர்களுக்கு அதிகாரத்தை அளிக்காதீர்கள் ' என்று அண்ணா சொன்னதை தமிழகம் இன்று வேதனையோடு நினைத்துப்பார்க்கிறது.
உண்மையிலேயே, குழந்தைகள் நலனில் அக்கறை உள்ளவராக இருந்தால், ஏற்கனவே சரியான பராமரிப்பற்ற நிலையில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் குழந்தைகள் மருத்துவமனைகளை சீரமைக்க முன்வந்திருக்க வேண்டும். எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் சிறப்புத் தொகுதி, இராயப்பேட்டை அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என சென்னையில் பல குழந்தைகள் நல மருத்துவமனைகள் இருக்கின்றன. தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருப்பவர்கள், நீண்ட தூரம் பயணித்தும், அதிக செலவுகள் செய்தும் சென்னையில் உள்ள இந்த மருத்துவமனைகளுக்குத்தான் சிகிச்சைக்காக வருகின்றனர். அவர்களின் வேதனையைப் புரிந்து கொண்டிருக்கும் அரசாக இருந்தால், சென்னையைத் தாண்டி மற்ற நகரங்களிலும் குழந்தைகள் நல மருத்துவமனைகளை அமைக்க எண்ணியிருக்கும். ஆனால் இந்த அரசின் நோக்கம் அதுவன்று. தமிழர்களின் அத்தனை அடையாளங்களையும், பண்பாட்டுக் கூறுகளையும் சிதைப்பதுதான் தன்னுடைய ஒரே நோக்கம் என்பதுபோல ஜெயலலிதா செயல்பட்டு வருகின்றார்.
நூல்கள் என்றால் ஜெயலலிதாவிற்குப் பிடிக்காதா? பிடிக்கும். 'நூலும்' பிடிக்கும் நூல்களும் பிடிக்கும். பிறகேன் இந்த அறிவிப்பு? ஒரு வேளை அவாள்கள் மட்டுமே படித்துக்கொண்டிருந்த, பெரிய பெரிய அறிவுக் களஞ்சியங்கள் அனைவருக்கும் பொதுவாகி விட்டதே என்ற கவலையால் அப்படி அறிவித்திருப்பாரோ? தமிழர்கள் அவற்றைப் படித்து தெளிந்தால், நம்மவர்களின் 'பிழைப்பு' என்னவாகுமோ என்ற அச்சத்தால் அப்படி முடிவெடுத்திருப்பாரோ?
சிங்கள இனவெறியன் ஜெயவர்தனேவின் ஆட்சியில், 97,000 நூல்களோடு யாழ்ப்பாண நூலகம் எரித்துச் சாம்பலாக்கப்பட்டது. இன்று ஜெயலலிதாவின் ஆட்சியில் 5 லட்சம் நூல்களோடு அண்ணா நூற்றாண்டு நூலகம் அழிவை எதிர்நோக்கி நிற்கிறது. தமிழ்நாட்டின் ஜெயவர்தனே ஜெயலலிதாவை இங்குள்ள சிலர் 'பச்சைத்தமிழச்சி' என்று புகழ்ந்து சுவரொட்டிகள் ஒட்டிய கேலிக்கூத்தும் நடந்தது. தமிழ்நாட்டிலுள்ள கோடிக்கணக்கான மக்கள் (அ.தி.மு.க.வினர்) ஜெயலலிதாவை 'அம்மா' என்று அழைக்கின்றனர். அதன் பொருளை அந்த அம்மையார் எப்படி புரிந்து வைத்திருக்கிறாரோ நமக்குத் தெரியவில்லை. 'அம்மா என்றால் அன்பு' என்று பாடியவர் ஆணவத்தின் உச்சியில் நின்றுகொண்டு செயல்படுகிறார்.
மறைமலையடிகள் போன்ற தமிழறிஞர்கள், தமிழர்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு, வழிமொழிந்த தமிழ்ப்புத்தாண்டினை ஆட்சிக்கு வந்த ஓரிரு மாதங்களில் மாற்றினார். தமிழ் மீதும், தமிழறிஞர்கள் மீதும் என்றைக்கும் அவருக்கு நன்மதிப்பு இருந்ததில்லை. இவற்றிலெல்லாம் வெறும் அரசியல் மட்டும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழக சட்டமன்றத்தில், 'நான் ஒரு பாப்பாத்திதான்' என்று அறிவித்தாரே, அதன் தொடர்ச்சியாகவும் ஜெயலலிதாவின் இந்தப் போக்கினை பார்க்க வேண்டியுள்ளது.
தமிழ்மண்ணில் இன்னும் பார்ப்பனீயத்தின் நச்சுவேர்கள் மிச்சமிருக்கத்தான் செய்கின்றன. பத்திரிகைத் துறையில், அரசியலில், கல்வித்துறையில், அதிகார மட்டத்தில் பார்ப்பனீயம் புதுப்புது வடிவங்களை எடுத்துக்கொண்டிருக்கிறது. தினமலர், தினமணி போன்ற பார்ப்பன நாளேடுகளும், துக்ளக் சோவும், சுப்பிரமணிய சாமியும் அன்றும், இன்றும் தமிழீழத்திற்கு எதிராகவும், தமிழீழ விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாகச் சித்தரிப்பதிலும் உறுதியாக இருக்கின்றனர். அரசியலில் இந்துத்துவாவின் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து வரும் நரேந்திர மோடியை சோ சாமி சிறப்பு விருந்தினராக அழைத்து வருகிறார். வேதா நிலைய மாமியோ தலைவாழை இழை போட்டு விருந்தே வைக்கிறார். அவர்கள் என்றைக்கும், எந்த சூழ்நிலையிலும் அவர்களாகவேதான் இருக்கிறார்கள்.
திராவிடக் கட்சிகளில் ஒன்றான அ.தி.மு.க.வின் தலைமைப் பீடத்தில் இருந்தாலும், ஜெயலலிதா தன்னுடைய தனித்தன்மையை இழந்துவிடாமல்தான் இருக்கிறார் என்பதற்கு, அவருடைய அரசியல் வழிகாட்டி சோ ராமசாமியின் சொற்களே சான்று.
" ...எந்தப் பக்கம் நோக்கினாலும் சரி, பொருளற்ற திராவிடப் பாரம்பரியத்தின் கோஷ‌ங்களை ஜெயலலிதா ஏற்கவில்லை. தன்னுடைய நம்பிக்கைகளை அந்தப் பாராம்பரியம் ஏற்கும்படி செய்தார். இது சமீபகால அரசியல் அற்புதம்!" (துக்ளக்:21.09.2005 )
அந்த அற்புதத்தைத்தான் நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெரியாரின் தடியால் அடிவாங்கி புதருக்குள் பதுங்கிக்கிடந்த பார்ப்பனீய நச்சரவத்திற்கு இந்த 'மண்ணின் மைந்தர்கள்' சிலர் பாலூற்றிக் கொண்டிருப்பதன் விளைவு, அசுர பலத்தோடு இன்று படமெடுத்து ஆடிக்கொண்டிருக்கிறது.
மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் துக்ளக் ஏட்டின் ( 16.11. 2011 ) பேட்டியில் தெரிவித்துள்ள கருத்து, ஜெயலலிதா அரசு தமிழ்நாட்டின் கல்விக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதைக் காட்டுகிறது.
"இந்நூலகம் இங்கு இயங்க, கட்டிடத்திற்கு பராமரிப்புச் செலவு மட்டும் வருடத்திற்கு, 7 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். பாதுகாப்பு சிஸ்டத்திற்கு மட்டுமே 23 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும் தனியார் நிறுவனம் கூட இவ்வளவு செலவிடுவதில்லை."
கல்வித்துறை அமைச்சரின் சிந்தனை வளம் நம்மை வியக்க வைக்கிறது. நல்ல அரசு கல்விக்கு ஆகும் செலவை நாட்டின் முன்னேற்றத்திற்கான முதலீடாகத்தான் பார்க்குமே தவிர, தேவையற்ற செலவு என்று எண்ணாது. நீதிமன்ற விசாரணைக்கு பெங்களூருவிற்குச் செல்லும் ஜெயலலிதா அம்மையாரின் ஒருநாள் பாதுகாப்புக்கு ஏறத்தாழ 30 இலட்சம் தண்டமாகச் செலவிடப்படும்போது, விலை மதிப்பில்லாத அறிவுக் களஞ்சியத்தைப் பாதுகாக்க கோடிகளை செலவிடுவதில் என்ன தவறு?
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, திடீரென 13,000 மக்கள் நலப் பணியாளர்களை கூண்டோடு பணிநீக்கம் செய்திருக்கிறார் ஜெயலலிதா. 'மழையிலும், வெயிலிலும் அலைந்து, அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கான புள்ளிவிவரங்களை சேகரித்துக் கொடுத்தோமே, எங்கள் வயிற்றில் அடித்துவிட்டார்களே, இது நியாயமா' என்று தொலைக்காட்சிகளில் பெண் பணியாளர்கள் கண்ணீர் விடுகின்றனர். மக்கள் நலப்பணியாளர்கள் என்பவர்கள் சமூக அளவிலும், பொருளாதார அளவிலும் மிகவும் பின்தங்கி இருப்பவர்கள். அவர்களின் சம்பளம் சில நூறுகளில். இதனால் அரசுக்கு எந்தவித நிதி நெருக்கடியும் வந்துவிடப் போவதில்லை. ஆட்சியைப் பிடித்ததும், மறக்காமல் மீண்டும் கோயில்களில் அன்னதானத் திட்டத்தைத் தொடங்கிய வேகமும், மக்கள் நலப் பணியாளர்கள் 13000 பேரை பணிநீக்கம் செய்து அவர்கள் வயிற்றிலடித்த மனிதாபிமானமற்ற செயலும் அவர் யார் என்பதை நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றன.
இந்த மக்கள் விரோத அரச நடவடிக்கைககளை எதிர்த்து கண்டனக் கூட்டங்கள் நடத்த வேண்டிய நிலையில், நன்றி சொல்லி நடைப்பயணம் போய்க் கொண்டிருக்கிறோம்.
மநுநீதியாளர்களிடம் சமூக நீதியை எதிர்பார்ப்பது அறிவுடையாகுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக