செவ்வாய், 22 நவம்பர், 2011

பரமக்குடி துப்பாக்கிச் சூடு: கண்டன மாநாடு



கடந்த 9.11.2011 அன்று இராமநாதபுரம், சோசரி மன்றத்தில் உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கத்தின் சார்பாக பரமக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து மாநாடும் கள ஆய்வு அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. சகோ.ஆரோக்கியம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கத் தலைவர் மெல்கியோர் ஆய்வு அறிக்கையை வெளியிட, இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவருமான பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் பெற்றுக் கொண்டார்.

இதில் சிறப்புரையாற்றிய எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், பரமக்குடி சம்பவம் ஒரு கொடூரமான மனித உரிமை மீறல் எனவும், அரசியல் சாசன சட்டத்தில் ‘தீண்டாமைக்குத் தடை’ என இருந்தும், தமிழகத்தில் பல்வேறு வகைகளில் தீண்டாமைக் கொடுமைகள் நடந்து வருகிறது என்று குற்றம்சாட்டினார். துப்பாக்கிச் சூட்டை விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் அமைக்கப்பட்ட அனைத்து விசாரணை கமிஷன்களைப் போல் இதுவும் ஒரு கண்துடைப்பாகவே அமைந்துவிடக் கூடாது என்றார். முன்னறிவிப்பு ஏதுமின்றி நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், அரசு வேலையும் மற்றும் காயமடைந்ததோருக்கு சிறந்த மருத்துவ வசதியும் செய்துதர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கத்தின் அருளுயிர், சிவக்குமார், ஆர்த்தி கென்னடி, இராமநாதபுரம் தமுமுக மற்றும் மமகவினர் உட்பட ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக