வெள்ளி, 4 நவம்பர், 2011

பரமக்குடி துப்பாக்கிச்சூட்டின் பின்னணி: ஒரு நேரடி ஆய்வு – அ. மார்க்ஸ்



Paramakudi Police Firing / பரமக்குடி போலீஸ் துப்பாக்கிச் சூடுசமச்சீர்க் கல்வி, மூன்று தமிழர் மரண தண்டனை ரத்து ஆகியவற்றிற்கு அடுத்து இன்று தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் பிரச்சினை பரமக்குடி துப்பாக்கிச்சூடு. தலித் பிரிவினரில் ஒருவரான தேவேந்திர குல வேளாளர் அல்லது பள்ளர் எனப்படும் சாதியினரின் வணக்கத்திற்குரிய தலைவரான இம்மானுவேல் சேகரனின்  நினைவு நாளன்று (செப் 11) அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்த மக்கள் திரள் மீது தமிழகப் போலீஸ் சுட்டதில் ஆறு பேர் மரணமடைந்தனர். குண்டுக் காயங்களாலும் தடியடியாலும் படுகாயமடைந்தோரின் எண்ணிக்கை முப்பதுக்கும் மேல்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டை ஆளும் கட்சியும் பிரதான எதிர்க் கட்சியும் (தே.தி.மு.க) தவிர பிற அனைத்துக் கட்சிகளும், இயக்கங்களும், மனித உரிமை அமைப்புகளும் கண்டித்துள்ளன. சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா துப்பாக்கிச் சூட்டையும்விடக் கடுமையான மொழியில் அதை நியாயப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக 18 மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய அகில இந்திய அளவிலான உண்மை அறியும் குழு ஒன்றை அமைத்து கள ஆய்வு செய்தோம். சென்ற செப் 18, 19 தேதிகளில் மதுரை, இராமநாதபுரம், பரமக்குடி மற்றும் பல சுற்று வட்டார கிராமங்களுக்கும் சென்று பாதிக்கப்பட்ட மக்களையும் இறந்துபோனோரின் குடும்பதினரையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்தோம்.
பரமக்குடியும் சுற்று வட்டாரமும் சாதி இறுக்கமும், சாதி முரண்களும் கூர்மை அடைந்துள்ள ஒரு பகுதி. 1957ல் தலித் தலைவரான இம்மானுவேல் சேகரன் வெட்டிக் கொல்லப்பட்டதை ஒட்டி எற்பட்ட முதுகுளத்தூர் கலவரம் யாவரும் அறிந்த ஒன்று. காமராசர் தலைமையிலான அன்றைய தமிழக அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு கலவரத்தை அடக்கியது. முக்குலத்தோர்களின் தனிப் பெருந் தலைவரான பசும்பொன் முதுராமலிங்கத் தேவரை காமராசர் கைது செய்து சிறையில் அடைத்தார். பெரியார் ஈ.வெ.ரா ஒருவர் மட்டுமே அன்று காமராசரின் இந்நடவடிக்கையை ஆதரித்தார்.
இன்று முத்துராமலிங்கத் தேவர் முக்குலத்தோர்களின் (தேவர், கள்ளர், அகம்படியர்) தலைவராக மட்டுமல்ல, குலதெய்வமாகவே கொண்டாடப் படுகிறார். தென் தமிழ் மாவட்டங்களுக்கு வந்து சென்றவர்கள் மதுரை, இராமநாதபுரம், தேனி, திருநெல்வேலி முதலான மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் தேவருக்குச் சிலைகள் வைத்துப் பூசிக்கப்படுவதைப் பார்த்திருக்கக்கூடும். முக்குலத்தோரின் வாக்கு வங்கியில் ஒரு கண் வைத்துள்ள அரசியல் கட்சிகள்  இத்தகைய போக்குடன் இணைந்தே செயல்பட்டுள்ளன. குறிப்பாக அ.இ.அ.தி.மு.க தேவர் சாதி ஆதரவுக் கட்சியாகவே இன்று அறியப்பட்டுள்ளது. ஜெயாவின் நெருங்கிய அரசியல் தோழியாக அறியப்பட்டுள்ள சசிகலா முக்குலத்தோர் சாதிகளில் ஒன்றைச் சேர்ந்தவர். சசிகலாவின் கணவர் நடராஜன் முக்குலத்தோர் தலைவர்களில் ஒருவராகத் தன்னை அடையாளப் படுத்திக்கொண்டு, அச்சாதியினரை ஒருங்கிணைத்துச் செயல்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.
இன்று தேவருடைய நினைவு நாள் ‘குருபூஜை’ என அம்மக்களால் கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு இதை  அரசு விழாவாகவே அங்கீகரித்துள்ளது. ‘தெய்வத் திருமகனார்’ என இன்று முக்குலத்தோர்கள் தேவரை விளிக்கின்றனர்.
தென்மாவட்டங்களில், குறிப்பாக மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில்  தேவர்கள் மட்டுமின்றி தேவேந்திரர்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் செறிந்து வாழ்கின்றனர். முதுகுளத்தூர் கலவரத்திற்குப் பின் இவர்கள் மத்தியில் அரசியல் மயப்படும் போக்கும் அமைப்பாகும் தன்மையும் வளர்ந்தது. கல்வி வளர்ச்சி, ஜனநாயக உணர்வு பரவலாகுதல், ஒரே பகுதியில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் செறிந்து வாழ்தல் ஆகியன இவர்கள் மத்தியில் இறுக்கமான அடையாள உருவாக்கத்திற்கு வழிவகுத்தன. உலகெங்கிலும் அடித்தள மக்கள் மத்தியில் எண்பதுகளுக்குப்பின் உருவான அடையாள அரசியலுடன் இணைத்துப் பார்க்கத் தக்கது இது.
1980களின் பிற்பகுதியில் சற்றே இடதுசாரிச் சாய்வுள்ள பூ. சந்திர போஸ் என்கிற தலித் தலைவர் ‘தியாகி இம்மானுவேல் பேரவை’ என்கிற ஒரு அமைப்பை உருவாக்கி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளில் அஞ்சலி செலுத்தும் வழக்கத்தைத் தொடங்கி வைத்தார். ஆண்டுக்கு ஆண்டு கூட்டம் பெருகி தொண்ணூறுகளுக்கு மத்தியில் ஒவ்வொரு நினைவு நாளிலும் சுமார் 30,000 பேர் வரை திரளும் நிலை ஏற்பட்டது. முற்றிலும் சாதி அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டு ஜான் பாண்டியன் முதலான சாதித் தலைவர்களும் உருவாயினர். 90களின் மத்தியில் இப்படியான அடையாள அரசியல் உணர்வு, வட்டார அளவைத் தாண்டிய தமிழகம் தழுவிய தேர்தல் சார்ந்த அரசியல் கட்சிகளாகப் பரிணமித்தது. ‘பாட்டளி மக்கள் கட்சி’, ‘விடுதலைச் சிறுத்தைகள்’, ‘புதிய தமிழகம்’ முதலியன சில எடுத்துக்காட்டுகள். இந்தியத் துணைக் கண்ட அளவிலும் வேறு சில எடுத்துக்காட்டுகள் உண்டு. நவீன ஊடகங்களின் வளர்ச்சி இதில் ஒரு முக்கிய பங்காற்றியது. குறுகிய சாதிய அடையாளத்தையும் அதைத் தாண்டித் தேர்தல்களில் வாக்கு சேகரிக்க வேண்டிய தேவையையும் இணைக்கும் பாலமாக இவர்கள் எல்லோரும் தமிழ்த் தேசிய அரசியலைப் பற்றிக்கொண்டனர்.
மேற்சொன்ன எடுத்துக்காட்டுகளில் டாக்டர் கிருஷ்ணசாமியின் தலைமையிலான புதிய தமிழகம்  தேவேந்திரர்களின் கட்சியாகச் சட்டமன்றத்திற்குள்ளும் நுழைந்தது. இத்தகைய வளர்ச்சியினூடாக தேவேந்திரர்களின் அடையாளத் திரு உருவாக (icon) இம்மானுவேல் சேகரன் உருப்பெற்றார். இப்பின்னணியில்தான் 1995-97ல் தென் மாவட்ட சாதிக் கலவரங்கள் உருவாயின. கொஞ்சம் கொஞ்சமாக தேவேந்திரர்கள் இம்மானுவேலின் நினைவு நாளை தேவரின் நினைவு நாளுக்குச் சமமாக முன்வைக்கத் தொடங்கினர். இதன் வெளிப்பாடு மொழித் தளத்தில் விகசித்தபோது ஆதிக்க சாதியினர் ஆத்திரமுற்றனர். இம்மானுவேலின் நினைவு நாளை ‘குரு பூஜை’ என தேவேந்திரர்கள் கூறத் தொடங்கியதை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
தேவேந்திரர்களின் அடையாள உறுதிப்பாட்டின் விளைபொருள்களில் ஒன்றாக 2008ல் இம்மானுவேலின் உருவம் பொறித்த தபால் தலையை மத்திய அரசு வெளியிட்டது. 2010 செப் 11 அன்று நடைபெற்ற இம்மானுவேல் சேகரனின் குருபூஜையில் கலந்துகொண்ட அ.இ.அ.தி.மு.க தலைவர்களில் ஒருவரான நயினார் நாகேந்திரன், தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாகக் கொண்டாடுவோம் என உறுதி அளித்தார். 2011 சட்டமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் சார்பாக இரு உறுப்பினர்கள் வெற்றிபெற்றனர். நீண்ட நாள் சிறையிலிருந்த ஜான் பாண்டியனும் விடுதலை பெற்றார். இவை அனைத்தும் தேவேந்திரர்கள் மத்தியில் நிறைய எழுச்சியையும்  எதிர்பார்ப்புகளையும், தேவர்கள் மத்தியில் எரிச்சலையும் ஏற்படுத்தின.
இந்தப் பின்னணியில்தான் செப் 7 அன்று பரமக்குடியிலுள்ள தலித் போகுவரத்து ஊழியர் சங்கத்தினர் “தேசியத் தலைவர் தெய்வத் திருமகனார்” என்கிற விளிப்புடன் கூடிய ஃப்ளெக்ஸ் போர்டு ஒன்றை நகர் மையத்தில் வைத்தனர். பிரபாகரன் என்பவர் தலைமையிலுள்ள ‘மறத் தமிழர் சேனை’ என்கிற அமைப்பினரும் தேவர் சாதி வழக்குரைஞர் சங்கத்தினரும் இதற்கெதிராக அரசு அதிகாரிகளிடமும் காவல்துறையிடமும் புகார் செய்தனர். “தெய்வத் திருமகனார்” என்கிற விளிப்பை முத்துராமலிங்கத் தேவர் தவிர வேறு யாருக்கும் பயன்படுத்தக்கூடாது  என அவர்கள் கூறினர். யாரும் அத்தகைய விளியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும், அதைத் தடுக்க யாருக்கும் அதிகாரமில்லை எனச் சொல்லி அவர்களைத் திருப்பி அனுப்பியிருக்க வேண்டிய காவல் துறையினர், ஃப்ளெக்ஸ் போர்டு வைத்தவர்களை அழைத்து அவ்வாசகங்களை நீக்குமாறு மிரட்டினர். ஊழியர் சங்கத்தினரும் அவ்வாறே ‘தெய்வத் திருமகனார்’ என்கிற சொல்லை நீக்கினர்.
இது தலித் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. அடுத்த நாள் பரமக்குடி நகரெங்கும் ‘தெய்வத் திருமகனார் இம்மானுவேல் சேகரன்’ என்கிற வாசகங்கள் அடங்கிய பல ஃப்ளெக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டன. இப்போது ஆதிக்க சாதியினரைக் காட்டிலும் அரசு அதிகார வர்க்கமும் காவல் துறையும்  அதிக ஆத்திரமுற்றன. தெய்வத் திருமகனார் இம்மானுவேல் சேகரன் என்னும் வாசகங்களை அச்சிடக்கூடாதென நகரிலுள்ள ஃப்ளெக்ஸ் போர்டு அச்சகங்களுக்கு உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையில் பழனிக்குமார் என்கிற 16 வயது தேவேந்திர சாதிச் சிறுவன் சென்ற செப் 9 அன்று மண்டலமாணிக்கம் என்கிற கிராமத்தைச் சேர்ந்த தேவர்களால் கொல்லப்பட்டான்.
இங்கொன்றைச் சுட்டிக்காட்டுவது பொருத்தம். பூலித்தேவன் என்கிற தேவர் சாதியைச் சேர்ந்த பிரிட்டிஷ் அரசை எதிர்த்து மாண்ட மன்னரைத் தேவர்கள் கொண்டாடுவது வழக்கம். விடுதலைப் போரில் மாண்ட அருந்ததியர் என்கிற தலித் சாதியைச் சேர்ந்த ஒண்டி வீரனை ஒரு தளபதி என்றே இதுகாறும் குறிப்பிட்டு வந்த நிலைக்கு மாறாகச் சிலகாலமாக மன்னர் என அம்மக்கள் கூறத் தொடங்கியுள்ளனர். அதற்குச் சில ஆதாரங்களையும் அவர்கள் கூறுகின்றனர். இதற்கு எதிராக நடராஜன்(சசிகலா) முதலானோர் எதிர்ப்புத் தெரிவித்துக் கூட்டங்கள் போட்டனர். ஒண்டி வீரனை மன்னர் என விளித்து  நடப்பட்ட கல் ஒன்றையும் வற்புறுத்தி நீக்கச் செய்தனர். அடையாள உருவாக்கத்தில் இவ்வாறு மொழி, வரலாறு முதலிய புனைவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சாதிய முரண்களும் போராட்டங்களும் வெளிப்படும் களங்களில் ஒன்றாக இவை முக்கியத்துவம் பெறுகின்றன.
அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறையைப் பொருத்த மட்டில் சமூக அமைதி என்கிற பெயரில் இருக்கும் நிலையைத்  தக்க வைப்பதே தம் பணி என நம்புகின்றனர். அடித்தள மக்களின் அடையாள உருவாக்கத்தை சமூக அமைதியக் குலைக்கும் செயலாகவே அவர்கள் கருதுகின்றனர். அதிக்க சாதிகளைச் சேர்ந்த அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளைப் பற்றிச் சொல்ல வெண்டியதில்லை.
செப் 11 அன்று இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த ஜான் பாண்டியன் அங்கு வந்தது மிகவும் இயல்பானதே. அவரைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தியபோது அவர் திரும்பிச் சென்றார். அப்படியும் அவர் கைது செய்யப்பட்டு திருநெல்வேலி துப்பாக்கி சுடும் பயிற்சிப் பள்ளியில்  தடுத்து வைக்கப்பட்ட செய்தி பரவியபோது அஞ்சலி செலுத்த வந்தவர்களில் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டதும் மிகவும் எதிர்பார்க்கக் கூடியதே. கலவரம் ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என அக்கறையுடன் சிலர் சென்று  இந்த நாளில் அவரைக் கைது செய்வது நல்லதல்ல எனச் சொன்னபோது அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் நீங்கள் போங்கள் என காவல்துறை உயரதிகாரி சந்தீப் மிட்டல்   அவர்களை அலட்சியம் செய்துள்ளார். அங்கு ஆணையில் இருந்த இன்னும் இரு அதிகாரிகளான செந்தில்வேலன் ஐ.பி.எஸ்சும் ஆய்வாளர் சிவக்குமாரும் தலித் விரோத மனப்பான்மையுடையவர்கள் என அப்பகுதியில் அறியப்பட்டவர்கள்.
அன்று துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் மறியலில் ஈடுபட்டவர்கள் அதிக பட்சம் 200ஐத் தாண்டாது என்பதையும், அன்று நின்றிருந்த ஆயுதஒ போலீசாரின் எண்ணிக்கை சுமார் 2000 என்பதையும் என்கள் குழு விசாரித்து அறிந்தது.  அரசு இன்று சொல்வது போல சாலை மறியலில் ஈடுபட்டிருந்த மக்கள் வன்முறையில் ஈடுபட்டிருந்தாலுங்கூட தடியடி, கண்ணீர்ப்புகைப் பிரயோகம் ஆகியவற்றின் மூலமாகவே கூட்டத்தைக் கலைத்திருக்கலாம். ஆனால் தலித்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டுமென்ற எண்ணம் அன்று அரசுக்கும், காவல்துறைக்கும் இருந்தது. எவ்வித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் அன்று துப்பாக்கிச் சூடு நடத்தி ஆறு அப்பாவி தலித்களைக் கொன்று பலரைப் படுகாயப்படுத்தியதன் பின்னணி இதுதான்.
ஜெயலலிதாவைப் பொருத்த மட்டில் ஈழப் பிரச்சினை, மரண தண்டனை, கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் ஆகிய பிரச்சினைகளில் மத்திய அரசின் பக்கம் காயை நகர்த்தித் தீர்மானம் இயற்றி இவை குறித்து அக்கறை உள்ளவர்களை ஒருபக்கம் திருப்தி செய்துவிட்டு இன்னொரு பக்கம் உள்ளூர்ப் பிரச்சினைகளில் தன் வழக்கமான பண்புகளைப் பிடிவாதமாகச் செயல்படுத்தத் தயங்காதவர் என்பதற்கு இது இன்னொரு எடுத்துக்காட்டு.
தினக்குரல்/ 30.09.2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக