வெள்ளி, 4 நவம்பர், 2011

சீமானின் அரசியல் கூத்து



“சீமான்” ஒரு தமிழ் தேசிய போராளியாக தன்னை அடையாளம் காட்டி பின்னர் அதை ஒரு போர்வையாக்கி தன்னை அரசியல்வாதியாக்கிகொண்ட ஒரு சாதாரண அரசியல்வாதி. ஈழ பிரச்சினையை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட சீமான் அதை தனது அரசியல் நுழைவுக்கு ஒரு துருப்புச்சீட்டாகத்தான் பயன்படுத்தினாரே தவிர ஈழத்தமிழர்களின் விடிவுக்காக அல்ல என்றே தோன்றுகிறது.
அவரின் தற்போதைய செயற்பாடுகளும், அரசியல் நுழைவும் அவ்வாறே எண்ணத்தோன்றுகிறது .சீமானின் ஆரம்பகால செயற்பாடுகள் நம்பிக்கைக்கு உரியனவாகவே இருந்தன. விடுதலைப்புலிகளின் தோல்விக்குபின்னர் தமிழகத்தில் ‘தமிழ்த் தேசியத்தை’ முன்னெடுத்திருப்போரான நாம் தமிழர் இயக்கத்திற்கு, அக்கொள்கையை கடைசி குடிமகன் வரை சென்று சேர்த்த பெருமை உண்டு. அதுவரையிலும் இந்தியாவில் தீவிரவாதமாய் சித்தரிக்கப்பட்ட ஒரு சொல், கடைசி குடிமகன் காதிலும் கொள்கையாய் சென்று சேர்ந்ததின் பின்புலத்திலும் சீமானே தனியொரு ஆளாக கம்பீரமாய் நிற்கிறார். அதேபோல் தைரியமாக, தனிமனிதனாக அரசுக்கு எதிராக செயல்பட்டும், பேசியும், துணிவாய் எதிர்த்து சிறை சென்ற அவரின் தைரியத்தையும் நாம் கண்டிப்பாய் பாராட்டவே வேண்டும்.
ஆனால் சீமான் என்று அரசியலில் நுழைந்தாரோ அன்றே அவர்மீதான நம்பிக்கையும் குறைவடைந்துவிட்டது.
அவர் அரசியலுக்கு வந்தது தவறு என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் அவர் அரசியலுக்கு வந்தபின்னர் எடுத்த அதிமுக ஆதரவு நிலைப்பாடுதான் தவறானது.
“போர் என்றால் சாகத்தானே செய்வார்கள்” என்று மிகச்சாதரணமாகச் சொல்லி இதுவரை உலக வரலாற்றில் கலிங்கப் போரில் ஆரம்பித்து, வியட்நாம் போர், ஈழப்போர் என அனைத்து போர்களிலும் கொல்லப்பட்ட கோடிக்கோடிக்கணக்கான அப்பாவி மக்களையெல்லாம் அஃறிணையாக்கிப் போனவர் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார் என்பது குழந்தைக்கு கூடத் தெரியும். அவரா ஈழ மக்களுக்கு ஈழம் வாங்கித் தருவார்?
தமிழ் தேசியம் பற்றி மூச்சுக்கு முன்னூறு தடவை மேடைகளில் முழங்கும் சீமானுக்கு இது தெரியாமல் போனது ஆச்சரியமே.
” கலைஞர் செய்த தவறுக்கு அவரை பழிவாங்க வேண்டும் ” என்று சீமானோ அல்லது அவரது நாம் தமிழர் கட்சியினரோ கூறலாம்.
சரி, இந்த தடவை கலைஞரைப் பழி வாங்க ஜெயலலிதாக்கு ஓட்டு போட்டுவிடலாம்! கண்டிப்பாக ஜெயலலிதா தன் வேலையைக் காண்பிப்பார்! பின் ஜெயலலிதாவை பழிவாங்க கலைஞருக்கு ஓட்டுப் போட்டுவிடலாம்… பின் அடுத்த………. இப்படியே சுத்தி வருவதுதான் புரட்சியா?
ஒரு வேளை ‘நாம் அதிமுகவிற்கு ஆதரவளிக்கவில்லை, திமுகவைத்தான் எதிர்க்கிறோம்’ என்று சிறுபிள்ளைதனமான விளக்கத்தைகூட சீமான் சொல்லக்கூடும். ஆனால் தற்போது இவர்கள் மூன்றாவது அரசியல் கூட்டணியை மக்கள் முன்பு முன்வைக்காத காரணத்தால் இவர்களின் திமுக எதிர்ப்பு அதிமுக ஆதரவாகவே பார்க்கப்படும்.
ஆகமொத்தத்தில் சீமான் தானும் ஒரு சராசரி அரசியல்வாதிதான் என்பதை நிரூபிக்கிறார்.
எது எப்படியோ, பெரியார் படத்திற்குப் பூசை செய்து நானும் ‘திராவிடன்’ என்று சொல்லிக் கொள்ளும் அரசியல்வாதி நடிகர் விஜயகாந்தை போலவே, சீமானும் தமிழ்த்தேசிய போராளி என்று சொல்லிக்கொண்டு திரையுலகத்திலிருந்து அரசியலுக்குக் குதித்திருக்கிறார் என்றுதான் நாமும் எண்ணவேண்டிஇருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக