புதன், 2 நவம்பர், 2011

பரமக்குடி துப்பாக்கிச் சூடு - தலித் தலைவர்கள் கருத்து

நூறு பேர் திரண்டிருந்த கூட்டத்தை அடக்க முடியாமல் கலவரத்தை கட்டவிழ்த்து கண்மூடித்தனமாக, திட்டமிட்டே தமிழக அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. தனக்காக நாக்கை வெட்டிக் கொண்ட பெண்ணுக்கு அரசு வேலையும், 5 லட்சம் ரூபாய் நிவாரணமும் வழங்கிய ஜெயலலிதா – துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்குவது எந்த வகையில் நியாயம்?
துப்பாக்கிச் சூடு நடத்திய போலிஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும். இது குறித்து சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாயும், காயம்பட்டவர்கள் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயும், நிவாரணம் மற்றும் அரசு வேலையும் வழங்க வேண்டும்.''
– ராம்விலாஸ் பாஸ்வான், தலைவர், லோக் ஜனசக்தி, 21.9.2011 அன்று பரமக்குடிக்கு சென்று வந்த பிறகு செய்தியாளர்களிடையே பேசியது
***
 பொதுவாக, ஜெயலலிதா ஆட்சியில் எல்லா காலகட்டங்களிலும் ஒடுக்கப்பட்டோர் மீது அத்துமீறல்கள் நடந்துள்ளன. வாச்சாத்தியில் வெறியாட்டம், சிதம்பரம் பத்மினி, சின்னாம்பதியில் பழங்குடியினர், கொடியங்குளம் வன்முறை எனப் பல சம்பவங்களைச் சொல்ல முடியும். "யாருக்கும் கட்டுப்படாமல் காவல் துறை தன்னிச்சையாக செயல்பட வேண்டும்' என்று முதலமைச்சரே பேசுகிறார். அரசியல் சாசனத்தில் எந்த ஓர் அரசுத் துறைக்கும் இப்படி ஒரு சிறப்பு உரிமை இல்லை. பரமக்குடியில் அன்று நடந்தது என்ன? போலிஸ் டி.அய்.ஜி.யே பொது மக்களின் நெஞ்சுக்கு நேராக துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். அவர் செய்தது முழுக்க முழுக்க கிரிமினல் குற்றம். சென்னையில் துணை ஆணையராக இருக்கும் செந்தில் வேலனை, பரமக்குடிக்கு அனுப்பி வைத்தது யார்? அவரும் டி.அய்.ஜி. சந்தீப் மிட்டலும் சம்பவத்தன்று சென்னையில் யாரிடம் பேசினார்கள்?''
– டாக்டர் கிருஷ்ணசாமி, தலைவர், புதிய தமிழகம்
'ஜுனியர் விகடனு'க்கு அளித்துள்ள பேட்டியில்
***
 தேவேந்திர மக்களின் நெடுநாளைய கோரிக்கையே இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்பதுதான். அப்படி ஓர் அங்கீகாரம் தேவேந்திரர்களுக்கு கிடைத்துவிடக் கூடாது என்று திட்டமிட்டு, காவல் துறை அதிகாரிகள் செய்த சதியே துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது. மூன்று பேரை துப்பாக்கியால் சுட்டார்கள், மூன்று பேரை அடித்தே கொன்றிருக்கிறார்கள். இத்தனையையும் செய்துவிட்டு 1000 பேர் மீது வழக்கு, கைது என்று தேவேந்திர மக்களை மிரட்டும் காரியத்தில் இறங்கியிருக்கிறது அரசு. முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் பேசிய பேச்சு, ஒரு சாராருக்கு மட்டும்தான் நாங்கள் ஆட்சி செய்கிறோம் என்பதுபோல இருக்கிறது. தேவரைப் பற்றி சுவரில் இழிவாக யாரும் எழுதவில்லை. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல இருக்கிறது, முதலமைச்சரின் இந்த அணுகுமுறை.''
– ஜான் பாண்டியன், தலைவர், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், "நக்கீரனு'க்கு அளித்துள்ள பேட்டியில்
*** 
அ.தி.மு.க. அரசு, இரு சமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் தலைமையிலான விசாரணை கமிஷன் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில், அதில் தமிழக அரசின் தலையீடு இருக்கும். இது குறித்து சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தலித்துகள் மீது வன்முறையும், அடக்குமுறையும் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இது குறித்து தேசிய தீண்டாமை ஒழிப்பு அமைப்பின் சார்பில், குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரிடம் மனு கொடுக்க உள்ளோம். தியாகி இம்மானுவேல் சேகரனுடைய நினைவு நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது.''
 – தொல். திருமாவளவன், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள், மதுரையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்த பிறகு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக