புதன், 2 நவம்பர், 2011

பரமக்குடியை முன்வைத்து... மக்களை இயக்கமாக்குவோம்

1957 முதல் இன்று வரையிலும் முதுகுளத்தூர் பகுதியிலும் சுற்று வட்டார கிராமங்களிலும் நீடித்து வரும் சாதி வெறியும், வன்மமும் – ஒவ்வொரு ஆண்டும் தலித் உயிர்களை பலி வாங்கி தம்மைப் புதுப்பித்துக்கொள்கின்றன. ஒரு நூற்றாண்டுக்கு முன்புகூட, சாதியப் படிநிலை அமைப்புக்குள் முற்றிலும் இணையாத வகுப்புகள், கொஞ்சம் கொஞ்சமாக அப்படிநிலையில் இடம் பிடித்துக் கொண்டதுடன், அவ்வமைப்பின் தர்க்க நியாயங்களை காப்பவையாகத் தம்மை வடிவமைத்துக் கொண்டுள்ளன. "முக்குலத்தோர்' என்ற அடையாளத்தின் கீழ் திரண்டுள்ள இந்த வகுப்புகளைச் சேர்ந்தவர்களில் பெரும்பான்மையோர் – அவர்களுடைய சமூக, அரசியல் தலைவர்களாக உள்ளவர்கள் கடைப்பிடிக்க விழையும், கடைப்பிடித்து வரும் தீண்டாமையை தாமும் வெறித்தனமாகப் பின்பற்றி வருகின்றனர்.
ஆதிக்கத்தை எதிர்க்கத் துணிந்துள்ள தலித் மக்களைத் தொடர்ந்து துன்புறுத்தியும் கொன்றும் வந்துள்ளனர். அதே சமயம், பொருளாதார ரீதியாகவும் சரி, கல்வி ரீதியாகவும் சரி, ஆதிக்க சாதியினரின் வாழ்நிலைமைகள் அவர்கள் வரித்துக் கொள்ள விரும்பும் சாதிப் பெருமைக்கும் அதிகாரத்துக்கும் உரிய வகையில் இல்லை. முக்குலத்தவர்களில் கணிசமானவர்கள் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன் திரட்டப்பட்ட புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மை இது.
ஆதிக்க சாதியினருக்கு எதிராக தலித் மக்கள் எதிர்வினை புரிந்துள்ள தருணங்களில், காவல் துறையும் சட்டமும் அவர்கள் பக்கம் உள்ள வரலாற்று நியாயத்தை என்றுமே முழுமையாக உள்வாங்கிக் கொண்டதில்லை. தலித் மக்களின் கோபமும் அதிலிருந்து பிறக் கும் வன்முறையும் – அவர்கள் மீது தொடர்ந்து திணிக்கப்படும் இழிவு, வெறுப்பு ஆகியவற்றின் விளைவுகள்தான் என்பதை கருத்தில் கொள்வதில்லை. சராசரி சட்ட நியதிகளின் படியே இந்த எதிர்வினைச் செயல்கள் அளக்கப்படுகின்றன, மதிப்பிடப்படுகின்றன. இதன் பொருள், தலித்துகள் சட்ட நியாயங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதல்ல – ஆனால், மிக மோசமான, அன்றாட ஒடுக்குமுறைகளுக்கு ஆட்பட்டு வாழ்பவர்களின் நடவடிக்கைகளை எடை போட, புரிந்து கொள்ள சட்டவிதிகளும் ஒழுங்கு நடவடிக்கைகளும் மட்டுமே போதுமானவையாக இருக்க முடியாது. தமிழ்நாட்டில் பி.சி.ஆர். சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறிய, மத்திய உள்துறை அமைச்சகம் 1979 இல் அமைத்த விசாரணைக் குழு இதை அன்றே சுட்டிக் காட்டியதுடன், சாதிக் கலவரங்களில் தொடர்ந்து தலித்துகள் குற்றவாளிகளாக்கப்படும் அவலத்தையும் பதிவு செய்தது. ஆதிக்க சாதியினரின் அடாவடிச் செயல்பாடுகளுக்கு அரசு அரணாக இருப்பதையும் அவ்வறிக்கை சுட்டியது.
பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டினை நடத்திய காவல் துறையினர் மேற்கூறப்பட்டுள்ள சராசரி சட்ட நியாயங்களை முன்வைத்தே தாம் மேற்கொண்ட நடவடிக்கைகளை விளக்கியுள்ளனர். அவற்றின் அடிப்படையிலேயே தமக்கான நியாயங்களை வகுத்துக் கொண்டுள்ளனர். ஒரு முக்கியமான அரசியல், பண்பாட்டு நிகழ்வுக்காக அணி திரண்டிருந்த மக்கள் திரளின் மீது, முன் அறிவிப்பு ஏதுமில்லாமல், சட்ட – ஒழுங்கு, தற்காப்பு ஆகியனவற்றின் பெயரில் துப்பாக்கிச் சூடு நிகழ்த்துவது சரியானதே என்று அவர்களும், அவர்களது வாதங்களுக்கு வக்காலத்து வாங்கியுள்ள முதலமைச்சரும் நியõயம் பேசியுள்ளனர்.
இத்தகைய சட்ட நியாயங்களின்படி நடக்க வேண்டிய நிர்பந்தம் ஏதும் அவர்களுக்கு ஏற்படவில்லை என்பது ஒருபுறமிருக்கட்டும். நடந்து முடிந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்து போனவர்களின் உடல்களை குறைந்தபட்ச மரியாதையுடனும், மாண்புடனும் நடத்தக் கூட அவர்கள் தயாராக இல்லை. ஏதோ விலங்கு ஒன்றை அடித்துக் கொன்று தூக்கிச் செல்வது போல, 21 வயது ஜெயபாலின் உடலை அவர்கள் தெருவில் இழுத்துச் சென்றதை சம்பவம் நிகழ்ந்த போது, அங்கிருந்த ஒருவர் எடுத்திருந்த புகைப்படத்தில் காண முடிந்தது.
இப்புகைப்படத்தைப் பார்த்ததும், மறைந்த சிவில் உரிமைப் போராளி டாக்டர் கே. பாலகோபாலின் கூற்று ஒன்று நினைவுக்கு வருகிறது. குஜராத்தில் 2002 இல் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்த கொடூரமான தாக்குதல்களையும், அவை ஏற்படுத்திய நாசங்களையும் நேரில் சென்று வந்த பிறகு அவர் எழுதிய கட்டுரை ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டார் : “குஜராத்தில் நடந்த கொலைகள், பொருள் நாசம், மோசமான வல்லாங்குச் செயல்கள் ஆகியன இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துத்துவ அரசியல் மேற்கொண்ட பிரச்சாரத்தின் விளைவுகள்தான் என்பது புரிந்தது. அப்பிரச்சாரத்தின் வீச்சையும் ஆழத்தையும் கண்டு பீதியும் கோபமும் ஏற்பட்டாலும், அதைப் பகுத்தாய்ந்து விமர்சிக்க முடிந்தது. ஆனால், அப்பிரச்சாரத்தின் விளை வாக, மிகப் பழமையான இஸ்லாமிய புனிதர்களின் கல்லறைகளை சிலர் சூறையாடி அழித்திருந்ததைக் கண்டபோது, அவர்களை விரட்டிய வெறுப்பின் உக்கிரமானது, நம்மை மனம் தடுமாறச் செய்கிறது. வெறுப்பின் ஆற்றலை எண்ணி நடுங்குவதைத் தவிர, வேறு எதையும் செய்ய முடியவில்லை. அன்புக்கு அத்தகைய ஆற்றல் இல்லையோ என்றும் கூட எண்ணத் தோன்றுகிறது.''
பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை பகுத்தாய்ந்து பார்க்கும்போது, நமக்கு அது நியாயமற்றது என்பது புரிகிறது. ஆனால், இந்த அநியாயத்தின் தன்மை, அதன் உள்ளார்ந்த வெறுப்பு, அவ்வெறுப்பை செயலாக மாற்றவல்ல அதிகார வெறி – இவற்றை நம்மால் பகுத்தறிவைக் கொண்டு மட்டும் புரிந்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. சாதிய சமூகத்திற்கேவுரிய வக்கிரங்களின் நீட்சியாக இத்தகைய செயல்பாடுகள் அமைவதுடன், அத்தகைய வக்கிரங்களை நியாயங்களாக அறிவிக்கின்றன. அதிகாரத்தில் உள்ள, சாதியுணர்வுடைய ஆதிக்க வகுப்பினரின் மனப்பாங்கு, இத்தகைய வெறுப்பால் மட்டுமே கட்டமைக்கப்பட்டுள்ளதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
அதே சமயம், இக்கொடூர நிகழ்வுக்கான குறிப்பிட்ட வரலாற்றுப் பின்புலம் இருப்பதையும் நாம் அங்கீகரிக்க வேண்டியுள்ளது. 1957 இல் இம்மானுவேல் சேகரன் அவர்கள் கொலை செய்யப்பட்டதும், அதைத் தொடர்ந்து முத்துராமலிங்கத் தேவர் கைது செய்யப்பட்டதும் நம்மில் பலர் அறிந்ததே. இந்த நிகழ்வுகளின் நீட்சியாக நடந்த கலவரங்களில் – தலித்துகளின் வீடுகள் எரிக்கப்பட்டன; பயிர்கள் அழிக்கப்பட்டன; மாதா கோயிலில் தஞ்சம் புகுந்திருந்த தலித்துகளை ஆதிக்க சாதி தேவர்கள் விரட்டிக் கொன்றனர். தலித்துகள் நடத்திய எதிர்த் தாக்குதல்களிலும் உயிர் சேதங்கள் ஏற்பட்டன. அன்று ஆட்சியில் இருந்த காமராசர் தலைமையிலான காங்கிரஸ் அரசு, கலவரங்களைத் தடுத்து நிறுத்த காவல் துறையினரை துணைக்கழைத்துக் கொண்டது. காவல் துறையினர் ஆதிக்க சாதியினரில் பலரை சுட்டுக் கொன்றனர்.
இந்த பயங்கரங்கள் நடந்து முடிந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அவற்றையொட்டிய கசப்பான நினைவுகளும், அவை ஏற்படுத்தியுள்ள மனக்காயங்களும் முற்றிலுமாக மறையவில்லை. இரு தரப்பிலும், ஒவ்வொரு தலைமுறையும் இந்நினைவுகளை புதுப்பித்து வந்துள்ளன. மேலும், இப்பகுதிகளில், தீண்டாமைக்கும், சாதி ஏற்றத்தாழ்வு களுக்கும் ஆதாரமாகவுள்ள கருத்து நிலைகளும், பொது உளவியலும் பெரிய அளவுக்கு மாறியுள்ளதற்கான சான்றுகள் இல்லை. இப்பகுதிவாழ் தலித் மக்களின் வாழ்நிலைச் சூழலில் முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள சாதி இழிவுதான் – அவர்களது சமூகத் தகுதியை தீர்மானிக்கிறதேயொழிய, அவர்கள் அடைந்துள்ள பொருளாதார மேம்பாடும், கல்வியும், அவர்கள் பெற்றுள்ள அரசியல் ஆதாயங்களும் அல்ல. பரமக்குடி நிகழ்வுகளை இந்தப் பின்னணியில் வைத்தும் நாம் ஆராய வேண்டியுள்ளது.
அடுத்து, அன்று காவல் துறையினரின் தலையீடு எத்தன்மையானதாக இருந்தது என்பதை இன்று நாம் சற்றே நிதானமாக சிந்திக்க வேண்டியுள்ளது. அன்று மேற்கொள்ளப்பட்ட முடிவின் பொருத்தப்பாடு தொடர்பான கேள்வி மட்டுமல்ல இது. அன்று, அம்முடிவு தவிர்க்க முடியாததாக இருந்தது என்பது உண்மை. ஆனால், அது ஏற்படுத்திய பாதிப்பை, குறிப்பாக, அது தோற்றுவித்த பகையுணர்வையும் வஞ்சம் தீர்க்கத் துடிக்கும் அரசியலையும் தணிக்க, அந்தக் கால அரசும் சரி, அதற்கு பின்னால் வந்த தி.மு.க. ஆட்சியும் சரி, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை போதுமான அளவுக்கு மேற்கொள்ளவில்லை என்பதும் உண்மை. இடதுசாரி அமைப்புகளும் இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்றும் இங்கு நாம் குறிப்பிட்டாக வேண்டும். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து புகைந்து கொண்டிருக்கும் சாதி வெறுப்பை ஊடறுத்துச் செல்லக்கூடிய வளமான அரசியல் பண்பாடு உருவாகவில்லை. 1980களுக்குப் பிறகு தமிழ்நாடு கண்ட தலித் எழுச்சியானது, தலித் மக்களின் போராட்டங்களுக்கு பெரும் உந்துதலாக அமைந்தபோது, இந்த எழுச்சியை வன்முறையால் எதிர்கொள்ளத் துடித்த அரசியல்தான் அங்கு வளர்ந்திருந்தது.
எனவே, சமூக அரசியல் பிரச்சனைகள் முற்றி வரும்போது அவற்றை சமாளிக்க ஓர் அரசு காவல் துறையை "சரி'யான வகையில் பயன்படுத்து வதைக் குறித்தும்கூட நாம் ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது. மேலும், முதுகுளத்தூர் கலவரங்களைத் தடுத்து நிறுத்த மட்டும் காமராசர் அரசு காவல் துறையை பயன்படுத்தவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மக்களின் நியாய மான போராட்டங்களை ஒடுக் கவும் அவர் இதைச் செய்தார். அவரது ஆட்சியில் தமிழ் நாடு பல ஆக்கப்பூர்வமான மாற்றங்களைக் கண்டாலும், அந்த ஆட்சிக் காலகட்டத்தில் தான் வால்பாறை தோட்டத் தொழிலாளிகளை காவு கொண்ட துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. துறைமுகத் தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்தபோதும் அதைக் கலைக்க காவல் துறையினர் தருவிக்கப்பட்டனர். 1957இல் திராவிடர் கழகம் அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை நடத்தியபோது, காமராசர் ஆட்சிதான் 3000 போராளிகளை சிறை பிடித்ததோடு, சிறையிலேயே பலர் இறக்கக் காரணமாக இருந்தது.
இப்பிரச்சினையை வேறொரு கோணத்திலிருந்தும் நாம் அணுகலாம். 1950களுக்குப் பிறகு நடந்த சாதி கலவரங்களை எடுத்துக் கொண்டால், காவல் துறை மட்டுமின்றி, அரசு நிர்வாகமும் ஏன் சட்டத்துறையுங்கூட ஆதிக்க சாதித் தலைமைகளுக்கு சார்பாக நடந்து கொண்டதை காணலாம். 1968 வெண்மணி படுகொலைகளை விசாரித்து தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, “மிராசுதாரர்களைப் போன்ற கனவான்கள் கொலை செய்யக் கூடியவர்கள் அல்லர்'' என்று தீர்ப்புரைத்தார். 1979 இல் விழுப்புரம் நகரில் 12 தலித்துகள் கொடூரமாகக் கொல்லப்பட்ட போதும் சரி, ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த வன்னியர் சமுதாயத் தலைவர்கள் தலித்துகளுக்கு எதிராக, அப்பகுதி வன்னியர்களை உசுப்பிவிட்டு தலித்துகளின் வீடுகளை எரிக்கச் செய்தபோதும் சரி, ஆளுங்கட்சியினருக்கும், அவர்கள் முன்னிறுத்திய வன்னியர் தலைமைக்கும் ஆதரவாகவே விழுப்புரம் நகர காவல் துறை செயல்பட்டது.
இன்னும் சொல்லப் போனால், தலித்துகளின் வீடுகள் எரிக்கப்பட்டபோது கைகட்டி வேடிக்கைப் பார்த்தது. 1980 தொடங்கி 1990கள் வரை, தென் மாவட்டங்களில் சாதி இந்துக்களின் அதிகாரத்துக்கும் சாதி வெறிக்கும் எதிராக தலித்துகள் நடத்திய எதிர்வினைகள், உள்ளூர்க் காவல் துறையினரையும், நிர்வாகத்தையும் அவர்களுக்கு எதிராகத் திருப்பி விட்டது. குறிப்பாக, ஜான் பாண்டியன் தலைமையில் தென் மாவட்ட தலித் இளைஞர்கள் களமிறங்கியபோது, அதைப் பொறுக்க மாட்டாமல் அவர்களுக்கு பல தொல்லைகளை அவர்கள் கொடுத்தனர். அவர்களுக்கு எதிராக வழக்குகளைத் தொடுத்தனர், வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர்.
1995 இல் கொடியங்குளத்தில் வெடித்த கலவரங்களின்போது, ஆதிக்க சாதி தேவர்களின் நலன் காக்க காவல் துறை களமிறங்கியது. தலித்துகளின் வீடுகளை சூறையாடியது. தலித் பெண்களை வன்முறைக்கு ஆளாக்கியது. இச்சம்பவங்களை ஆய்ந்தறிய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட கோமதிநாயகம் ஆணையம், காவல் துறையினர் அத்துமீறி நடக்கவில்லை என்று தெரிவித்தது. அப்பட்டமான பொய்யை, விளக்கங்களுடனும், வியாக்கியானங்களுடனும் தனது ஆணையம் அறிந்த "உண்மை' என கோமதிநாயகம் அறிவித்தார். 1999இல் தங்களது வாழ் நிலைமைகளில் மாறுதல் வேண்டும் என்று மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் – இவர்கள் அனைவருமே தலித்துகள் – போராடியபோது, அவர்களது போராட்டத்தின் நியாயத்தை அரசாங்கம் அங்கீகரிக்க மறுத்தது. அவர்கள் தங்களது உரிமைகளுக்காக நடத்திய பேரணியை கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்தி, அம்மக்களில் 17 பேரை கொன்று குவித்தது.
தலித்துகளின் வாழ்வுரிமையை இம்மியளவுகூட மதிக்கத் தயாராக இல்லாத அரசு ஊழியர்களின், குறிப்பாக காவல் துறையினரின் இச்செயல்பாடுகளில் ஏறக்குறைய அனைத்துமே அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடைபெற்றவைதான் (மாஞ்சோலை பயங்கரம் நடந்தபோது தி.மு.க . ஆட்சியில் இருந்தது). ஆனால், ஆதிக்க சாதிகளின் நலன்களை தி.மு .க. அரசுமே வெகு கவனமாக பாதுகாத்து வந்துள்ளது. அன்றைய தஞ்சை மாவட்டத்தின் அரசியல் நிலைமை கள் குறித்து நன்கு அறிந்திருந்தும், வெண்மணி படுகொலைக்கு இட்டுச் சென்ற அநீதிகள் தொடர்ந்து நடைபெறாமலிருக்க, அது எந்த முன் முயற்சியையும் எடுக்கவில்லை. வெண்மணியிலிருந்து 3 மைல் தொலைவில் இருந்த காவல் நிலையத்திலிருந்து எரிந்து சாம்பலாகிப் போன ராமைய்யாவின் குடிசைக்கு வர, காவல் துறையினருக்கு 12 மணி நேரம் பிடித்தது. அக்கொலைகளைப் பற்றி விசாரிக்க தி.மு.க. அரசு அமைத்த கணபதியா பிள்ளை ஆணையம், அப்பகுதி தலித்துகளின் போராட்டங்களையும் கோபத்தையும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. "கூலிப் பிரச்சனை'தான் நடந்த சம்பவத்துக்குக் காரணம் என்று கூறி, தஞ்சை மண்ணில் புரையோடிக் கிடந்த வன்மமான வர்க்க – சாதி அரசியல் குறித்த எந்தவொரு பயனுள்ள விமர்சனத்தையும் அது முன்வைக்கவில்லை.
கொடியங்குளம் நிகழ்வுகளை விசாரித்த கோமதிநாயகம் குழுவினரின் அறிக்கையை தி.மு.க. அரசு ஏற்றுக் கொள்ளவே செய்தது. சம்பந்தப்பட்ட காவல் துறையினருக்கு எதிராக எந்த நடவடிக்கையை யும் அது எடுக்கவில்லை. மாஞ்சோலைக் கொலைகளை நடத்தி முடித்த காவல் துறையினருக்கு ஆதரவாகவே அன்று முதல்வராக இருந்த கருணாநிதி பேசினார். தோட்டத் தொழிலாளர்கள் பேரணியாக வந்தபோது காவல் துறையினரை தாக்கினர் என்றும், இதனாலேயே காவலர்கள் அவர்களை நோக்கிச் சுட வேண்டியிருந்தது என்றும், விளக்கமளித்தார். அவரது அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி மோகன் விசாரணை ஆணையமும் பேரணியில் வந்த தொழிலாளர்கள் மீதே குற்றம் சுமத்தியது.
காவல் துறையினரும் வனத்துறை அதிகாரிகளும் வாச்சாத்தி வனக்கிராமத்தை சூறையாடி, ஆதிவாசிப் பெண்களை வல்லாங்குச் செய்தது அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில்தான் என்றாலும், அச்சம்பவங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை "தமிழக மலைவாழ் மக்கள் முன்னணி' முன்வைத்தபோது, அச்சமயம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த தி.மு.க., அந்த கோரிக்கையை ஒட்டி எந்த முடிவை யும் மேற்கொள்ளவில்லை. மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சேர வேண்டிய நிவாரணத் தொகையை செலுத்த வழக்குத் தொடரப்பட்டதன் விளைவாக, அவர்களுக்கு அத்தொகை உடனடியாக செலுத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், அதை நடைமுறைப்படுத்துவதில் தி.மு.க. அரசு மெத்தனமாகவே செயல்பட்டது.
அ.இ.அ.தி.மு.க.வின் சாதிய நிலைப்பாடு வேறு வகையானது. குறிப்பாக, ஜெயலலிதாவின் அரசியல் சூட்சுமங்கள் தனி÷ய ஆராயப்பட வேண்டியவை. அவரது ஆங்கிலப் படிப்பு, வர்க்கப் பெருமை, சாதி ஆணவம் ஆகிய மூன்றும் அவரது சார்புநிலையை நமக்குத் தெளிவாகவே உணர்த்துகின்றன. பிரச்சனை என்னவெனில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும், தலித் மக்களும்தான் அவர்களுடைய அரசியல் பிரதிநிதிகளும்தான் – ஜெயலலிதாவையும், அ.இ.அ.தி.மு.க.வையும் தொடர்ந்து ஆதரித்து வந்துள்ளனர். அவருடைய பார்ப்பன சமூகம் எந்தளவுக்கு அவரை எண்ணிப் பெருமிதம் கொள்கிறதோ, அந்த அளவுக்கு பிற சமூகங்களைச் சேர்ந்தவர்களில் பலரும் அவரது அரசியலில் நம்பிக்கையுடையவராய் உள்ளனர்; அல்லது அதில் ஆதாயம் தேடுகின்றனர். அவர்களைப் பொருத்தமட்டில், ஜெயலலிதா தனிப் பெரும் தலைவி. ஜெயலலிதாவோ இவர்களை ரட்சித்து பாதுகாக்கும் "தாயா'க தன்னை கட்டமைத்துக் கொண்டுள்ளார். இதனால்தானோ என்னவோ, தனது ஆண் ஆதரவாளர்களை சிறு பிள்ளைகளாக பாவித்து அவர்களை கண்டிக்கிறார், மெச்சுகிறார், திருத்துகிறார். அவர்களுக்கு நீதிக் கதைகளை சொல்கிறார். அரசியல் நடத்தை நெறிகளைப் புகட்டுகிறார். சட்டசபையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
“பார்ப்பனியம் சைவமாக வந்து கெஞ்சி யும், வைணவமாக வந்து கொஞ்சியும் தனது மேலாண்மையை தக்க வைத்துக் கொண்டுள் ளது என்றும், இதைக் கண்டு நாம் மயங்கிவிடக் கூடாது என்றும், முடிவில் அது அரவணைப்பது போல் அரவணைத்து (கம்யூனிஸ்ட்) ஏகலைவனின் பெருவிரலை தானமாகக் கேட்கும்'' என்று 1940களில் குத்தூசி குருசாமி எச்சரித்தார். இன்று கெஞ்சலும் கொஞ்சலும் உள்ளதோ இல்லையோ, கோடானுகோடி ஏகலைவர்களின் சுயமரியாதையை தானமாகப் பெற்றே தமிழகத்தில் வர்ணதரும ஆட்சி தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள் ளது என்பது மட்டும் கண்கூடு.
இந்த நீண்டநெடிய வரலாற்றுப் பின்னணியில், பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டினைப் பற்றி நாம் சிந்திப்போமேயானால், இரண்டு விஷயங்களை கவனப்படுத்தலாம். அ.இ.அ.தி.மு.க. முன்னெடுத்துச் செல்ல விழையும் சாதிய அரசியல், தற்காலச் சூழலில் நிலைத்து இருக்க வேண்டுமானால், இத்தகைய ரத்தக் களறிகள் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். அரசியல் சமரசங்களை செய்தும், உள்ளூர் தலித் தலைவர்களை விலைக்கு வாங்கியும், அரசதிகாரத்தில் அவர்களுக்கு இடமளித்தும் தலித் மக்களின் கோரிக்கைகளை ஆளுங்கட்சிகள் ஒன்றும் இல்லாமல் செய்ய, இன்னமும் வாய்ப்புகள் உள்ளன என்பதை நாம் மறுக்கவில்லை. தி.மு.க. இதைத்தான் தொடர்ந்து செய்து வந்துள்ளது. இனியும் அக்கட்சி இதைத் தொடர்ந்து செய்யும். (அ.இ.அ.தி.மு.க.வும் இந்த உத்தியை முற்றிலுமாக கைவிட்டு விட்டதாக சொல்ல முடியாது.) தலித் கட்சிகளின் தலைவர்களும் பதவி ஆசையினாலும், இவ்வாறு ஆளுங்கட்சியினரை அண்டியேனும் தமது மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தர முடியும் என்ற தன்னம்பிக்கையின் காரணமாகவும் சமரசங்களை செய்து கொள்ளத் தயாராக இருக்கின்றனர்.
ஆனாலும் சாதி வெறி சார்ந்த வகுப்பு நலன் என்ற ஒன்றின் உக்கிரத்தில் இத்தகைய சமரசங்கள் கருகி சம்பலாகி விடுகின்றன. சாதிய வெந்தீயில் அவை கரைந்து போய்விடுவதுடன், அச்சமரசங்களை ஏற்றுக்கொண்ட தலித் தலைவர்களின் நம்பிக்கையும் ஆசைகளும் வீண்போய் விடுகின்றன. ஒவ்வொரு தேர்தல் நடந்து முடியும்போதும் ஆட்சிகள் மாறும்போதும் நாம் இதைப் பார்க்கத்தான் செய்கிறோம். சமூக மாற்றம் கோரும் அரசியலுக்கும், அதை ஏற்காது சமரசங்களை நாடும் அரசியலுக்கும் இடையிலான ஒவ்வாமை முடிவில் வன்முறைக்கே இட்டுச் செல்கிறது.
கருத்தியல் வாதங்களாலும் அதிகாரப் பங்கீடு என்ற மாயமந்திரத்தாலும் உருவாக்கப்படும் சமரசங்கள் கலைந்து போவது எதனால்? தலித் மக்களின் மாண்பையும் உரிமைகளையும் மறுக்க வேறு பல "அகிம்சா' ரீதியான வழிகளை தமிழக அரசாங்கம் கையாண்டு வந்துள்ள போதிலும், வன்முறையைப் பயன்படுத்துவதை – அதனால் ஏன் எக்காலத்திலும் கைவிட முடிவதில்லை? இதற்கு பல காரணங் களைச் சொல்லலாம். தலித் மக்களிடையே தன்னுணர்வும் எழுச்சியும் கூடியுள்ளது. கல்வியும் ஆதிக்க சாதியினரை சாராத பொருளாதார வளர்ச்சியும் வளர்ந்த வண்ணம் உள்ளன. தமிழ் அறிவுலகில் தலித் சிந்தனையாளர்களும், எழுத்தாளர்களும் முக்கியமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். இனியும் "தமிழர் பொதுநலம்' என்று கூறியும், "திராவிடப்' பெருமை பேசியும், எம்.ஜி.ஆர். என்ற தனிமனிதரை சுற்றி பொருத்தப்பட்டுள்ள ஒளிவட்டத்தைக் காட்டியும் – இந்த வரலாற்று ரீதியான மாற்றங்களைப் புறந்தள்ள முடியாது.
இத்தகைய வார்த்தை ஜாலங்களுக்கு தலித் அரசியல் தலைவர்கள் சில வேளை பணிந்து போனாலும், களத்தில் போராடும் தலித் மக்களுக்கு அதிகாரப் பங்கீடும், அடையாள அரசியலும் எல்லா நேரங்களிலும் உவப்பானதாக இருப்பதில்லை. காரணம், அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சாதிய வெறியும், அதிகாரமும் இந்த சமுதாயத்தின், அது பேணும் அரசியலின் நிதர்சனங்களை அவர்களுக்கு உணர்த்தி விடுகின்றன. இந்த நிதர்சனங்களை உள்ளவாறே தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால், ஆளும் வர்க்க – சாதியினருக்கும், அவர்களுக்கு துணையாக நிற்கும் அரசாங்கத்துக்கும் வன்முறையை விட்டால் வேறு வழியில்லை.
தி.மு.க. அரசாங்கம் வன்முறையில் இறங்குவோரை பாதுகாத்தும், தேவைப்பட்டபோது வன்முறையைப் பயன்படுத்தியும் வந்துள்ளது. அ.இ.அ.தி.மு.க.வோ இவை இரண்டையும் செய்வதுடன் அரசு தரப்பு வன்முறையை தொடர்ந்து நியாயப்படுத்தியும் வந்துள்ளது. குறிப்பாக, ஜெயலலிதா ஆட்சியில் சாதிய காழ்ப்புணர்வுடன் மேற்கொள்ளப்படும் செயல்களுக்கு, உச்சபட்ச பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தான் சாதி செருக்குடன் இருப்பதை எண்ணி சஞ்சலம் அடையத் தேவையில்லை என்று பார்ப்பனர்களும், பிற ஆதிக்க சாதிகளும் நினைக்கும் அளவுக்கு, ஜெயலலிதா ஆட்சியில் அவர்களுக்கு கருத்தியல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
சாதி, பார்ப்பனியம் குறித்தும் வரலாற்றில் இவை கண்டுள்ள மாற்றங்களைக் குறித்தும் பக்கம் பக்கமாக எழுதியுள்ள டி.டி. கோசாம்பியின் கூற்றை இங்கு நினைவு கொள்ளுதல் பொருத்தமாக இருக்கும். சாதிய அமைப்பு என்பது, வரலாற்றின் ஓட்டத்துக்கு எதிரானது என்கிறார் அவர். சமூக, பொருளாதார வெளிகளில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்களின் வழி சென்று மாறுவதற்கு பதிலாக, அவற்றை தனது படிநிலை இருப்புக்கு உகந்த வகைகளில் உட்செரித்துக் கொள்ளும் ஆற்றலை சாதியமைப்பு கொண்டுள்ளது. இதைப் புரிந்து கொண்டு வரலாற்றின் பக்கம் நிற்பது முக்கியம் என்று பொருள்பட அவர் வாதிட்டுள்ளார். தலித் மக்கள் வரலாற்றின் பக்கம் நின்று போராடுவதை ஏற்க விரும்பாது, அவர்கள் கடந்து வந்துவிட்ட இருண்ட காலத்துக்கு மீண்டும் அவர்களை நகர்த்திச் செல்ல ஆளும் வர்க்க – சாதிகள் தொடர்ந்து முயற்சி செய்து வந்துள்ளன. இம்முயற்சிகள் கருத்தியல் தளத்தில் முன்னெடுக்கப்பட்டாலும் அரசியல் தளத்தில்தான் நிறைவு பெறுகினறன – ஒரு புறம் சமரசங்களை செய்து கொண்டே மறுபுறம் துப்பாக்கிகளைப் பயன்படுத்தும் உத்தியை நமது ஆளும் வர்க்க – சாதிகள் கச்சிதமாக செய்து முடிக்கின்றன.
இரண்டாவதாக, தீண்டாமையை கடைப்பிடித்தே தீருவோம் என்ற வெறியில் உழலும் முக்குலத்தவர்களின் மனவிழைவை நனவாக்க உதவுபவற்றை குறித்தும் நாம் மேலும் சிந்திக்கலாம். எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியின்போதுதான் – 1970கள் தொட்டுதான் – இச்சமூகத்தினரின் அரசியல் செல்வாக்கு வெகுவாக வளர்ந்தது. அரசியல் துறையில் மட்டுமில்லாமல், உள்ளூர் நிர்வாகத்திலும், காவல் துறையிலும் இவர்களது பங்கு அதிகரித்தது. சட்டசபையிலும் இவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது. முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் அரசாங்கத்தால் கடைப்பிடிக்கப்படும் திருநாளாக மாறியதும் இந்த கட்சியினரின் ஆட்சிக் காலத்தில்தான்.
தேவர் ஜெயந்தி என்றும், குரு பூசை என்றும் அழைக்கப்படும் இந்த விழாவில் பங்கேற்காத அரசியல் தலைவர்களே இல்லை என்றளவுக்கு இது முக்கியத்துவம் பெற்ற நிகழ்வானது. அரசியல் துறையுடன் நெருங்கிய தொடர்புடைய சினிமா துறையிலும் இந்த சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதுடன், தமக்கான வாழ்வியலை, தனித்துவமான அனுபவங்களை "தமிழர்' அனைவருக்குமான அசல் அனுபவங்களாக உருமாற்றியுள்ளனர். இவர்களது நயமும் கற்பனையும் இச்சமுதாயத்தினரின் மேலாதிக்கத்திற்கு மெருகேற்றி யுள்ளது; அதனை கவர்ச்சிகரமானதாக ஆக்கியுள்ளது. தமிழ் சினிமா உருவாக்கியுள்ள தென்னாட்டு "கிராமி'யத்துக்கு முக்குலத்தவர்களின் "மண்'தான் ஆதாரம் என்றுகூட சொல்லலாம். இவர்கள் வகுத்த பாதையில் நடந்துதான் தமிழ் நாட்டிலுள்ள பிற ஆதிக்க சாதிகளின் பெருமையைப் பேசும் படங்களை ஏனையோர் உருவாக்கினர்.
இவ்வாறாக, வெகுமக்கள் பண்பாட்டுத் தளத்தில் தழைத்தோங்கியுள்ள சாதியப் பெருமிதமானது, தன்னை எதிர்க்கத் துணிபவரை அலட்சியமாகக் கருதுவதில் ஆச்சரியம் என்ன இருக்க முடியும்? காவல் துறை தரும் பாதுகாப்பு, அரசியல் கட்சிகள் காட்டும் அக்கறை, முற்போக்கு அரசியலுக்குள் தப்பித் தவறிக்கூட தமது மக்கள் போய்விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் தலைவர்கள் – இவை அனைத்தும் சேர்ந்தே தலித் விரோத அரசியலை சாத்தியப்படுத்தியுள்ளன. சமூக முரண்களைத் தீர்க்கையில் அரிவாள் எடுப்பதை பெருமையாக நினைக்கும் பண்பாட்டை வளர்த்த இந்த அத்தனை போக்குகளும் – சாதி எதிர்ப்பு சிந்தனைகளுக்கும், வர்க்கமும் சாதி இழிவும் இணையும் புள்ளியில் பிறக்கும் தீவிர இடதுசாரி அரசியலுக்கும் எதிரானவையே என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை.
 பிரச்சனை என்னவெனில், அரசின் அதிகாரமும் சாதிய பெருமிதப் பேச்சும் செயல்பாடுகளும் கைக்கோத்து செயல்படும் பாங்கான அரசியலுக்கு எதிராக எத்தகையை அரசியல் செல்லுபடியாகும் என்பதுதான். தேர்தல் அரசியலுக்குள் வந்துவிட்ட கட்சிகள், ஆதிக்க சாதி அரசியலை முன்னெடுக்கும் திராவிட கட்சிகளுடன் சமரசம் செய்து கொள்வது என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. பரமக்குடி நிகழ்வுகளை வன்மையாகக் கண்டித்த சி.பி.எம்., மாண்டவர்களுக்கு மரியாதை செலுத்தி விட்டு, அதே மூச்சில் அ.இ.அ.தி.மு.க.வுடன் உள்ளாட்சி தேர்தல் கூட்டணிக்கான பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்தனர். முடிவில் அவர்கள் தனியாகப் போட்டியிட முடிவெடுத்தாலும், பரமக்குடி படுகொலைகளை முன்னிட்டு இதைச் செய்யவில்லை. ஜெயலலிதா இவர்களை தனது அணியில் சேர்த்துக் கொள்ளப் போவதில்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டதால், இத்தகைய முடிவை அவர்கள் எடுக்க வேண்டியிருந்தது.
முதலில் தேர்தல் அரசியலுக்குள் வரத் தயங்கிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், அவர்கள் நடத்திய போராட்டங்கள் சந்தித்த அரசு கெடுபிடிகளாலும், அரசியல் பின்னடைவுகளாலும் வேறு காரணங்களாலும் தேர்தல் அரசியலுக்குள் வந்து, தொடர்ந்து ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர். புதிய தமிழகத்தின் அனுபவமும் இதுதான் – நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று, "அம்மா'வின் புகழ்பாடி போற்றி வணங்கிய பிற்பாடும், பரமக்குடி குறித்து டாக்டர் கிருஷ்ணசாமி சட்ட சபையில் பேச முற்பட்டபோது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
தேர்தல் அரசியல் பெற்றுத் தரும் அரசியல் பிரதிநிதித்துவத்தை, ஆக்கப்பூர்வமான வகையில் பயன்படுத்த வல்ல அரசமைப்புகளை நாம் வென்றெடுக்காததால், ஏற்கனவே உள்ள, உளுத்துப்போன அமைப்புகளுள் நமக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்து கொண்டு மட்டுமே நமது கோரிக்கைகளை முன்வைக்க வேண்டி யுள்ளது. இது, பெண்களுக்கும் பொருந்தும், தலித்துகளுக்கும் பொருந்தும். ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்து விலகி, பொது வெளியில் நின்று நாம் கேள்விகளை கேட்க முற்படுகையில் வாயடைக்கப்படுகிறோம்.
தேர்தல் அரசியல் வேண்டாம், தொலைநோக்குப் பார்வை யுடன் தமிழ்த் தேசிய அரசியலை கட்டியமைக்கலாம், இந்திய ஒன்றியத்தின் அடாவடித்தனங்களை அம்பலப்படுத்தலாம் என்ற எண்ணத்தில், சி.பி.அய். முதல் சிறுத்தைகள் வரையிலும் அனைத்து கட்சிகளும் களமிறங்கிய பொழுதுகளில், சாதிப் பிரச்சினையை தொடர்ந்து முன்னெடுக்க தமிழர் பெருமை பேசுவோர் முன்வராதது வேதனையளிப்பதாக உள்ளது. இதுவரைக்கும் சாதி எதிர்ப்பு பேசியவர்களும்கூட, தூக்கிலிடப்பட இருக்கும் மூன்று தமிழர்களுக்காக அ.இ.அ.தி.மு.க. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதும் ஜெயலலிதாவின் பார்ப்பன சார்பையும் – இந்துத்துவ சார்பையும் மென்று விழுங்கி அவரைப் போற்றினர். பெரியார் திராவிடர் கழகம் போன்ற கட்சிகள் இதைச் செய்தது மனவருத்தத்தை ஏற்படுத்தியது. இந்திய ஒன்றியத்தை எதிர்ப்பவர்கள், இந்திய தேசியத்தை கட்டிக்காத்து இயக்கும் பார்ப்பனியத்தையும், அதை செயல்படுத்தும் அரசியல் சக்திகளையும் எவ்வாறு திடீரென்று நட்பு சக்திகளாகக் கண்டனர் என்பது பெரும் புதிராகவே உள்ளது.
மேலும், தமிழ்த் தேசியம் என்பது எத்தகைய அரசமைப்பை சாத்தியப்படுத்தும்; வர்க்க, சாதி முரண்களையும், பாலின முரண்களையும் எவ்வாறு இந்த அரசமைப்பு கையாளும் என்ற எந்த சிந்தனையுமின்றி உணர்ச்சிப் பெருக்காக மட்டுமே ஊற்றெடுக்கும் அரசியலால் யாருக்கு என்ன பயன் என்று நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. "சாதி ஏற்றத்தாழ்வுகளையும் அநீதிகளையும் தொடர்ந்து விமர்சிக்காத தமிழ்த் தேசியத்தை தங்களால் ஏற்க முடியாது' என்று ‘தலித் முரசு' பொறுப்பாசிரியர், சில ஆண்டுகளுக்கு முன் பழ.நெடுமாறனிடம் தெரிவித்ததை இந்நேரத்தில் நாம் நினைவு கோரலாம். மக்கள் திரளினரை உள்ளடக்கி தலித் அமைப்புகளும், இடதுசாரி அமைப்புகளும் போராட்டங்களை நடத்திய காலத்தை, மரபுகளை எண்ணிப் பெருமூச்சு விடுவதைத் தவிர, வேறு எதையாவது செய்ய முடியுமா? மக்களை இயக்கமாக்காமல், கருத்தியல்களை மட்டுமே முன்நிறுத்தும் மாற்று அரசியலால் என்ன பயன் இருக்க முடியும்? விவாதிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக