வெள்ளி, 18 நவம்பர், 2011

தொடரும் ஆதிக்க சாதி மனநிலையும், நமது மௌன வன்முறையும்

தோழர் வ. கீதா:




சாதிய கட்டமைப்பு நீடித்து நிலைப்பது இந்திய அரசிற்கு மிக அவசிய தேவையாக உள்ளது. அறிஞர் கோசாம்பி, சாதி என்பது வரலாற்றுக்கு எதிரானது என்றார். வரலாற்றில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தாலும் சாதி அமைப்பு தன் மேல் கீழ் அமைப்புக்கு ஏற்றவாறு உட்செலுத்திக்கொண்டு வலுப்பெறுகின்றது. தொடர்ந்து சாதி எதிர்ப்பு மரபு என்பது இருப்பதினாலே தான் ஆளும் வர்க்கம் சாதியைக் கட்டிக் காப்பதில் கவனம் செலுத்துகிறது. இந்திய அரசிற்கு ஏன் தேவை? தன்னை ஒரு ஜனநாயக அரசாக அறிவித்துள்ளதால், பல சமயங்களில் சாதி முரண்களை சமாளிப்பது என்பது உடனடி தேவையாக உள்ளது. ஆனாலும் கூட, தொடர் மக்கள் போராட்டங்களினால் சாதி இறுக்கம் தளர்ந்து கொண்டு வருகின்றது. மறுபக்கம் சாதி கட்டிக் காக்கும் போக்கும் வலுத்து கொண்டு வருகிறது. இதற்கு அரசு துணை செய்கிறது. தமிழகத்தில் பெரியாரின் திராவிட இயக்கமும் இடதுசாரி இயக்கமும் தான் சாதி எதிர்ப்பு போரட்டத்தில் முக்கிய பங்கு ஆற்றின.



தமிழ்த் தேசிய அடையாளம் என்பது ஒரு பொது அடையாளத்தின் தேடல் தான். இத்தேடல், அயோத்திதாசர் காலம் முதல் உள்ளது.1950 -60களில் தி.மு.க பொது அடையாளத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்தது. தலித் மக்கள் தங்களின் பிறப்பு இழிவு நீங்க இப்போராட்டத்தில் முக்கிய பங்காற்றின. ஆனால், தலித் மக்களின் தியாகங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டது. தலித்கள் ஏமாற்றப்பட்டனர். இவ்வாறான தமிழ்த் தேசியம் என்பது போலியானது.



தமிழ்த் தேசியம் பேசுவோர், வேறொரு மண்ணில் தமிழர்களுக்கு நடக்கும் அவலங்களைக் கொண்டு பொங்கி எழுகிறார்கள். தமிழர்களின் வீரம் பற்றி பறைசாற்றுகின்றார்கள். ஆனால், இங்கு நடக்கும் அவலங்களை கண்டும் காணாது உள்ளனர். வரலாற்று ரீதியாக நாம் அத்தமிழர்களுக்கு குரல் கொடுக்க வேண்டியது நம் கடமை. அதை மறுப்பதற்கில்லை.



1960களில் தொடங்கி ஒவ்வொறு பத்தாண்டுகளிலும் தலித் மக்கள் மீது மிக கொடூரத் தாக்குதல் நடந்து வருகிறது. அப்போதெல்லாம் நம் தமிழ் வீரம் என்னாயிற்று? முதுகுளத்தூர் கலவரம் நடந்தவுடன் பெரியார் தனித்த குரலில் முத்துராமலிங்கத் தேவரைக் கைது செய்ய முழங்கினார். காமராசரும் பெரியாருடன் கைக்கோர்த்தார். அதே சமயம், சாதியை ஒழிக்க இந்திய அரசமைப்பு சட்டத்தை எரிக்கும் போராட்டத்தைத் தொடங்கினார். காமராசர் அதிர்ச்சியுற்றார். முதுகுளத்தூர் கலவரத்தின் அபாயத்தையும் அதற்கான மூல காரணம் சாதி என்பதையும் அறிந்தவர் பெரியார்.



சாதியைக் க‌ட‌ந்து ஒரு பொது அடையாளத்தை நோக்கிய‌ தேவை இருந்த‌போதே த‌மிழ் ம‌ற்றும் த‌மிழ்த்தேசிய‌ம் முன்வைக்க‌ப்ப‌டுகிற‌து. இந்த‌ பொது அடையாளத்திற்கான‌ எல்லைவித‌ பிர‌ச்சார‌ங்க‌ளையும் முன்னெடுத்த‌வ‌ர்க‌ள் த‌லித் ம‌க்க‌ள். ஆனால் வ‌ர‌லாற்றில் தொட‌ர்ச்சியாக‌ அவ‌ர்க‌ள் செய்து வ‌ந்த பல தியாக‌ங்க‌ளும் போராட்ட‌ங்க‌ளும் திட்ட‌மிட்டே ம‌றைக்க‌ப்ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌.



திருச்சியைச் சேர்ந்த கிறித்துவ பாதிரியார், வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஆய்வு செய்துள்ளார். பெரும்பாலான சாதிய வன்கொடுமைகளுக்கு காரணங்களாக முதல் தகவல் அறிக்கையில் பாலியல் ரீதியாக வசை பாடுவது என்று சொல்லப்பட்டுள்ளது. தலித் மக்கள் எவ்வாறெல்லாம் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர் என்பது இவ்வாய்வில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இது, சாதிக்கும் பாலியலுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை உணர்த்துவதாகும். ஒரு தலித் பெண்ணை கீழ்தர குழந்தையைப் பெற்றெடுக்கும் பிறவியாக வசைப் பாடப்படுகிறது.



சாதிக் கட்டமைப்பைத் தக்கவைப்பது அகமண முறை தான். ஒரு பெண் தன் சாதியினரை மட்டும் மணமுடித்து தன் சாதிக்கு ‘பெருமை’ தேடி தந்தால் மட்டும் தான் அவள் ‘நல்ல’ பெண் என்றழைக்கபடுகிறாள்.



சாதிக்கு எதிராக‌ ஒவ்வொரு த‌லைமுறையும் புதிதாக‌ போராட்ட‌ங்க‌ளை முன்னெடுக்க‌ வேண்டியுள்ள‌து. சாதிக் கொடுமைக‌ள் நிக‌ழும் பொழுது ம‌ட்டுமே நாம் ந‌ம்முடைய‌ குர‌ல்க‌ளை எழுப்புகிறோம். அத‌ன் பின் மீண்டும் ஒரு நீண்ட‌ மௌன‌ம். இந்த‌ மௌன‌த்தை உடைக்க‌ வேண்டும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக