சனி, 10 டிசம்பர், 2011

மாவீரன் இம்மானுவேல் சேகரனும் 7 உயிர்களும்

1953 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 14 ஆம் நாள் இராமநாதபுரத்தில் “ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாடு'' ஒன்றினை முதன் முதலில் நடத்தி ஒடுக்கப்பட்ட மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் மாவீரன் இம்மானுவேல் சேகரன் ஆவார்.
இம்மானுவேல் 1924 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 9 ஆம் நாள் இராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடி அருகில் உள்ள செல்லூர் கிராமத்தில் வேதநாயகம், ஞானசுந்தரி தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இவரின் தந்தை ஆசிரியராகவும், வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.
இம்மானுவேல் ஆரம்பக் கல்வியைப் பரமக்குடியிலும், உயர்நிலைக் கல்வியை இராமநாதபுரத்திலும் தொடர்ந்தõர். தமது 17 ஆவது வயதில் தமது பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி 19 ஆவது வயதில் அதாவது 1943 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இராணுவத்தில் சேர்ந்தார். இராணுவத்தில் பணியாற்றும்போது பல மொழிகளையும் கற்றார். குறிப்பாக ஆங்கிலம், இந்தி, உருது, ரோமன் ஆகிய மொழிகளில் நன்கு தேர்ச்சி பெற்று விளங்கினார்.
1946 ஆம் ஆண்டு இராணுவத்தில் பணிபுரியும்போதே ஆசிரியர் அமிர்தம் கிரேஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் பிறந்தன. வசந்தராணி, விஜயராணி, பிரபாராணி, ஜான்சிராணி என அவர்களுக்குப் பெயர் சூட்டினார். தேவேந்திரர்கள் இம்மண்ணின் மைந்தர்கள், மன்னர் பரம்பரையினர் என்பதால் தம் குழந்தைகளுக்கு “ராணி'' என்ற பெயர் சொல்லி அழைக்குமாறு பெயர்களைத் தேர்ந்தெடுத்தார்.
தந்தையோடு வெள்ளையனே வெளியேறு போராட்டக் களத்தில் குதித்து 3 மாதம் சிறைத் தண்டனை பெற்றுச் சோதனைகளைச் சந்தித்தவர்.
1950 ஆம் ஆண்டு இராணுவத்திலிருந்து விடுப்பில் வந்தவர், தமது இன மக்கள் ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படுவதைக் கண்டு வெகுண்டெழுந்தார். மனிதர்களிடையே உயர்வு தாழ்வு கற்பிக்கப்படுவதையும், தேவேந்திர குல மக்கள் நாயினும் கேவலமாய் நடத்தப்படுவதையும் வண்மையாகக் கண்டித்தார். எதிர்த்துப் போராடினார். தாம் இராணுவப் பணிக்குத் திரும்பிவிட்டால் இவர்களின் நிலை என்னவாக இருக்கும் என நினைத்துப் பார்த்து வேலைக்குத் திரும்புவதைவிட இச்சமூகத்திற்குப் பாடுபடுவதே தமது இலட்சியம் என முடிவெடித்து இராணுவப் பணியிலிருந்து விலகிப் பொது வாழ்க்கைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
சாதி ஒழிப்பு, சாதி முரண்பாடு ஒழிப்பு ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததோடு விதவை மணம் மற்றும் கலப்பு மணங்களை ஊக்குவித்தார்.
கிராமப் பகுதிகளில் நடைபெறும் கோயில் திருவிழாக்களில் சாதி அடிப்படையில் பணிகள் ஒதுக்கப்படுவதையும் அதோடு சாதி அடுக்கு நிலைகளுக்கொப்ப மரியாதை வழங்கப்படுவதையும் கண்டித்தார். ஒரு ஊரில் ஓரிரு மறவர் குடிகளே இருந்தாலும் அந்த ஊரில் அவர்களே கிராம அதிகாரிகளாகப் பதவி வகிப்பதையும், முதல் மரியாதையை அவர்களே பெற்றுக்கொள்வதையும், கோயில் திருவிழாக்களில் தேவேந்திரர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டுத் தொண்டூழியம் செய்ய மட்டும் பணிக்கப்படுவதையும் எதிர்த்தார்.
முத்துராமலிங்கத் தேவர் 1946 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பிறகு காங்கிரஸ் கட்சியோடு முரண்பட்டு அக்கட்சியிலிருந்து விலகி 1948 ஆம் ஆண்டு “தமிழ்நாடு பார்வர்ட் பிளாக்' என்ற பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கினார்.
1952 ஆம் ஆண்டு நடைபெற்ற இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதித் தேர்தலில் பார்வார்ட் பிளாக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு முத்துராமலிங்கத் தேவர் வெற்றி பெற்றார். இருப்பினும் தேவேந்திரர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மறவர்கள் – தேவேந்திரர்களிடையே பகைமை வளரத் தொடங்கியது.
1956 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் அமைச்சருமான பி. கக்கன் அவர்கள், இம்மானுவேலை இந்து மதத்தில் சேர்த்து அவர் பெயரை இம்மானுவேல் சேகரன் என பெயர் மாற்றம் செய்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடத் தயார் படுத்தினார். ஆனால் காமராசர் இம்மானுவேல் சேகரன் தேர்தலில் போட்டியிட வாய்ப்புத் தரவில்லை. மனம் உடைந்துபோனாலும் தனது நிலையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கே பாடுபட்டார்.
இதே மாவட்டத்தைச் சேர்ந்த காமராசர் தமிழக முதலமைச்சராகவும் நாடார்களின் ஆதரவுப்பெற்ற தலைவராகவும் விளங்கினார். மறவர்களின் தலைவராக முத்துராமலிங்க தேவரும் நாடார்களின் தலைவராகக் காமராசரும், தேவேந்திரர்களின் தலைவராக இம்மானுவேல் சேகரனும் திகழ்ந்தனர்.
1957 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மறவர்கள் மற்ற சாதியினரை வாக்களிக்கவிடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இம்மானுவேல் தேவேந்திரர்களையும் நாடார் வகுப்பினரையும் சந்தித்து அவர்களை அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தியதோடு தமது ஆதரவாளர்களை ஆங்காங்கே பாதுகாப்புக்கு நிறுத்தி வைத்து அனைவரையும் வாக்களிக்க வைத்தார். இதனால் இம்மானுவேல் – முத்துராமலிங்கத் தேவர் இடையே பகைமை அதிகமானது.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஆறுமுகத் தேவேந்திரரும், சுயேட்சையாகப் போட்டியிட்ட இராமச்சந்திரன் சேர்வையும் தேர்தலில் வெற்றி பெற்றனர். இவ்விருவரும் தமது முதல் நன்றியை இம்மானுவேல் சேகரனுக்குத் தெரிவித்தனர். இதன் மூலம் இம்மானுவேல் சேகரனின் செல்வாக்கு மேலும் உயர்ந்தது. அரசின் கவனமும் அவர் பக்கம் திரும்பியது.
இத்தேர்தல் மூலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் வாழும் தேவேந்திரர்களுக்கும் மறவர்களுக்கும் இடையே மோதல்களோடு விரும்பத் தகாத நிகழ்வுகளும் நடைபெற்று வந்தன.
மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் தேர்தலையொட்டி நடைபெறும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மாவட்ட ஆட்சித் தலைவர் சி.வி.ஆர். பணிக்கர் தலைமையில் சமாதானக் கூட்டம் 1957 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 10ஆம் நாள் முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
சமாதானக் கூட்டத்திற்கு மதுரை – இராமநாதபுரம் சரக மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் எம்.ஜி. ஹோம்ஸ் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்திற்கு மறவர்கள் சார்பாக முத்துராமலிங்கத் தேவர் மற்றும் சசிவர்ணத் தேவர், நாடார்கள் சார்பில் பேரையூர் வேல்சாமி நாடார் மற்றும் கமுதி சவுந்திரபாண்டியன் நாடார், தேவேந்திரர் சார்பில் இம்மானுவேல் சேகரன், பேரையூர் வைத்தியர் பெருமாள் பீட்டர் மற்றும் வீரம்பல் வேதமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சமாதானக் கூட்டத்திற்குத் தேவர் தாமதமாகவே வந்தார். அவர் வந்தவுடன் கூட்டம் தொடங்கியது. முத்துராமலிங்கத் தேவரை அவர் தம் பகுதி மக்கள் எஜமான் என்று சொல்லித்தான் வணக்கம் தெரிவிப்பதுண்டு. கூட்டத்திற்கு வந்த தேவரை அனைவரும் வணக்கம் தெரிவித்து வரவேற்றனர். ஆனால் இம்மானுவேல் சேகரன் முத்துராமலிங்கத் தேவரை எஜமான் என்று அழைக்கவோ, அவருக்கு வணக்கமோ தெரிவிக்கவில்லை.
கூட்டத்தில் மறவர்கள் தாக்குவதாக தேவேந்திரர்களும் தேவேந்திரர்கள் தாக்குவதாக மறவர்களும், மறவர்கள் தங்களை பயமுறுத்துவதாக நாடார்களும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டினர். சம்பவங்களைக் குறிப்பிட்டு ஆதாரத்தோடு தனது பார்வைக்குக் கொண்டுவந்தும் உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி கூறினர்.
மேலும் அனைத்து மக்களும் அமைதியுடன் வாழ ஆங்காங்கே பொதுக் கூட்டங்களை நடத்துவ அப்படி இல்லையென்றால் அனைவரும் கையொப்பமிட்ட துண்டுப் பிரசுரத்தை மக்களிடையே வினியோகிக்கலாம் என்றனர். தேவேந்திரர்களுக்குப் படிக்கத் தெரியாது. துண்டுப் பிரசுரம் வழங்கிப் பயனில்லை என்றார் முத்துராமலிங்கத் தேவர். மற்றவர்களைவிட தேவேந்திரர்கள் அதிகம் படித்தவர்கள் என்பதைக் கணக்கெடுத்துப் பார்த்தால் தெரியும் என்றார் இம்மானுவேல் சேகரன். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் ஆங்கில மொழியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியில் துண்டுப் பிரசுரமே வெளியிடுவது என முடிவெடுக்கப்பட்டது.
துண்டுபிரசுரத்தில் மறவர்கள் சார்பில் முத்துராமலிங்கத் தேவரும், நாடார்கள் சார்பில் வேலுசாமி நாடாரும், தேவேந்திரர்கள் சார்பில் இம்மானுவேல் சேகரனும் கையெழுத்திடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் முத்துராமலிங்கத் தேவர் தேவேந்திரர்கள் சார்பில் இம்மானுவேல் சேகரன் கையெழுத்திடுவதை எதிர்த்தார். இறுதியில் ஆட்சித் தலைவரின் நிர்பந்தத்தின் பேரில் அதனை ஏற்று முத்துராமலிங்கத் தேவர் கையொப்பமிட்டார். இருப்பினும் கூட்டம் முடிந்து வெளியே வந்த தேவர் தனது எரிச்சலை வெளிப்படுத்தினார்.
சமாதானக் கூட்டம் நடந்த மறுநாள் 11.09.1957 அன்று மாலை எமனேசுவரத்தில் நடந்த பாரதி விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிவிட்டு இரவு 8.30 மணியளவில் பரமக்குடி திரும்பி இரவு உணவை வீட்டில் முடித்துவிட்டு அருகில் உள்ள பெட்டிக்கடையில் பொருள் வாங்கப் போன இம்மானுவேல் சேகரனை எதிர்பாராத நிலையில் கொடிய ஆயுதங்களுடன் தயாராக இருந்த கும்பல் வெட்டிச் சாய்த்தது. "சாதி' எனும் கொடிய தீண்டாமையை எதிர்த்துப் போராடிய ஒரே காரணத்திற்காக மாவீரன் இம்மானுவேல் தம் இளம் மனைவியையும் 10 வயதுக்குட்பட்ட 4 பெண் குழந்தைகளையும் அனாதைகளாகத் தவிக்கவிட்டு விடைபெற்றார்.
இராணுவத்தில் சேர்வதற்கு வாய்ப்பு கிடைக்காதா எனப் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காத்துக்கொண்டிருக்கும் காலத்தில் இராணுவப் பதவியைவிட்டு விலகித் தந்தை பெரியாரைப் போல, புரட்சியாளர் அம்பேத்கரைப் போல் சாதி எனும் இழிவைப் போக்கிட தன் தனிப்பட்ட வாழ்க்கையைவிட தன் சமூகத்தின் வாழ்க்கையே பெரிதெனக் கருதி இளம் வயதிலேயே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மாவீரனைக் கோழைத்தனமாகக் கொன்று குவித்தனர் சாதி வெறியர்கள். இதன் மூலம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் சூத்திரர்கள் ஒருபோதும் ஒன்றுபட்டுவிடக் கூடாது என்பதற்காக பார்ப்பனர்களால் அரங்கேற்றிய வர்ணா சிரமதர்மம் இன்றும் கோலோச்சுகிறது என்பதையே நிலைநாட்டியது.
2010 ஆம் ஆண்டு இந்திய அரசு மாவீரன் இம்மானுவேல் சேகரனின் நினைவைப் போற்றும் வகையில் அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்புச் செய்தது.
2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறை அவருடைய நினைவு நாளில் 6 பேரை சுட்டுக் கொன்று வரலாற்றில் பதிவு செய்து கொண்டது.
இந்திய அரசியல் சட்டப் பிரிவு 15 சமத்துவத்தையும், பிரிவு 17 சாதி ஒழிப்பையும் பிரகடனப்படுத்துகிறது. ஆனால் நாடு விடுதலை பெற்று 64 ஆண்டுகள் உருண்டோடியும், ஒடுக்கப்பட்ட சமூகம் இன்னும் விடியலைக் காணவில்லை.
இந்தியாவின் சிற்பிகள் "சாதியை காகிதத்தில் எழுதி ஒழித்தார்கள். இன்றைய நவீன சிற்பிகள் (இந்துத்துவாவாதிகள்) சாதியைப் போற்றிப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திய நாட்டை ஆள்வது மக்கள் பிரதிநிதிகள் அல்ல, பார்ப்பனியமே, பார்ப்பனர்களே!
இந்திய மக்கள் தொகையில் 20 விழுக்காட்டிற்கும் மேல் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகம் இதனை இன்னும் புரிந்துக்கொள்ளவில்லை என்பதே வேதனை.
“அம்பேத்கர் வாழ்க என்று சொன்னால்
இந்து மதம் ஒழிக என்று பொருள்
அம்பேத்கர் வாழ்க வாழ்க என்று சொன்னால்
சாதி ஒழிக ஒழிக என்று பொருள்''
ஆனால் நாம் இந்து மதத்தில் இருந்துக்கொண்டு அம்பேத்கர் வாழ்க என முழக்கம் இடுகிறோம். இது முரண்பாடாகவே உள்ளது.
“ ஒரு அரசு சனநாயகமாக செயல்படுகிறதா? அல்லது சனநாயகமற்றதாக செயல்படுகிறதா என்றால், சட்டத்தை செயல்படுத்துகிற அமைப்பைச் சார்ந்தவர்கள் எத்தகைய சமூகச்சூழலில் வளர்ந்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே இது அமையும்'' என்றார் அம்பேத்கர்.
எனவே, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய கடமை காவல் துறைக்கு இருந்தும், அத்துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மனநிலையைப் பொறுத்தே முடிவுகள் எடுக்கப்படுவதால் அம்முடிவுகள் தவறாக? இருந்தாலும் அதனை அரசு ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு அவப்பெயரை ஏற்றுக்கொள்கிறது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இதே நிலைதான் இதனை மாற்ற என்ன வழி?
சமீபத்தில் காவல்துறையில் 6606 பணி இடங்களை நிரப்பப் போவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். காவல்துறை பணியில் சேர்வதற்கு சில தகுதிகள் தேவை. குறிப்பாக, கல்வி, வயது, உயரம், எடை போன்றவை. இவைகளேடு சாதி மத உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவரா, என்ற தகுதியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்தத் தகுதியை எப்படி அறிவது என்றால் மனுதாரர் கலப்பு மணம் செய்து கொண்டவரா? அல்லது கலப்பு மணத் தம்பதியினரின் வாரிசா? என்பதைக் கவனித்து அப்படிபட்டவர்களைத் தேர்ந்தெடுத்தால் அவர்கள் எதிர்காலத்தில் சாதி மத உணர்வு இல்லாமல் நடுநிலையோடு செயல்பட்டு மக்களையும் காப்பாற்றி அரசுக்கும் நல்ல பெயரை வாங்கித்தருவார்கள். இதனால் தமிழ்நாட்டில் சாதிச் சண்டைகள் தவிர்த்திட வழிவகுக்கும்.
ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்வார்களா? அரசு அதிகாரிகள் அதற்கு இடம் தருவார்களா? காலம்தான் பதில் சொல்லும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக