வாழ்த்துக்கள்...... ஜெயலலிதா என்றுதான் இந்தக் கட்டுரையை தொடங்க வேண்டும் என்று விருப்பம். ஆனால் அப்படித் தொடங்குவதற்கு பெரும் தயக்கம் வருவதற்கு காரணம், கடந்த கால வரலாறு. நடராஜன் நீக்கம், தினகரன் நீக்கம் என்று போயஸ் தோட்டத்திலிருந்து பல அறிவிப்புகள் வந்திருக்கின்றன. அவை நீர்த்துப் போய் வெறும் அறிவிப்புகளாகவே நின்று விட்டது வரலாறு. காலப்போக்கில், நடராஜன் போன்றவர்கள் மீண்டும் அதிகார மையங்களாக தங்களை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. சசிகலாவுக்கும், ஜெயலலிதாவுக்குமான நட்பு 1982ம் ஆண்டில் தொடங்கியது. சசிகலாவின் கணவர் நடராஜன் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தார். அப்போது அவருக்கு ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த சந்திரலேகாவோடு இருந்த நட்பின் அடிப்படையில் தனது மனைவியையும் அறிமுகப் படுத்துகிறார். ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா, எம்ஜிஆரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். அதிமுகவில் எம்ஜிஆரால் கொள்கைப் பரப்புச் செயலாளராக அறிவிக்கப் பட்டிருந்தாலும், தற்போது இருப்பது போல ஜெயலலிதாவுக்கு பிசியான வாழ்க்கை இல்லை என்பதால், வீடியோ கேசட்டுகளை வாடகைக்கு விடும் கடையை நடத்திக் கொண்டிருந்த சசிகலாவிடம் தனது வீட்டுக்கு தினமும் வீடியோ கேசட்டுகளை வழங்கச் சொல்கிறார். தினந்தோறும் வீடியோ கேசட்டுகளை சசிகலாக வழங்கி வரும்போது, ஜெயலலிதாவுடனான நட்பு சசிகலாவுக்கு நெருக்கமாகிறது. எம்.ஜி.ஆர் மறைவை ஒட்டி, ஜெயலலிதா ஆர்.எம்.வீரப்பன் மற்றும், எம்.ஜி.ஆர் உறவினர்களால் அவமானப்படுத்தப் பட்ட நேரத்தில் சசிகலா, ஜெயலலிதாவுக்கு மிகுந்த ஆதரவாக இருந்ததாக கூறப்படுகிறது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று இரண்டாகப் பிரிந்த போதுதான், ஜெயலலிதாவுக்கு உண்மையான அரசியல் என்றால் என்ன என்பது புரிகிறது. அப்போதைய சூழ்நிலையில், 1989 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தன்னுடைய அணிக்காக சேவல் சின்னத்தில் போட்டியிடும் அணிகளுக்காக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அப்போது சசிகலா ஜெயலலிதா கூடவே இருந்து பல உதவிகளைச் செய்கிறார். இதையடுத்து இவர்களின் நட்பு பலப்படுகிறது. 1991ல் ராஜீவ் காந்தி மரணத்தை அடுத்து ஏற்பட்ட அனுதாப அலையில், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணி மிகப் பெரும்பான்மையோடு ஆட்சியைப் பிடிக்கிறது. அது வரை தனது கணவர் நடராஜனோடு, பெசன்ட் நகர் இல்லத்தில் வாழ்ந்து கொண்டு அவ்வப்போது போயஸ் தோட்டத்துக்கு வந்து செல்லும் சசிகலா, ஒரேயடியாக போயஸ் தோட்டத்துக்கு வந்து விடுகிறார். அப்போதெல்லாம் நடராஜன், அதிமுகவில் தனக்குத் தெரியாமல் எதுவும் நடக்காது, தான் வைத்ததே சட்டம் என்றெல்லாம் மார்தட்டிக் கொண்டிருந்த போது, ஜெயலலிதா, சசிகலாவின் சம்மதத்தோடு, நடராஜன் கட்சியிலிருந்து நீக்கப் படுகிறார், அவரோடு கட்சியினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அறிவிப்பு வெளியிட்டார். சசிகலாவின் குடும்பத்தை எடுத்துக் கொண்டால், அது கருணாநிதியை விட மிகப் பெரிய ஆக்டோபஸ் குடும்பம். சசிகலாவோடு பிறந்தவர்களில் முதலாமவர் சுந்தரவதனம். இவரது மனைவி பெயர் சந்தானலட்சுமி. இவர்களது மகள் அனுராதாதான் தற்போது ஜெயாடிவியை நிர்வகித்து வருகிறார். இவர்களின் மற்றொரு மகன் தான் டாக்டர்.வெங்கடேஷ். சுந்தவரதனத்துக்கு அடுத்தவர் சமீபத்தில் காலமான வனிதாமணி. இவரது கணவர் விவேகானந்தன். இந்தத் தம்பதிக்குப் பிறந்தவர்கள்தான் டிடிவி.தினகரன், வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் டிடிவி.பாஸ்கரன். இவர்கள் கரன் சகோதரர்கள் என்று அழைக்கப் படுகிறார்கள். வளர்ப்பு மகன் சுதாகரனை ஜெயலலிதா விலக்கி வைத்து, அவர் மீது ஹெராயின் வழக்கு போட்ட போது, இந்த வனிதாமணி சென்னை வந்து ஜெயலலிதாவிடம் கடுமையான சண்டையிட்டிருக்கிறார். நீங்கள் கேட்டீர்கள் என்றுதான் சுதாகரனை வளர்ப்பு மகனாக எடுத்துக் கொள்ள சம்மதித்தேன், இப்போது இப்படிச் செய்தால் என்ன அர்த்தம் என்று கடுமையாக சண்டையிட்டிருக்கிறார். கோபமடைந்த ஜெயலலிதா, இனி என் முகத்தில் விழிக்காதீர்கள் என்று சொல்லி வனிதாமணியை அனுப்பி விட்டார். இதனால்தான் ஜெயலலிதா, வனிதாமணி மரணத்துக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இவர்களது மற்றொரு மகனான டிடிவி.தினகரன், இவர்களது தாய் மாமன் சுந்தரவதனத்தின் மகள் அனுராதாவை திருமணம் செய்துள்ளார். வனிதாமணிக்கு அடுத்த சகோதரர் வினோதகன். மகாதேவன் என்பவர் இவரது வாரிசு என்று கூறப்படுகிறது. இந்த வினோதகனுக்கு அடுத்த சகோதரர் ஜெயராமன். இவரது மனைவிதான் இளவரசி. இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகனும் மகளும் உண்டு. இவர்களுக்கு அடுத்தவர்தான் சசிகலா. இவரது கணவர் நடராஜன். நடராஜனின் தம்பி ராமச்சந்திரன். சசிகலாவுக்கும் அடுத்த சகோதரர் திவாகரன். இவர் மன்னார்குடியிலேயே இருக்கிறார். இது சசிகலாவோடு பிறந்தவர்களைப் பற்றிய விபரம். (இதைக் கண்டுபிடிப்பதற்குள்ளேயே போதும் போதும் என்றாகி விட்டது) இது போக, மன்னார்குடியைச் சேர்ந்த, சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்த அத்தனை பேரும் சசிகலாவின் உறவினர்கள் என்று சொல்லிக் கொள்வது, அதிமுக ஆட்சியின் சோகங்களில் ஒன்று. 1991ல் போயஸ் தோட்டத்துக்கு குடிபெயர்ந்த சசிகலா மற்றும் அவர் உறவினர்களின் அராஜகத்தை அன்றைய தமிழகம் வேதனையோடு பார்த்தது. 1991-1996 ஆட்சி காலத்தில் சசிகலாவின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. அப்போதுதான் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பி ரவுடிகளை விட்டு அடிக்கும் கலாச்சாரம் வளர்ந்தது. இந்த ஆட்டோ கலாச்சாரத்தையும் ரவுடிகளின் கூட்டத்தையும் பராமரித்துப் பேணிக் காத்தவர்கள் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் மற்றும் மதுசூதனன். சசிகலா குடும்பத்தின் பேராசை எப்படி இருந்தது என்றால், சென்னை நகரில் அழகாக இருக்கும் கட்டிடங்களை பார்த்துப் பார்த்து, அதன் உரிமையாளர்களை மிரட்டி விலைக்கு வாங்குவார்கள். இந்த மிரட்டலுக்கு பிரபல இயக்குநர் பாரதிராஜாவும் தப்பவில்லை. பாரதிராஜாவும், அமிர்தாஞ்சன் நிறுவன உரிமையாளர் பந்துலுவின் குடும்பமும் சசிகலாவால் மிரட்டப் பட்டனர். தனக்கென்று சொந்தமாக ஒரு குடும்பம் இல்லாத ஜெயலலிதா, எனக்கென்று குடும்பமும், அதற்கு ஒரு வாரிசும் இருந்தால், அந்த வாரிசின் திருமணத்தை இப்படித்தான் நடத்துவேன் என்று இந்த சமூகத்துக்கு பறைசாற்றும் விதமாக வனிதாமணியின் மகன் சுதாகரனை வளர்ப்பு மகனாக தத்தெடுத்தார். நடிகர் திலகம் சிவாஜியின் மகளை பெண் கேட்டு, அந்தத் திருமணம் வெகு தடபுடலாக நடைபெற்றது. அந்த காலத்திலேயே 100 கோடி ரூபாய் திருமணம் என்று இந்தத் திருமணம் அழைக்கப் பட்டது. சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தால், அப்போது அதிமுகவிலிருந்து ராஜாராம், எஸ்.டி.சோமசுந்தரம் போன்ற எம்ஜிஆர் காலத்து அதிமுகவினர் சிறிது சிறிதாக விலக ஆரம்பித்தனர். சசிகலா குடும்பத்தின் இந்த அராஜகம் தலைவிரித்து ஆடத் தொடங்கி வெகுஜன மக்கள் மத்தியில் அதிமுக ஆட்சிக்கு எதிராக கடும் அதிருப்தி ஏற்பட்டது. ஆனாலும், இது எதைப்பற்றியும் ஜெயலலிதா கவலைப்படாமல், தனது உடன்பிறவா சகோதரியோடு உற்ற துணையாக நின்றார். 1991 முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரின் போதுதான் சசிகலாவின் ஆதிக்கம் எத்தகையது என்பதை தமிழகம் உணர்ந்தது. முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, சபாநாயகராக சேடப்பட்டி முத்தையா தேர்ந்தெடுக்கப் பட்டார். அந்த சபாநாயகரின் இருக்கையில், சசிகலாவை அமர வைத்து அழகு பார்த்தார் ஜெயலலிதா. ஜெயலலிதா, சசிகலா முன்னிலையில் சேடப்பட்டி முத்தையா சாஷ்டாங்கமாக காலில் விழுந்து தனது விசுவாசத்தைப் பறைசாற்றினார். 1992ம் ஆண்டு நடந்த மகாமகத் திருவிழாவில், ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் வருகையால் நடந்த நெறிசலில் 48 அப்பாவி மக்கள் பலியானார்கள். ஆனால் இது எதுவுமே ஜெயலலிதா-சசிகலா நட்புக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. 1996ல் நடந்த தேர்தலில், மிக மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது அதிமுக. அந்தத் தேர்தல் தோல்வி, ஜெயலலிதாவுக்கு முதன் முறையாக, தன் உடன் பிறவா சகோதரியால் இந்தத் தோல்வி என்பதை உணர வைத்தது. போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து சசிகலாவை வெளியேற்றினார் ஜெயலலிதா. இது குறித்த வெளிப்படையான அறிவிப்பையும் வெளியிட்டார். ஒரே மாதத்தில் சசிகலா மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு வந்தார். சசிகலா போயஸ் தோட்டத்துக்கு வருகை தரும் போது, ஜெயலலிதா வாசலில் வந்து நின்று, கேசரி கொடுத்து சசிகலாவை வரவேற்றார். வெளியேற்றி விட்டு, மீண்டும் சசிகலாவை ஜெயலலிதா இணைத்துக் கொண்டது, சசிகலாவுக்கு, நாம் இல்லாவிட்டால், ஜெயலலிதா இல்லை என்ற ஆணவத்தைக் கொடுத்தது. 2001ல் ஜெயலலிதா, மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றதும், மன்னார்குடி மாபியாவின் ஆதிக்கம் தலைவிரித்து ஆடத் தொடங்கியது. அப்போது ஜெயலலிதாவுக்கு டான்சி வழக்கில் கிடைத்திருந்த தண்டனையால், அவர் நீதிமன்ற உத்தரவால் முதல்வர் பதவியிலிருந்து விலக நேரிட்டது. ஜெயலலிதாவுக்கு பதிலாக வேறு யாரை முதல்வராக நியமிக்கலாம் என்ற ஆலோசனை நடந்த போது, மூத்த தலைவர் நெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சி நெடுஞ்செழியன் மற்றும் லால்குடி தொகுதியைச் சேர்ந்த ஒரு பெண் எம்எல்ஏ (பெயர் நினைவில்லை) ஆகிய இருவர் பெயர் ஜெயலலிதாவால் இறுதி செய்யப் பட்டது. ஆனால் மன்னார்குடி மாபியாவின் யோசனைப்படி, ஓ.பன்னீர்செல்வம்தான் முதல்வரானார். பன்னீர்செல்வம், தனக்குக் கிடைத்த அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மன்னார்குடி குடும்பத்துக்கு விசுவாசமான அடிமையாக இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. அந்த காலகட்டத்திலும், மன்னார்குடி ராஜ்யம் கோலோச்சிக் கொண்டிருந்த போதுதான், அந்த மாபியாவுக்குள்ளாகவே உள்மோதல்கள் துவங்கின. தினகரனுக்கும் மகாதேவனுக்கும் மோதல். டாக்டர்.வெங்கடேஷ் என்ற புதிய நபர் தலைதூக்கினார். இப்படியான உள்மோதல்களுடன், அந்த ஆட்சியும், அப்போது எடுக்கப் பட்ட தொடர்ச்சியான மக்கள் விரோத நடவடிக்கைகளால் 2006 தேர்தலில் மண்ணைக் கவ்வியது. சரி ஆட்சியில்தான் இப்படி. கட்சியில் மன்னார்குடி மாபியாவின் ஆதிக்கம் உள்ளதா என்றால், மன்னார்குடி மாபியாதான் கட்சியையே நடத்தும். மன்னார்குடி மாபியா தேர்ந்தெடுக்கும் நபர்கள்தான் மாவட்டச் செயலாளர்களாக முடியும். அதிமுகவில் பல ஆண்டுகாலம் இருக்கும் தலைவர்களையெல்லாம் விட்டு விட்டு, 2007ல் தொடங்கப் பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு, நேற்றைக்கு முளைத்த காளானான டாக்டர்.வெங்கடேஷை தலைவராக்கியதே, மன்னார்குடி மாபியாவின் ஆதிக்கத்துக்கு ஒரு நல்ல உதாரணம். டாக்டர் வெங்கடேஷ் 2011 தேர்தல் கூட்டணி குறித்து மற்ற கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, ஜெயா டிவியில், அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப் பட்டது. அப்படி அறிவிக்கப் பட்ட பட்டியலில், கூட்டணிக் கட்சிகள் பல ஆண்டுகளாக வென்று வந்த தொகுதிகளும் அடக்கம். கட்சியில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில், மன்னார்குடி மாபியாவின் ஆதிக்கத்துக்கு ஒரு உதாரணம் இது. பட்டியல் வெளியானதும், கூட்டணிக் கட்சிகள் கடும் அதிருப்திக்கு உள்ளாகி, மூன்றாவது அணி அமைக்கலாமா என்ற முடிவுக்கு சென்றன.2011 தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெறாமல் போயிருந்தால், அவரது அரசியல் எதிர்காலமே முடிவுக்கு வந்திருக்கும். அப்படி இருந்தும், அந்தத் தேர்தல் வேட்பாளர்கள் தேர்வில், பணத்தை வாங்கிக் கொண்டு, இப்படி ஒரு குளறுபடியைச் செய்யத் துணிந்தது மன்னார்குடி மாபியா. ஆனாலும் ஜெயலலிதா பொறுமையாகவே இருந்தார். 2011ல், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் இந்த மன்னார்குடி மாபியாவின் ஆதிக்கம் எல்லை மீறியது. பதவிக்கு வந்த நாள் முதலாகவே வசூல் வேட்டை கொடி கட்டிப் பறந்தது. அமைச்சர்கள் நியமனமாகட்டும், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனமாகட்டும்… மன்னார்குடி மாபியா வைத்ததே சட்டம் என்று ஆனது. பூ ஒன்று புயலானதே !!! திமுக ஆட்சியில் நடைபெற்று வந்த மணற்கொள்ளை அதிமுக ஆட்சியில் அப்படியே தொடர்ந்து நடைபெற்றது. சசிகலாவுக்குச் சொந்தமான மிடாஸ் மதுபான ஆலை, கடந்த திமுக ஆட்சி காலத்தில் டாஸ்மாக்குக்கு 5 சதவிகித மதுபானங்களை சப்ளை செய்து வந்தது. இந்த சதவிகிதம், தற்போது 35 சதவிகிதமாக அதிகரித்தது. சசிகலாவின் கட்டளைகளை கச்சிதமாக நிறைவேற்ற, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் துறை என்று ஒரு துறை உருவாக்கப் பட்டு, அந்தத் துறைக்கு பன்னீர்செல்வம் என்ற ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப் பட்டார். இந்த பன்னீர்செல்வம், தற்போது பணியில் உள்ள தலைமைச் செயலாளர், முதல்வரின் செயலாளர்களை விட, அதிக அதிகாரம பொருந்தியவராக மாறினார். அமைச்சர்கள் நாள்தோறும், இவர் அறைக்குச் சென்று இவரது ஆசியைப் பெறுவது வழக்கமான ஒன்றாக மாறியது. ஜெயலலிதாவிடம் 15 ஆண்டுகளாக இருந்த பாதுகாப்பு அதிகாரி திருமலைச் சாமி, சசிகலாவின் ஏவலாளாக மாறி, அவர்கள் சார்பாக கட்டைப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்தார்.கடந்த ஆட்சி காலத்தில் மிக முக்கிய பதவியான சென்னை மாநகர கமிஷனராக இருந்த கண்ணாயிரம், மாநிலத்தின் மிக முக்கியப் பதவியான உளவுத்துறையின் கூடுதல் டிஜிபியாக்கப் பட்டார். தற்போது ஜெயலலிதா பதவியேற்றதும் ஏற்பட்ட ஒரு பிரத்யேகமான பிரச்சினை, பெங்களுரு வழக்கு. இந்த பெங்களுரு வழக்கு சாட்சிகள் விசாரணை முடிந்து, குற்றம் சாட்டப்பட்டவர்களை கேள்வி கேட்கும் நிலையை அடைந்துள்ளது. இனி இந்த வழக்கை காலம் தாழ்த்த முடியாத ஒரு நிலையில், ஜெயலலிதா ஒரு இக்கட்டான நிலையில் உள்ளார். இந்த இக்கட்டான நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, சசிகலாவின் கணவர் நடராஜன் தான் முதல்வராக முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. சவுக்கு இது குறித்த கட்டுரையை, ஏன் இப்படிச் செய்தீர்கள் கண்ணாயிரம் என்ற தலைப்பில் அக்டோபர் 16 அன்று வெளியிட்டிருந்தது. அப்போது அந்தக் கட்டுரைக்கு பின்னூட்டம் இட்ட பல அன்பர்கள், இதற்கு சாத்தியம் இல்லை என்று தெரிவித்திருந்தனர். ஆனால், சட்டமன்றத்தில் நெருக்கடி ஏற்பட்டு, ஆட்சி அமைக்கும் போது சிக்கல்கல்கள் ஏற்படும் சூழலில், எம்.எல்.ஏக்கள் எப்படி கட்சி மாறுவார்கள் என்பது, கோவா, பெங்களுரு, உத்தரப்பிரதேசம், எம்ஜிஆர் இறந்த பிறகு, தமிழ்நாட்டில் ஆகிய இடங்களில் நடந்த சம்பவங்களை கூர்ந்து நோக்குபவர்களுக்கு நன்கு தெரியும். ஜெயலலிதாவுக்கு ஒரு வேளை பெங்களுரு வழக்கில் தண்டனை கிடைத்து விட்டால், அவர் மேல்முறையீடு செய்து, விடுதலை பெற்று வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும். மீதம் உள்ள நான்கரை ஆண்டுகளுக்கு பதவியை எப்படி தக்கவைத்துக் கொள்வது என்பதில்தான் எம்எல்ஏக்கள் கவனம் செலுத்துவார்களே ஒழிய, ஜெயலலிதாவுக்கு நிச்சயம் விசுவாசமாக இருக்க மாட்டார்கள். ஒவ்வொரு எம்எல்ஏவும், பல கோடிகளை செலவழித்து எம்எல்ஏக்கள் ஆகிறார்கள் என்பதை மறந்து விட வேண்டாம். இந்த வழக்கின் முடிவை எதிர்நோக்கி, நடராஜன் வகுத்த சதித்திட்டத்திற்கு சசிகலா பக்கபலமாக இருந்ததாகத் தெரிகிறது. கடந்த வாரத்தில் பெங்களுரில், ஒரு ரகசியக் கூட்டம் நடந்ததாகவும், அந்தக் கூட்டத்தில், சசிகலா விலக்கி வைக்கப் பட்ட வளர்ப்பு மகன் சுதாகரனும், நடராஜனும், வேறு சில முக்கியப் புள்ளிகளும் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்தக் கூட்டத்தில், ஜெயலலிதாவால் பழிவாங்கப் பட்ட சுதாகரன், எப்படியாவது, முதலமைச்சர் பதவியில் நடராஜனை அமர வைக்க வேண்டும் என்று முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இளவரசி, இந்தத் தகவல்களை ஜெயலலிதாவிடம் சொல்லியிருப்பதாகவும் தெரிகிறது. சசிகலாவுக்கு முன்னால் இருப்பவர்தான் இளவரசி இதையடுத்தே, ஜெயலலிதா அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது.கண்ணாயிரம் உளவுத்துறையிலிருந்து அப்புறப்படுத்தப் பட்டதும், பொன்மாணிக்கவேலை அந்தப் பதவிக்கு கொண்டு வந்ததும் சசிகலாதான். பொன்.மாணிக்கவேல் அப்புறப்படுத்தப் பட்டதும், அந்தப் பதவிக்கு தாமரைக்கண்ணனை கொண்டு வந்ததும் சசிகலாதான். முக்கியமான பதவிகளில், தங்கள் சமூகத்தைச் சேர்ந்த, தங்களுக்கு விசுவாசமான அதிகாரிகளை தொடர்ந்து நியமித்து வருவது, தன்னைச் சுற்றிப் பின்னப்படும் சதிவலையின் வெளிப்பாடே என்பதை ஜெயலலிதா நன்கு உணர்ந்து கொண்டதாலேயே இந்த அதிரடி நடவடிக்கை என்று போயஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. பரவலாக கூறப்படும் ஒரு கருத்து, ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கையும் ஒரு கண்துடைப்பு நாடகமே என்பது. மேலும், பெங்களுரு வழக்கில் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே ஜெயலலிதா இப்படி ஒரு நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார் என்றும் ஒரு தகவல் சொல்லப் படுகிறது. பெங்களுரு வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் இந்த நிலையில், தற்போது ஜெயலலிதா, சசிகலாவிடமிருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொள்வதால், சட்டரீதியாக எந்தப் பலனும் ஜெயலலிதாவுக்கு கிடைக்கப் போவதில்லை. இதை நாடகம் என்று ஒரு வாதத்துக்காக எடுத்துக் கொண்டாலும் கூட, சசிகலாவோடு சேர்த்து, எம். நடராஜன், திவாகர், டி.டி.வி. தினகரன், வி. பாஸ்கரன், வி.என். சுதாகரன், டாக்டர் எஸ். வெங்கடேஷ், எம். ராமச்சந்திரன், ராவணன், அடையாறு மோகன், குலோத்துங்கன், ராஜராஜன், டி.வி. மகாதேவன், தங்கமணி ஆகியோரை ஜெயலலிதா நீக்கியிருக்க வேண்டிய அவசியமில்லை. அப்படியே இதை நாடகமாக எடுத்துக் கொண்டாலும், இந்த மன்னார்குடி மாபியா, மீண்டும் இது போன்ற அராஜகத்தை ஏற்படுத்த அஞ்சுவார்கள். மேலும் ஜெயலலிதாவின் குணாதிசயத்தை அறிந்தவர்கள், ஜெயலலிதா எந்த எல்லைக்கும் செல்லத் தயங்கமாட்டார் என்பதை நன்றாகவே உணர்ந்திருப்பார்கள். நம் எல்லாரையும் விட, ஜெயலலிதாவின் குணங்கள், மன்னார்குடி மாபியாவுக்கு நன்றாகவே தெரியும். மக்கள் ஜெயலலிதாவிடம் எதிர்ப்பார்ப்பது, கட்சியிலிருந்து நீக்கி ஜெயலலிதா எடுத்த இந்த நடவடிக்கைகளோடு நின்று விடாமல், இந்த மாபியா கும்பல் சம்பாதித்துள்ள சொத்துக்களை பறிமுதல் செய்து, இவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும்... |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக