ஞாயிறு, 25 டிசம்பர், 2011

பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு!



மதுரை :
பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யக்கோரிய மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 11ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த தமிழக மக்கள் முன்னேற்றக்கழக நிறுவனர் ஜான் பாண்டியன் திட்டமிட்டிருந்தார். மேலும், கமுதி அருகே கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறவும் முடிவு செய்திருந்தார். இதற்கு அனுமதி மறுத்த போலீசார், ஜான் பாண்டியனை தூத்துக்குடி அருகே வல்லநாட்டில் கைது செய்தனர்.
இதைக் கண்டித்து ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் பரமக்குடியில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியாகினர். ஏராளமானோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்ட தமிழக அரசு, பலியானோரின் குடும்பத்தினரு க்கு ஸீ1 லட்சம் வழங்கியது.
இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், வக்கீல் முருகன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் குரு விஜயன், சட்டக்கல்லூரி மாணவர் செல்வம், தேவேந்திர குல வேளாளர் உறவின் முறை சங்கச் செயலாளர் செல்வகுமார் உள்பட 10 பேர் சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை ஐகோர்ட் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். மேலும் வக்கீல் புகழேந்தி என்பவர், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யக்கோரி மனுத் தாக்கல் செய்தார். இந்த 11 மனுக்களையும் நீதிபதிகள் கே.என். பாஷா, என். வேணுகோபால் ஆகியோர் விசாரித்தனர்.
மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் பிரசாத், சங்கர சுப்பு, ரத்தினம், தாளை முத்தரசு, பிரபு ராஜதுரை, லஜபதிராய், ரஜினி, ஆர்.வெங்கடேஷன், ஷாஜி செல்லன் ஆஜராகினர். இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர். அதில்Ô பரமக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். துப்பாக்கிச்சூடு வழக்கு தொடர்பான புகார்கள் உட்பட அனைத்து ஆவணங்களை யும் போலீசார் 10 நாட்களுக்குள் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.
வழக்கை விசாரிக்க சிபிஐ அதிகாரி ஒருவரை சிபிஐ இணை இயக்குநர் நியமித்து விசாரணையைத் தொடங்க வேண்டும். சிபிஐ உயர் அதிகாரி விசாரணையை மேற்பார்வையிட வேண்டும். சிபிஐ விசாரணைக்குத் தேவையான ஒத்துழைப்பை அரசு வழங்க வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் நிவாரணம் வழங்கவும்,
இறந்தவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், நிவாரணம் கோரிய மனு மீது உத்தரவு பிறப்பிக்க வேண்டியதில்லை. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு அரசு செலவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய தேவையில்லை. சஸ்பெண்ட் கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக