புதன், 11 ஜனவரி, 2012

16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய தலைவர் பசுபதி பாண்டியன்


தூத்துக்குடி: தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவரான பசுபதி பாண்டியன் தனது வாழ்நாள் முழுவதும் கொலை அச்சுறுத்தலிலேயே வாழ்ந்து வந்தவர். காரணம், 16 வயதிலேயே அவர் கொலை வழக்கில் சிக்கியவர் என்பதால்.

50 வயதான பசுபதி பாண்டியன் தூத்துக்குடி மாவட்டம் அலங்கார திட்டு கிராமத்தைச் சேர்ந்தவர். சிறுவயதில் இவருக்குப் படிப்பு ஏறவில்லை. இதனால் 11வது வகுப்பு வரை மட்டுமே அவரால் படிக்க முடிந்தது. அதன் பிறகு அவர் வன்முறைப் பாதைக்கு மாறினார். முதன் முதலில் இவர் கொலை வழக்கில் சிக்கினார். அப்போது இவருக்கு வயது 16தான்.

ஆரம்பத்தில் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மோதலில் ஈடுபட்ட பசுபதி பாண்டியன் பின்னர் சமூக விரோதி என்று பெயரெடுக்கும் அளவுக்கு மாறினார்.

அதன்பிறகு கொலை, கொலை முயற்சி, கட்டப் பஞ்சாயத்து, தாக்குதல் என ஏகப்பட்ட வழக்குகளில் சிக்கினார். அவர் மீது எட்டு கொலை வழக்குகள் சுமத்தப்பட்டன. அதில் முக்கியமானதுதான மூ்லக்கடை பண்ணையார் கொலை வழக்கு. இந்தக் கொலைக்குப் பிறகுதான் பசுபதி பாண்டியன தென் மாவட்டங்களில் பிரபலமானார்.

இந்தக் கொலைக்குப் பிறகு பசுபதி பாண்டியன் பெரும் பிரபலமடைந்ததைப் போல அவருக்கு எதிரிகளும் அதிகரித்து விட்டனர். இதனால் ஆங்காங்கு பசுபதி பாண்டியன் ஆதரவாளர்களுக்கும், அவரது எதிரிகளுக்கும் ரத்தக்களறிச் சண்டை நடந்தபடி இருந்தது. பசுபதி பாண்டியனைக் குறி வைத்து பலமுறை கொலை முயற்சிகள் நடந்துள்ளன. அத்தனையிலும் அவர் தப்பினார். இந்த மோதல்களில் தாமோதரன், கண்ணன், பீர் முகம்மது என பலரும் உயிரிழந்தனர்.

இப்படியாக போய்க் கொண்டிருந்த பசுபதி பாண்டியன், பின்னர் பாமகவில் திடீரென சேர்ந்தார். தென் மாவட்டங்களில் காலூன்ற அடிப்படையே இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த பாமகவுக்கு பசுபதி பாண்டியன் வந்தது பெரிய விஷயமாக அமைந்தது. ஆனாலும் சேர்ந்த வேகத்திலேயே அதிலிருந்து விலகினார் பசுபதி. அதன் பிறகு தேவேந்திர குல இளைஞர் பேரவையைத் தொடங்கினார்.

இந்த சமயத்தில்தான் திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெசிந்தாவை மணம் புரிந்தார் பசுபதி பாண்டியன். தனது கணவர் பல்வேறு வழக்குகளில் சிக்கும்போதெல்லாம் அவரை மீட்பதே ஜெசிந்தாவுக்கு வேலையாகப் போனது. இறுதியில் 2006ம் ஆண்டு அவரும் கொடூரமாக கொல்லப்பட்டார். அந்த தாக்குதல் உண்மையில் பசுபதி பாண்டியனுக்கு வைக்கப்பட்ட குறியாகும். ஆனால் அவர் தப்பி விட்டார், ஜெசிந்தா பலியானார்.

நேற்று படுகொலையாவதற்கு முன்பு நான்கு முறை கொலை முயற்சியிலிருந்து தப்பியுள்ளார் பாண்டியன். தூத்துக்குடி மார்க்கெட்டில் வைத்து இவரை ஒருமுறை வெட்டினர். அப்போது அவர் தப்பி விட்டார். நெல்லையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருமுறை தப்பினார்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக ஜாங்கிட் இருந்தபோது பசுபதி பாண்டியனுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். இனி்மேல் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டால் சுட்டுக் கொல்லப்படுவீர்கள் என்று அவர் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து நெல்லைக்கு இடம் பெயர்ந்தார் பசுபதி பாண்டியன். அதன் பிறகு திண்டுக்கல்லுக்கு வந்து சேர்ந்தார். தற்போது அங்கேயே தனது மரணத்தையும் சந்தித்துள்ளார்.

கொலை மிரட்டல்களும், எதிரிகளும் அதிகமாக இருந்து வந்த காரணத்தால் முன்பு போல ஆர்ப்பாட்டமாக சுற்றாமல் அமைதியாகவும், ரகசியமாகவும் செயல்பட்டு வந்தார் பசுபதி பாண்டியன். இருப்பினும் எதிரிகள் நேற்று பசுபதி பாண்டியனை கொடூரமாக கொலை செய்து விட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக